Tuesday, October 13, 2015

நூல் அறிமுகம் - 22500 கி.மீ பயணத்தின் முடிவில் இந்தப் ப்யணம் ஒன்று போதாது..

நூல் அறிமுகம் - 22500 கி.மீ பயணத்தின் முடிவில் இந்தப் ப்யணம் ஒன்று போதாது...
----------------------------------------------------------------------------------------------------------------------------
இளம் வயதில் பல்வேறு எண்ணங்களும், சிந்தனைகளும், அதனைச் சார்ந்த விருப்பங்களும் அவரவர் மனதில் தொடர்ந்து தோன்றிக்கொண்டேயிருக்கும். நமக்கு ஏற்கனவே கற்பிக்கப்பட்டுள்ள ஏதோவொரு காரணத்தின் பெயரால் அவைகளை முடக்கிக்கொண்டு, விருப்பமேயில்லை என்றாலும் வேறு வழியில்லை என சமாதானப்படுத்திக்கொண்டு அமைதியாகிவிடுவோம். தீபன் அப்படியில்லை. தன்னை முடக்கிக்கொள்ளவில்லை. அவர் அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் மனம் அமைதியடையவில்லை. பொங்கிவிழும் இடம்தேடி உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டேயிருந்துள்ளார்.
கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வு. எழுதினால் பட்டம் பெற முடியும். ஆனாலும் இந்தத் தேர்வு முறைகளால் எந்தப் பயனும் இல்லை என தேர்வில் ஒரு வரி கூட எழுதாமல் தேர்வு அறையிலிருந்து வெளியேறுகின்ற உறுதியான மன நிலை எத்தனைபேருக்கு இருக்கும்? தீபனால் முடிந்தது.
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவை, திருப்பூர் பகுதிகள்தான். படிப்பு முடிந்ததும் குடியிருப்புகளில் பொருட்களை விற்கின்ற மார்கெட்டிங் வேலை. நிறைய அனுபவங்கள். எவ்வித சுவாரசியமும் இல்லாத அந்த வேலையை தொடர்ந்து செய்ய விரும்பாமல் வெளியேறுகின்றார். பிறகு 2007 இல் கோவை ஹலோ பண்பலை வானொலியில் பணி. வினியுடன் காதல். 2009 இல் திருமணம். இந்த வேளையிலும் மனம் முழுதாய் ஓடவில்லை.
வானொலிக்காக நம்மாழ்வார் அவர்களைப் பேட்டிகண்டபோதுதான் வாழ்விற்கான விடையினைக் கண்டறிந்ததாக கூறுகின்றார். அதனை, ‘’சமூகப் பிரச்சனைகளுக்கு எல்லோரும் சொன்ன தீர்வை விடவும், ஐயா சொன்ன தீர்வு சரி என்று பட்டது. விவசாயம் மட்டும்தான் ஒரு மனிதனுக்கு நிம்மதியான வாழ்வினைத் தரும் என்று அய்யா கூறியதுதான் என்னுடைய நீண்ட நாள் தேடலுக்கு ஆரம்பம் கிடைத்தமாதிரி” என்று கூறியுள்ளார்.
ஐ.டி வேலைக்காக ஹைதராபாத் பிறகு அமெரிக்கா எனச் சென்ற நண்பர் முத்துகுமாருடன் தினசரி இரவு தொலைபேசியில் பேசும்போது வேலையை விட்டு பைக்கில் இந்தியா முழுவதும் பயணம் செல்கின்றேன். நிம்மதியான வாழ்வினைத் தரும் விவசாயத்தை இயற்கை முறையில், சிறந்த வழியில் யார் செய்கின்றார்களோ அதனைக் கண்டறிந்து, அவர்களோடு தங்கியிருந்து அதனைக் கற்று, மீண்டும் ஊர் வந்து இடம் வாங்கி அந்த விவசாய முறையினை செயல்படுத்தவேண்டும் என்று கூறுகின்றார். இவருடைய அலைவரிசையில் இணைந்து போகின்ற முத்துகுமார் நானும் அமெரிக்கா வேலையை விட்டு விட்டு வந்துவிடுகின்றேன். இருவரும் சேர்ந்து போகலாம் என்கிறார்.
