Monday, May 27, 2019

அறம் செய்ய விரும்புவோம்

அறம் செய்ய விரும்புவோம் 
-----------------------------------------------
அறம் என்ற வார்த்தைக்கு பொருள் ஒன்றுதான், ஆனால் அதனை வெளிப்படுத்தும் செயல்கள்தான் வேறு வேறு. இன்றையச் சூழலில் தவிர்க்கமுடியாத, மிகவும் தேவையான ஒன்றாக உள்ளதை உணர்ந்ததன் விளைவாகவோ என்னவோ பலரும் இன்று இதனை பேசுகின்றனர், வலியுறுத்துகின்றனர்.

இப்படித்தான் அகரம் அறக்கட்டளை மூலமாக 2010 ஆம் ஆண்டு தொடங்கி கல்வி மூலமாக இந்த அறம் செயல்படுத்தப்படுகின்றது. இப்பதிவு அகரம் குறித்தோ, அதன் செயல்பாடுகள் குறித்தோ அல்ல.. அறம் செய்ய விரும்புவோம் - அகரம் விதைத்திட்ட வெற்றிக்கதை என்கிற புத்தகம் குறித்தானது.
கடந்த வாரம்தான் இப்புத்தகம் வெளியானது. +2 படிப்பிற்கு பிறகு உயர்கல்வி படிக்கமுடியாத மாணவர்களை அடையாளங்காணும் தன்னார்வலர்களின் அனுபவங்களும், அவ்வாறு அடையாளங்காணப்பட்ட ஒரு சில மாணவர்களின் வெற்றிகளும்தான் இந்தப்புத்தகம். உதவி தேவைப்படும் மாணவனின் மதிப்பெண்களை மட்டுமே பார்க்காமல், அவர்களுடைய சமூக, பொருளாதாரச் சூழல்களையும் அடையாளங்கண்டதுதான் இத்திட்டத்திற்கான வெற்றியாக உள்ளது. அதாவது யாருக்கு மிகமிகத் தேவையோ அவர்களுக்கு கிடைத்ததால் அவர்கள் பொறுப்பினை உணர்ந்து அக்கறையோடு சாதித்தார்கள். இன்றும் சமூகத்திற்கு பங்களிப்பினை செய்கின்றார்கள்.
”ஆயிரக்கணக்கான கரங்கள் உதவி கேட்டு உயரும்போது, அதில் முன்வரிசையில் இருப்பவர்களின் கரங்களுக்கு மட்டுமோ அல்லது ஆங்காங்கே சில கரங்களை மட்டுமோ பார்த்து உதவுவது சரியான முறையல்ல. யாருக்கு உதவி மிகவும் தேவை என தேர்வு செய்ய வேண்டும். அகரம் அறக்கட்டளையின் விதைத் திட்டத்தில் அப்படி ஒரு கச்சிதமான தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது” என நூலில் இத்திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடங்கிய அகரம் விதைத் திட்டத்தில் 2017 வரை 1961 மாணவர்களின் உயர்கல்விக் கனவை அகரம் நிறைவேற்றியுள்ளது. இவர்களில் 83% பேர் முதல் தலைமுறையாக கல்லூரி வாசலைத் தொடும் மாணவர்களாகும். இதிலும் 62% பெண்கள் என்பதில் பெருமிதம் என அகரம் மகிழ்கின்றது. இவர்களில் 14% மாணவர்களுக்கு பெற்றோர்கள் இல்லை. 36% மாணவர்களுக்கு அப்பா அல்லது அம்மா என ஒருவர் மட்டுமே உள்ளனர்.
யாருக்கு உதவி மிகவும் தேவை என்பதை மாணவர்களின் வீட்டிற்குச் சென்றால்தான் அவர்களின் சமூக பொருளாதார சூழலை அறிந்து உதவி செய்யமுடியும் என்பதால், இதற்கான கள ஆய்வு செய்த தன்னார்வலர்களின் அனுபவங்களின் தொகுப்பே இந்நூல். இதில் மிக முக்கியமானது பெண்கள் அனைவரும் படிப்பதற்கு மிக ஆர்வமாக உள்ளனர் என்பதையும், பெரும்பாலான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை மதுபோதைக்கு அடிமையாகியுள்ள தந்தையே தடை செய்துள்ளார் என்பதைப் பதிவு செய்துள்ளனர். 
பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்களில் மதுபோதைக்கு அடிமையாக உள்ளனர். குழந்தைகளை வேலைக்கு அனுப்பியும், மனைவியின் கூலி உழைப்பிலும் குடிக்கின்றனர். 
பல மாணவர்கள் தேர்வு முடிவிற்குப் பின்பு (நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும்) படிக்கமுடியாத நிலையில் தங்களை கனவினைப் புதைத்துவிட்டு, அன்றாடக் கூலி வேலைக்குச் செல்கின்றனர். பல தன்னார்வலர்கள் வேலைக்குச் சென்ற மாணவர்கள் வரும்வரை காத்திருந்து ஆய்வினை முடித்து வந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்று மாணவன் பெயரைச் சொல்லி விசாரித்ததும் “ஊரா, காலனியா” என்று அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளனர். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற பதிவுகள் இல்லை.
தன்னார்வலர்களில் பலர் அகரத்தின் முன்னாள் மாணவர்களும் உள்ளனர். அனைவரும் வேலை செய்பவர்கள். சனி, ஞாயிறுகளில் இந்த ஆய்வுப் பணியினை செய்கின்றனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே முழுமையான, சரியான முகவரி எழுதியுள்ளனர். பலவற்றில் சரியான முகவரி இருக்காது, புகைப்படம் மட்டும் இருக்கும். தொலைபேசி இருக்காது. இருந்த சிலவற்றில் இவர்கள் அழைக்கும்போது வேலை செய்யாது. இப்படி பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவனை கண்டடைந்து ஆய்வினை செய்து, படிப்பு முடித்து இன்று பலர் பல நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இதற்காக தன்னார்வலர்களின் பயணம் மிக முக்கியமானதாக குறிப்பிடுகின்றது. தமிழகத்தை குறுக்குவெட்டாக அறிந்துகொள்ள அகரம் தன்னார்வலர்களாக இருக்கவேண்டும் என்று ஒருவர் குறிப்பிடுகின்றார். வழிநெடுக யாரேனும் ஒருவர் வழிகாட்டியும், அழைத்துச் சென்றும், விவரங்கள் கூறியும் உதவியபடியே உள்ளனர் என அனைத்து தனார்வலர்களும் குறிப்பிடுகின்றனர். மனிதம் இன்னும் உயிர்ப்போடு உள்ளதின் மகத்துவம் இது.
மீள் பதிவு 2018

ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி @ கல்யாணி, இரா.முருகப்பன் இருவரையும் மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்து, பொய் வழக்கு பதிவு செய்த 
மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோருதல் தொடர்பாக 
ஆலோசனைக் கூட்டம்
---------------------------------------------------------------------------------------------------
நாள் : 19.05.2019, காலை 10.00 மணி
இடம் : பி.கே.மஹால், காந்தி சிலை அருகி, திண்டிவனம்.
------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர் வணக்கம். 
• வானூர் வட்டம் பொம்பூர் கிராமத்திலுள்ள பழங்குடி இருளர் தம்பதியினரான மோகன் – ரோஜா தங்களுக்குள் எழுந்த கருத்துவேறுபாடு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மோகன் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செங்கல்சூளையிலும், ரோஜா புதுச்சேரி அருகே உள்ள செங்கல் சூளையிலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பெரிய மகள் சுப்புலட்சுமி தாயிடமும், சிறிய மகள் சுபாஷினி தந்தையிடம் உள்ளனர்.

• கணவன் மோகன் சென்னை செல்லும்போது, பொம்பூர் வீட்டில் விட்டுச் சென்றிருந்த, இரு சக்கர வாகனத்தை, அதே ஊரைச் சேர்ந்த தங்களது உறவினர் மணிகண்டன் மூலமாக மனைவி ரோஜா எடுத்துச் சென்றுள்ளார்.
• 11.05.2019 அன்று சென்னையிலிருந்து பொம்பூர் வந்தனர் மோகனும், சுபாஷினியும். மறுநாள் 12.05.2019 அன்று மேற்படி மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை வாங்கிய மோகன், “என்னுடைய வண்டியை கொண்டுவந்து விட்டுவிட்டு உன்னுடைய வண்டியை வாங்கிக்கொள்” என்று கூறியுள்ளார்.
• மறுநாள் 13.05.2019 அன்று மாலை, அதே ஊரைச் சேர்ந்த பெரியண்ணன் த/பெ கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் என்பவர் மோகனை தாக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தை பிடுங்கியுள்ளார். தடுக்க முயன்ற மகள் சுபாஷினியையும் தாக்கியுள்ளார். அன்று இரவே, பெரியண்ணன் தூண்டுதலின் பேரில், ரோஜா கொடுத்த பொய்வழக்கின் பேரில் மயிலம் போலீசார் மோகனை கைது செய்துள்ளனர்.
• மறுநாள் 14.05.2019 அன்று மோகனின் 15 வயது மகள் சுபாஷினி தன்னையும், தனது தந்தையையும் தாக்கிய மேற்படி பெரியண்ணன் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார். உதவி ஆய்வாளர் விவேகானந்தன் புகாரை வாங்காமல், மறுநாள் வரும்படி திருப்பி அனுப்பியுள்ளார்.
• இதற்கிடையே, 14.05.2019 அன்று பகல் 1.00 மணியளவில் மயிலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில், காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் பழங்குடி இருளர் மோகனை கடுமையாகத் தடியால் தாக்கி, அடிக்கின்றார். காவல் நிலைய சித்திரவதையில் பாதிக்கப்பட்ட மோகன் அன்று இரவே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்படுகின்றார்.
• மேற்படி மோகன் போலீசாரால் பாதிக்கப்பட்டது தொடர்பாக புகாரினைத் தயாரித்துக்கொண்டு, மறுநாள் 15.05.2019 அன்று காலை 8.00 மணியளவில் பேராசிரியர் கல்யாணி, இரா.முருகப்பன் இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, புகார் மனுக்களில் மோகனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு 8.30 மணிக்கு மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்ததும், வாசலிலேயே பேராசிரியர் கல்யாணி, முருகப்பன் இருவரையும் மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் சீருடை அணியாத காவலர்களான வெங்கடேசன், அறிவுநிதி ஆகிய மூவரும் மனிதாபிமானமற்ற முறையில், மூர்க்கத்தனமான முறையில் கைது செய்து, அவர்கள் எடுத்துவந்திருந்த தனியார் காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றனர்.
• காலை 10.30 மணிவரை மயிலம் காவல் குடியிருப்பில் காரிலிருந்து இறங்கவிடாமல் அடைத்துவைத்திருந்து, 10.40 மணியளவில் மயிலம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பிறகு 11.30 மணியளவில் வழக்கு பதிவு செய்து, சொந்தப் பிணையில் இருவரையும் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் வெளியே அனுப்பினார்.
காவல் நிலைய சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மோகனுக்கு நீதி கிடைத்திட புகார் மனு எழுத உதவிய பேராசிரியர் கல்யாணி, இரா.முருகப்பன் இருவரையும் மூர்க்கத்தனமாக கைது செய்து, பொய் வழக்கு பதிவு செய்த மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் இரு காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்க அன்போடு அழைக்கின்றோம்.
தி.அ.நசீர் அகமது மு.பூபால்
நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு
ப.இளங்கோவன். சு.ஆறுமுகம்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
---------------------------------------------------------------
நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
9443045315,, 9442622970, 9894207407


மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களைக் கண்டித்து தொடர்ந்து ஆர்பாட்டம் - பொதுக்கூட்டங்கள்.

மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களைக் கண்டித்து தொடர்ந்து ஆர்பாட்டம் - பொதுக்கூட்டங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------




திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி @ கல்யாணி, இரா.முருகப்பன் இருவரையும் மனிதாபிமானமற்ற முறையில் மூர்க்கத் தனமாக நடத்தி, பொய் வழக்கில் கைது செய்த மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோருதல் தொடர்பாக இன்று 19.05.2019 காலை திண்டிவனத்தில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு பொருளாளர் தி.அ.நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க தலைவர் ப.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மு.பூபால் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். ந.க.மே.கு.செயலாளர் இரா.முருகப்பன் நன்றியுரை கூறினார்.
அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களிலிருந்து 78 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. பழங்குடி இருளர் மோகன் என்பவரை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்ததோடு, பாதிக்கப்பட்டவருக்கு உதவிய பேராசிரியர் பிரபா கல்விமணி,  இரா.முருகப்பன் இருவரையும் மூர்க்கத்தனமான முறையில் பொய் வழக்கில் கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்ட மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களின் மனிதத்தன்மையற்ற செயலைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

2. அத்துமீறலில் ஈடுபட்ட மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது வழக்குப் பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி புலன் விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்.
3. விசாரணை என்ற பெயரில் நடைபெறும் காவல் நிலைய சித்திரவதைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
4. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31.05.2019 அன்று மயிலத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்றும், 15.06.2019 அன்று திண்டிவனத்தில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை வைத்து கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என்றும்,  30.06.2019 அன்று அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தை விழுப்புரத்தில் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. 
இவண்,
ப.இளங்கோவன்.
தலைவர்.
சு.ஆறுமுகம்.
பொதுச் செயலாளர்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.

செம்புலம் - இரா.முருகவேள்

கொலையான ஒரு இளைஞனின் உடல். காவல் துறை விசாரணையில் மூன்றாவது நாள்தான் தெரிகின்றது அது தலித் இளைஞன் என்பது. தொடரும் போலீஸ் விசாரணை ஒரு துப்பறியும் நாவலாக விரிகின்றது.
ஒரு மில்லில் வேலை செய்யும் அமுதா என்ற பெண்ணை பாஸ்கரன் காதலிப்பதாகவும், அமுதாவும் காதலிப்பதாகவும், அமுதா காதலிக்கவில்லை என்றும், பாஸ்கரன் தொல்லைக் கொடுப்பதாகவும், சந்தையில் பின் தொடர்வதாகவும், கையைப் பிடித்து இழுத்ததாகவும், அமுதாவின் அம்மாவிற்கும், பாஸ்கருக்கும் தொடர்பு என்றும், பாஸ்கரனைக் கண்டித்த சாதிச் சங்கத் தலைவரை பாஸ்கர் தாக்கியதால் சாதிச் சங்கத்தினர் பாஸ்கரனை கொலை செய்ததாகவும் முதல் கட்டவிசாரணை வழக்கு. கொலைக்கு காரணம் இது கிடையாது, வேறு உள்ளது எனத்தெரிந்தாலும் போலீஸ் இதோடு முடித்துக்கொள்கிறது.
இதன்பிறகு நாவல் வேறு களத்திற்குச் செல்கிறது. கொலையுண்ட தலித் இளைஞன் ஒரு கலகக் காரணாக இருக்கின்றான்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மில்களில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளவயது பெண்கள் மீதும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக செயல்படும் தலித் இளைஞர் பாஸ்கர்.
மில் உரிமையாளர்கள் அனைவரும் சாதி சங்கத்தில் உள்ளனர. சாதி சங்கத்தை அடியாட்களாகவும், கூலிப்படையாகவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாதி ஆதிக்கத்தையும், தலித்துகள் மில்களில் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பதுடன், மில்லில் உள்ள பெண்களைக் காப்பாற்றி, மில்லில் பெண்கள் மீது நிகழும் கொடுமைகளை வெளிக்கொணரவும் முயற்சித்த பாஸ்கரன் கொலை செய்யப்படுகின்றான்.
அமுதாவுடன் என்ன நடந்தது என்பதும்,
அதன் உண்மை என்ன என்பதும் நாவலின் கடைசியில் நாம் அறியும்போது,
இதுபோன்று உண்மை காரணம் வெளிவராமல் எத்தனை தலித் இளைஞர்களின் கொலையும், மரணமும் சாதாரணமாக பெண் தொடர்பு, குடிபோதை மோதல், விபத்து என முடித்துவைக்கப்படுகிறது என நினைக்கும்போது பெருங்கவலை சூழ்கிறது.
திண்டிவனம் மானூர் ராஜா, வண்டிப்பாளையம் ராஜா மற்றும் இளவரசன், கோகுல்ராஜ் போன்றோரின் கொலைகளுக்குப் பின்னால் இதுபோன்று மறைக்கப்பட்டுள்ள ஏராளமான கதைகள் இருக்கும். சிசிடிவி காட்சிகள் இல்லை என்றால் சங்கர் கொலையில் கெளசல்யா குற்றவாளியாக்கப்பட்டிருப்பார்.
ஒவ்வொரு தலித் இளைஞனின் கொலை மற்றும் சந்தேக மரணத்திற்குப் பின்னால் சாதியும், சாதிய சங்கமும் உள்ளது என்பதை இந்நாவல் ஆவணப்படுத்தியுள்ளது.
நாவலில் மேலும் தலித் மனித உரிமை, உண்மை அறியும் குழு, அறிக்கை, பத்திரிகை செய்தி, வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு சாரா நிறுவனங்கள் எல்லாம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும்
தோழர் READ Karuppu Samy நாவலில் அவரின் பணி சார்ந்து கே சாமியாக முக்கிய சூழலில் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
தோழர் இரா. முருகவேள் அவர்கள் தமிழகத்தின் மிக முக்கியமான சிக்கலை நாவலாக்கியுள்ளார். இந்நாவல் முற்போக்கு வட்டத்தில் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தில் உள்ள சாதிச் சங்கள், மில் உரிமையாளர்கள் மத்தியில் செல்லவேண்டும். அவர்கள் இதனை படித்துவிட்டு பேசவேண்டும். தோழர் முருகவேள் அவர்களின் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு (இரண்டும் மொழி பெயர்ப்பு என்றாலும்), மிளிர்கல், முகிலினி ஆகியவை ஒவ்வொன்றும் அடிப்படையில் வேறு வேறானவை. இந்த செம்புலம் முற்றிலும் வேறு.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சாமதானம், பஞ்சாயத்துக் கூடாது என்பதை நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். நாம் இப்படி செயல்பட்டுக்கொண்டிருப்பதால் இதனைப் படிக்கும் போது மகிழ்வாக உள்ளது.
தலித் இளைஞனின் கொலைக்குப்
பின்னால் உள்ள சமூகக் காரணங்களையும், சிக்கல்களையும் கண்டுபிடிக்கவேண்டும், பேசவேண்டும், வெளிக்கொண்டுவரவேண்டும், வழக்காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை இந்த நாவல் உருவாக்குகின்றது.
மீள் 2018