Wednesday, October 20, 2010

ஜாதியை கடந்தவர்கள்




அடுத்த வேளை உணவுக்கு வழி தெரியாமல், பசியில் அழும் குழந்தைக்கு பால் வாங்க வழியில்லாமல், உடுத்தியிருந்த உடைகளுடன் வெளியேறினார்கள் - 2008 இல். இப்போது, இரண்டு பிரியாணி கடைகள்; 10 லட்சம் மதிப்பில் சொந்த மாடி வீடு; ஒரு டி.வி.எஸ். வண்டி; நான்கு பேருக்கு வேலை; இவர்கள் வழிகாட்டுதலில் சென்னையில் ஒரு பிரியாணி கடை. இவையெல்லாம் இந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்தவை. செய்து காட்டியவர்கள் அஞ்சுகம் - கணேசன் தம்பதியினர். இந்த வளர்ச்சிக்காக இவர்கள் இழந்தது ஜாதி அடையாளத்தை. ஆம், இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உழைப்பின் தொடக்கத்தில் சில ஆண்டுகள் தொப்பி வைத்துக் கொண்டு முஸ்லிமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டõர் கணேசன். இந்த வெற்றியும், முன்னேற்றமும் இவர்களுக்கு சாதனையாகத் தெரியவில்லை! பிரச்சனையில்லாமல் நன்றாக வாழ்கிறோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.




அஞ்சுகம்

சரியாக 10 வருடத்திற்கு முன்பு விவரம் தெரியாத 3 குழந்தைகளுடன் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியின்றி, புகுந்த வீட்டை விட்டு வெளியேறினேன். இன்று தினமும் 300 பேருக்கு சாப்பாடு போடும் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். 1976 இல் பிறந்த எனக்கு 19 வயதில் திருமணம் நடந்தது. எழுதப்படிக்கத் தெரியாது. சென்னை - ஆவடி, பட்டாபிராமபுரத்தில் கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் இருந்தேன். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளை நானும் அனுபவித்தேன். கணவரும் வருமானமின்றி வீட்டில் இருந்ததால், அவர்களை நம்பி வாழ வேண்டிய நிலை. ஒரு அளவிற்கு மேல் தாங்க முடியாத நிலையில், திருமணமாகி வாழ்க்கையின் எந்தப் படிநிலையும் புரிந்திராத 6ஆவது வருடம், சரியாக நடக்கத் தெரியாத இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டும், இடுப்பில் ஒன்றை தூக்கிக் கொண்டும் 3 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி, திண்டிவனத்திற்குப் போனேன்.
மிகுந்த சங்கடத்துடன் என்னையும், எனது குழந்தைகளையும் தாங்கிக் கொண்டார் எனது தாயார். உறவினர்களும், உடன் பிறந்தவர்களும் - "அடித்தாலும், உதைத்தாலும் கட்டினவன் வீட்டிலேயே கிடக்க வேண்டியதுதானே' என்றார்கள். கொஞ்சமும் எதிர்பாராமல் அடுத்தநாள் எனது கணவரும் இங்கு வந்து விட்டார். நான் குழந்தையாக இருக்கும்போதே, எனது அப்பா இறந்துவிட்டார். சோறு சமைத்து, கொழம்பு வைத்து, கூடையில் சுமந்து, பஸ் ஸ்டாண்டில் பிடித்து வைத்திருந்த ஒரு இடத்தில் வைத்து விற்பனை செய்து, என்னையும் எனது அண்ணன்கள் இருவரையும் காப்பாற்றினார் எனது தாயார். திண்டிவனத்தில் கிடங்கல் என்கிற பெரிய காலனியில் நாங்கள் வாழ்ந்தோம். கூலிவேலைக்கு செல்லும் எங்கள் காலனியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எனது தாயாரிடம் சாப்பாடு சாப்பிட்டனர்.
இந்த நிலையில்தான் நாங்கள் திண்டிவனம் வந்தோம். கூடையில் சோறு விற்று எங்களுக்கு சாப்பாடு போட்டார் எனது அம்மா. 2000 வருசத்தில், சென்னையில் இருந்து வந்த மூன்றாவது மாதத்தில், ஏதாவது செய்யணும், இப்படியே இருக்கக்கூடாது என யோசித்தோம். நான் வந்த மறுநாள் இங்கு வந்த என் கணவர், அவரது வீட்டிற்குச் செல்லாமல் எங்களுடனேயே இருந்தார். சைக்கிளில் தெருத்தெருவாக மீன் விற்றுப் பார்த்தார். சரிவரவில்லை. கொத்தனார் வேலைக்கும் சென்று பார்த்தார், கொஞ்ச நாளில் முடியாமல் போனது.
எனது தாயார் கூடையில் வைத்து சாப்பாடு விற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில், இரண்டு முஸ்லிம்கள் கொட்டகை போட்டு பிரியாணி விற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போதுள்ளதுபோல் அப்போது பிரியாணி "பேமஸ்' ஆகவில்லை. எனது அம்மாவிடம் பேசினோம். சந்தோஷத்துடன் இடத்தை விட்டுக் கொடுத்தார்கள். ஆயிரம் ரூபாய்க்கு நகையை அடகு வைத்தோம். 2000 ரூபாய் தண்டல் வாங்கினோம். கொட்டகை போட்டோம், பாத்திரங்கள் வாங்கினோம். கறி, அரிசி, காய்கள் வாங்கினோம். மசாலா பொருட்கள் வாங்கிய பின்புதான், எப்படி பிரியாணி செய்வது எனத் தெரியாமல் முழித்தோம். ஒரு பாய் அண்ணனிடம் உதவி கேட்டோம். எங்கள் நிலை அறிந்து, ஒருநாள் உடனிருந்து செய்தபடியே சொல்லிக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டோம். கடையில் கொண்டு போய் வைத்தால் எங்கள் காலனி ஜனங்கள் மட்டுமே வந்து சாப்பிட்டார்கள்.
எல்லோரும் வந்து சாப்பிட என்ன செய்வது எனத் தெரியாமல் கொஞ்ச நாட்கள் ஓட்டினோம். ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த ஒருவர், "பாய் கடையா?' என்றார். இல்லை என்றதும் போய்விட்டார். எங்களுக்குப் புரிந்தது. மறுநாளே எனது கணவர் இசுலாமியர் போன்று தலையில் வெள்ளை குல்லா அணிந்தார். அதன் பிறகு, வெளியூர் சனங்களும் ஒவ்வொருவராக சாப்பிட வந்தனர். ஒரு நாளைக்கு 10 கிலோ அரிசி போட்ட நாங்கள், சில மாதங்களில் 25 கிலோ அரிசி போட்டோம். நாங்கள் கிடங்கல் என்பதை மறைக்கத் தொடங்கினோம். அருகில் கடை வைத்திருந்த இரண்டு இசுலாமியர்களும், நாங்கள் வாழ வந்திருக்கிறோம் என்பதை அறிந்திருந்ததால், எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். எனது கணவர் இசுலாமியர் போன்று குல்லா போட்டதை ஏற்றுக் கொண்டனர். நான் கடையில் இருந்தால் நாங்கள் கணவன் - மனைவியாகவே காட்டிக் கொள்ளமாட்டோம். என் கணவர் இசுலாமியர்கள் போடும் குல்லா போட்டிருப்பார். நான் நன்றாக மஞ்சள் தடவி, குங்குமம் வைத்திருப்பேன். அதனால் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இருந்து விடுவோம்.
வியாபாரம் பெருகியது. குழந்தைகள் நல்ல சாப்பாடு சாப்பிட்டனர். பீஸ்கட்டி பள்ளியில் சேர்த்தோம். எனது தாயாரை வீட்டில் வைத்து கவனித்துக் கொண்டோம். இப்படியே மூன்று ஆண்டுகள் போனது. 2003 ஆம் ஆண்டு கிடங்கலை விட்டு வெளியில் குடியேறலாம் என நினைத்தோம். எல்லா சாதியினரும் வசிக்கின்ற நல்லியக்கோடன் நகர் என்ற பகுதியில் வாடகை வீடு பிடித்தோம். நாங்கள் கிடங்கல் காலனியைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லாமல், எனது கணவரைக் காட்டி, சென்னை நாயுடு சாதி என்று கூறினோம். 600 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து தங்கினோம். அங்கேயே சமைத்து கடைக்கு சாப்பாடு கொடுத்தனுப்பினேன். இதற்கிடையில் வெளியூரைச் சேர்ந்த 15 வயது முஸ்லிம் பையன் வேலைக்கு வந்தான். அவனை முழுமையாக கடையில் நிற்க வைத்தோம். என் கணவரும், நானும் கடைக்குப் போவதை குறைத்தோம். நான் சுத்தமாக நிறுத்தினேன்.
இந்நிலையில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த தெருவில் காலியிடம் ஒன்று விற்பது அறிந்து, 55 ஆயிரம் ரூபாயில் வாங்கினோம். அதன்பிறகுதான் நாங்கள் ஆதிதிராவிடர்கள் என்பது, அங்குள்ளவர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. உடனே தெருவில் உள்ள அனைவரும் பேசுவதை நிறுத்தினர். பார்வையிலேயே எங்களை ஒதுக்கினார்கள். வந்ததிலிருந்து நாங்கள் பழகிய விதத்தையும், உழைத்து சம்பாதித்து இடம் வாங்கியிருப்பதையும், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைப் பட்டு வந்துள்ளோம் என்பதையும் திரும்பத் திரும்பச் சொன்னோம். கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலை திரும்பியது. வெளிப்படைக்கு நன்றாகப் பேசினாலும், உள்ளுக்குள் அவர்கள் சாதி பார்ப்பதை எங்களால் உணர முடிந்தது.
உடனடியாக கடன் வாங்கி, சுமார் 3 லட்சம் மதிப்பில் நல்ல மாடி வீடு கட்டினோம். இது நடந்து 6 ஆண்டுகள் ஆகின்றது. தொடர்ந்து ஓய்வில்லாமல், சுவை மாறாமல் சமைத்தபடி இருந்தோம். அரிசிக்கு தகுந்த தண்ணியும், எண்ணெயும் போடும் பக்குவம் தெரிந்தால் பிரியாணி செய்வது ஒன்றுமில்லை. வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். வீட்டுக் கடனை அடைத்தோம். இப்போது இந்த வீடு சுமார் 10 லட்சத்திற்கு மேல் போகும்.
ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தியன் பேங்க் அருகில் வாடகை கடை எடுத்தோம். ஒரு லட்சம் அட்வான்ஸ், மாசம் இரண்டாயிரம் வாடகை, ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தக் கடையும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு கடைக்கு இரண்டு பேர் என இப்போது நாலு பேர் வேலை செய்கிறார்கள். வீட்டில் நானும், எனது அண்ணன் மகளும் பிரியாணி செய்து விடுவோம். பசங்க கடைக்கு எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. எனது கணவர் வெளி வேலைகளுக்குச் சென்று வருகிறார். திருமணமாகிச் சென்றதும் என்னை வேண்டா வெறுப்பாக நடத்திய எனது மாமியார், நாத்தனார் எல்லாம் இப்போது உணர்ந்து, எங்களுடன் நல்ல உறவு வைத்துள்ளார்கள். நாங்கள் கத்துக் கொடுத்து, எனது நாத்தனார் சென்னை ஆவடியில் பிரியாணி கடை வைத்துள்ளார். அவர்களும் இப்போது நல்ல வசதியாக வாழ்கிறார்கள்.



இருபத்தியோராம் நூற்றாண்டு செல்பேசி இல்லை. இரண்டு சக்கர வாகனம் இல்லை. உதவிக்குப் பொருட்களை எடுத்துக் கொடுக்க, வாங்கி வர என ஒருவரும் இல்லை. இப்படி எத்தனையோ "இல்லைகள்'. ஆனால், தளராத நம்பிக்கை; ஓய்வறியா உழைப்பு; விடா முயற்சி இவை மட்டுமே உண்டு. சுமாராக ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு குறையாமல், மாதம் 5 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் - 44 வயதான, கணவனை இழந்த தலித் பெண் வீரம்மாள், திண்டிவனத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.



வீரம்மாள்

கத்துக் கிட்டாதான் வளரமுடியும்கிறத தெரிஞ்சிகிட்டு, வியாபாரத்தின் ஒவ்வொரு படியையும் அனுபவத்தின் வாயிலாகவே கத்துக்கிட்டேன். தினம் தினம் புதிதாக தெரிந்து கொண்டேன். சொல்லிக் கொடுப்பதற்கு யாருமில்லை. எங்கள் ஊரிலேயே தான் என்னை திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது எனக்கு வயது 15 இருக்கும். குடிபுகுந்த வீட்டில் மாமியார் மட்டும்தான் இருந்தார். எனது கணவனுடன் பிறந்தவர்கள் யாருமில்லை. அவருக்கு கிராம உதவியாளர் வேலை. அவருக்கு தெரிஞ்சது, செஞ்சது எல்லாம் முழு நேரமும் குடிதான். குடி போதை கொஞ்சம் குறைஞ்சா, சூதாட்டத்துக்குப் போயிடுவார். இதற்கு நடுவுல எங்களுக்கு பெண் குழந்தைகள் பொறந்திச்சி. எனது கணவர் ஒருநாள் குடிபோதையிலேயே இறந்துட்டாரு.
என்ன செய்றதுன்ற குழப்பத்தையெல்லாம் தாண்டி, ஏதாவது செய்யணும்கிற உறுதியை ஏற்படுத்தியது. அப்போது எனது மாமியார் ஒரு சில சின்னச் சின்ன பொருட்களை வைத்துக் கொண்டு சிறு கடைபோல ஒன்று வைத்திருந்தார். அவர் இல்லாதப்ப அந்த கடையில இருந்தேன். கொஞ்சமா பொருள் வச்சிருந்தா கொஞ்சம் பேர்கள் வாங்கினாங்க. நிறைய பேர் கடைக்கு வரணும்னா, நிறைய பொருள் வைக்கணும்கிறத கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சிகிட்டேன். உடனே கடையை பெரிசாக்கினேன். நிறையப் பொருட்களை வாங்கி வச்சேன்.
தனியொரு பொம்பளயா நின்னு, இரு பெண் குழந்தைகளையும் 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைச்சேன். அதற்குமேல் படிக்கவைச்சா, அதிகம் படிச்ச மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென நினைச்சேன். இருந்தாலும், எந்த குறையும் இல்லாமல் பெரிய பெண்ணின் திருமணத்தை, இந்த சிறுகடை வருமானத்தை மட்டுமே வச்சி சிறப்பா நல்ல நடத்தினேன். இரண்டாவது பெண்ணுக்கு உள்ளூர் மாப்பிள்ளையை திருமணம் செஞ்சி வச்சேன். இது எல்லாத்துக்கும் கடை வியாபாரம்தான் கை கொடுத்தது. இரண்டு பொம்பள பசங்க, வயசான மாமியார். இவங்களைக் காப்பாற்ற, எனக்கிருந்த தைரியத்துக்கு, திறமைக்கு இந்தக் கடைய நடத்துறதுதான் சரின்னு செய்யத் தொடங்கினேன்.
ஒரு தடவ மாமியார் கூட, டவுன் பஸ்சில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விழுப்புரத்துக்குப் போனேன். அங்கிருந்த ஒரு கடையில் பொருட்கள் வாங்கி வந்தோம். அடுத்த முறையில் இருந்து நானே போவேன். கத்துக் கிட்டாதான் வளரமுடியும்கிறத தெரிஞ்சிக்கிட்டு, வியாபாரத்தின் ஒவ்வொரு படியையும் அனுபவத்தின் வாயிலாகவே கத்துக்கிட்டேன். தினம் தினம் புதிதாக தெரிந்து கொண்டேன்.
என்னோட வீட்டுக்காரர் செத்து, திசைபுரியாம நின்னு, என்னோட பொண்ணுங்கள நினைச்சு நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான்கிறத புரிஞ்சி, உணர்ந்து ஓட ஆரம்பிச்ச வாழ்க்கை ஓடிக்கிட்டே இருக்கு. நடுவுல வர்ற தடைகள நான் பெரிசா நினைச்சது இல்ல. அதனாலதான் நான் இன்னைக்கு எங்க ஊர்ல மட்டுமில்ல, என்னைத் தெரிஞ்ச சமூகத்தாலயும் மதிக்கப்படற பொம்பளயா வாழ்ந்துட்டு இருக்கேன். பொம்பள குடும்பத்த காப்பாத்த வக்கில்லாம வீணாக்கிட்டான்னு ஆயிடக்கூடாதுன்னு, சீசன் நாட்களில் எந்த பழங்களை எல்லாம் வாங்கிட்டு வந்து விக்க முடியுமோ, அந்தப் பழங்களை எல்லாம் எங்க ஊரிலேயே விப்பேன்.
இதையெல்லாம் என்னோட கடையில வச்சி, எங்க காலனியில விக்க முடியாது. யாரும் வாங்கவும் மாட்டாங்க. அதனால் ஊருக்குள் இருக்கிற பேருந்து நிறுத்தத்தில் போய்த்தான் விற்க வேண்டும். இட்லி கடை முடிந்ததும் சீசன் நேரத்தில் ஊர்த்தெருவில் உள்ள பஸ்ஸ்டாண்டிற்கு கிளம்பிடுவேன். இந்த நிலையில்தான் என்னோட இரண்டாவது பொண்ணுக்கும் திருமணம் ஆச்சி. அதுக் கப்புறம் என்னோட அம்மாவ துணைக்கு கூட அழைச்சிக்கிட்டு வந்து வச்சிக்கிட்டேன். வாழ்க்கையை அதுபோக்குல நான் விடல, என்னோட போக்குக்கு நான் இழுத்துக்கிட்டு வந்திருக்கேன்.
இப்போது நான் ஒவ்வொரு முறையும் 4000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கி வருகிறேன். இப்ப போட்டி வேற வந்துடுச்சி. மாமியார் காலத்தில் வெறும் 2 கடைகள்தான். ஆனால் இப்போது 7 கடைகள். இது எங்கள் காலனியில் மட்டும். ஊருக்குள் 10 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதையெல்லாம் மீறித்தான் வியாபாரம் செய்கிறேன். இட்லி கடையில் 150 லிருந்து 200 ரூபாய் வரும். கடையில் 800லிருந்து 1000 வரை வியாபாரம் ஆகும். எல்லாத்திற்குமான செலவெல்லாம் போக தினமும் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்குள் கையில் நிற்கும். இதுதான் எனது சம்பாத்தியம். கடைசி வரைக்கும் இப்படியே இருக்க முடியாது. அப்படி இருக்கணும்னு எனக்கு விருப்பமும் இல்ல. ஊருக்குள்ள இடம் கிடைச்சா, டவுனில் இருக்கிற மாதிரி கண்ணாடி கதவு எல்லாம் வச்சி, லைட்டெல்லாம் போட்டு, 5 ஆள் வைச்சி ஒரு கடை வைக்கணும்.
இன்னக்கி இருக்கிற சுய உதவிக் குழுக்கள்ங்கிற சிந்தனையே இல்லாத 1993 ஆம் ஆண்டிலேயே, மகளிர் மன்றம் மூலம் செயல்பட்டுள்ளேன். அதுக்கப்புறம் "பவ்டா' வந்தாங்க அவங்க மூலமாக நிறைய குழு ஆரம்பிச்சேன். தொடர்ந்து ஊக்குநராக இருக்கேன். விடுமுறைக் கல்விங்கற பயிற்சி முகாமினை மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் எங்க ஊரில் நடத்தியிருக்கேன். இதுமட்டுமில்லாம எங்க காலனியில பெண்களுக்கு கிடைக்க வேண்டிய திருமண உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கான தொகை, விதவைகளுக்கான நிவாரணத் தொகை, ஆதரவற்றோர்களுக்கான ஓய்வூதியம் போன்ற இதெல்லாம் கூட, என்னால முடிஞ்ச வரைக்கும் அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று வாங்கித் தருகிறேன்.
என்னோட வீட்டுக்காரர் குடிக்கவும், சூதாடவும் சொந்தமாக இருந்த 5 வீட்டையும் விற்றார். ஆதரவு எதுவுமின்றி கடை வியாபாரத்தைத் தொடங்கினேன். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்தால், இரவு 8.30 மணி வரை உழைச்சேன். 25 ஆயிரம் ரூபாய்க்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கியிருக்கேன். ஒவ்வொரு பெண்ணிற்கும் 5 பவுன் நகை, வண்டிக்கு 20 ஆயிரம், கல்யாண சீர் வரிசை 1,25,000 ரூபாய் செலவு செஞ்சேன். இன்னைக்கு வரைக்கும் குழந்தை பிறப்பு, காதுகுத்துன்னு என இரண்டு பெண்ணுங்களோட குழந்தைகளுக்கும் செலவு செஞ்சிட்டு இருக்கேன். இரண்டாவது பெண்ணோட கல்யாணத்துக்கு நாலரை சவரன் நகையும் 60 ஆயிரம் பணமும் மொய்யாக வந்தது. இதில் 20 ஆயிரம் நான் ஏற்கனவே செஞ்சது. இப்பொழுது என்னால் தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள முடிகிறது. துணிச்சலாக முடிவெடுக்க முடிகிறது. எந்த இடத்திற்கும் தனியாக சென்று வர முடிகிறது.



ஒரு பெண் சமூகத்தில் தனித்து வாழலாம். ஆனால் தனித்து நின்று சாதிப்பது என்பது சாதாரணம் அல்ல. நிறைய தடைகளை கடந்தாக வேண்டும். பலபேரின் சதிகளையெல்லாம் எதிர்கொள்ளவேண்டும், முறியடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர், நெருங்கிய உறவினர்கள் கூட ஆதரவு அளிக்க மறுப்பதுடன், எதிர்க்கவும் செய்வார்கள். ஒடுக்கப்பட்ட தலித் பெண் என்பதால், சாதி ஆதிக்கத்தின் அனைத்து விதமான அதிகார ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏறக்குறைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு போராட்டமாகவே நடத்த வேண்டியிருக்கும். அப்படி வாழ்ந்து, சாதித்து வளர்ந்த மெய்யாள் என்பவரின் போராட்ட வாழ்க்கைதான் இது.




மெய்யாள்




மானாமதுரை அருகில் உள்ள சன்னதிபுதுக்குளம் என்ற ஊரில் பிறந்தேன். எனது பெற்றோர்களுக்கு மொத்தம் 4 ஆண்கள் 3 பெண் குழந்தைகள். நான் 3ஆவது பெண் குழந்தை. 5 ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதன்பிறகு எனக்கு 18 வயதாகும்போது, கே. ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கு என்னை திருமணம் செய்து கொடுத்தார்கள். எனது கணவர் செங்கல் சூளை நடத்தி வந்தார். பல நேரங்களில் நானும் எனது கணவருடன் செங்கல் சூளை தொழிலுக்கு உதவியாக இருப்பேன். எங்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில வருடங்களில் எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என புரியாமல் திகைத்துவிட்டேன். ஆனாலும், கணவருடன் சில நேரங்களில் இருந்து கற்றுக்கொண்ட இந்த செங்கல் சூளை தொழிலை வைத்து, நாம் நிச்சயம் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வந்தது.
துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் எல்லாம் எதுவும் சொல்லாமல் சென்றார்கள். எல்லாரையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலலேயே, எனக்கோ, எனது குழந்தைகளுக்கோ, ஏதாவது செய்யுங்கள் என யாரிடமும் போய் எதுவும் கேட்கக்கூடாது என முடிவெடுத்தேன். நமக்குத் தெரிந்த, அறிமுகமான இதே தொழிலையே செய்யலாம் என திட்டமிட்டேன். எங்கள் ஊரில் உள்ள வளையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கி, மண் அடிப்பதற்காக 4 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக செங்கல் சூளை தொழிலை விரிவுபடுத்தினேன். இப்போது 50 பேர் என்னிடம் இத்தொழிலில் வேலை செய்கிறார்கள். ஒரு வருடத்தில் 10 மாதம் அனைவருக்கும் வேலை கொடுக்கிறேன். ஆண்களுக்கு 250 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் கூலியாக தருகிறேன்.
தொழிலைத் தொடங்கிய புதுசில் பலர் ஏமாற்றிவிட்டார்கள். கல் வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றினார்கள். சிவகங்கையிலுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் உறவினர் ஒருவரும் 10 ஆயிரம் ரூபாய் ஏமாற்றினார். இது பெரிய தொகை. ஆனால் 2 ஆயிரம், 5 ஆயிரம் என நிறைய பேர் நிறைய ஏமாற்றியுள்ளார்கள். அதனால் நான் இப்போது யாருக்கும் கடன் தருவது கிடையாது.
நிறைய ஏஜென்ட்டுகளும், கொத்தனார், மேஸ்திரிகளும், கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளும் என்னிடம் செங்கல் வாங்கும் போது, யாரும் என்னிடம் கமிஷன் வாங்கமாட்டார்கள். கொத்தனார்கள் மட்டும் 100 அல்லது 200 ரூபாய் போக்குவரத்து செலவுக்கு கேட்பார்கள். இப்போது சூளைக்கு மண் விலை கொடுத்து வாங்குகிறேன். ஒரு லாரி லோடுக்கு 1000 ரூபாய், டிராக்டர் லோடுக்கு 600 ரூபாய் ஆகிறது. 80 ஆயிரம் கல் தயாரித்து வேக வைத்து எடுப்பதற்கு ஒரு மாதம் ஆகும். ஒரு மாதத்தில் 2 சூளை போடுகிறேன்.
மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மூத்த மகனுக்கு 21 வயதாகிறது. பாலிடெக்னிக் படித்துவிட்டு, இப்போது எனக்கு உதவியாக சூளைத் தொழிலில் இருந்து வருகிறான். சின்ன மகன் பி.எஸ்.சி. படித்து வந்தான். கல்லூரிக்குச் செல்லும்போது ஆக்சிடென்ட் ஆகி கால் அடிபட்டுவிட்டது. அதன்பிறகு அவன் கல்லூரிக்குப் போகாமல் நின்றுவிட்டான். இப்போது எனக்கு உதவியாக இருந்து வருகிறான். வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். இதில் 12 ஆயிரம் ரூபாய் மானியமாகும். தொடர்ந்து கடனை அடைத்துவருகிறேன். இன்னும் 5 ஆயிரம்தான் பாக்கி உள்ளது. இந்த செங்கல் சூளை தொழிலில் முழுநேரமும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், சுயஉதவிக்கு எதிலும் நான் சேரவில்லை.
இந்த செங்கல் சூளை தொழில் மூலம் சம்பாதித்ததில் நான் 2 ஏக்கர் நிலம் கிரையம் வாங்கியுள்ளேன். மேலும், சூளையில் வேலை செய்பவர்கள் தங்குவதற்காக ஒரு கட்டடம் கட்டத் தொடங்கினேன். தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இது தன்னுடைய இடம் என்று என்னிடம் வந்து சண்டையிட்டு, கட்டடம் கட்டுவதை தடுத்தார். அதிகாரிகளிடம் பணம் கொடுத்து எனக்கெதிராக செயல்பட வைத்தார்.
இதுமட்டுமில்லாமல், நான் விதவை என்பதால் பொது நிகழ்ச்சிகள், விசேசங்கள் எதிலும் நான் பங்கேற்றால் எனது உறவினர்களே என்னை எதிராகப் பார்க்கிறார்கள். என்னுடன் பிறந்த எனது அக்காள் மகன் திருமணத்திற்கு சென்றபோதுகூட, எனது அக்காவே என்னை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து அனுப்பினார். அதன்பிறகு நான் விசேசத்திற்கும் போவதில்லை. இந்தத் தொழிலிலேயே முழுகவனம் செலுத்துகிறேன்.
இதுமட்டுமில்லாமல், மரம், விறகு, வியாபாரமும் செய்கிறேன். மேலும், கரிமூட்டம் போடும் வேலையும் செய்கிறேன். இதெல்லாம் இந்த செங்கல் சூளை தொழிலுடன் இணைந்த வேலையாகும். ஒரு பெரிய தென்னந்தோப்பு வைக்கணும், வேலை செய்கின்ற ஆட்கள் தங்குவதற்கு வசதியாக வீடு கட்டவேண்டும். இடையில் படிப்பை நிறுத்திய இரண்டாவது மகனின் படிப்பை மீண்டும் படிக்க வைக்கணும். இதுதான் என்னுடைய அடுத்தக் கட்ட திட்டங்கள்.

No comments: