உடல் ஆயுதம் – புலியூர் முருகேசன்
-----------------------------------------------------
புலியூர் முருகேசன் என்பவர்
எழுதியுள்ள இந்த உடல் ஆயுதம் என்கிற நாவல் தமிழில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக
உள்ளது. சிபிஐ (எம்.எல்) கட்சியின் செயல்பாடுகளை, குறிப்பாக மாடக்கோட்டை தோழர் சுப்பு
அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களும், அவர் கொலை செய்யப்பட்டப்பிறகு, அவருடைய தோழரும்
தமிழாசிரியருமான பாலமுத்து போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்படுவது என குறிப்பிட்ட
காலத்தின் போராட்டப் பதிவுகளாக உள்ளது. பெரும் ஆவணம் என்றாலும், பல்வேறு நிகழ்வுகளை
ஒருங்கிணைத்து விறுவிறுப்பான நடையில் இந்த நாவலை, வாய்ப்புள்ள அனைவரும் படிக்கவேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச்
சேர்ந்த புலியூர் முருகேசன், ஒரு சிறுகதை எழுதியதற்காக
ஆதிக்க சாதியினரால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி அச்சுறுத்தப்படுகிறார். அதனால்
புலியூரில் வசிக்க முடியாத நிலையில், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி தற்போது குடும்பத்துடன்
தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.
இவர் முன்னுரையில் சொல்லியுள்ளது
போல, சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சி, குறிப்பிட்ட காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின்
செயல்பாடுகளின் அனுபவங்கள்தான் நாவலாக உள்ளது.
இரண்டு பகுதியாக இந்த நாவலை
எழுதியுள்ளார். முதல் பகுதியில், கட்டடங்களுக்கு வண்ணமடிக்கும் பணி செய்யும் குமார்
என்கிற ஒரு இளைஞன், தந்தை கிடையாது. தாய் மட்டுமே.
தினமும் வேலை முடிந்தும், சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் டாஸ்மாக் கடையில் குடிப்பதையே
தன்னுடைய வாடிக்கையாக வைத்துள்ளான். அங்கு
டாஸ்மாக் கடையில் பணியாற்றுகின்ற ஒருவர் போகிறபோக்கில், விரைவில் உன்னுடைய வேரைத்தேடி செல்வாய் என்று சொல்கிறார்.
ஒருநாள் குடிப்பதற்கு காசில்லாத
நிலையில் தாய் வைத்திருந்த ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று, பணம் எடுத்து குடித்து
விட்டு, வீட்டிற்கு வருகின்றான். பீரோவில் ஏடிஎம் அட்டையை வைக்கும்போது நிறைய கடிதங்களை
இருந்ததைப் பார்க்கின்றார். அவைகளை எடுத்துப் படிக்கின்றார். மிகவும் பழையதாகி, ஆனால்
நினைவுகளுக்காக வைத்திருந்ததைப் போன்று இருந்ததை உணர்ந்தான். தோழர் பாலமுத்து அவர்களுக்கு
எனத் தொடங்கி எழுத்தப்பட்டிருந்த அனைத்துக் கடிதங்களின் கீழேயும் மாடக்கோட்டை சுப்பு
என்றிருந்தது. கடிதங்களைப் படிக்கபடிக்க தன் தந்தை எவ்வளவு முக்கியமானவராக இருந்துள்ளார்
என்பதையும், பிறரால் எவ்வளவு மதிகப்பட்டுள்ளார் என்பதையும், மக்களுக்காக எவ்வளவு உழைத்துள்ளார்
என்பதையும் அறிந்து, இவருடைய மகனா நான், இவ்வளவு கேவலமாக இருந்துள்ளோமே என்று வருந்துகிறான்.
கண்கள் கலங்குகின்றது. அப்போது நுழைந்த அம்மாவிடம், இதையெல்லாம் ஏம்மா இவ்வளவு நாள்
சொல்லவில்லை என்று கேட்கிறான். இதற்காக காத்திருந்தது போன்று அவனது தாயார் கதறி அழுது,
கதையாகச் சொல்கிறார். சொல்லி முடித்தபிறகுதான் அவரது மனம் இலகுவானதை உணர்ந்தார். மகன்
மீது நம்பிக்கையும் உருவானது. உன்னுடைய தந்தையை கொலை செய்துவிட்டனர் என்று தாயார் கூறுவதுடன்
முதல் பாகமாக முடிகின்றது.
இரண்டாம் பாகம் குமாரின் தந்தை
பாலமுத்து தமிழாசிரியராக பணியாற்றுவதில் தொடங்குகின்றது. பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை
வகுப்பறையில் கூறியதற்காக, அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து நிர்வாகத்தால் வெளியேற்றப்
படுகின்றார்.
அச்சகம் நடத்துகின்ற மனோகரன்
என்ற ஒரு தோழரிடம் மனவருத்தத்துடன் கூறும்போது, கவலைப்படாதீர்கள் உங்களுக்கு விரைவில்
அரசு வேலையே வந்துவிடும், அதுவரை எங்களுடன் இருங்கள் என்று ஆறுதல் கூறுகின்றார். மனோகரன்
சிபிஐ(எம்.எல்) கட்சியின் தொழிற்சங்கவாதியாக இருக்கின்றார். ஆசிரியர் பாலமுத்துவிற்கு
நன்றாக பாட்டு எழுதி, மெட்டுக்கட்டி பாடவும் தெரிந்ததால் கிராமங்களுக்கு பிரச்சாரப்
பணிகளுக்கு மனோகருடன் செல்கிறார். சில மாதங்களில் அரசு வேலையும் கிடைக்கின்றது.
தோழர் மனோகரன் மூலமாக மாடக்கோட்டை
தோழர் சுப்புவின் அறிமுகம் கிடைக்கின்றது. பள்ளி முடிந்து மாலை மற்றும் விடுமுறை நாட்களில்
சுப்புவுடன் இணைந்து முழுமையான பொதுவாழ்க்கைப் பணியை செய்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாகவே
சுப்பு முன்னெடுக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் உதவியாக பின்னிருந்து செயல்படுகின்றார்.
குறிப்பாக கிராமப் புறங்களிலும் நடைபெறுகின்ற
பிரச்சாரப் பணிக்கான அனைத்து பாடல்களையும் எழுதி மெட்டமைத்து பாடுகின்றார்.
இது கட்சிக்கு பெரும் உதவியாக
உள்ளது. பிரச்சனைகளை பாடல்கள் மூலமாக வெளிப்படுத்துவதால் கிராம மக்கள் எளிதில் புரிந்து
கொண்டு கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர். கட்சி வளர்வதை பொறுக்க முடியாத சாதி ஆதிக்கவாதிகள்
காவல்துறையுடன் இணைந்து தோழர் சுப்புவை படுகொலை செய்கின்றனர்.
இதனால் மிகவும் மனம் உடைந்த
பாலமுத்து பல மாதங்கள் எதிலும் ஈடுபட முடியாமல் இருந்தார். இதனை தொடர்ந்து மீதமுள்ள
தோழர்களுடன் சில பணிகளை தொடங்கும்போது காவல்துறை வேண்டும் என்றே பொய் வழக்கில் இவரைக்
கைது செய்து, புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்று, கடுமையாக அடித்து
சித்ரவதை செய்தனர். உள்ளுறுப்புகள் அனைத்தும்
பாதிக்கப்படுகின்றது. ஊருக்கு திரும்பிய இவர் மூன்று நாட்களில் இறந்து விடுகிறார்.
அப்போது இவருடைய மனைவி 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். இருமாதத்தில் குமார் பிறக்கின்றான்.
அப்பொழுதுதான் குமாருக்கு,
தன்னுடைய தந்தை இறந்தபோது உடல் தானம் செய்துள்ளார் என்பது தெரிகின்றது. தந்தையின் உடல்
உறுப்புகள் யாருக்கேனும் பொருத்தப்பட்டிருக்கும் அதனைப் பற்றிய விவரங்களை தெரிந்து
கொண்டால் தன் தந்தையையே மீண்டும் பார்ப்பது போன்று உணர முடியும் என்பதற்காக வீட்டில்
இருந்து கிளம்புகின்றான். அப்போது, டாஸ்மாக்கில் ஒருவர், விரைவில் வேரைத் தேடிச் செல்வாய்
என்று கூறியது நினைவு வருகின்றது குமாருக்கு.
முதலில் கருதூர் மருத்துவமனைக்குச்
செல்கிறான். அது ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால் அங்கு போதிய தகவல்கள் இருக்காது என்றும்
தஞ்சை மருத்துவகல்லூரி செல்லுமாறு கூறுகின்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சென்ற
பிறகும், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைகயில்தான் முழு விவரம் கிடைக்கும் என்று அனுப்பி
வைக்கின்றனர்.
அங்கிருந்து சென்னை ராயப்பேட்டை
அரசு மருத்துவமனைக்குச் செல்கிறான். ஒரு இஸ்லாமிய மருத்துவர் குமாருக்கு உதவியாக இருந்து
அனைத்து விவரங்களையும் தேடித் தருகிறேன் ஐந்து நாட்களாகும் என்று கூறுகிறார். இந்த
ஐந்து நாட்களும் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றும் வயதான கிழவருடன் தங்கிக்கொண்டு
அருகே உள்ள கட்டங்களில் வேலை செய்கிறான். கிழவருடன் நன்றாகப் பேசி, உதவியாகவும் இருக்கின்றான்.
அப்பொழுது பிணவறையில் நடிகை
சில்க் ஸ்மிதா இறந்த நிலையில் உடல் கொண்டு வரப்பட்டது அறிந்து இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.
நீங்கள் நடிகையாக ஆகவில்லையெனில் என்னவாகி இருப்பீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்டபோது,
நான் நக்சலைட்டாக இருந்திருப்பேன் என சில்க் கூறியதாக எல்லாம் கதை போகின்றது.
இது மட்டுமல்ல சாதி மாறி காதலித்ததால்
படுகொலை செய்யப்பட்ட ஒரு தலித் இளைஞரின் உடல் அடுத்த இரு நாட்களில் வருவதாக ஒரு சம்பவமும்
வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இளவரசனை நினைவுபடுத்துவதாக
உள்ளது.
ஐந்தாம் நாள் அந்த மருத்துவரை
குமார் சென்று பார்க்கின்றார். உன்னுடை தேடல் வீண்போகவில்லை. உன் தந்தை இறந்தும் இந்த
உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். பலருக்கும் பயன் அளிக்கின்றார் என்று கூறி,
குமாருடைய தந்தையின் எலும்புக்கூடு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான எலும்புக்கூடாக
இருந்து பாடம் நடத்தி வருகின்றார் என்றுக்கூறி, அந்தக் கூண்டினை காட்டுகிறார்.
குமார் நீண்ட நேரம் அந்த எலும்புகூட்டினையும்,
பாதி செல்லரித்துபோன தந்தையின் புகைப்படத்தை வைத்துகொண்டு இரண்டையும் மாறி மாறி பார்த்து
கண்கலங்கி உட்கார்ந்திருக்கின்றான்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு
வெளியேறி, பிணவறையில் உள்ள கிழவரிடம் சொல்லிவிட்டு ஊருக்குக் போகலாம் என கிழவரிடம்
செல்கிறான். கிழவர் பிணவறையில் உள்ளார். அந்த உடல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்
பணிபுரிந்த, இந்திய மக்கள் முன்னணி என்கிற ஐ.பி.எஃப் அமைப்பைச் சேர்ந்த தோழர் செல்வராஜ்
என்பவரது உடலாகும். அந்த முகத்தைப் பார்க்கும்போது தனது தந்தையின் முகத்தைப்பார்ப்பது
போல் உள்ளது எனக்கூறி அங்கேயே நிற்கின்றான். இத்தோடு கதை முடிகின்றது.
விடுதலைக்கான போராட்டத்தில்
போராளிகள் தங்கள் உயிரையும் உடலையும் தியாகம் செய்கின்றனர். மக்களுக்கான இந்த பொதுவாழ்வுப்
பணிக்கு தங்களின் உடலையே ஆயுதங்களாகவும், கேடயங்களாகவும் பயன்படுத்துகின்றனர். தேவக்கோட்டை
சுப்பு படுகொலை, குமாரின் தந்தை படுகொலை, மேலும் மணலூர் சந்திரமோகன், சந்திரகுமார்
என்ற இளைஞர்கள் படுகொலைகள் அனைத்தும் இந்நாவலில் போராட்டப்பாதைகளின் ஊடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டப்பதிவுகள் அனைத்தும்
வரலாறாகவும் பதிவாக வேண்டும்.
09.10.2019