2011 சூலை 25 இல் பயணம் கிளம்புகின்றனர். ஏறக்குறைய 22500 கி.மீ தூரம் பைக், மிதிவண்டி, பேருந்து, லாரி, தொடர்வண்டி என பயணம்.. இயற்கை விவசாயத்தை, வாழ்விற்கு நிம்மதி தரும் சிறந்த விவசாய முறையினைத் தேடிப் பயணிக்கின்றனர். அந்த அனுப்வங்கள்தான்.
இதில் குறிப்பாக சொல்லவேண்டியது ஏ.கே.செட்டியார் காலந்தொடங்கி பலரும் பயண அனுபவங்களை எழுதிவருகின்றனர். அது எதுவும் சொந்த வாழ்க்கையினையும், சமூகச் சிக்கல்களையும் கொண்டதாக இருப்பதில்லை. ஆனால் தீபன் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி, மாணவியுடனான நட்பு, பெற்றோர், நண்பர்கள் என அனைத்தையும் அந்த பயணத்தையொட்டிய சம்பவங்ளை அப்படியே பதிவு செய்கின்றார். ஒரு கட்டத்தில் பயணமும், அனுபவமும் முக்கியம் சொந்த வாழ்கையென தனிக்குடும்பமாக அடையாளமின்றி வாழ விருப்பமில்லையென மனைவியுடன் பிரிவது குறித்து கூட முடிவெடுத்து பேசுகின்றார்.
இவரது மனைவி வினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகும் தீபன் மீதான் காதல் குறையாமல், அவரின் பிரிவிற்காக தன்னையும் வருத்திக்கொள்ளாமல் காத்திருத்தல் என்பது கொடுமையானது. அப்படிப்பட்ட மனைவி வினியை பிரியாமல் சேர்ந்து வாழ்வதென்பது சந்தோசமானது.
காஷ்மீர், இராணுவ முகாம்கள், துப்பாக்கி சூடுகள், மரணங்கள். பிறகு சிக்கிம். குஜராத் மோடியின் கொடூர பாதிப்புகளின் வடுக்களை சந்திக்கின்றார். அசாம், மேற்கு வங்கம், நேபாளம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஆந்திரா, கேரளா என பயணக்கின்றார்.
காஷ்மீர், நேபாள், பஞ்சாப், சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் தமிழர்களையும், தமிழ் தெரிந்தவர்களையும் கண்டுள்ளார். தஞ்சை வெண்மணித் தீயில் வெந்து மடியாமல் தப்பித்து ஓடிய தமிழ் குடும்பம், தமிழ் பேசுகின்ற மாவோயிஸ்ட். நேபாளில் மலிந்து போயுள்ள பாலியல் தொழில். இதுபோன்று இவர் பெற்றுள்ள அனுபவங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நாவல்களும், சிறுகதைகளும் எழுதக்கூடிய அளவிற்கு சமூக பரிமாணங்களைக் கொண்டுள்ளன.
மனிதர்களுடனான தன்னுடைய அனுபவத்தில் உழைக்கின்ற மனிதர்கள் மூன்று வகையாக உள்ளதாக அடையாளங்கண்டுள்ளார். அவை...
1. தன் கனவை நோக்கிய உழைப்பு.
2. இன்னொருவரின் கனவுக்கான உழைப்பு.
3. கனவும் வேண்டாம் உழைப்பும் வேண்டாம். 
இவர் இந்த மூன்று நிலைகளிலும் தாவித் தாவி பயனித்துள்ளதாக கூறுகின்றார். இப்படி தாவித் தாவிப் பயணித்தாலும் மனிதத்தை மறக்காமல், சமூவியல் நோக்கோடு சென்றுகொண்டேயிருப்பது என்பது சிறப்பான ஒன்று. அடுத்த பயணம் தொடங்கியுள்ளார். அதனையும் இதனைவிட சிறப்பாக பதிவு செய்ய வாழ்த்துக்களோடு, கோவை ஆணைகட்டி மலைப்பகுதியில் தொடங்கி பாதியோடு நின்று போன விவசாய முறையினை மீண்டும் தொடங்கி வெற்றியுடன் பலருக்கும் அடையாளமாக காட்டிட வாழ்த்துகின்றோம்.


1 comment:

மீரா செல்வக்குமார் said...

மிக அருமையான அறிமுகம்....நன்று...முடிந்தால் என் வலைப்பூவுக்கும் வாருங்கள் நண்பரே..http://naanselva.blogspot.com/