Monday, May 27, 2019

அறம் செய்ய விரும்புவோம்

அறம் செய்ய விரும்புவோம் 
-----------------------------------------------
அறம் என்ற வார்த்தைக்கு பொருள் ஒன்றுதான், ஆனால் அதனை வெளிப்படுத்தும் செயல்கள்தான் வேறு வேறு. இன்றையச் சூழலில் தவிர்க்கமுடியாத, மிகவும் தேவையான ஒன்றாக உள்ளதை உணர்ந்ததன் விளைவாகவோ என்னவோ பலரும் இன்று இதனை பேசுகின்றனர், வலியுறுத்துகின்றனர்.

இப்படித்தான் அகரம் அறக்கட்டளை மூலமாக 2010 ஆம் ஆண்டு தொடங்கி கல்வி மூலமாக இந்த அறம் செயல்படுத்தப்படுகின்றது. இப்பதிவு அகரம் குறித்தோ, அதன் செயல்பாடுகள் குறித்தோ அல்ல.. அறம் செய்ய விரும்புவோம் - அகரம் விதைத்திட்ட வெற்றிக்கதை என்கிற புத்தகம் குறித்தானது.
கடந்த வாரம்தான் இப்புத்தகம் வெளியானது. +2 படிப்பிற்கு பிறகு உயர்கல்வி படிக்கமுடியாத மாணவர்களை அடையாளங்காணும் தன்னார்வலர்களின் அனுபவங்களும், அவ்வாறு அடையாளங்காணப்பட்ட ஒரு சில மாணவர்களின் வெற்றிகளும்தான் இந்தப்புத்தகம். உதவி தேவைப்படும் மாணவனின் மதிப்பெண்களை மட்டுமே பார்க்காமல், அவர்களுடைய சமூக, பொருளாதாரச் சூழல்களையும் அடையாளங்கண்டதுதான் இத்திட்டத்திற்கான வெற்றியாக உள்ளது. அதாவது யாருக்கு மிகமிகத் தேவையோ அவர்களுக்கு கிடைத்ததால் அவர்கள் பொறுப்பினை உணர்ந்து அக்கறையோடு சாதித்தார்கள். இன்றும் சமூகத்திற்கு பங்களிப்பினை செய்கின்றார்கள்.
”ஆயிரக்கணக்கான கரங்கள் உதவி கேட்டு உயரும்போது, அதில் முன்வரிசையில் இருப்பவர்களின் கரங்களுக்கு மட்டுமோ அல்லது ஆங்காங்கே சில கரங்களை மட்டுமோ பார்த்து உதவுவது சரியான முறையல்ல. யாருக்கு உதவி மிகவும் தேவை என தேர்வு செய்ய வேண்டும். அகரம் அறக்கட்டளையின் விதைத் திட்டத்தில் அப்படி ஒரு கச்சிதமான தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது” என நூலில் இத்திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடங்கிய அகரம் விதைத் திட்டத்தில் 2017 வரை 1961 மாணவர்களின் உயர்கல்விக் கனவை அகரம் நிறைவேற்றியுள்ளது. இவர்களில் 83% பேர் முதல் தலைமுறையாக கல்லூரி வாசலைத் தொடும் மாணவர்களாகும். இதிலும் 62% பெண்கள் என்பதில் பெருமிதம் என அகரம் மகிழ்கின்றது. இவர்களில் 14% மாணவர்களுக்கு பெற்றோர்கள் இல்லை. 36% மாணவர்களுக்கு அப்பா அல்லது அம்மா என ஒருவர் மட்டுமே உள்ளனர்.
யாருக்கு உதவி மிகவும் தேவை என்பதை மாணவர்களின் வீட்டிற்குச் சென்றால்தான் அவர்களின் சமூக பொருளாதார சூழலை அறிந்து உதவி செய்யமுடியும் என்பதால், இதற்கான கள ஆய்வு செய்த தன்னார்வலர்களின் அனுபவங்களின் தொகுப்பே இந்நூல். இதில் மிக முக்கியமானது பெண்கள் அனைவரும் படிப்பதற்கு மிக ஆர்வமாக உள்ளனர் என்பதையும், பெரும்பாலான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை மதுபோதைக்கு அடிமையாகியுள்ள தந்தையே தடை செய்துள்ளார் என்பதைப் பதிவு செய்துள்ளனர். 
பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்களில் மதுபோதைக்கு அடிமையாக உள்ளனர். குழந்தைகளை வேலைக்கு அனுப்பியும், மனைவியின் கூலி உழைப்பிலும் குடிக்கின்றனர். 
பல மாணவர்கள் தேர்வு முடிவிற்குப் பின்பு (நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும்) படிக்கமுடியாத நிலையில் தங்களை கனவினைப் புதைத்துவிட்டு, அன்றாடக் கூலி வேலைக்குச் செல்கின்றனர். பல தன்னார்வலர்கள் வேலைக்குச் சென்ற மாணவர்கள் வரும்வரை காத்திருந்து ஆய்வினை முடித்து வந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்று மாணவன் பெயரைச் சொல்லி விசாரித்ததும் “ஊரா, காலனியா” என்று அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளனர். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற பதிவுகள் இல்லை.
தன்னார்வலர்களில் பலர் அகரத்தின் முன்னாள் மாணவர்களும் உள்ளனர். அனைவரும் வேலை செய்பவர்கள். சனி, ஞாயிறுகளில் இந்த ஆய்வுப் பணியினை செய்கின்றனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே முழுமையான, சரியான முகவரி எழுதியுள்ளனர். பலவற்றில் சரியான முகவரி இருக்காது, புகைப்படம் மட்டும் இருக்கும். தொலைபேசி இருக்காது. இருந்த சிலவற்றில் இவர்கள் அழைக்கும்போது வேலை செய்யாது. இப்படி பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவனை கண்டடைந்து ஆய்வினை செய்து, படிப்பு முடித்து இன்று பலர் பல நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இதற்காக தன்னார்வலர்களின் பயணம் மிக முக்கியமானதாக குறிப்பிடுகின்றது. தமிழகத்தை குறுக்குவெட்டாக அறிந்துகொள்ள அகரம் தன்னார்வலர்களாக இருக்கவேண்டும் என்று ஒருவர் குறிப்பிடுகின்றார். வழிநெடுக யாரேனும் ஒருவர் வழிகாட்டியும், அழைத்துச் சென்றும், விவரங்கள் கூறியும் உதவியபடியே உள்ளனர் என அனைத்து தனார்வலர்களும் குறிப்பிடுகின்றனர். மனிதம் இன்னும் உயிர்ப்போடு உள்ளதின் மகத்துவம் இது.
மீள் பதிவு 2018

No comments: