Saturday, April 25, 2020

நூல் அறிமுகம் - பறிபோகும் இடஒதுக்கீட்டு உரிமைகள்


பறிபோகும் இடஒதுக்கீட்டு உரிமைகள்.

2006 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக நாடு முழுவதும் உயர் சாதியினர் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில்தான், 
1.உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் தலித், பழங்குடியினர் இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும், 
2. தலித் – பழங்குடியினர் ஒதுக்கீட்டில் கிரிமிலேயார் என்பதை நீக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சமூபூகன் சமூக நீதிப் பரப்புரை பயணம் நடத்தினர் பெரியார் திராவிடர் கழகத்தினர்.

அந்த பரப்புரைக்காக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பறிபோகும் இடஒதுக்கீடு உரிமைகள் என்ற தலைப்பில் 32 பக்கத்தில் 5000 புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.

நான்கு பகுதியாக உள்ள இந்த நூலில் முதல் பகுதி கேள்வி – பதில்  வடிவில் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இடஒதுக்கீடு என்றால் என்ன, உயர் சாதியினர் ஏன் எதிர்க்கின்றனர், ஏன் தகுதி-திறமை என்கின்றனர், சாதி ஒழிய வேண்டும் என்றால், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்கமாலாமா?, இட ஒதுக்கீட்டால் சமத்துவம் வந்துவிடுமா? என்ற கேள்விகளுக்கு சமூக நீதியின் அடிப்படையில் உறுதியான பதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தப் பகுதியாக ஏமாற்றம் எத்தனைக் காலத்துக்கு என்ற தலைப்பில் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களின் உரை வைக்கப்பட்டுள்ளது. இதிலும் 1921 நீதிக்கட்சி காலத்தில் தொடங்கிய சமூக நீதிப் பயணம் இன்று பல்வேறு எதிர்ப்புகளுடன் தொடர்ந்துகொண்டிருப்பதையும், அதனை தக்க வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

மூன்றாம் பகுதியாக தலித் ஒதுக்கீட்டில் கிரிமிலேயர், உரிமைகளைப் பறிக்கும் உச்ச நீதிமன்றம் என்ற செய்தித் தொகுப்புகள் உள்ளது.   

இறுதியாக உள்ள நான்காம் பகுதிதான் மிக மிக முக்கியமானது. அமெரிக்க ஊடகங்களில் கறுப்பர்களுக்கு உரிமை என்ற தலைப்பில் உள்ள இந்தக் கட்டுரை, இந்திய ஊடகங்களில் தலித், பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் உயர் சாதியினரால் எப்படி புறக்கணிப்பிற்கு ஆளாகின்ற என்பதை கூறியுள்ளனர். ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் அல்லது முடிவெடுக்கும் முக்கிய நிலைகளில் தலித் பழங்குடியினர் பிரநிதித்துவம் சுத்தமாக கிடையாது என்பதை இக்கட்டுரை பதிவு செய்துள்ளது.

1922 ல் அமெரிக்க சமூகத்திற்கான பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் என்ற அமைப்பு அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, அமெரிக்க பத்திரிகைகளில் கறுப்பர் மற்றும் சிறுபான்மையினர் பிரநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தொடர்ந்து செயல்பட்டுள்ளனர். ஒருகட்டத்திற்கு பின்பு மொத்தமுள்ள 1446 பத்திரிகைகளில் 950 பத்திரிகைகள் இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ளன.

இதற்கு முன்பு பத்திரிகைகளில் 3.95% மட்டுமே இருந்த கறுப்பர்கள், இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு பின்பு 19.5% வரை வரமுடிந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஊடகங்களில் கறுப்பர்கள் மற்றும் சிறுபான்மையினர் எண்ணிக்கை 38% எட்டிவிடும் என அமெரிக்க பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் இந்தியாவின் நிலையையும் பார்த்துவிடலாம். இந்தியாவில் 300 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஊடகங்களில் அதிகாரம் நிறைந்த 71% பதவிகளில் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் உள்ளனர். முதல் வரிசையில் உள்ள 300 பத்திரிகையாளர்களில் ஒரு தலித், பழங்குடியினர் கூட கிடையாது என்ற தகவலையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

நான் இரண்டு ஆண்டுகள் பத்திரிகையாளராக இருந்த அனுபவத்திலும், நேரிலும் இதனை நான் கண்டுள்ளேன். இன்னமும் கொஞ்சம் கூட இந்த நிலை மாறவில்லை. இதனால்தான் மக்களுக்கான அல்லது மக்கள் சார்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவரமுடியாமல் உள்ளது.

இடஒதுக்கீடு என்பது அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டும் அல்லாமல் வலிமை வாய்ந்த ஊடகம் போன்ற தனியார் துறையிலும் அவசியம் வேண்டும் என்பதற்கு சான்றாக இந்த நூல் உள்ளது.


No comments: