Monday, January 4, 2021

தலித் மக்களுக்கான சுடுகாட்டுப்பாதை – மதுரை உயர்நீதி மன்ற தன்னிச்சையான வழக்கினை வரவேற்கிறோம்.

தலித் மக்களுக்கான சுடுகாட்டுப்பாதை –

மதுரை உயர்நீதி மன்ற தன்னிச்சையான வழக்கினை வரவேற்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------
மதுரை மேலூர் அருகே உள்ள மருதூர், சென்னகரம்பட்டி நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் தலித் குடியிருப்பில் இறந்துபோனவர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உரிய பாதை இல்லாத காரணத்தால் வயல் வழியாக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தினகரன் நாளிதழ் மதுரை பதிப்பு 20, 21- டிசம்பர் 2020 ஆகிய இரு நாட்களும் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியின் அடிப்படையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளை, இவ்வழக்கினை தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துள்ளது.

நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி அமர்வு, தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, தமிழக அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஆகிய துறைகளுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

21.12.2020 அன்று நீதிபதிகள் அரசுக்கு அனுப்பிய அறிவிக்கையில் கூறியிருப்பது,

‘’பல நூற்றாண்டுகளாக தலித் மக்களை இழிவு படுத்தியும் பாகுபாடு காட்டியும் நடத்தியதற்காக அவமானத்தில தலைகுனிகின்றோம். தலித் மற்றும் பழங்குடியின மக்களை முறையாக நடத்தப்படவில்லை என்பதாலும், அம்மக்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், மாண்புடன் நடத்தவும், பாதுகாக்கவும் மத்திய அரசு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989-ஐ கொண்டுவந்தது. இச்சட்டம் சில நேரங்களில், சில நபர்களால், குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது, இருப்பினும், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

2. தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேலூர் வட்டம், மருதூர் தலித் குடியிருப்பில் இறந்துபோன்ற தலித் ஒருவரின் உடலை, உரிய சுடுகாட்டுப்பாதை இல்லாத காரணத்தால், பயிர் செய்துள்ள விவசாய நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விளைந்த பயிர்கள், வயல்களின் வழியாக கொண்டுசெல்வது தேவையற்ற சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. உயிருள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இறந்த உடல்களுக்கும் தேவையில்லாத சங்கடங்களை அளிக்கின்றது. தலித் மக்கள் சுடுகாடு செல்ல சரியான பாதை இருக்கவேண்டும். இன்றைய தினகரன் நாளிதழ் செய்தி சரியான பாதைகள் / சாலைகள் இல்லை என்பதை மட்டுமே காட்டுகின்றது. எனவே, இந்த நீதிமன்றம் மேற்கூறிய பிரச்சினையை தானாகவே வழக்காக எடுத்துக்கொள்வது பொருத்தமானது என்று கருதுகிறது.


3. தமிழ்நாடு மாநிலத்தில் எத்தனை தலித் குடியிருப்புகள் உள்ளன? அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகள் மற்றும் சுடுகாட்டுப் பாதைகள் சாலைகள் கிடைத்துள்ளதா? எத்தனை குடியிருப்புகளுக்கு சுடுகாட்டுப் பாதைகள் இல்லை? சுடுகாட்டுப் பாதை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளதா? அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் என்ன? அனைத்து தலித் குடியிருப்புகளுக்கும் குடிநீர், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகள் மற்றும் சுடுக்காட்டுப் பாதை ஆகியவை எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, தமிழக அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் ஆகியவை நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் சார்பில் நீதிமன்றத்தில் இம்முயற்சியினை வரவேற்கின்றோம். அரசு தாமதப்படுத்தாமல், இவ்வழக்கில் உரிய பதில்களை அளித்து, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளபடி தலித் பழங்குடியின மக்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

(28.12.20 முகநூல் பதிவு)





No comments: