Saturday, September 22, 2012


தமிழிளைஞர் கூட்டமைப்பு
விழுப்புரம்


எழில்.இளங்கோ,
588- எழிலகம்,
இந்திராநகர்,
கீழ்ப்பெரும்பாக்கம்,
விழுப்புரம்- 605602
99 52 74 12 21
                                                                         18-.09-.2012                                 
       பெறல்:      உயர்திரு. உள்துறைச் செயலர்,
                      தலைமைச்செயலகம், சென்னை - 9.
அய்யா,
பொருள்: கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் - 12-06-12 அன்று    விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே நடந்த தொடர்வண்டி இருப்புப்பாதைத் தகர்ப்பு தொடர்பாக என்னோடு 6 பேரிடம் அண்மையில் விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் கியூ பிரிவு துணைக்கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி என்பவர் தமிழ் உணர்வாளர்கள், தமிழியக்கங்கள், தமிழீழ ஆதரவாளர்கள் தொடர்பாக இழிவாகப் பேசியதோடு சட்டத்திற்குப் புறம்பாக கடுமையாக மிரட்டியுள்ளது தொடர்பாகவும் இருளர் இனப் பெண்களைக் கேவலப்படுத்தி பேசியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
      
பார்வை:     1.விக்கிரவாண்டி காவல் நிலைய குற்ற எண்.259/2010 நாள்: 12-06-2010
              2.விழுப்புரம் கியூ பிரிவு கு.பு.துறை காவல்ஆய்வாளர் அழைப்பாணை
                 நாள் : 13-09-2012
                           ************************

       வணக்கம். மேற்படி பொருள்தொடர்பாக கீழ்க்கண்டவற்றைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

       1. நான் தமிழிளைஞர் கூட்டமைப்பு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்து கொண்டு என்னால் இயன்ற சமூகப் பணிகளைக் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகின்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 12-06-2010 அன்று விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே நடந்த தொடர்வண்டி இருப்புப்பாதை தகர்ப்பு தொடர்பாக என்னோடு தமிழுணர்வாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் சட்டப் புறம்பான காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம். எங்கள் தலைவர் மாண்பமை அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் பெருமுயற்சியால் எங்கள் குடும்பத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விளைவாக நாங்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டோம்.

       2. இந்நிலையில் பார்வை 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பாணைக்கிணங்க 14-09-12 அன்று மாலை 05.10 மணியிலிருந்து 07.10 மணிவரை என்னை மேற்படி விழுப்புரம் கியூ பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. வெள்ளைச்சாமி விழுப்புரம் கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தார். அப்போது என்னுடன் வழக்குரைஞர் திரு. .ரஸ்கின்ஜோசப் அவர்கள் உடனிருந்தார். அப்போது  மேற்படி காவல் அதிகாரி திரு. வெள்ளைச்சாமி அவர்கள், தமிழ் தமிழ் என்று பேசியே நாட்டை கெடுத்துவிட்டார்கள் ..... இந்தியையும் படிக்கவிடாமல் இங்கிலீஷம் தெரியாமல் தமிழை வச்சிக்கிட்டு ஒன்னும் கிழிக்கமாட்டானுங்க.... இங்கிருக்கும் தமிழன பத்தி கவலைப்படாம இலங்கைத் தமிழனுக்கு பாடுபட கிளம்பிட்டானுங்க.. என்று இங்குள்ள தமிழுணர்வாளர்களையும் தமிழீழ ஆதரவாளர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசினார்.

3. அதே தினத்தன்று எனக்குப்பிறகு இரவு 07.15 மணியிலிருந்து 09.15 மணிவரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கா.தமிழ்வேங்கை அவர்களை மேற்படி காவல் அதிகாரி திரு. வெள்ளைச்சாமி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவருடன் வழக்குரைஞர் திருமதி பிரிடாஞானமணி மற்றும் அவரது கணவர் திரு. பழனியப்பன் அவர்களும் உடனிருந்துள்ளனர். அப்போது மேற்படி காவல் அதிகாரி திரு. வெள்ளைச்சாமி அவர்கள்,இருளர் பொண்ணுங்க 5பேரை போலீஸ்காரன்  கற்பழிச்சிட்டானு கேஸ் போடுறானுங்க. எவனாவது 5 பொண்ணுங்கள கூட்டிட்டு போவாங்களா? செத்தா 1 லட்சம்தான் அரசாங்கத்துல தர்றாங்க. கற்பழிப்புனா அரசாங்கத்துல 5 லட்சம் தர்றாங்க. அதனாலதான் கற்பழிப்பு கேசுகள் நிறைய வருகின்றன என்று கூறியுள்ளார். திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தில் 5 இருளர் பெண்களை காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மேற்படி காவல் துறைதுணைக் கண்காணிப்பாளர் பேசியது கண்டு உடனிருந்த வழக்குரைஞர் திருமதி பிரிடாஞானமணி அவர்கள் இக்கற்பழிப்பு சம்பவம் சம்பந்தமாக அனைத்து உண்மைகளும் எனக்குத் தெரியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியாக உதவி வருகிறேன். போலீஸ் அதிகாரிகள் குற்றம் செய்யவில்லை என்றால் பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு உடனே அனுப்பாமல் எதற்காக இரவும் பகலுமாக எஸ்.பி அலுவலகத்தில் வைத்து 18 மணிநேரம் விசாரணை செய்யவேண்டும். 5 லட்சம் அரசாங்கம் கொடுக்கிறது என்பதற்காகவே இருளர் இனப்பெண்கள் பணத்திற்காகப் பொய் சொல்கிறார்கள் என்கிறீர்களா? அவர்களின் வலியையும் சமூகம் இனி அவர்களை எப்படிப் பார்க்கும் என்ற ஆதங்கம் எதுவுமின்றி நீங்கள் பொறுப்பற்று பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

4. கடந்த 09-08-12 அன்று தமிழர் கழகத்தைச் சேர்ந்தவரும் முல்லை புத்தகக் கடை உரிமையாளருமான திரு. தே.ஏழுமலை அவர்களை மேற்படி விசாரணை அதிகாரி விசாரணை செய்துள்ளார். அப்போது சட்டக் கல்லூரி மாணவரான திரு. வி.பிரபு அவர்கள் உடனிருந்துள்ளார். அப்போது மேற்படி வெள்ளைச்சாமி அவர்கள், ஒன்பதாவது வரை படித்துவிட்டு தமிழ் தமிழ் என்று பேச வந்திட்டீங்களா? உங்களுக்குத் தமிழைப் பற்றி என்ன தெரியும்? உங்கள மாதிரி ஆட்களாலதான் தமிழ்த்தீவிரவாதம் உருவாகியிருக்கு.. உங்களயெல்லாம் என்கவுன்டர் செஞ்சிருக்கணும்.... என்று மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

5. கடந்த 04-08-12  அன்று தமிழிளைஞர் கூட்டமைப்பு மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பில் செயல்பட்டுவருபவரும் பாபு அச்சக உரிமையாளருமான திரு.கோ.பாபு அவர்களை மேற்படி விசாரணை அதிகாரி திரு. வெள்ளைச்சாமி சுமார் மூன்று மணிநேரம் விசாரித்துள்ளார். அப்போது மேற்படி சட்டக்கல்லூரி மாணவர் திரு. வி.பிரபு  மற்றும் வழக்குரைஞர் திரு. காளிதாஸ் ஆகியோர் உடனிருந்துள்ளார். அப்போது மேற்படி விசாரணை அதிகாரி, தமிழ் தமிழ் என்று சத்தம் போட்டு இங்க ஒன்னும் ஆகிவிடப்போவதில்லை... இலங்கையில் நடந்த கதிதான் இங்கேயும் நடக்கப்போவுது... சட்டம் ஒழுங்கு போலீசார் உங்கள சரியாக கவனிச்சிருந்தா  இந்த அளவுக்கு நீங்க வளர்ந்திருக்கமாட்டீங்க  என்று மிரட்டியுள்ளார்.

6. 04-08-2012 அன்று திண்டிவனம் வட்டம் செ.கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் தமிழிளைஞர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் செயல்பட்டுவருபவருமான திரு. சா. ஜெயராமன்  () வெற்றியழகன் என்பவரை மேற்படி விசாரணை அதிகாரி திரு. வெள்ளைச்சாமி சுமார் 2 மணிநேரம் மேற்படி விழுப்புரம் அலுவலகத்தில் வைத்து விசாரித்துள்ளார். அப்போது அவருடன் சட்டக்கல்லூரி மாணவர் திரு. வி.பிரபு அவர்கள் உடனிருந்துள்ளார். அப்போது மேற்படி திரு. வெள்ளைச்சாமி அவர்கள், நீங்கள் சரியாக பதில் சொல்லாவிட்டால் உங்களை வேறுவிதமாக விசாரிக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளார். கடந்த 08-09-12 அன்று இரண்டாவது முறையாக விசாரணை செய்யும்போது டி.எஸ்.பி விசாரணை  முடிந்த பின்பு கியூ பிரிவு ஆய்வாளர் திரு. ராஜ்பாபு அவர்கள் உடனிருந்த மேற்படி வி.பிரபு அவர்களைப் பார்த்து ஜெயராமன் எல்லாம் எங்களுக்கு கொசு மாதிரி என்று கூறியுள்ளார்.

7. 09-08-2012 அன்று தமிழிளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராகப் பணிபுரிந்துவருபவருமான திரு. பா.ஜோதிநரசிம்மன் அவர்களை மேற்படி விசாரணை அதிகாரி திரு. வெள்ளைச்சாமி அவர்கள் மேற்படி விழுப்புரம் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மேற்படி சட்டக்கல்லூரி மாணவர் திரு. வி.பிரபு அவர்கள் உடனிருந்துள்ளார். விசாரணையின்போது மேற்படி டி.எஸ்.பி அவர்கள், உங்கள் அப்பா அம்மா இரண்டுபேரும் வாத்தியாருங்க. சம்பாரிச்சு வச்சிருக்காங்க, நீ வெட்டியா சுத்திவந்துகிட்டு ரவுடி பயல்கிட்ட அடியாளா இருந்திருக்க... என்று அவமானப்படுத்தும்படியாக பேசியிருக்கிறார்.

8. எனவே நடந்து முடிந்துள்ள சம்பவங்களை தொகுத்துப்பார்க்கும் போது மேற்படி விழுப்புரம் கியூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. வெள்ளைச்சாமி அவர்கள், தமிழ் மொழி இன நாட்டு உரிமைகளுக்காக அறவழியில் அமைதியாகக் குரல்கொடுக்கும் தமிழுணர்வாளர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் ஈழத்தமிழ் மக்களுக்காக தார்மீக ரீதியில் குரல்கொடுக்கும் தமிழீழ ஆதரவாளர்களையும் கொச்சைப்படுத்தியும் அவமானப்படுத்தியும் கூறியுள்ளதை அறிய முடிகிறதுஇது மேற்படி வழக்குக்கு தொடர்பில்லாததாகும்.

9. விசாரிக்கும் வழக்கிற்குத் தொடர்பில்லாத செய்திகளை வெளியிட்டும் தமிழுணர்வாளர்கள் தமிழறிஞர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் ஆகியோரைக் கொச்சைப்படுத்தியும் கூறியுள்ள செய்திகளில் உள்நோக்கம் இருப்பதாக அறிகிறோம். எனவே மேற்படி விழுப்புரம் கியூ பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெள்ளைச்சாமி மற்றும் ஆய்வாளர் திரு. ராஜ்பாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

                                                                 இன்னவண்ணம்,
                                                               (எழில்.இளங்கோ)

நகல்:
       1. உயர்திரு. டி.ஜி.பி அவர்கள், சென்னை
       2. உயர்திரு. .ஜி அவர்கள், கியூ பிரிவு சென்னை
       3. உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழுப்புரம்
       4. உயர்திரு. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம்
       5. உயர்திரு. துணை காவல்கண்காணிப்பாளர் அவர்கள், கியூ பிரிவு விழுப்புரம்.

இணைப்பு
       1. பார்வை -2 ல் கண்ட அழைப்பாணை நகல்.

No comments: