Monday, December 1, 2025

தண்டகாரண்யம் - தவிர்க்க முடியாத அரசியல் படம்.

 தண்டகாரண்யம் - தவிர்க்க முடியாத அரசியல் படம். 





  1. யாரும் உள்ளே நுழையமுடியாமல் கண்ணுக்குத் தெரியாத கதவு பூட்டுகளால் அனைத்துப் பக்கமும் மூடப்பட்டுள்ள ஒரு உலகம் திரைப்படம் உலகம். உள்ளே நுழைந்தவர்களும் கண்ணுக்குத் தெரியாத நூல்களால் கட்டப்பட்டார்கள். கட்டுப்படுத்தப்பட்டார்கள். அந்த நூலால் உருவாக்கப்பட்ட கோடுகளை தாண்டவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். எல்லை தாண்டியவர் பா.ரஞ்சித். மூடியிருந்த கதவுகளை திறந்து, நூல்களை அறுத்து கோடுகளை அழித்து, அதியனையும் மாரி செல்வராஜ் போன்ற பலரை உடன் அழைத்துச் சென்றார்கள். கடலூர் ஷான், தற்போது செம்மலர் அன்னம் போன்றோர்களுக்கான வழிகளையும் திறந்துவிட்டுள்ளார். 

கதவுகளை உடைத்து, நூல்கோடுகளை அழித்து உள்ளே சென்றவர்கள், வெளியிடும் திரைப்படங்களைப் பார்த்து, பூட்டி வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். 

இவர்களின் படங்கள் சாதிப் பெருமைகளைப் பேசவில்லை. ஆதிக்கத்தை நிறுவவில்லை. சமத்துவத்தைச் சொல்கிறது. அதிகாரத்தின் பெயரிலான ஆதிக்கத்தை உடைக்கிறது. 

ஜி தமிழில் ஒளிபரப்பான அம்பேத்கர் தொடரில், குட்டி அம்பேத்கர், ‘’ஒரு நாள் வானத்தைப் போல உலகம் முழுவதையும் நீல நிறத்தில் மாற்றுவேன்’ என்பார். நீலம் என்பது சமத்துவம். இதைத்தான் ரஞ்சித், அதியன், மாரி சொல்கிறார்கள். சமத்துவம் கூடாது என்பவர்கள்தான் இவர்களையும், இவர்களின் படங்களையும் எதிர்க்கின்றனர். 


  1. தண்டகாரன்யம் படத்தைப் பற்றிய நான்கு பார்வை பார்வை. 

  • காடு, பழங்குடியினர், வாழ்வாதாரம் இல்லை, சொத்தை விற்றுப் படிப்பு, காக்கி உடை அணிந்தால் அரசு வேலை, அதிகாரம், மரியாதை, காதல், குடும்பம்

  • வனத்துறை அதிகாரிகளின் அத்துமீறல், காட்டு வளங்களை அழித்தல் கடத்தல் + கஞ்சா + பழங்குடி மக்களையே பயன்படுத்துவது. 

  • பழங்குடியினர் மீதான அதிகாரத்தின் தாக்குதல் - பழங்குடி இனத்தை அழிப்பது, காட்டினை கைபற்றுவது. 

  • மலிந்துவிட்ட ஊழல். போலியான பயிற்சி மையம். அதற்கான நிதி ஊழல் செய்து எடுப்பது. அப்பாவி பழங்குடியினரை நக்சல் எனச் சொல்லி கொலை செய்து, பணம், பதவி, பட்டம், புகழ். 

இப்படியான நான்கு பார்வைக்கும் அடிப்படையாக இருப்பது, நாளேடுகளில் வந்த இரண்டு  செய்திகள்தான். 


நக்சல்கள் சரண், நக்சல்கள் கொலை எனும் அந்த இரு செய்திகளுக்குப் பின்னால் உள்ள மனிதர்கள்தான் இந்த தண்டகாரண்யம் படம். 


தற்போதைய ஒன்றிய அரசுக்கு போலிகளை நடத்துவது ஒன்றும் புதிதல்ல. சிரமமும் அல்ல. வட மாநிலங்களில் போலியான சுங்கச் சாவடி, காவல் நிலையம், நீதிமன்றம், வேலை வாய்ப்பு அலுவலகம், ஏன் போலியான வெளி நாட்டு தூதரங்கள் கூட நடத்தியுள்ளனர். இந்த ஒன்றிய அரசு கூட போலிதான். RSS தான் உண்மையான அரசு. பாஜக, மோடி எல்லாம் போலிகள்தான். 

இப்படி பேசும் நம்மைப் போன்றோர்களை எல்லாம் அர்பன் நக்சல் என சொல்லி ஒடுக்குகின்றனர். ஸ்டான் சாமி, பேராசியர் சாய்பா போன்றோரை கைது செய்து, சிறையில் வைத்து கொலை செய்து, இயற்கை மரணம் என்றனர். 

ஒவ்வொரு நாடாளுமன்ற தொடரிலும், தேர்தல்களிலும், தீபாவளிகளிலும் நக்சல்கள் தேசவிரோதிகள் என்றும், நக்சல் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்றும் பிரதமர் பேசி வெறியூட்டுகிறார்.  போலியான தேசபக்தியை உருவாக்க முயற்சிகின்றார். 

இந்த மாதிரியான சூழலில், அவர்களின் கருத்துகளை எல்லாம பொய் என்றும், அவர்கள் செயல்கள் எல்லாம் போலியானது என்றும், அவர்கள் அழிக்க நினைக்கின்ற தண்டகாரணயம் என்ற பெயரிலியே அதியன் படைப்பாக்கி இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. 

நக்சல் மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில், பழங்குடியினரை ஒடுக்க, அழிக்க, பழங்குடி இளைஞர்களைக் கொண்டே போலியான பயிற்சி மையம் கேம்ப் நடத்துவது, அவர்களின் அக்னிபாத் எனும் திட்டத்தை நினைவூட்டுகின்றது. 


படத்தில் தோழர் அதியன், போகிற போக்கில் நுணுக்கமான சில விஷயங்களைப் பதிவு செய்துகொண்டே போகின்றார். 

  • அவர்கள் மொழியிலியே பேசுகின்றனர் என மொழி அரசியல் பேசுகிறார். 

  • காடுங்கிறது வெறும் செடி கொடி மரம் மட்டும் இல்லை. மனிதர்கள் உட்பட எல்லாம்தான். காடு புதுசு புதுசா கத்துகொடுக்கும்.

  • மத்தவங்கள் காட்டை பாதுகாக்கலாம். ஆனா பழங்குடியினர் தவிர வேறு யாரும் காட்டை வளர்க்கமுடியாது, உருவாக்கமுடியாது. 

  • காட்டில் இருக்கும் வரைதான் மனிதர்கள். காட்டை விட்டு ஊருக்குள் போனால்  சாதி, மதம், கெளரம் என பல்வேறு சட்டைகளை அணிந்துகொள்கிறார்கள். 

  • வனத்துறை, காவல், இராணுவம் போன்றோர் அணியும் உடையும் அதன் அதிகாரத்தையும் ஒடுக்குமுறைகளையும் பார்த்து அச்சப்படுகிறார்கள். அதே சீருடையை நமது பிள்ளைகள் போட்டுக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தால் இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை மாறும், இருக்காது என நம்புகிறார்கள். 

  • ஒரு மாநில அரசு நக்சல்கள் என சரணடைய வைத்து, வேலை கொடுப்பதாக கணக்கு காட்டுகின்றது. இன்னொரு மாநில அரசு பொய் வழக்குப் போட்டு குடும்பத்தை சிதைக்கின்றது. 

  • கடைசி அணுகுண்டு படத்தில் லாரிகளும் பாத்திரங்களாகவே கேரக்டர்களாகவே இருக்கும். அப்படி இந்தப் படத்தில் இடை இடையே லாரிகள் போய் கொண்டே இருக்கும். 


இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும், பொருளுக்கும் பின்னாலும் அரசியல் உள்ளது. பத்திரிகளைகளில் வருகின்ற ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் பெரும் அரசியல் உள்ளது. தற்போதைய செய்திகளில் ஒரு பெரும் சதி உள்ளது என்றே சொல்லாம். 

அப்படித்தான் இந்தப் படத்தில் காட்டப்படும் இரு செய்தி துணுக்குகளுக்குப் பின்னால் உள்ள சதி, வாழ்க்கை, மக்கள், ஒடுக்குமுறை, அரசியல், ஊழல்கள்தான் இந்தப் படம். 


கடைசியாக ஒரு கருத்து. விசாரணை, ஜெய்பீம் வரிசையில், அதையும் தாண்டி வந்திருக்கவேண்டிய படம்.  

இந்திய அளவில் துணை இராணுவப் படையில் நிலவும் ஊழல், அரசியல், போலி பயிற்சி மையங்கள் போன்வைகளை வெளியுலகின் பார்வைக்கு கொண்டுவந்து பேசுபொருளாக்கிய தோழர் அதியன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


எப்போதும்போல், இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டும், பேசிக்கொண்டிருக்கும் அண்ணன் இரவி கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.  


(26.10.2025 அன்று விழுப்புரத்தில், இயக்குநர் அதியன் ஆதிரை அவர்களுகு நடந்த பாராட்டு விழாவில் பேசியது).

Saturday, November 29, 2025

சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நாள் இன்று. - சாதி மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நாள் இன்று..

இதைப் போன்று, அதன் தொடர்ச்சியாக, சாதி, மதம், இனம் கடந்து திருமணம் செய்துகொள்வோரின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்திட சட்டப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். 

(திருமணங்களில் கெளரவம் மற்றும் சாதி என்ற பெயரில்   கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் சட்ட விரோதக் குறுக்கீடுகளைத்   தடை செய்யும் தேசிய சட்ட ஆணையம் சட்ட முன் வரைவு 2012)

 


தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி உடன்போக்கு எனும் காதல் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஆதரவும் சமூகத்தில் பரவலாக இருந்தது. ஒரு கட்டத்தில் மதமும், சாதியும் மேலோங்கியதைத் தொடர்ந்து, ஆதரவும் எதிர்ப்புமாக இருந்து வருகின்றது.  இந்நிலையில், இந்துக் குடும்பங்களில் நடைமுறையாக இருந்துவந்த, கணவனை இழந்த பெண்கள், சதி (உடன் கட்டை) எனும் தீயில் விழுந்து உயிரோடு மாய்த்துக்கொள்ளும் நிகழ்வு தடைசெய்யப்பட்டதைப் போன்று, மொட்டை அடித்து, வெள்ளைப் புடவை கட்டி, விதவையாக வீட்டிற்குள்ளேதான் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் காலமும், நாகரீக சமூகமும், ஜனநாயகக் குரல்களும் அமைப்புகளும் மாற்றியுள்ளது.

அதன்பிறகான வளர்ந்த சமூகத்தில் திருமணம் எனும் நிகழ்வு, விருப்பத்தின் பேரிலும், குடும்பங்களின் தேர்வுகளின் அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது. சமூகத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களின் விளைவாக சுயசாதிக்குள் மட்டும் திருமணம் என்றிருந்த நடைமுறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தது. சாதி மறுத்த அல்லது மதம், சாதி மீறிய காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன.

 

சாதியின் பெயரால்..

இந்நிலையில், தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக சாதிய அணிதிரட்டலும், இறுக்கமாக ஊடுருவி வரும் சாதியப் பெருமிதங்களும் மேலோங்கி வருகின்றது. இதன் காரணமாக சாதியைத் தாண்டி நடைபெறும் காதல் மற்றும் திருமணங்கள் தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாதிய வன்கொடுமைத் தாக்குதல்கள் நிகழ்கின்றன. நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெறுகின்றன. 

அதுவும் கடந்த சில ஆண்டுகளாக சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வது என்பது உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. சாதி மீறி திருமணம் செய்துகொண்ட இணையர்களில் ஒருவரோ, இருவருமோ கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகின்றது. பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சாதி இறுக்கமும், சாதி ரீதியிலான ஒருங்கிணைப்பும் இதற்கு அடிப்படை காரணமாக உள்ளது.

சாதிகளைத் தாண்டி நிகழும் காதல் மற்றும் திருமணங்களில் தலித் மட்டுமல்லாமல், ஒரே சாதியைச் சேந்த சாதி இந்துக்களும் கொலையாகின்றனர். சாதியம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள வன்கொடுமைத் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் நடைபெறுகிறது.

 

காதல் திருமணங்களையொட்டி நிகழும் படுகொலைகள்.

இந்தியா முழுவதும் கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 203 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில், 2003 முதல் 2019-ஆம் ஆண்டு வரை மொத்தம் 23 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு 2019 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மிக மிக குறைவான எண்ணிக்கை என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால், 2013 முதல் 2016 வரையிலான ஆறு ஆண்டுகளில் 190 பேர் சாதி மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டதால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் உள்ளன.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டதால், தலித் இளைஞர் இளவரசனனின் கொலை நிகழ்வுக்குப் பின்பு, தமிழ்நாடு முழுவது நடைபெறும் சாதி மீறிய / மறுத்த காதல் திருமனங்களில்   அந்த ஊரும், உறவினர்களும், சாதிக்கார்களும், சாதிச்சங்கங்களும் தலையிடுகின்றனர்.  அதற்கு முன்புவரை இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவே   இக்காதல் திருமணங்கள் பார்க்கப்பட்டது.

 

கொலைகளும் அதற்கு எதிரான சட்டங்களும்

அரசமைப்பு சட்டங்கள் வழியாக உயிர்வாழும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளையும் பல்வேறு சட்டங்கள் வழங்கியுள்ளன.

கொலை என்பதை ஒரு குற்றச் செயலாகவே சட்டம் கருதுகின்றது. கொலை, மரணம், தற்கொலை, தற்கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல், கொலை செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் நிகழும் மரணம் என பல்வேறு வகையில் கொலை/மரணம் நிகழ்கின்றன. குறிப்பாக பாலியல் ரீதியிலான கொலைகளும், சொத்து உள்ளிட்ட ஆதாயத்திற்கான கொலைகளும், ரவுடி குழுக்களுக்களுகிடையிலான பழிவாங்கல் கொலைகளும், அரசியல் கொலைகளும், நேர்மையான அதிகாரிகளின் தற்கொலை என்கிற மரணங்களும் அதிகம் நிகழ்கின்றன.

கொலைகளைத் தடுக்கவும், அக்கொலை குற்றத்தில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்கவும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம், சாட்சியச் சட்டம், பெண்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பட்டியல், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை உள்ளன.

தண்டனையாக குறைந்த பட்சம் சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக மரணம் வரை வழங்க சட்டத்தில் இடமுள்ளது. (மனித உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் மரண தண்டனையை நாம் ஆதரிக்கவில்லை).  கொலை செய்தவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், கூட்டு அபராதம் விதிக்கவும், ஊரை விட்டு வெளியேற்றவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழியுள்ளது.

தருமபுரியில் இளவரசன், உடுமலைப் பேட்டையில் சங்கர், திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையில் முருகேசன்-கண்ணகி உள்ளிட்டோர் சாதி மீறி காதல் திருமணம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். சாதி, மதம், இனம் கடந்து நடைபெறும் இதுபோன்ற திருமணம் செய்துகொண்டோர் கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. இது சாதி ஆணவப் படுகொலை என்றும் கூறப்படுகின்றது. 

 

தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டதைப் போன்று, அதன் தொடர்ச்சியாக,

சாதி, மதம், இனம் கடந்து திருமணம் செய்துகொள்வோரின்

பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்திட

தனி சட்டம் இயற்ற வேண்டும்.

நிறம், பிறப்பு, பாலினம், குடியிருப்பு, வாழிடம், பொருளாராதாரம் உள்ளிட்ட எந்தவொரு காரணத்தினாலும் எவரிடமும் பாகுபாடுகள் காட்டக்கூடாது என பல்வேறு சட்டங்கள் வலியுறுத்துகிறது.

குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 15 பாகுபாடுகள் கூடாது என்றும், 17 தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், 21 வாழ்வதற்கான உரிமை உள்ளது என்றும் கூறுகின்றது. மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பேச்சு, கருத்து, தேர்வு செய்யும் உரிமையும் சுதந்திரமும் உள்ளது என்பதையும் அரசமைப்பு உறுதி செய்துள்ளது. 

அரசமைப்பும் சட்டமும் வழங்கியுள்ள இந்த உரிமைகள் எதனையும் கருதாமல், இவைகளுக்கு எதிராக செயல்பட்டு, உரிமைகளைப் பறிப்பதும், தடுப்பதும், தாக்குவதும் நிகழ்கின்றது.

இந்நிலையில்தான் நடக்கூடாத ஒன்றாக பார்க்கப்பட்ட மறுமணம் உள்ளிட்ட சாதி மறுப்புத் திருமணங்களை அடிமைத் தனம் மற்றும் மூடநம்பிக்கைகள் பரப்பும் சடங்குகள் இல்லாமல், விரும்பும் தலைவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வதும் திருமணம்தான் என்பதை சுயமரியாதைத் திருமணங்கள் என சட்டமாக்கியுள்ளது தமிழக அரசு.

1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, இந்து திருமணச் சட்டம் 1955 இல் சட்டப் பிரிவு 7(a)ன் கீழ் திருத்தம் கொண்டு வந்தார். மனம் ஒன்றி திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் தங்களை கணவன் - மனைவியாக அங்கீகரிக்க உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் முன்னிலையில் எளிமையான முறையில் சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் எனும் இந்த சட்டம் திருத்தம் கொண்டுவந்தார். இது சுயமரியாதை திருமணம் என்பதற்கு சட்ட அங்கீகாரம் அளித்தது. இதனடிப்படையில் இன்றும் தமிழகத்தில் சாதி, மதம் மறுத்து அல்லது மீறி ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகின்றன.

கொலைகளைத் தடுக்க பல்வேறு சட்டம் இருந்தாலும், இக்கொலைகளை வெறும் சாதாரண கொலை வழக்குகளாக மட்டுமே கருதிவிடமுடியாது. இதற்கான பின்னணியாக சாதி, கெளரவம், ஊர், பெருமை, நாலு பேர், உறவினர், சொந்தம், பந்தம், குலம், கோத்திரம், வகையறா போன்றவை காரணமாக உள்ளது. இவை அனைத்தும் சாதியோடு ஒன்றிணைந்து உள்ளது. இதன் பெயரால் கும்பலாக கூடி தாக்குவது, பொருட்கள் / சொத்துகளை அழிப்பது, திருமணம் செய்துகொண்டோரை கொலை செய்வது என குற்றச் செயல்களாக நீள்கிறது.

கொலைகளைத் தடுக்கவும், செய்வோருக்கு தண்டனை வழங்கவும் பல்வேறு சட்டங்கள் உள்ளது. ஆனால், சாதி, மதம், இனம் கடந்து திருமணம் செய்துகொண்டோரைப் பாதுகாப்பதற்குதான், அவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யவும் போதிய சட்டங்கள் இல்லை.

சடங்குகள் இல்லாமல், எளிமையான முறையில் நடைபெறும் திருமணங்களுக்கு எப்படி சட்டப் பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளதோ அதே போன்று, சாதி கடந்து திருமணம் செய்துகொண்டோருக்கும் சட்டப் பாதுகாப்புத் தேவைபடுகிறது.

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை தடை செய்து, தேசிய சட்ட ஆணையம் உருவாக்கியுள்ள வரைவு மசோதா மிக முக்கியமான ஒன்றாகும். இதனை மேலும் மேம்படுத்தி, மேலும் சில பிரிவுகளை உள்ளடக்கி பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்தும் ஒரு சட்ட மசோதாவினை உருவாக்கியுள்ளன.

 

உச்ச நீதிமன்றம் 2014 இல்  பரிந்துரை செய்துள்ளது.

‘’சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்'’ என 2014 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

 

 உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்கள்  :

இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை

இந்து திருமண சட்டம் தடை செய்யவில்லை

தனிச் சட்டம் தேவை என பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, இப்படியொரு சட்டம் இயற்றப்படும் வரையில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது. அதில்,

  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், தலைமை செயலாளர் தலைமையில் கிராமம், வட்டம், மாவட்டம் வாரியாக நடந்துள்ள சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்து ஆய்வு, கணக்கெடுக்க வேண்டும்;

  • திருமணம் செய்து கொண்டவர்களுக்கு  ஆபத்து இருப்பது தெரியவந்தால் தன்னிச்சையாக அந்த வழக்கை கையில் எடுக்க வேண்டும்;

  • சாதிப் பஞ்சாயத்து நடந்தால் அதற்குக் காரணமானவர்களை எச்சரிக்க வேண்டும்

  • தலையீடு செய்தால் வழக்கு பதிவு செய்வோம் என எச்சரிப்பது, பதற்றம் ஏற்பட்டால் 144 தடை உத்தரவை போடுவது, பஞ்சாயத்து நடப்பதை வீடியோ எடுப்பது, அதனைத் தடுக்க முற்பட்டால் வழக்குப் பதிவு செய்வது

  • சாதி மறுப்புத் மணம் செய்தவர்களுக்குப் பிரச்னைகள் அதிகம் இருந்தால் அவர்களுக்குத் தனி வீடு எடுத்துக் கொடுத்து அவர்களுக்கான உணவு மற்றும் இதர செலவுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

என வகைப்படுத்தி வழங்கியுள்ளனர்.

  • மேலும், வேறு ஒரு ஒரு வழக்கில், கலப்புத் திருமண தம்பதிகளைக் காப்பதற்கு பாதுகாப்பு மையம் ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை என மூன்று துறைகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

  • லதாசிங் எதிர் உத்தரபிரதேச வழக்கின் தீர்ப்பில், `இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கு இந்து திருமணச் சட்டம் தடையாக இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழ்நாடு வழக்கில், 'காப் பஞ்சாயத்தும் கட்டப்பஞ்சாயத்தும் ஒன்றுதான். இவை இரண்டும் மோசமான விஷயங்கள். இவை ஜனநாயகத்துக்கு எதிரானது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சட்ட ஆணையம் உருவாக்கியுள்ள, ’’திருமணங்களில் கெளரவம் மற்றும் சாதி என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் சட்டவிரோதக் குறுக்கீடுகளைத் தடை செய்யும் சட்ட முன் வரைவு’’ மசோதவினை தமிழக அரசே சட்டமாக இயற்றவேண்டும்.

  • உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்படி, தேசிய சட்ட ஆணையம் ஒரு சட்ட முன் வடிவை தயாரித்து மத்திய அரசுக்கு அளித்துள்ளது. “திருமணங்களில் கெளரவம் மற்றும் சாதி என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் சட்டவிரோதக் குறுக்கீடுகள்: சட்ட முன் வடிவு” (unlawful interference of caste panchayats etc.. with marriages in the name of honour :   A suggested legislative framework) எனும் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, காலாவதி ஆகியுள்ளது. இந்த சட்ட மசோதாவினை இதே பெயரில் தமிழக அரசு தனிச் சட்டமாக இயற்றிட வேண்டும்.

  • சமூக நீதியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவும், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பில் மிக முக்கியமான பங்காற்றுகின்ற சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணங்களை எந்தவொரு சட்டமும் தடை செய்யவில்லை. சட்ட ரீதியான அங்கீகாரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால், சமூக ரீதியில் கடும் எதிர்ப்பு உள்ளதுடன், கொலைகளும் நிகழ்கிறது. எனவே, திருமணம் செய்துகொண்டவர்களை சாதியின் பெயரால் பிரிப்பது, தாக்குவது, வன்கொடுமைக்கு ஆளாக்குவது, கொலை செய்வது போன்ற இடையீடுகளை தடுக்கும் நோக்கில், இச்சட்டத்தினை தமிழக அரசு உருவாக்கவேண்டும்.

  • இம்மசோதா, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதையும், அவர்களுக்கு எதிராக கூடுவதையும் சட்டவிரோதம் எனக்கூறி தடை செய்கிறது.

  • குறிப்பாக சட்டத்தால் தடைசெய்யப்படாத எந்தவொரு திருமணத்திற்கு எதிராகவும் சாதி அல்லது சமூக பாரம்பரியம் அல்லது குடும்பத்திற்கு அல்லது உறவினர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கருதியோ அல்லது வேறு நோக்கத்துடனோ எந்த நேரத்திலும், எந்தவொரு நபரோ அல்லது எந்தவொரு குழுவோ கூடி தலையிடக்கூடாது என்று வரையறுத்துள்ளது.

  • சட்டவிரோதமாக குழுவாக கூடி, திருமணம் செய்துகொண்டோரின் சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவோருக்கு தண்டனையும், அபராதமும் உள்ளது.

  • இணையர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க இச்சட்டம் வழிகாட்டுகிறது.  இதற்கு அரசு தனி சிறப்பு அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

  • இதுபோன்ற திருமணங்களால் பாதிப்புற்றோருக்குக் குறிப்பாக தலித் மற்றும் பெண்களுக்கு நீடித்த, நிலைத்த மறுவாழ்வுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். அதில் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை, நிலம் போன்றவைகள் உள்ளடக்கப்படவேண்டும். இது தொடர்பாக சிறப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.

  • மிக வேகமாக அழுத்தமாக, இறுக்கமாக பரவி மேலோங்கி வரும் சாதியம்தான் இதுபோன்ற கொலைகளுக்கு முழு முதல் காரணம். இதுபோன்ற படுகொலைகளை செய்வது, ஊக்குவிப்பது, ஆதரிப்பது, தூண்டிவிடுவது போன்றவைகளில் ஈடுபடும் சாதிச் சங்கங்களும், சாதியை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும், அவைகளின் வெறுப்புப் பேச்சுகளும் அடிப்படைக் காரணங்களாக உள்ளன. மேலும் சாதியின் பெயரிலான கௌரவம், கர்வம் போன்ற போலி மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்தாமல், சமூக ரீதியாக சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் இதுபோன்ற கொலைகளைத் தடுக்கமுடியாது. எனவே, சாதிய அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள் முற்றிலும் தடைசெய்யப்படவேண்டும்

  • கடமை தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை : எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும். அதனை அதிகாரிகள் சரியாக நடைமுறைபடுத்தினால்தான் சட்டம் முழுமை பெறும். ஆனால் இன்று சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியமாக இருப்பதாலும், திட்டமிட்டு சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி வழக்கினை வலுவிழக்கச் செய்வதாலும் குற்றவாளிகள் எளிதாக தப்பித்துக்கொள்வதுடன் சட்டம் கேலிக்கூத்தாகவும் மாறுகின்றது. எனவே சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து தமது கடமை தவறுகின்ற மற்றும் தனது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்துகின்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

  • புறமண திருமணங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் : தற்போது சமூகத்தில் நிலவும் சாதியத்தை காப்பாற்றுகின்ற அகமண முறையிலான திருமணங்கள் தொடர்பாக அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான ஆபத்துகள், சிக்கல்கள் குறித்து சமூகத்தில் புதிய கண்ணோட்டம் உருவாக்கப்படவேண்டும்.  புறமண முறையிலான திருமணத்திற்கும், குறிப்பாக சாதி தாண்டிய காதல் திருமணதிற்கு ஆதரவான கருத்துக்கள் உருவாக்கப்படவேண்டும், பேசப்படவேண்டும். இதன்மூலம் சாதியொழிப்பு என்கிற எண்ணமும் கருத்தாக்கமும் வலுபெறும்.

  • சமூகப் புரிதல், சாதி ஒழிப்பு, பெண்கள் உரிமை, சுதந்திரம், சமத்துவம் உள்ளிட்டவைகள் குறித்த புரிதல் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டம் உடையவர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும், வழக்கு நடத்துவதிலும் உரிய அனுபவம் உள்ளவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழு அமைத்து, இதுபோன்ற கொலை வழக்குகளையும் கண்காணிக்கவேண்டும்.

  • விருத்தாசலம் கண்ணகியை தனது தங்கை என்றும் பாராமல் அவரையும், அவரது காதல் கணவர் முருகேசனையும் சாதி ஆதிக்கத்துடன் உயிரோடு எரித்துப் படுகொலை செய்த குற்றவாளி மருதுபாண்டியனை ‘விவசாயிக்கு தூக்கு” என்று தினத்தந்தி நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற செய்திகள் குற்றவாளிக்கு ஆதரவாக sympathy அனுதாபம் உருவாக்கும் செயல் என்பதுடன், சாதி ஆதிக்கம் மற்றும் வன்கொடுமைகளை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே, வரும் காலங்களில் அச்சு, காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்துவகை ஊடகங்களும் இதுபோன்ற கொடூர கொலை மற்றும் வன்கொடுமை நிகழ்வுகளை பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்திலிருந்து அணுகும் போக்கை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் அட்டையும் ஏன் இணைக்க முடியவில்லை? (SIR)

வாக்காளர் அடையாள அட்டையும்

ஆதார் அட்டையும் ஏன் இணைக்க முடியவில்லை?



இரண்டு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் SIR பணிகளுக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது. ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை மீறி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் SIR பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்குமார் எனத் தெரியாது?
ஆண்டுக்கணக்காக செய்திருக்கவேண்டி இந்தப்பணிகளை ஒரு சில நாட்களில் செய்யவேண்டும் என நெருக்கடி கொடுத்து கட்டாயப்படுத்துவதன் காரணம் அனைவரும் அறிந்ததே.
ஆதார் இல்லை என்றால், இந்தியக் குடிமகன் இல்லை என்று கூறப்படும் அளவிற்கு, நாடு முழுதும் நீக்கமற நிறைந்துள்ளது. இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு கூட ஆதார் என்பது மிக மிக அவசியமாகியுள்ளது. ஆதார் இல்லை என்றால் வங்கியிலிருந்து நீங்கள் ஒரு கோடி இல்லை, ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாது, வங்கிக்கணக்கு முடக்கி வைக்கப்படுகிறது.
இந்தியக் குடிமகன் வயிற்றில் உயிர் கருவாக உருவாகும் போதிலிருந்தே ஆதார் இணைந்துகொள்கிறது. உணவில்லாமல், பணமில்லாமல் கூட வாழ்ந்திட முடியும், ஆனால் ஆதார் இல்லாமல் வாழமுடியாது என்ற நிலை உள்ளது.
இப்படி உயிரைவிட மேலானதாகக் கருதப்படும் ஆதார், இன்று வரை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கப்படவில்லை. காரணத்தை மத்திய அரசும் தேர்தல் ஆணையமும்தான் கூறமுடியும்.
1. தமிழ்நாட்டில் எதிர்பார்த்தபடி தகவல்கள் நிரப்பப்பட்ட SIR படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து வரவில்லை என்பதாலோ என்னவோ, சில தகவல்களை தவிர்க்கலாம் எனக்கூறி, எளிமையாக நிரப்பும் வகையில் அவசரமாக ஒரு அறிவிப்பினை தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ளார்.
2. தமிழ்நாட்டில் SIR தொடங்கிய நாளிலிருந்து, படிவத்தை எப்படி நிரப்புவது என நாள்தோறும் ஆயிரக்கணக்கான காணொளிகளும், தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளியானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தகவல்களை வழங்கின என்பது வேறு கதை. BLO க்களுக்கும் எவ்வித பயிற்சியோ, வாய்வழி விளக்கமோ அளிக்கப்படவில்லை. பல்வேறு குழப்பங்கள், தகவல் வேறுபாடுகளுக்குப் பிறகு ஏறக்குறைய விண்ணப்பங்கள் பெரும்பாலும் முடிகின்ற நிலையில் கடந்த 2002 /2005 இல் தனது பெயரோ, உறவினர் பெயரோ கண்டறிய முடியாதவர்கள் பிற விவரங்களை மட்டும் நிரப்பி ஒப்படைக்கலாம் என்று நேற்று தலைமை தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
3. மேலும், எங்கெல்லாம் விண்ணபங்கள் திரும்பப் பெறுவதில் சிக்கல்களும், குறைவான எண்ணிக்கையும் நிலவுகிறதோ அங்கெல்லாம் நேற்று அவசரம் அவசரமாக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இறந்து போன ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் படிவங்களை நிரப்பச் சொல்லியுள்ளார்கள்.
1. BLO அவர்களிடம் கொடுக்கப்பட்ட படிவங்களின் எண்ணிக்கையை வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டதாக கணக்கிடப்படுகிறது. இன்னும் அடையாளம் காணப்படாத வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்கு சாவடி மையத்திலும் குறைந்த பட்சம் 50 இருக்கும்.
2. விண்ணப்பங்களை வாக்காளர்களுக்கு வழங்குவதில், சில இடங்களில் கட்சிக் காரர்கள் உதவி செய்துள்ளனர். (பெரும்பாலும் தி.மு.க). ஆனால், நிரப்பிய விண்ணப்பங்களை வாங்குவதற்கு கட்சியினர் உதவிகள் செய்யவில்லை. பெரும்பாலான வாக்காளர்களிடம் விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுப்பதற்கான ஆர்வம் இல்லை. அவர்களே வந்து பெற்றுக்கொள்வார்கள் என அமைதியாக இருக்கின்றனர். BLO மற்றும் உதவியாளர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை பெறுகிறார்கள். அதனால் திரும்பிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
3. முதலில் அங்கன்வாடி பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பிறகு நகராட்சி, பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள்; சத்துணவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள், நேற்றுமுதல் தலைமை ஆசிரியர்கள் என ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
4. SIR பணியில் ஈடுபட்டுள்ள யாருக்கும் எவ்வித பயிற்சி, வழிகாட்டுதல் போன்ற எதுவுமில்லை. பிறரிடம் கேட்டு கேட்டு, பலரும் பகிர்ந்துள்ள சமூக ஊடகக் காணொளிகளைப் பார்த்து அவர்களாகவே தெரிந்ததை செய்துகொண்டுள்ளனர்.
1. முதலில் கூறியபடி, நீக்கமற நிறைந்துள்ள ஆதார் எண் மற்றும் கைரேகையை வாக்காளர் அடையாளர் அட்டையுடன் இணைக்கின்ற வேலையை இப்போது செய்திருந்தால், வெகு எளிதாக பணி முடிந்திருக்கும்.
2. ஒரு SIM Card வழங்க, செல்பேசி மூலமே ஆதார் விவரங்களை அணுக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, தேர்தல் பணிகளுக்கு, அதுவும் வாக்காளர் விவரங்களை சரிப்பார்க்க அணுகுவதற்கு எவ்வித தடையும் சிக்கலும் இருந்திருக்காது.
3. இரண்டு மூன்று இடங்களில் வாக்காளர் அட்டை கூட இருக்கலாம். ஆனால், ஆதார் இருக்க வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் இதனை தவிர்ப்பதற்கு வலுவான உள்நோக்கம் / காரணம் இருக்கவேண்டும்.
4. இப்படி ஒரு மாதத்தில் SIR பணிகளை செய்தவற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 6.41 கோடி. இதில் 22 லட்சம் பேருக்கு SIR படிவம் போய்ச் சேரவில்லை. இதில் சுமார் 20 லட்சம் வாக்காளர் பெயர் விடுபட வாய்ப்புள்ளது.
5. SIR படிவம் வழங்கப்பட்ட முகவரியில் உள்ள பலர், வேலை உள்ளிட்ட பல காரணங்களால் வேறு இடங்களில், வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்கள் இதில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. இதிலும் வாக்காளர்கள் பெயர் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விடுபட வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால், படிவம் நிரப்பவோ, திருப்பி அளிக்கவோ விருப்பம் இல்லாமல், வாய்ப்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் பெயர் விடுபட வாய்ப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால் குறைந்த பட்சம் 50 முதல் 75 லட்சம் வரையிலான வாக்காளர்கள் பெயர், இறுதி வாக்காளர்கள் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது.
6. சுமார் 75 லட்சம் வரையிலான வாக்காளர்கள் பெயர் விடுபடாமல், வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் நிச்சயம் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களின் உதவியும் தேவைபடும். தி.மு.க மட்டுமே குறைந்த பட்சம் இதில் ஈடுபடுகிறது. அதுவும் விண்ணப்பங்களை வழங்குவதற்கும், முகாம்களில் சென்று பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வெளியிடுவது மட்டுமே நடக்கின்றது என நினைக்கின்றேன். விண்ணபங்களை நிரப்புவதற்கோ, அது ஒப்படைப்பதற்கொ தி.மு.க நிர்வாகிகள் செயல்படுவதாகத் தெரியவில்லை. (பிற பகுதிகளில் இருக்கலாம். எங்கள் ஊரில் இல்லை.)
7. அதிமுக, பாமக, தவெக ஆகிய கட்சிகள் குளறுபடிகள் நடக்கவேண்டும் என்றும், வாக்காளர்கள் பெரிய எண்ணிகையில் விடுபட வேண்டும் என்றும் எதிர்பார்த்த்து, இதில் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கின்றார்கள். அப்போதுதான், திமுக அரசு / தமிழ்நாட்டு அரசு SIR பணிகளை ஒழுங்காகச் செய்யவில்லை என ஏற்கனவே கூறும் குற்றச்சாட்டினை உறுதிபடுத்தமுடியும் என காத்திருக்கின்றார்கள்.
8. வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டு நிரப்படாத படிவங்களையும், வெளியூரில் உள்ள வாக்காளர்களின் படிவங்களையும் நிரப்பி திரும்பப் பெறுவதான சிறப்பு வழிகாட்டுதல் அறிவிப்புகளை வெளியிடவேண்டும். இப்பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தலாம்.