Sunday, October 13, 2024

சட்டங்களை தவறாகப் எப்படி பயன்படுத்தலாம் என தமிழகப் போலீசாரிடம் பயிற்சி எடுக்கலாம்!!




போக்சோ சட்டத்தை எப்படி தவறாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு

தமிழப் போலீசாரிடம், பிற மாநில போலீசார் பயிற்சி எடுக்கலாம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது குற்றம்.

கொடுத்தால் பொய் வழக்கு - சிறை - சித்திரவதை என அணுகும் காவல்துறை.

—------------------------------
முன்னாள் முதல்வர் கலைஞர் ‘’தமிழக காவல் துறையின் ஈரல் அழுகிவிட்டது” என்றார். அவரின் மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு, ’’காவல் துறையின் சித்திரவதைகளை நானும் அனுபவித்துள்ளேன்” என்று கூறியவர்.
தமிழகப் போலீசார் போக்சோ சட்டத்தை மிக மிக மோசமாக கையாள்வதையும், பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவதையும், இச்சட்டத்தை போலீசார் லஞ்சம் பெற்று பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றனர்.
காவல் துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கொஞ்சமும் திருத்திக்கொள்ளவில்லை.
70 வயதான பழங்குடி இருளர் பொன்னுசாமி. 70% மாற்றுத் திறனாளி. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார்.
அனந்தபுரம் போலீசார், குற்றமிழைத்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர். அதுவும் போக்சோ சட்டத்தில் கைது செய்கின்றனர்.
அனந்தபுரம் போலீசார் இப்படி குற்றமிழைப்பது முதல் முறையல்ல. பழங்குடியினருக்கு எதிராகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
அத்தியூர் விஜயா எனும் 17 வயது பழங்குடி இருளர் பெண்ணை, புதுச்சேரி போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ய உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுப்பதை ஒரு குற்றமாக பார்ப்பதில் விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் போலீசாருக்கு முதலிடம் அளிக்கலாம்

Saturday, October 12, 2024

தலித் ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டைப் பூட்டி வன்கொடுமை - நடவடிக்கை எடுக்க மறுக்கம் கடலூர் மாவட்ட காவல் துறை

தலித் ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டைப் பூட்டிய கந்துவட்டிகாரர் – 2021 இல் கொரோனாவில் இறந்து போன மகன் கடன் வாங்கியதாக வன்கொடுமை. குற்றமிழைத்தோருக்கு ஆதரவாக செயல்படும் கருவேப்பிலங்குறிச்சி கா.நி மற்றும் விருத்தாசலம் DSP.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கணபதிகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் மாணிக்கம் மனைவி சின்னப்பொண்ணு (60). இவர் ஆதிதிடாவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகன் பட்டதாரியான சக்திவேல் திருமனமாகி மனைவி, ஒருமகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
இவர் உயிரோடிருக்கும் போது, தன்னிடம் கடன் வாங்கியதாகவும், அதனை உடனே திருப்பிக் கொடுங்கள் என்றும், மேற்படி வயதான ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பொண்ணு, அவரது மருமகளும் மறைந்த சக்திவேலின் மனைவியுமான பரமேஸ்வரியையும் அதே ஊரிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, லட்சுமணன், இவரது மனைவி அஞ்சலை, மகள் அருணா ஆகியோர், தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 27.09.2024 அன்று காலை 11.15 மணியளவில், தலைவர் சின்னப்பொண்ணு வீட்டிற்குச் சென்ற மேற்படி லட்சுமணன், வீட்டிலிருந்த தலைவரின் கணவர் மாணிக்கம், மகள் கேசம்மாள் ஆகியோரை வீட்டிலிருந்து விரட்டி வெளியே தள்ளிவிட்டு, ’’பணத்தை கொடுக்கலன்னா.. வீட்டைதான் பூட்டுவேன்’’ என்று கூறிவிட்டு, தலைவரின் வீட்டிற்கு இரண்டு பூட்டுகளைப் போட்டு பூட்டியுள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபொண்ணு அப்போது அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தில் அன்றாட விவசாயக் கூலி வேலையாக மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்துள்ளார். மகள் கேசம்மாள், நேரடியாகச் சென்று கூறியபிறகு, வேலை முடிந்து ஊருக்குத் திரும்பிய ஊ.ம.தலைவர், தனது உறவினர்களுடன் அன்று மாலை 6.00 மணியளவில் கருவேப்பலங்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் என்பவரிடம் எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், மேற்படி லட்சுமணனை தொடர்பு கொண்டு வீட்டை திறந்துவிடும்படி பேசியுள்ளார். சுமார் 6.40 மணியளவில் லட்சுமணன் மனைவி அஞ்சலை, தலைவரின் வீட்டிற்குச் சென்று வீட்டை திறந்து விட்டுள்ளார். காவல் துறையினரும் சம்பவ இடத்திற்குச் உடனே சென்று விசாரணை செய்துள்ளனர்.
புகார் அளித்து சுமார் 10 நாட்கள் வரை விசாரணை எதுவும் நடைபெறாத நிலையில், தலைவர் சின்னப்பொண்ணு விரிவான புகார் எழுதி கடந்த 04.10.2024 அன்று மாண்புமிகு. முதல்வர் தனிப்பிரிவு, காவல் துறை உயர் அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணையம், SC/ST ஆணையம் ஆகியவற்றிற்கு புகார் அனுப்பினார்.
அதன்பிறகு, கருவேப்பலங்குறிச்சி காவல் நிலைய போலீசார் அழைப்பாணை விடுத்து கடந்த 08.10.2024 அன்று கலை சுமார் 11.45 மணியளவில் மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் விசாரணை செய்துள்ளார். அப்போது லட்சுமணனுக்கு ஆதரவாக சுற்று வட்டத்தில் உள்ள அவரது சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சுமார் பத்து நபர்கள் காவல் நிலையம் சென்று, சமரசமாக போக வலியுறுத்தியுள்ளனர். தலைவர் சின்னப்பொண்ணு, சமாதானமாக மறுத்துவிட்டார். அதன்பிறகு, மேற்படி SSI முருகானந்தம் அவர்கள், ’’புகார் கொடுத்து 10 நாட்கள் ஆகுது… நான் மேல் அதிகாரிகளிடம் சொல்லவில்லை.. லட்சுமணன் மன்னிப்பு கேட்கிறார்.. இதோடு சமரசமா போங்க.. லட்சுமணன் இனிமேல் பிரச்சணைக்கு வரமாட்டார்.. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கேட்டுள்ளார்.

இதன்பிறகும் வழக்கும் பதியாமல், விசாரணையும் நடத்தாமல், சின்னப்பொண்ணு உள்ளிட்ட அனைவரையும் வீட்டிற்கும் அனுப்பாமல் சமாதானத்திற்காக பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு ஆய்வாளர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், தலைவரிடம் விசாரணையில் பங்கேற்றதாகவும், CSR பெற்றுக் கொண்டதாகவும் கையொப்பம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், தலைவரிடம் CSR நகல் அளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 10.10.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மாலை சுமார் 5.30 தலைவர் சின்னப்பொண்ணு, அவரது கணவர் மாணிக்கம், மகள் கேசம்மாள், மருமகள் பரமேஸ்வரி ஆகியோர் காவல் நிலையம் சென்றனர். அவர்களுக்கு உதவியாக மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு அவர்களும் சென்றார். சின்னப்பொண்ணுவை விசாரிப்பதற்காக மேற்படி SSI முருகானந்தம், காவல் உதவி ஆய்வாளர் அறைக்கு அழைத்துச் சென்றார். அனைவரும் உடன் சென்றுள்ளனர். அப்போது அவ்வறையில் லட்சுமணனும், அவரது மனைவி அஞ்சலையும் இருந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சிவராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் இருவரும், பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக சென்ற இரா.பாபு அவர்களை ’’நீங்கள் வெளியே இருங்கள்” என்று கூறியுள்ளனர். அப்போது தலைவர் சின்னப்பொண்ணு மகள் கேசம்மாள் ’’சார் எங்களுக்கு உதவியாக அவரும் இருக்கட்டும்’’ என்று கூறியுள்ளார். உடனே உதவி ஆய்வாளர் சிவராமன் நீயும் வெளியே போய் இரு எனக்கூறி, பாபு, கேசம்மாள் இருவரையும் அறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
பிறகு விசாரணையை முடிந்து சுமார் 7.25 மணியளவில் தலைவர் சின்னப்பொண்ணு அவரது கணவர், மருமகள் மூவரும் அழுதுக்கொண்டே வெளியே வந்ததைப் பார்த்து என்ன நடந்தது என இரா.பாபு கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு ’’வீட்டை பூட்டி.. எங்கள் அசிங்கப்படுத்தனது பத்தி விசாரிக்காமல்… சாதிய சொல்லி திட்டுனாங்களா.. என போலீஸ் திரும்ப, திரும்ப கேட்டங்க…. லட்சுமணனை பக்கதுல வச்சிகிட்டே என்னை கேட்கிறாங்க.. அவர நினைச்சு பயத்துல என்னால சரியா பேசமுடியல..” எனக் கூறிக் கொண்டே சின்னப்பொண்ணும், பரமேஸ்வரியும் தலையிலே அடித்துக்கொண்டு அழுதுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டம் 2015 ல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளின் உரிமைகள் என்ற பிரிவு 15(A) உட்பிரிவு (12) ‘’அரசு சாரா அமைப்புகள், சமூகப் பணியாளர்கள் அல்லது வழக்குறைஞர்களிடமிருந்து உதவி பெறுவது பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போரின் உரிமையாகும்” என்று கூறுகிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 வயது ஊராட்சி மன்றத் தலைவருக்கு உதவியாக வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டம் பிரிவு 15(A) உட்பிரிவு (12) இன் படி உதவிடச் சென்ற இரா.பாபு மற்றும் பாதிக்கப்பட்ட ஊ.ம.தலைவரின் மகளையும் விசாரணையின்போது உடனிருக்க அனுமதிக்காமல் - காவல் நிலையத்திலிருந்து உள்நோக்கத்துடன் வெளியேற்றிய – கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது – SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து – நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(12.10.24 முகநூல்)

இயக்குநர் த.செ.ஞானவேல்

 

இயக்குநர் த.செ.ஞானவேல் Gnana Vel

#ஜெய்பீம் முழங்கி முத்திரை பதித்தார்.
#வேட்டையன் வழியாக,
திரையுலகில் தவிர்க்க முடியாதவராகியுள்ளார்.
பேசப்படாத
கல்வி வணிகம், மறுக்கப்படும் நீதி
இரண்டையும் படத்தில் பேசியுள்ளார்.
பொதுச் சமூகம் பேசவேண்டும்.
குறிப்பாக NEET போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காம Coaching Center என்கிற பயிற்சி மையங்களின் கொள்ளையும், கல்வி மாஃபியாவும், அதனை மறைக்க போலி மோதல் கொலையும் Fake Encounter பின்னணியும் ஆழமாக வெளிப்படுத்தும் வகையிலான திரைக்கதை.
வாழ்த்துகள் தோழர்.

(10.10.24 முகநூல் பதிவு)

பவழ விழா பிறந்த நாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு பிறந்த நாள்





பிறந்த நாளின் பவழ விழா காணும்
அ.மார்க்ஸ் சார் அவர்களுக்கு

இனிய வாழ்த்துகள்..

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதி வருகின்றார். அவரது எழுத்துக்கள் அனைத்தும் அதிகாரத்திற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களின் குரலாகவும் ஒலிப்பதை அனைவரும் அறிவோம். ஜனநாயகத்திற்கு எதிரான அதிகாரத்தின் குரலை நாம் எப்படி புரிந்துகொள்வது என்பதையும், அதற்கெதிராக நாம் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, செயல்பட்டு வருபவர்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற பலரும் பலநேரங்களில் அவர்களுடைய பொதுச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதையும், சில நேரங்களில் பின் வாங்குவதையும் நேரடியாகவும், தூரத்திலிருந்தும் பார்த்துள்ளேன்.
மேலும் பலர் பொது வாழ்க்கையின் பெயரால் கிடைக்கும் புகழ், சிறப்பு, தொடர்பு ஆகியவைகளினால் சொந்த வாழ்க்கையில் ஏராளமான அனைத்துவிதப் பலன்களை பெற்றுள்ளதையும் அறிவேன்.
ஆனால் நான் கண்ணுற்ற வகையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தன்னுடைய சிந்தனைக்கும், அறிவுக்கும் நேர்மையாக இருக்கின்றார்.
இந்த வயதிலும் அறிவார்ந்த உழைப்பு, செறிவான சிந்தனை, அவைகளையொட்டிய செயல்பாடுகள் மூலமாக தமிழ் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பினை செய்து வருகிறார்.
சொல்லிக்கொள்ளும் படியான பெரிய அமைப்பு-கட்சி பின்னணி கிடையாது. ஆனாலும் அன்றாட அரசியல் – சமூக பிரச்சனைகளுக்கு அவ்வப்போது உடனடியாக எதிரிவினையாற்றி சமூகவியல் நோக்கில், சாதாரண மக்களின் பக்கம் நின்று செயல்படுகிறார்.
ஒரு பெரிய கட்சி, இயக்கம் செய்யவேண்டிய அளவிலான பணியினை இயல்பாக செய்துவருகிறார்.
நான் சங்கடம் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போதும், மனம் சோர்வடையும் போதும் உங்களை எண்ணிப்பார்ப்பேன் சார்.
உங்களின் சோர்வறியா உழைப்பை நினைத்துப் பார்ப்பேன் என்னுடையை தடைகளை எல்லாம் தாண்டி மீறி வருவேன்.
இப்படி
என்னைப் போன்ற பலருக்கு உதாரணமாய் உள்ள
உங்களுக்கு என்னுடைய
அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..
இனிய வாழ்த்துக்களுடன்..

(04.10.2024 முகநூல் பதிவு)

Friday, October 4, 2024

பச்சையப்பன் அறக்கட்டளை - 132 பணி நியமனங்கள் நிறைவு

 04.10.2024

பச்சையப்பன் அறக்கட்டளை - 132 பணி நியமனங்கள் நிறைவு

அனைவருக்கும் வணக்கம்.

பல்வேறு பெருமைகளைக் கொண்ட, பாரம்பரியம் மிக்க சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளையின் நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்தீபன் அவர்களும், செயலாளராக சி.துரைக்கண்ணு அவர்களும் உள்ளனர். இருவரும் நேர்மையாகவும், சிறந்த முறையிலும் செயல்பட்டு வருகின்றனர்.
அறக்கட்டளையால் நடத்தப்படும் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உதவிப் பேராசிரியர் மற்றும் நூலகர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தகுதியானவர்களை நியமிக்க முயற்சித்தனர்.
நேர்மையான முறையில் நடைபெறுவதற்கான அப்பணி நியமனங்களை தடுத்து நிறுத்த முயற்சித்த உயர் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, செப்டம்பர் 8 மற்றும் 10 தேதியில் நாம் அணைவரும் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டிருந்தோம். 27.09.24 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினோம்.
மேற்படி 132 பணியிடங்களுக்கு செப்டம்பர் 27, 28 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் நேர்காணல் நடைபெற்றது.
பல்கலைக் கழக மானிய குழு வழிகாட்டுதல் படி, அமைக்கப்பட்ட 113 பேராசிரியர்கள் கொண்ட நேர்காணல் குழு தகுதியான 130 பேரை தேர்வு செய்தது. நேற்று (03.10.2024) அறக்கட்டளை வளாகத்தில் 130 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சூழ்ச்சி மற்றும் இடையூறுகளுக்கு அஞ்சாமல், மனந்தளராமல் உறுதியாக நின்ற நிர்வாகி மற்றும் செயலாளர்; தடைகளை எல்லாம் தடுத்து நிறுத்தி சரியான போக்கில் வழிகாட்டிய சென்னை உயர் நீதி மன்றம்; கல்விச் சீர்கேடுகளையும் ஊழலையும் ஒழிக்கும் இச்செயலில் உடன் நின்ற
1.எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்
2.வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
3.பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
4.பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்.
5.பேராசிரியர் சங்கரலிங்கம், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
6.வழக்கறிஞர் ஜான்வின்சென்ட்,செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
7.கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை
8.பேராசிரியர் மு.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), மக்கள் விடுதலை
9.பழ.ஆசைத்தம்பி, மாநிலச்செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ்நாடு
10.வே.அ.இரமேசுநாதன், அமைப்பாளர், நீதிக்கான தலித்,பழங்குடியினர் கூட்டமைப்பு
11.பேராசிரியர் அரசமுருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை
12.அ.சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.
13.கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
14.காஞ்சிஅமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
15.அருட்தந்தை அ.ரபேல்ராஜ், கவசம், கக்கனூர், விழுப்புரம்
16.எழுத்தாளர் வ.கீதா, சென்னை
17.பேராசிரியர் வீ.அரசு, சென்னை
18.பேராசிரியர் அரங்கமல்லிகா, சென்னை
19.வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை
20.பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், சிவகங்கை
21.வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை
22.அ.தேவநேயன், தோழமை, குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை
23.வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார், உயர்நீதி மன்றம், மதுரை.
24.ஆ.இரவிகார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.
25. கவிஞர் இசாக், சென்னை
26.ஆர்.மோகனசுந்தரம், ஓய்வு பெற்ற ஆசிரியர், விழுப்புரம்
27.பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்
28.இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்
29.முருகப்பன் ராமசாமி, செயலாளர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்.
உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும், பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.
-------------------------------
மக்கள் கல்வி இயக்கம்
7, பாரதிதாசன் நகர், கல்லூரிச் சாலை,
திண்டிவனம் – 604 001.
தொடர்புக்கு : 9442622970 / 9894207407



கொட்டுக்காளி

 கொட்டுக்காளி.



பலவும் இப்படித்தான் இருக்கும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நம்ப வைக்கப்பட்டு பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றோம். அப்படி இல்லை என்றால், கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்றோம். அல்லது சந்தேகப்படுகின்றோம். அதுவும் இப்போதைய சமூக வலைதள சூழலில் இது மிக எளிமையாகிவிட்டது. சிலர்தான் அதில் என்னதான் உள்ளது, எப்படித்தான் உள்ளது என்பதை அறிய, புரிந்துகொள்ள முயற்சிக்கின்றார்கள். இவ்வகையான முயற்சிகள் குறைவு அல்லது மிக மிகக் குறைவாக இருக்கலாம். இம்முயற்சியின் கருத்துகள் அனைத்திலும் வேறுபட்டதாக வெளிபடும். இது எப்போதேனும் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் அல்லது பெறும்.
குறிப்பாக அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, ஹோட்டலில் உணவு, பேருந்து & தொடர்வண்டி பயணம் ரேஷன் கடை பொருட்கள் போன்றவை எல்லாம் சரியில்லாதவை, மோசம் என்று நம்பப்படுவதைப் போன்று, ஒரு திரைப்படம் என்றால் இப்படித்தன் இருக்கும், இருக்கவேண்டும் என்று நமது புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது.
கொட்டுக்காளி இப்படி இரண்டு வகையிலும் அணுகப்பட்டுள்ளது. அதனால்தான் வெகுமக்களை படம் சென்றடையவில்லை என்றாலும், திரை உலக தளத்திலும், தீவிர ரசிகர்களாலும் விருப்பத்துடன் அணுகப்பட்டு, அதன் எல்லையைத் தொட்டுள்ளது.
என்னை என்ன வேண்டுமானலும் செய்துகொள்ளுங்கள், என்ன வேண்டுமானலும் நடக்கட்டும் என்ற இறுக்கமான, உறுதியான மனநிலையில் முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் அன்னாபென். எரிச்சலுடன் பயணிக்கும் இவரது தாய்மாமன் சூரி மற்றும் 10 பேர். ஒரு சிறுவன், ஒரு சேவல். ஒரு ஆட்டோ. ஒரு ஸ்பிளண்டர் பைக், ஒரு ஸ்கூட்டி, ஒரு எம்80 என மூன்று இரு சக்கர வாகனங்கள்.

இந்த மூன்று வண்டியிலும், ஆட்டோவிலும் சென்றுகொண்டே இருக்கின்றார்கள். சாலையும் மரங்களும், வெயிலும் வெட்டவெளியுமாக போய்க்கொண்டே இருக்கின்றார்கள். சில இடங்களின் தார்சாலையிம் வெப்ப அணல் முக்கத்தில் அடிப்பது போல் உள்ளது.
Live Recording Sound மிகவும் புதிதானது. எங்காவது ஒன்றிரண்டு காட்சிகள் இல்லாமல் முழு படமும் Live Recording, காற்று வீசும் சத்தத்துடன், ஆட்டோ மற்றும் மூன்று இரு சக்கர வண்டிகளின் சத்தமும் சேர்ந்து பலருக்கும் ரசிக்க முடியாத தன்மையை அளித்துள்ளது.
கூழாங்கல் படத்தில் நடந்துகொண்டே இருப்பார். இதில் 10 பேர் கொண்ட உறவினர் கூட்டம் வாகனங்களில் சென்று கொண்டே இருக்கிறது.
கூழாங்கல்லில் எங்கு செல்கிறார் என்பது முதலிலேயே தெரிந்துவிடுகிறது. இதில் எங்கு செல்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள் என்பது பாதிக்குமேல்தான் புரியத்தொடங்குகிறது. அதனாலும் படம் பார்ப்போருடன் ஒட்ட முடியாமல் இருந்திருக்கும்.
பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிலிருந்து அதுவும் இதுபோன்ற ரசிப்புத் தன்மை மிக்கதில் நாம் புதிய பார்வைக்கு செல்ல ரொம்ப யோசிக்கின்றோம்.
படத்தின் போக்கு Making மட்டுமல்ல, படத்தின் மையமும் புதிது. கல்லூரிக்கு படிக்கச் சென்ற இடத்தில் வேறு பையனை காதலிக்கும் பெண்ணின் மனதை, மந்திரம் ஓதி, பூசை செய்து மாற்ற ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்வதுதான் மையம். அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகும் தாய்மாமன் சூரி. இதற்கு முந்தைய இரு படங்களை விட இதில் நன்றாகப் பொருந்திப் போயுள்ளார். இயல்பாக இருந்துள்ளார்.
கதைக்கு தொடர்பில்லை என்றாலும் இடை இடையே சின்ன சின்னக் காட்சிகள் எல்லாம் மனிதர்களை மனிதர்களாகக் காட்டும் முயற்சி.
காதலித்து திருமணத்திற்குப் பிறகு கொலை செய்யப்படுவதைப் போன்று, காதலித்து திருமணத்திற்கு முன்பாகவே இப்படி கையாளப்படும் போக்கு அதிகம் என்பதை படம் சொல்கிறது. ஆனால் இதுகுறித்து பொதுச் சமூகம் பேசவில்லை.
கொட்டுக்காளி என்பது ஏதோ சேவல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தான் நினைத்த ஒன்றில் யாருக்கும் கட்டுப்படாமல் பிடிவதமாக இருக்கும் பெண்ணை ‘கொட்டுக்காளி’ என்று அப்பகுதியில் கூறுவார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒரு சொல் இருக்கும்.
இப்படி இருக்கும் ஆண்களை தடிமாடு, கோவில் மாடு, ஊராகாலி (இவ்வார்த்தையை சொல்வது சரியல்ல. ஆனால், கிராமத்தில் இருந்தது) என்று சொல்வதை கேள்விபட்டுள்ளேன்.
ஒவ்வொரு பகுதியிலும் ஆண்களையும் பெண்களையும் குறிப்பிட சொற்கள் இருக்கும்.

(01.10.2024 முகநூல்)


திண்டிவனம் வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள்!!

 திண்டிவனம் வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள்!!
















திண்டிவனம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதியும் வழக்கறிஞருமான எம்.டி.முத்து, தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து நீதி மன்றப் புறக்கணிப்பு நடத்த வழக்கறிஞர்கள் சங்கத்தில் மனு அளித்துள்ளதாக கேள்வி. இந்நிலையில் 

திண்டிவனம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இந்த வேண்டுகோள்.

1. பட்டணம் பழங்குடி இருளர் குடியிருப்பில் உள்ள எல்லம்மாள் என்பவருக்குச் சொந்தமான இடத்தினை, வழக்கறிஞர் எம்.டி.முத்து, தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் ஆக்கிரமிக்க ஜே.சி.பி-யுடன் சென்று, அங்கிருந்த இருளர்களை மிரட்டி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியது உட்பட அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


2.  பாதிக்கப்பட்ட இருளர்களிடம் ரோசனை போலீசார் எழுதி வாங்கிய புகாரில் எம்.டி.முத்து உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 4 பேரை கைது செய்துள்ளனர்.


3.  இதனை பஞ்சாயத்துப் பேசி முடிக்கவில்லை என பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணிக்கு வாட்ஸ் ஆப் குரல் பதிவு மூலம், “நான் சும்மா இருந்தாலும்.. என் ஆதரவாளர்கள், ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்” என்று எம்.டி.முத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 


4.  இதனை எம்.டி.முத்து அவரது செல்பேசியிலிருந்து, பேராசிரியர் கல்விமணியின் செல்பேசிக்கு இரண்டு குரல் பதிவாக அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர், வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார் என்பதற்காக, அவருக்கு ஆதரவாக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வேண்டுகோளை முன் வைக்கின்றேன்.

குற்றச்செயலில் யார் ஈடுபட்டாலும் வழக்குப் பதிவு செய்யலாம் என்பதுதான் சட்டம். எவருக்கும் விதிவிலக்கு இல்லை. ஒருவேளை பொய் வழக்கு எனில் அவ்வழக்கினை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதுதான் நல்ல முன்னுதாரணமாக அமையும்.

அதுவும் எம்.டி.முத்து மீதான வழக்கினைப் பொறுத்த வரையில், அவர் குற்றச் செயலில் ஈடுப்பட்டுள்ளார் என்பதற்கு நேரடி ஆதாரங்களும், சம்பவ சாட்சிகளும் வீடியோ பதிவாக உள்ளது. அதுவும் அவரே கொலை மிரட்டல் விடுத்து, அவரது செல்பேசியில் இருந்து அனுப்பிய குரல் பதிவும் ஆதாரங்களாக உள்ளது. 

இதனை நேர்மையான முறையில் சட்ட ரீதியாக அணுகும்படி திரு எம்.டி.முத்து அவர்களுக்கு அறிவுறுத்தி வழிகாட்டும்படியும், நீதிமன்ற புறக்கணிப்பை கைவிடும்படியும் திண்டிவனம் வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர்கள் சங்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இவன்,

முருகப்பன் ராமசாமி,

மனித உரிமை செயற்பாட்டாளர்,

திண்டிவனம்.

03.10.2024

(03.10.24 முக நூல் பதிவு)