Thursday, February 19, 2009

முத்துகுமார் கவிதைகள்


முத்துகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'புதியவன் முத்துகுமார்' என்ற பெயரில் எழுதிய கவிதைகள் இவைகள்.

தற்போது வந்துள்ள கவிதாசரண் (அக்டோபர் 08&மார்ச் 09) இதழில் வெளியாகியுள்ளது.

கவிதைகளை வெளியிட்டமை உட்பட அனைத்துக்கும் அய்யா கவிதாசரண் அவர்களுக்கு நன்றி.


சாதிப்பன

என் கண்ணைத் தோண்டி,

அமிலம் ஊற்றி,

காலை வெட்டி,

கையை உடைத்து,

குடலைக் கிழித்து,

சதையை அறுத்து,

என்னைக்

கொன்றுவிட்டதாக

எகத்தாளம் செய்யும்

என்

எதிரணியில் உள்ள

நண்பனே, நீஅறிவாயா?

போராளியின்

வாழ்வை விட

மரணம்

அதிகமாகவே சாதிக்கும்.


வாஸ்து

குளியறையில் சமையல்-

கழிவறையில் சாப்பாடு-

பரணில் படுக்கை-

நடுவீட்டில் கிணறு-

கூரையில் வாசல்-

குழப்ப வேண்டாம்-

இது‘வாஸ்து’ சாஸ்திர நிபுணரின்

வீடாகவும் இருக்கலாம்.


காகிதக் கூழ்

கல்லணை கட்ட

கரிகாலனுக்கு

போரடிமைகளும்

கற்களும்

தேவைபட்டனவாம்.

நாம்தான்

முன்னேறிவிட்டோமல்லவா

அறிவியலில்?

இனி

காவிரியில்

இன்னொரு

அணை கட்ட

கற்கள் தேவையில்லை.

கொஞ்சம் போதும்

காகிதக் கழிவுகளும்

காகிதக் கூழம்



மே

உழைப்பதற்குக்

கைகள் மட்டுமே

கொண்டிருந்த

தொழிலாள வர்க்கத்திற்கு

உரிமைகளை

உரக்கக் கேட்க

வாய் புதிதாக

வாய்த்த திருநாள்.


மனிதாபிமான உதவி

தீராத வழக்கொன்று

தினம் தினம்

சண்டைக்கென்று

திரள்கின்றான்

பக்கத்து வீட்டான்.
அவன்

பேச்சை மட்டுமல்ல

மூச்சையே நிறுத்திக்

கொலை செய்தாலும்

கூட

நல்லதுதான்.
கழுத்தைச் சுற்றிக்

கயிறு போட்டு

இறுக்கக்கையில்

தெம்பு இல்லை.
கத்தி

வாங்கக் கைவசம்

காசும் இல்லை.

அணுகுண்டு

கிடைத்தால்

நலம்.
தயவு செய்து

எந்த நாடாவது

செய்யுங்களேன்

எனக்கு

மனிதாபிமான உதவி.


சுயமரியாதை

மீண்டும்

மீண்டும்

மிதிக்கிறேன்

குரூரமாய்

ஆனாலும்

உயிரது

பனியாய்த்

துளிர்க்க

மீண்டும்

மீண்டும்

தலைநிமிர்கிறது-

புல்!


வைத்தியப் பரிமாணம்

உள்ளங்கை மட்டுமே

உடைமையாகஇருந்த

காலத்தில்

பாட்டி வைத்தியம்.
இழப்பதற்கு

குடிசையன்று

கிடைத்துவிட்ட

பிறகு

வைத்தியரிடம்

வந்தான்,

சொஸ்தமானது.
கையில்

கொஞ்சம்காசு

சேர்ந்தபோது

சர்கார் வைத்தியம்-

சடுதியில் அல்ல

சாவகாசமாய் சரியானது.
காசின்

பரிணாமம்

கொஞ்சமே

கொஞ்சம்

கூடிவிட்ட

பின்பு

தனியார்

வைத்தியம்

வாடிக்கையாளன்

ஆனான்.
காசுகள் காக்க

பணப் பைகள்

கிடைத்த பிறகு

ஸ்பெஷலிஸ்டிடம் போனான்
ஸ்பெஷலிஸ்ட்

வெற்றிகரமாக

முடித்து வைத்தார்

அவன் கதையை.


தனி வழி
நாலு பக்கம்

கடலிருந்தால்

தீவு.

மூனு பக்கம்

கடலிருந்தால்

தீபகற்பம்.
மூனு பக்கம்

கடல்

நாலாவது பக்கம்

மலை

எட்டுப் பக்கமும்

கடன்-

நம் தேசம்.


ஒரு வீடு இரு திருடர்கள்
அது

அவர்களுடைய

தொழில்

கொளையடிப்பதும்,

கொலை செய்வதும்.
நாய்களுக்கு

சிறுநீரால் ஆன

எல்லைக்கோடு போல

அவர்களுக்குத்

தொழில் தர்மம்.
ஒருவர்

தொழிலில் மற்றவர்

குறுக்கிட்டால்

குறுக்கிடும்

தொழில் தர்மம்.
ஒரு

வீட்டின் புறவாசல்

வழியேஒருவனும்,

கூரை வழியே

ஒருவனும்

தொழில் செய்யப் போனார்கள்

அந்தோ பரிதாபம்

குறுக்கிட்டது

தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது.?

யார் பின்வாங்குவது?

முடிவு

காணமுடியவில்லை

திருடர்களால்.
முதல் திருடன்

சொன்னான்.

‘‘மக்கள் தீர்ப்பே

இரண்டாம் திருடன்

சொன்னான்‘திருடுவது

நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது

வீட்டுக்காரரின் கடமை.’
ஆகவே,

எழுப்பப்பட்டான்

அந்தவீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப் பெட்டி.
யார்

திருடவேண்டுமெனத்

தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன்

வேண்டப்பட்டான்.
அவனுக்கு

ஜனநாயக முறை பற்றிய

அறிவு புகட்டப்பட்டது.
இங்கு

திருடர்களுக்கு

வீட்டுக்காரனே

எஜமானன்.
அவன்

சொல்லும்

நபரே

திருட முடியும்.
கடைசியில்

ஜனநாயகம் வென்றது.

ஆம்-வீட்டுக்காரனைப்

புதைத்தார்கள்.

No comments: