Thursday, September 21, 2023

பேராசிரியர் பிரபா கல்விமணி 
இரா.முருகப்பன், 
திண்டிவனம். 


மாநில கல்விக் கொள்கை -  பரிந்துரைகள்


1.ஆரம்பக் கல்வி முதல் ஆராய்சிக் கல்வி வரை அனைத்தும் தமிழில் வழங்கப்படவேண்டும். 

2.10 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி சோதனை முயற்சியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு  தொடங்கப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி மட்டுமே உள்ளது. இது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை பெரிதும் பாதிக்கின்றது. 

எனவே, தொடக்கக் கல்வியில் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படவேண்டும். தமிழ்வழிக் கல்வி இல்லாத அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் இருக்கக்கூடாது. 

3.தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ்வழியில் ஒரு வகுப்பேனும் தொடங்கப்படவேண்டும். (பொறியியல் கல்லூரிகளில் சிவில் பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளது போன்று) குறைந்தபட்சம் செவிலியர் போன்ற மருத்துவம் சார்ந்த இதர படிப்புகளை அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒருபிரிவு தமிழில் தொடங்கப்படவேண்டும். 

4.1 முதல் 8 – ஆம் வகுப்பு வரை தற்போது முப்பருவக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் முழு ஆண்டுத் தேர்வு முறை என்பது மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இரு பருவத் தேர்வு (செமஸ்டர்) முறையினை நடைமுறை படுத்த வேண்டும்.  

5. உயர்கல்வி சேர்க்கைக்கு மேல்நிலை கல்வியில் +1 மற்றும் +2 ஆகிய இரண்டு தேர்வின் மதிப்பெண்களையும் எடுத்துக்கொள்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். இதுதான் உயர்கல்விக்கு தேவையான நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். 

6.மேலும், உயர்கல்வி சேர்க்கையின்போது +1, +2 வில் பெற்ற மொத்த மதிப்பெண்களுடன், உயர்கல்வியின் பிரிவுக்கேற்ற குறிப்பிட்ட பாடங்களின் மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். 

7.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வியிலும், கிராமப்புற மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். 

8.தமிழகத்தில் 1978 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே, மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டு சேர்க்கையில் (+1) இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்” என அரசு ஆணை வெளியிடப்பட்டது. (அரசு ஆணை எண் 587, நாள் 27.03.1975, அரசு ஆணை எண் 42, நாள் 12.01.1994,  கல்வித் துறை) இதனடிப்படையில் 11-வது மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், எஸ்.சி 18%, எஸ்.டி 1%, மி.பி.வ 20%, பி.வ 30% என மொத்தம் 69%. இதனை அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். 

9.உயர்கல்வியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விகித்தாசர ஒதுக்கீடு வழங்கவேண்டும். 

நீதிபதி கலையரசன் குழு பரிந்துரை என்பது 10% விழுக்காட்டிற்கும் குறையாமல் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான், அதாவது 10% மேல் 20%, 30% என்று கூட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம். ஆனால், கடந்த ஆட்சியில் வழங்கியது 7.5% மட்டுமே ஆகும். இப்போதைய ஆட்சியும் 7.5% ஐ அதிகரிக்கவில்லை. 

ஆனால் அதை பிற தொழில் கல்விக்கும் விரிவு படுத்தியுள்ளது. இதனை வரவேற்கும் அதே சமயத்தில் 40% ஆக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% தான்  என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, விகிதாசார பகிர்வு முறையை கணக்கில் கொண்டு, அதாவது +2 பொதுத்தேர்வில் பள்ளிகள் அடிப்படையில் விகிதாச்சார பகிர்வு அளிக்கலாம். 

தன்படி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு - 40 %
அ.உ பெறும் பள்ளி மாணவர்கள் - 24.15 %
பதின்மப் பள்ளி மாணவர்களுக்கு - 30.66 %
ஆங்கிலோ இந்தியன் மற்றும் 
ஓரியண்டல் பள்ளி மாணவர்களுக்கு - 0.52 %
சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு - 4.67 %
மொத்தம்     - 100 %


இதில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றவேண்டும். மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கு 11-வது மதிப்பெண்களின் மொத்தத்தையும் கணக்கில் எடுத்துக்க்கொள்வதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பொதுத்தேர்வுகளிலும் பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதும் முதல் முயற்சியை (First Attempt) மட்டுமே அனுமதிக்க வேண்டும். 


10.அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பழங்குடியினருக்கென்று 1% வழங்கப்படுகின்றது. ஆனால், நடைமுறையில் 20, 40 மாணவர்கள் உள்ள வகுப்புகளுக்கு 1% என்பது 0.2 மற்றும் 0.4 என்று வருவதால் அவ்வகுப்புகளில் பழங்குடியினருக்கு இடம் வழங்கப்படுவதில்லை. பழங்குடியினருக்கு முன்னுரிமை அளித்து பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் ஒரு இடம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் பழங்குடியினர் கல்வி நலனுக்கு தனி இயக்குநரகம் ஏற்படுத்தவேண்டும். 

11.வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தற்போதுள்ள 20% இட ஒதுக்கீட்டினை  50% ஆக அதிகரிக்க வேண்டும்.


12.அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வியில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ₹.1000/- அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

இவண், 
பேராசிரியர் பிரபா கல்விமணி 
இரா.முருகப்பன், 
கல்வியாளர்கள், 
திண்டிவனம். 
தொடர்புக்கு – 9442622970 / 9894207407



No comments: