Thursday, December 20, 2007

சக்கிலியனா நீ?... கிடையாது போ!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் வட்டத்தில் உள்ள நம்பியூர் பேரூராட்சியில் பிளியம்பாளையம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் த/பெ பழனி. இவர் 2-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஹரிணிக்கு தசராபாளையம் கருப்பராயன் கோயிலில் 21.11.07 அன்று காதனி விழா நடத்தி, அன்றே வரவேற்பும், விருந்தும் நடத்த நம்பியூர்&காந்திபுரம் கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தை பதிவு செய்துள்ளார். மேற்படி மாரியப்பன் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்த, மேற்படி மண்டப நிர்வாகி அய்யாசாமி, சக்கிலியர்களுக்கு இந்த மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த இடம் தரமுடியாது எனக்கூறி மறுத்து, பதிவை ரத்து செய்துள்ளார். அதன்பின்பு நம்பியூர் காவல் ஆய்வாளர் தலையிட்டதின் பேரில் மீண்டும் மண்டபத்தை வாடகைக்கு தந்துள்ளார் நிர்வாகி அய்யாசாமி. ஆனால் சாதி இந்துக்கள் தொடர்ந்து மேற்படி மாரியப்பனை அந்த மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளனர். கோபி நகர மன்ற முன்னாள் தலைவர் வலசு முத்துசாமி என்பவர் ‘‘மீறி மண்டபத்தில் நடத்தினால் குழந்தையை கொலை செய்துவிடுவதாக’’ மாரியப்பனை மிரட்டியுள்ளார்.

அதன்பின்பு, நிகழ்ச்சி நடக்கவிருந்த 21.11.07 அன்று நம்பியூர் பகுதியில் அரசு அதிகாரிகள் 144தடையுத்தரவை அமுல்படுத்தி, நிகழ்ச்சியை தடைசெய்ததோடு, வெளியூரிலிருந்து வந்த மாரியப்பனின் உறவினர்களை காவல் துறையினர் மிரட்டி திருப்பி அனுப்பியதுடன், மாரியப்பன், அவரது மனைவி விஜியா உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.

மேற்படி விஜியா கொடுத்த புகாரின்பேரில் நம்பியூர் போலீசார் மண்டப நிர்வாகி அய்யாசாமி உள்ளிட்ட 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்ட அமுலாகக்கத்தை ரத்து செய்யக்கோரியும் மண்டப நிர்வாகிகளும், சாதி இந்துக்களும், தி.மு.க., அ.தி.மு.க., காங்.ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மற்றும் தலித் அல்லாத பிற சாதியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்படி விஜியா அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், மண்டபத்தில் தலித் மக்கள் நிகழ்ச்சி நடத்த அனுமகோரியும், பல்வேறு தலித் மக்கள் அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்தவிருந்தனர். இந்நிலையில், காவல் துறையினர் 20.12.07 இன்று அதிகாலை 4.00 மணியளவில் தலித் விடுதலைக் கட்சி மாநிலத் தலைவர் செங்கோட்டையன் என்பவரை கோவையில் அவரது வீட்டிலிருந்து பிடித்துச் சென்றுள்ளனர். அவரை எங்கு வைத்துள்ளனர் என்பதை போலீசார் சொல்லாமல் மறைத்து வருகின்றனர். மேலும் இன்று அதிகாலையிலிருந்தே போலீசார் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தலித்துகளை ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து வருகின்றனர். தற்போது 600&க்கும் மேற்பட்ட தலித்துகளை கோபி நகராட்சி திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். இதில் 100&க்கும் மேற்பட்ட பெண்கள். சுமார் 60 குழந்தைகளும் உள்ளனர். தலித் மக்களை கைது அடைத்து வைத்துள்ள போலீசார் அவர்களுக்கு உணவு அளிக்காமல் உள்ளனர். குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், பழம் வாங்குவதற்கு அனுமதி மறுப்பதோடு, அச்சுறுத்தியும் வருகின்றனர்.

அதிகாலை 4.00 மணிக்கு கைது செய்யப்பட்ட மேற்படி தலித் விடுதலைக் கட்சி தலைவர் செங்கோட்டையன் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை சொல்ல மறுத்து வருகின்றனர். மேலும் நம்பியூர் மாரியப்பன், தங்கவேல், விடுதலை செல்வம், பாலா செல்வம் உள்ளிட்டர்வகளை மக்களுடன் மண்டபத்தில் வைக்காமல், நம்பியூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். உறவினர்கள் சென்று பார்க்கவும் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,

• கைது செய்யப்படிருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களை அவர்களது இருப்பிடத்தில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

• தொடர்ந்து சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவும், தலித் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற காவல் துறை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.


• தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆனையம் போன்றவை தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, அண்மைக் காலமாக வன்கொடுமை அதிகம் நிகழும் ஈரோடு மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து, நம்பியூர் பகுதியில் தீண்டாமையை கடைபிடித்து வரும் சாதி இந்துக்களின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 16 &ன் கீழ் கூட்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

• அருந்ததியர் சமூகத்தினருக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கின்ற, சாதி ஆதிக்கத்துடன் திகழ்கின்ற மேற்படி நம்பியூர் & காந்திபுரம் கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண்டபத்தின் உரிமத்தை ரத்து செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

3 comments:

Unknown said...

இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்தக் கல்யாண மண்டபம் உரிமத்தை ரத்து செய்ய என் ஆதரவு. அரசு அதிகாரிகளின் போக்கும் கண்டிக்கத் தக்கது. என்று திருந்துமோ என் தமிழ் சமூகம்?

Anonymous said...

I condmn this covertly act.

My curiosity, why சக்கிலியர் community talking in TELU(N)GU.....How it happend?

மாசிலா said...

//கோபி நகர மன்ற முன்னாள் தலைவர் வலசு முத்துசாமி என்பவர் ‘‘மீறி மண்டபத்தில் நடத்தினால் குழந்தையை கொலை செய்துவிடுவதாக’’ மாரியப்பனை மிரட்டியுள்ளார்.//

சபாஷ் சாதிகளற்ற திராவிட தமிழ்நாடே!

வீரப்பரம்பரையில் பால்குடித்து வந்த திராவிட இந்துமத சாதி சார்பு குஞ்சுகள் ஏமாந்த எளியவர்களிடம், திராணியற்ற கடை நிலை மக்களிடம் தங்களது மாளாத போர் வெறியை (:-() சோதனை பார்த்துக்கொள்ள சரியான களம்தான் போங்கள்!

மண்ணின் மைந்தர்களுக்கு உதவாத கோவில் யாருக்கும் தேவையில்லை. அது அழிக்கப் படவேண்டிய ஒன்றே!

இந்த 21ஆம் நூ.ஆ.லும் இப்படியான கூத்துகளை தமிழர்கள் ஒருவர்களால் மட்டுமே நடத்தேற்றிக்காட்ட முடியும்.

சபாஷ் தமிழா! வாழ்க தமிழ்மக்கள். அதிலும் முக்கியமாக வாழ்கவே ஆதிக்க சாதிகள் எனக்கூறிக்கொள்ளும் உதவாக்கரை தமிழ்மக்கள்.

2020இல் கட்டாயமாக இந்தியா வல்லரசாகிவிடும் என்பதில் எந்த அச்சமும் இல்லை. அனைத்து அம்சங்களையும் பெற்றுவிட்டது நம் வீரப்பரம்பரையில் வந்த திராவிட சாதிக்கார தமிழ்நாடு.

தமிழனாக பிறந்ததை நினைத்து வெட்கி தலைகுனிகிறேன்!

:-(

செய்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

அயராத உழைப்பும் விழிப்பும் சளைக்காத போர்குணமும் ஒன்று மட்டுமே இவர்களைப்போன்ற சாதிக்கார கோமாளிகளை மண்ணை கவ்வச்செய்யும்.

சாதிக்கார மடையர்களின் தங்களது போர் ஆரம்பத்திலேயே வீண்போன போர் என்பதை உணராமல் செத்துப்போன பிணத்தை அடிக்கும் கணக்காக கற்பனை உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

காலம் நிச்சயம் பதில் சொல்லும். காலம் இவர்களை விடாது. காலம் இவர்களை துரத்தி பிடிக்கும். காலம் கட்டாயம் இவர்களை தண்டிக்கும்.

நன்றி.