Sunday, April 26, 2020

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்.
--------------------------------------------------------------------
தீவிரமான வாசிப்பாக குறைந்த வருவதாக கூறப்படுகின்ற அதே நேரத்தில் கிண்டில் போன்ற டிஜிட்டல் வடிவில் வாசிப்பு கூடியிருக்கிறது என்பதையும், அதிக நூல்கள் வெளியாகின்றது என்பதையும் மறுக்கமுடியாது. இப்படி டிஜிட்டல் வடிவில் வேகமாக படிப்பதற்கேற்ற வகையில் புரட்சியாளர் அம்பேத்கரை அறிமுகப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளது.

கிண்டிலில் தோழர் ரவிக்குமார் இந்த நூலை வெளியிட்டுள்ளார். அம்பேத்கர் அவர்களின் அடிப்படையாக அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

இந்த நூலில், தோழர் ரவிக்குமார் எழுதியுள்ள சில முக்கியக் கருத்துக்களை அப்படியே கீழே அளித்துள்ளேன்.

ஜனநாயகம் தழைக்க 6 முக்கியமான காரணிகளை அடையாளப்படுத்தினார். சமூக ஜனநாயகம் பரவலாக்க இந்த ஆறையும் முன்நிபந்தனையாக முன்வைக்கின்றார்.

1. ஏற்றத்தாழ்வை ஒழித்தல்.
2. எதிர்கட்சிகள் தேவை.
3.தடம் மாறாத நிர்வாகத்தின் சமத்துவம்
4. அரசியலமைப்பு சட்ட ஒழுக்கம்
5. சமூக ஒழுங்கு
6. பொது மனசாட்சி.

‘’ஜனநாயகம் என்பது எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு தாவரம் அல்ல. அது முதலில் முளைவிட்ட இடங்களில்கூட பின்னர் அழிந்து போனது. எனவே அதை வளர்த்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்ற அம்பேத்கரின் கூற்று முக்கியமானதாகும்.

சட்டங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்தி விடலாம் என்பதே ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த சமூகத்திலிருந்து எந்த மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும் என்று அம்பேத்கர் வற்புறுத்தினாரோ அந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலாவது இப்போதும் பொருத்தமாக இருக்கின்ற அம்பேத்கரின் சிந்தனைகளை இங்குள்ளோர் பரிசீலிக்க வேண்டும். அம்பேத்கரின் மேதமையைப் புரிந்து கொள்வதற்காக அல்ல, இந்த நாட்டை ஜனநாயக நாடாக மாற்றுவதன் மூலம் தமது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவேனும் அதைச் செய்ய வேண்டும்.

“வரலாற்றை எழுதுகிறவர் கடந்த காலத்தின் சாட்சியாகவும் எதிர்காலத்தின் இயக்குனராகவும் இருக்கவேண்டும்" என்றார் அம்பேத்கர்.  இந்த வரையறை சாதி ஒழிக்கப்படவேண்டும் என விரும்புகிற ஒவ்வொரு தலித்துக்கும் பொருந்தும். இழிவுகளும், வலிகளும் நிரம்பிக்கிடக்கும் கடந்த காலத்துக்கு சாட்சியமாக இருப்பது மிகவும் துயரமானது. அதனால்தான் பெரும்பாலான தலித்துகள் கடந்த காலத்தை மறக்க விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் 1949 நவம்பர் 25 ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட அவையில் பேசும்போது, ”அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் நேரத்தில் அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம், ஆனால் சமூக பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமற்ற நிலையிலேயே இருப்போம்’’ எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நதிநீர்க் கொள் கையை, மின்னுற்பத்திக் கொள் கையை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்து அதை வழிநடத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் நேர்ந்தால் அதைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறையை அதில் அவர்தான் ஏற்படுத்தினார். அவர் கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262 உருவாக்கப்பட்டது. அதுதான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956 உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. புரட்சியாளர் அம்பேத்கரால் உருவான அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நாம் இப்போது காவிரியில் தண்ணீர் கேட்டுப் போராடுகிறோம். முல் லைப்பெரியாறு விவகாரத்தில் வாதிடுகிறோம்; பாலாறு, பவானி, சிறுவாணி பிரச்சனைகளில் நம் உரிமையைக் கேட்கிறோம்.  நதிநீர் சிக்கல் மட்டுமல்ல மேலும் பல்வேறு தளங்களில் அம்பேத்கர் முன் வைத்துள்ள சிந்தனைகளைத் தொகுத்து அவற்றை நமது சமகால சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவாறு பயன்படுத்துவது என்று ஆராயவேண்டியதுஆராயவேண்டியது தலித் அறிவுஜீவிகளின் கடமையாகும்.

பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத, ஒழுக்கம் செயல்பட இடம் கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையும் நிராகரிக்குமாறு மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். பழங்காலத்தின் விதிகளாலான மதத்தை நிராகரித்து அந்த இடத்தில் தத்துவங்களாலான மதம் ஒன் றை வைக்கவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

No comments: