Thursday, October 8, 2009

சாதியின் பெயரால் படுகொலை செய்யும் சமுதாயம்.


சாதியின் பெயரால்

படுகொலை செய்யும் சமுதாயம்.


வண்டிப்பாளையம் கிராமம். திண்டிவனம் வட்டம், மரக்காணம் ஒன்றியம், நடுகுப்பம் ஊராட்சியில் உள்ளது. 30 தலித் குடும்பங்களும், சுமார் 300&க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களான வன்னியர், நாயுடு, ஆசாரி, செட்டியார் போன்ற சாதியைச் சேர்ந்தவர்களின் குடும்பம் உள்ளது. விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாக கொண்டுள்ள கிராமம். இரட்டை குவளை முறை உள்ளிட்ட தீண்டாமையை கடைபிடிக்கும் கிராமம்.
சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இரு சமூகத்தினருக்கும் தனித்தனி சுடுகாடு என்றாலும், இறுதி ஊர்வலம் கிராமத்திலுள்ள ஓடை வழியாக ஒரே பாதையில் சென்றுகொண்டிருந்துள்ளது. ஊராட்சிகள் வலுப்பெறத் தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகள் உருவாக்கப்பட்டதும், சாதி இந்துக்கள் புதிய சாலை வழியாக பிணம் தூக்கிச்சென்றார்கள். தலித்துகள் மட்டும் அந்த பழைய ஓடை வழியிலேயே கொண்டு சென்றார்கள். இந்தவழி, காலப்போக்கில் சுருங்கி, ஓடை ஒத்தையடி பாதையாய் மாறியது. இருபக்கமும் முட்செடிகள் வளர்ந்து பாதையை மேலும் குறுகலாக்கியிருந்தது. சாதாரணமாக இருவர் நடந்துசென்றாலே ஒருவர் பின் ஒருவராக குனிந்து செல்லவேண்டிய நிலையில்தான் உள்ளது அந்த வழி.


15.09.09

14-09-09 அன்று மேற்படி வண்டிபாளையம் கிராமத்தில் தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஜோதி(26) என்பவர் இறந்துள்ளார். அவரின் இறுதி ஊர்வலத்தை, ஓடைபாதையில் செல்ல வழியில்லை என்பதால், சாலை வழியாக கொண்டு செல்வது என்று தீர்மானித்து, 15-09-09 அன்று காலை 10-30 மணியளவில் வீட்டிலிருந்து சடலத்தை தூக்கிக்கொண்டு, தலித் குடியிருப்பை தாண்டினர். அப்போது அங்கு கூட்டமாக வந்த சாதி இந்துக்கள் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, ‘‘இந்த வழியே போகக்கூடாது, ஓடைவழியா போங்க எனக்கூறி’’ பாதையில் முட்களையும், கற்களையும், மரங்களையும் போட்டுத்தடுத்து, ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தலித்துகள் தொடர்ந்து பிணத்தை தூக்கிச்செல்ல வழியில்லாமல் நடுசாலையில் இறக்கிவைத்தனர்.
தகவல் அறிந்து 11.30 மணிக்கு, சம்பவ இடத்திற்கு சென்ற இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய கண்காணிப்பு குழுவினர், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அறிவித்து தலையீடு செய்த்காவல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாதி இந்துக்கள் வழிவிட மறுத்தார்கள். தலித் பெரியவர் ஒருவர், மிகுந்த வேதனையுடன், ‘‘ரெண்டு பேரும் ஒரே வழியில போனோம். திடீர்னு நீங்க மட்டும் நல்ல வழியில போயிட்டு, என்ன மட்டும் எதுக்கு பழைய வழியில போகச்சொல்ற’’ என்று கேட்டார். எவரும் பதில் சொல்ல மறுத்து அமைதி காத்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வட்டாட்சியர், ஊழியர்கள் மூலம் ஊர்வலப்பாதையின் வழியில் போடப்பட்டிருந்த மரம், கற்கள், முட்செடிகளை அப்புறப்படுத்தி, ஊர்வலத்தை நடத்தினார். பொது வழியாக பிணம் சென்றது.
இந்த வன்கொடுமையினை, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்த பரந்தாமன் (எ) மோகன் த/பெ லிங்குசாமி நாயுடு என்பவர் தலைமையில், குப்புசாமி, வெங்கடேசன், சுந்தர், எட்டியப்பன், ரவி, செல்வம் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கூட்டாக நிகழ்த்தினர்.


04.10.09, ஞாயிற்றுகிழமை.
• 02.10.09 வெள்ளிக்கிழமை முதலே தலித்துகளுக்கு ஊரில் இருந்த கடைகளில் பொருட்கள் தர மறுத்துள்ளார்கள். குடிதண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. மணி, நாகராஜ் என்கிற இரு தலித்துகளின் கிணற்றில் இருந்த மின்மோட்டார்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 04.10.09 அன்று காலை மரக்காணம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர் தலித்துகள். ஆய்வாளர் மாலை விசாரிப்பதற்காக வரச்சொன்ன நிலையில், மீண்டும் மாலை 5&00 மணியளவில் காவல் நிலையம் சென்றுள்ளனர். • அன்று மாலை 6 மணியளவில், கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜா தனது, கோழிபண்ணை எரிவதரிந்து உடன் இருவரை அழைத்துக்கொண்டு ஓடியுள்ளார். அப்போது அங்கு சாதி இந்துக்களான பரந்தாமன் உள்ளிட்ட சுமார் 30 பேர் நின்றிருந்துள்ளனர். ராஜாவின் 300 அடி நீள கோழிபண்ணை எரிந்துகொண்டிருந்த நிலையில் கொளுத்திய சாதி இந்துக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களே, அருகே இருந்த சாதி இந்துவான அய்யனார் என்பவரின் கோழிபண்ணைக்கும் தீ வைத்துள்ளனர். • உடனடியாக ராஜா, விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். போலீசாரிடம் உடனடியாக ஒரு தீயணைப்பு வண்டியினை ஊருக்கு அனுப்பியுள்ளனர். ஊருக்குள் சென்ற வண்டியினை வழிமறித்த சாதி இந்துக்கள் அய்யனாரின் கோழிப்பண்ணையை அணைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு ராஜா, ‘‘என்னுடைய பண்ணை அதிகமாக எரியுது, நான்தானே போன் செஞ்சி வரவழைச்சேன் என்னுடையதை முதலி அணைங்க’’ என்று கூறியுள்ளார். ஆனாலும், ஊர்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக அய்யனாரின் பண்ணையில் தண்ணீர் அடிக்கத்தொடங்கியுள்ளனர். • அப்போது ‘‘ஏன் இந்தமாதிரி பண்ணையை கொளுத்திட்டு, சொத்த அழிக்கிறீங்க’’ என்று கூறிய ராஜாவை அங்கிருந்த சாதி இந்துக்கள் கட்டையை கொண்டு தாக்கியுள்ளனர். ராஜாவின் உடன் சென்ற இருவரும் உயிர்பயத்தில் ஓடிச்சென்றுள்ளனர். மீண்டும் அடிப்பட்ட நிலையில் ராஜாவும் ஓடமுயன்ற நிலையில், கைலி தடுக்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ராஜாவை சாதி இந்துக்கள் அனைவரும் கூடி நின்று கட்டை, கல், கழி போன்றவற்றால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெரிய கல்லை தூக்கிப்போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். ராஜாவின் முகம் முழுவதும் சிதைந்துள்ளது. சாதி இந்துக்களின் தொடர் தாக்குதலில் ராஜா மயக்கமடைந்துள்ளார். • அதன்பிறகு சாதி இந்துக்களின் வன்முறைக்கும்பல் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், வீட்டிலிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளது. ராஜாவைப்போன்று தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தலித்துகள் இரவோடு இரவாக தங்கள் குடியிருப்பைவிட்டு வெளியேறினர். • பேச்சில்லாமல் கிடந்த ராஜாவைக் காப்பாற்ற, ஆம்புலன்சிற்கு போன்செய்துள்ளனர். வந்த ஆம்புலன்சை வழிமறித்த சாதி இந்துக்கள் தங்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு வலியுறுத்தி, மிரட்டி எடுத்துச்சென்றுள்ளனர். அதன்பிறகு தகவல்சொல்லி, மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து ராஜாவை தூக்கும்போது, ராஜா இறந்துவிட்டிருந்தார்.
05.10.09, திங்கட்கிழமை

இறந்துபோன ராஜாவின் உடலருகே, ராஜாவின் குடும்பத்தினரை தவிர உள்ளூர் தலித்துகள் எவருமே இல்லை. சாதி இந்துக்களின் கொடுந்தாக்குதலுக்கு பயந்து இரவே கிராமத்தைவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். • சாதி இந்துக்களால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் சுமார் 200 பேர் கிராமத்தைவிட்டு வெளியேறி, 3 நாட்களாக அருகில் உள்ள நடுகுப்பம் என்கிற கிராமத்தின் தலித் குடியிருப்பில் தங்கியுள்ளனர். அங்குள்ள தலித்துகள்தான் உணவளித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக சொந்த கிராமத்தை விட்டு, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி மிகுந்த அவலமான வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்ந்துவருகின்றார்கள் வண்டிபாளையம் தலித்துகள். • 06.10.09 அன்று காலை வீட்டில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளை பார்த்துவர கிராமத்திற்கு சென்ற தலித் பெண்களை, சாதி இந்துப்பெண்கள் வழிமறித்து, திட்டி, அவமானபடுத்தி, கிராமத்திற்குள் நுழையவிடாமல் திருப்பிஅனுப்பியுள்ளனர். • ராஜா கொலை சம்பம்தொடர்பாக 04.10.09 அன்று இரவு 8&00 மணியளவில் புகார் கொடுக்கச் சென்ற மாசிலாமணி த/பெ பெருமாள் என்பவரை, மரக்காணம் போலீசார், அய்யனார் கோழிப்பண்னையை கொளுத்தியதாக கூறி, காவல் நிலையத்திலேயே உட்கார வைத்திருந்துள்ளனர். புகார் கொடுக்கச்சென்றவர் திரும்பிவரவில்லை என்பதால், மறுநாள் 05.10.09 அன்று காலை 9-00 மணியளவில் காவல் நிலையம் சென்ற தலித் இளைஞர்கள், மாசிலாமணியை போலீசார் அடைத்துவைத்திருப்பது அறிந்துள்ளனர். அதன்பிறகு போலீசார் புகாரைப்பெற்று, மாசிலாமணியை அனுப்பி வைத்துள்ளனர்.

1 comment:

வனம் said...

வணக்கம்

தங்களின் இடுகை படிக்க மனது மிகவும் கணக்கின்றது.

இதுதான் சாதி மறுப்பை, ஒழிப்பை தன் முதல் கடமையாக கருதிய பெரியாரை தன் கொள்கை தலைவனாக கொண்ட அரசுகள் பல காலம் ஆண்ட தமிழகத்தின் நிலை எனில் மிகவும் கேவலமாக இருக்கின்றது

இராஜராஜன்