Monday, November 12, 2018

இருளர்களின் இதயம் - அ.மார்க்ஸ் அறிமுகம்


தமிழகத்தில் வாழும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்களைப் பலரும் அறிவதில்லை. ஆக ஒடுக்கப்பட்ட இப்பழங்குடி மக்கள் இன்றளவும் குற்றப் பரம்பரை யினராகவே காவல்துறையால் நடத்தப்படுகின்றனர். குற்றப் பரம்பரைச் சட்டங்கள் எல்லாம் இல்லாமற் போனபின்னும்கூட இன்றும் காவல்துறையினர் இவர்கள் மீது தம் தேவைகளுக்காகப் பொய் வழக்குப் போடுவது, பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்குவது என்பதெல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தியூர் விஜயா எனும் இருளர் இனப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை ஒட்டி அவர்களுக்காக நீதி வேண்டிய போராட்டத்தைத் தொடங்கிய காலம் முதல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து அவர்கள் மத்தியில் வேலை செய்து வருகிறார் பேரா பிரபா கல்விமணி (Prof Kalyani).
பழங்குடி மக்களைப் பொருத்த மட்டில் அவர்களுக்குள்ள பெரும் பிரச்சினை இனச் சான்றிதழ் பெறுவது. அதை எளிமைப்படுத்த அரசு தயாராக இல்லை. அடுத்த பிரச்சினை தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள காவல்துறை பிரச்சினை. இவை தொடர்பாக அம்மக்களுக்குத் தேவையான ஊதவிகளைச் செய்வது, புகார்கள் எழுதுவது, வழக்குகள் நடத்துவது, இருளர் பிள்ளைகளுக்குக் கல்வி வசதிகள் செய்து தருவது முதலானவைகளுக்காகவே பேரா பதவியிலிருந்து voluntary retirement பெற்று உழைத்து வருபவர் பேரா கல்விமணி. திண்டிவனம் மேம்பாலம் அருகில் அவர் உருவாக்கியுள்ள "பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்" அமைப்பின் சிறு அலுவலகம் எப்போதும் அவர்களுக்காகத் திறந்தே இருக்கும்.
தோழர் முருகப்பன் ராமசாமி, சிஸ்டர் லூசினா மற்றும் பல தோழர்கள் பேரா கல்விமணி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். இருளர்களுக்கான இதழ் நடத்துவது, மாநாடுகள் நடத்துவது, அவ்வப்போது சிறு வெளியீடுகள் கொணர்வது எனப் பலதிறப்பட்ட பணிகளை கல்விமணி அவர்களின் இயக்கம் செய்து வருகிறது. நடிகர் சூரியா குடும்பத்தினர், நீதியரசர் சந்துரு, தோழர் சுகுமாரன் கோவிந்தராசு முதலானவர்களும் பல்வேறு வகைகளில் கல்விமணி அவர்களின் பணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
தொடக்க காலத்தில் நானும் அவ்வப்போது சென்று வருவது வாக்கம். கடந்த பத்தாண்டுகளாக எனக்கு தொடர்பு விட்டுப் போய்விட்டது. சென்ற வாரம் திண்டிவனம் செல்ல நேர்ந்தபோது நீண்டநாட்களுக்குப் பின் இருளர் சங்கக் கட்டிடத்திற்குச் சென்றேன். தற்போது தோழர் முருகப்பன் அவர்கள் அங்கிருந்துகொண்டு கல்விமணி அவர்களுக்குத் துணையாக அவரது பணிகளில் செயல்பட்டு வருகிறார். அப்போது அவர் எழுதித் தொகுத்துள்ள இக்குறுநூலைப் பெற்றுக் கொண்டேன்.
இருளர்கள் போன்ற அதிக மக்கள் தொகையற்ற, அதுவும் சிதறிக்கிடக்கிற வகையில் பெரிய அளவு வாக்கு பலம் இல்லாத சிறு பிரிவு மக்களை யாரும் கவனிப்பதில்லை. அவர்களில் விழிப்புணர்வு பெற்ற ஒரு சிலர்தான் ஏதோ அவர்களால் முடிந்த, தெரிந்த அளவு நலப் பணிகளைச் செய்து வந்துள்ளனர். அப்படியான ஒரு இருளர் சமூகச் செயல்பாட்டாளரான வி.ஆர் ஜெகன்னாதன் (1937 - 78) என்பவர் குறித்து சமீபத்தில் முருகப்பன் எழுதி வெளியிட்டுள்ள இக்குறுநூலைத் தந்தார். கல்விமணி அவர்களின் பணிகளில் துணையாய் இருப்பவர்களில் ஒருவரான அருட் தந்தை ரஃபேல் ராஜ் அவர்களின் 'கவசம்' நிறுவனம் இந்நுலை வெளியிட்டுள்ளது.
குறைந்த வயதில் மாரடைப்பில் இறந்துபோன ஜெகன்னாதன் ஆயுள் காப்பீட்டுக் கழகம், சென்னைத் துறைமுகம் முதலியவற்றில் வேலை செய்தவர். இருளர் மக்களின் பிரச்சினைகளை எடுத்து இயங்கியபோது அவரது வீடே இயக்க அலுவலகமாக மாறி இருந்துள்ளது. 'ஆதிவாசிகள் சேவா சங்கம்' அமைத்து வட தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பழங்குடி மக்களின் பிரச்சினைகளில் தம்மால் முடிந்ததைச் செய்துள்ளார். 1961ல் தமிழக அரசு இவரை "தமிழ்நாடு ஆதிவாசிகள் ஆலோசனைக்குழு' உறுப்பினர் ஆக்கியுள்ளது. இந்திரா பிரதமராக இருந்தபோது மத்திய அரசு விருது அளித்துள்ளது. இவரது திருமணம் பெரியார் தலைமையில் நடந்துள்ளது. இவரது முதல் குழந்தை பிறந்தபோது காமராசர் தன் தாயாருடன் வந்து வாழ்த்துச் சொல்லியுள்ளார்.
இவரது தலைமையில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எல்லாம் வாசிக்கும்போது இருளர் குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகள்லிம் மக்களின் குடியிருப்புப் பிரச்சினைகள், இருக்கும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் பிரச்சினைகள் முதலியன முக்கியத்துவம் பெற்றுள்ளது தெரிகிறது. இருளர் பிரச்சினையில் அரசு எவ்வளவு அக்கறையின்றி உள்ளது என்றால், வாழ்நாள் முழுக்க அவர்களின் பிரச்சினை, அவர்களுக்குச் சான்றிதழ் என அலைந்த ஜெகன்நாதனுக்கான சான்றிதழை அவர் இறந்த பின்பே அரசு தந்துள்ளது.
தோழர் முருகப்பன் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர், ஏற்கனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து நீண்ட காலம் செயல்பட்ட போது தமிழகத்தில் 'வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' செயல்படுத்தப்படும் விதம் தொடர்பாக ஒரு மிக விரிவான நூலை ஏராளமான விவரங்களுடன் தொகுத்த அனுபவம் அவருக்கு உண்டு. எட்கார் தர்ஸ்டனின் பழங்குடி மக்கள் பற்றிய தொகுப்பில் இருளர்கள் குறித்த பகுதி முழுமையாக இந்நூலில் பிற்சேக்கையாகச் சேர்த்துள்ளார்..
எல்லோராலும் புறக்கணிக்கப்படும் சிறிய மக்கள் குழுமங்கள் மத்தியில் பணிசெய்து மறைந்த பலரும் எந்த அடையாளமும் பதிவும் இன்றி காலத்தில் கரைகின்றனர். அவர்களின் வாழ்வை ஏதோ கிடைத்த வரையிலேனும் தொகுத்து ஆவணப்படுத்துவது முக்கியம். அந்த வகையில் இக்குறுநூல் முக்கியமான ஒன்று.
முருகப்பனுக்கும் இந்நூலை வெளியிட்டுள்ள கவசம் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

(06-11-18 அன்று பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தனது முகநூலில் எழுதிய பதிவு)


No comments: