மனித மலத்தை அள்ளும் துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் ரூ. 54.28 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடவில்லை என்று தேசிய துப்பரவு பணியாளர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் சவுத்திரி, செயலாளர் கல்பனா அமர் உள்ளிட்ட ஆணைய குழுவினர், தமிழகத்தில் துப்பரவு தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனையட்டி வெள்ளி 22&08&08 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.
துப்பரவுப்பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கான சட்டப்பூர்வமான ஊதியம் மறுக்கப்படுகிறது என்றும், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கபடும் துப்பரவு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்பூர்வ பொறுப்பாகும் என்றும் கூறினர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வு செய்தபோது, கூலி, பணி முறைகள் ஆகியவற்றில் பாகுபாடு நிலவியதும், மலம் அள்ளும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது தடையின்றி தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.
துப்பரவு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவதற்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. ஆனால், இன்னும் தமிழகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் துப்பரவு தொழிலாளர்கள் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வருத்ததிற்குரியது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.
தமிழகத்தில் 83 நகரங்களில் மட்டுமே மலம் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. மலம் அள்ளுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறையை படிபடியாக ஒழிக்க மத்திய அரசு ரூ 57.80 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் ரூ 24.52 கோடி மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. 33.28 கோடி ரூபாய செலவிடப்படாமல் உள்ளது.
கையால் மலம் அள்ளும் தொழிலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தில் தமிழகத்தில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 54.28 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
துப்பரவு தொழிலாளர்களுக்கான கடன்களை மத்திய - மாநில அரசுகளும், வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.