Thursday, September 21, 2023

மாநில கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் - SASY

 

03.11.2022

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் 

மாநில கல்விக் கொள்கைக்கான  

பரிந்துரைகள்

 

மாநில அரசுக்கென தனி கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற தமிழக அரசின் முடிவையும், முயற்சியையும் வரவேற்று, பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மாநிலக் கல்விக் கொள்கை அனைத்துக் குழந்தைகளின் ஆளுமை, தன்னாளுமை மற்றும் பல்வேறு திறன்மளை வலுப்படுத்த பேருதவியாக அமையவேண்டும். இக்கொள்கையினால் மாணவர்கள் இடை நிற்றல் முற்றிலும் ஒழியவேண்டும். தமிழகம் 100 % கல்வி பெற்ற மாநிலமாக உயரவேண்டும்.  ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியினை மறுக்கின்ற தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எங்களுடைய அமைப்பின் சார்பாக கீழ்கண்ட கருத்துகளை முன் வைக்கின்றோம். 

1. குழந்தைகள் கல்வி கற்றல் தடையின்றி நிகழ் அவரவர் தாய்மொழி வழியில் அமையவேண்டும். இதனைக் இக்கல்வி கொள்கை உறுதி செய்திடவேண்டும்.

 2. ஐ.நா-வின் உடன்படிக்கைகள் 18-வயது வரை குழந்தை என்று வரையறை செய்துள்ளது. எனவே, அனைவருக்கும் இலவய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 18 வயது வரையுள்ள அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் வகையில், மாநில அரசு தனிச் சட்டம் இயற்றி, அனைவருக்கும் இலவச கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

 3. தொடக்கக் கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் ஆராய்சிக் கல்வி வரையிலான அனைத்து வகையிலான கல்வியும் அடிப்படை உரிமையாகவும், அரசின் கடமையாகவும் உறுதிபடுத்திட வேண்டும்.

 4.      உயர்கல்வி, ஆய்வு மற்றும் ஆராய்சிக் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும்.

5. தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே தீண்டாமை மற்றும் பாகுபாடுகள் நிலவுவதை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. நிறம், பிறப்பு, பாலினம், குடியிருப்பு, பொருளாராதாரம் உள்ளிட்ட எந்தவொரு காரணத்தினாலும் எவரிடமும் பாகுபாடுகள் காட்டக்கூடாது என பல்வேறு சட்டங்கள் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 15, 15(4), 21, 21(A), 39(F), 46 மற்றும் ஐ.நாவின் குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கை போன்றவையாகும்.

எனவே சாதி, மதம், பாலின பாகுபாடுகள் இல்லாத கல்வி நிலையங்கள் உருவாக்கப்படவேண்டும். இதுபோன்றவொரு சமத்துவக் கல்வியை கற்பித்திடும் வகையில் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அதற்குரிய வகையில் பாடத்திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

6.      உருவாக்கப்படும் மாநிலக் கல்விக் கொள்கை வெறும் கொள்கையாக மட்டுமில்லாமல், சட்ட வடிவமாகவும் மாற்றப்படவேண்டும்.

7.      தமிழகத்தில் 1978 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, முதல் ஆண்டு சேர்க்கையில் (+1) இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசு ஆணை வெளியிடப்பட்டது. (அரசு ஆணை எண் 587, நாள் 27.03.1975, அரசு ஆணை எண் 42, நாள் 12.01.1994,  கல்வித் துறை) இதனடிப்படையில் 11-வது மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், அரசின் 69%. இட ஒதுக்கீடு முறை அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

8.      +1 மற்றும் +2 ஆகிய இருவகுப்புகளையும் ஜூனிய கல்லூரி என்று வகைப்பாடு செய்து, இரு பருவத் தேர்வு (Semester) முறை நடைமுறைப் படுத்தவேண்டும்.  

9.      தமிழகத்திலுள்ள அனைத்துவகை கல்வி நிலையங்களுக்கும், (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் அனைத்து வகை கல்லூரிகள்) உரிய அடிப்படை வசதிகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும். கட்டடங்களாக வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. ஆனால் அவை காலமுறையில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக மாணவர்கள் அமர எழுத மேசைகள், தண்ணீர் வசதி, விளக்கு, மின்விசிறி, கழிவறை, நூலகம், படிப்பறை, ஆடிட்டோரியம் மற்றும் திறன் வகைப்பறைகள் (டிஜிட்டல்) உள்ளிட்ட அனைத்தும் தரநிலையில் சிறந்ததாக அமைக்கப்படவேண்டும்.

 10.   பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள், குறிப்பாக தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதிகளுக்கும் முழுமையாக கட்டடம், அனைத்து வகையிலான அடிப்படை வசதிகள் கொண்ட முழு கட்டமைப்புடன் அமைக்கப்படவேண்டும். தரமான உணவு வழங்கப்படவேண்டும். தற்போதைய பொருளாதார நிலையினைக் கருத்தில்கொண்டு உணவு மற்றும் மாணவர்களுக்கான உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிடவேண்டும். குறிப்பாக மாணவிகள் விடுதிக்கு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும்.

 11.   பாடத்திட்டம் தாய்மொழி வழியில் இருபதுடன், அரசின் இருமொழிக் கொள்கை தொடரவேண்டும். மேலும் 8-ஆம் வகுப்பு வரையிலான அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை தொடரவேண்டும்.

 12.   பாடத்திட்டங்களில் புராண, இதிகாசங்கள் மற்றும் தற்போதைய சூழலில் நடைமுறையில் இல்லாத பழங்கால செய்யுட் பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும். சமகால வரலாறுகளும், தலைவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற வேண்டும். குறிப்பாக திராவிட, அம்பேத்கர் இயக்கத் தலைவர்களின் வரலாறுகள் பாடப்புத்தகங்களில் இடம்பெறவேண்டும். அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாடங்கள் இணைக்கப்படவேண்டும்.

13. பள்ளிகளில் விளையாட்டிற்கு கூடுதல் கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படவேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறன் மேம்பட அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். குறிப்பாக அனைத்துவகையான உள்ள கட்டமைப்பு வசதிகளுடன் வட்டத் தலைநகரங்களின் விளையாட்டுத் திடல் மற்றும் உள்ளரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவேண்டும். வட்டந்தோறும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

14.   அரசுப் பள்ளிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படவேண்டும். குறிப்பாக உயர்கல்வி சேர்க்கை, மாணவிகளுக்கான உதவித் தொகை, தமிழ் வழியில் படித்தோருக்கான வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். 

15.   தமிழகத்தில் அரசின் நிதியுதவின்றி சுமார் 20 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பள்ளிகளுக்கான ஏற்பிசைவினை அரசு எளிமைப்படுத்தவேண்டும். மேலும், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சுமார் 22 வகையான கல்வி உதவிகளும் வழங்கப்படவேண்டும். மதிய உணவும் வழங்கிடவேண்டும். வாடகை கட்டங்களில் இயங்கி இப்பள்ளிகளுக்கு சொந்த இடம் மற்றும் கட்டங்களை அரசு முன்வந்து செய்திடவேண்டும். மேலும், இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படவேண்டும். இந்தத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை சிறப்பு நிலையாகக் கருதி அரசு இப்பள்ளிகளுக்கான உதவிகளை செய்திடவேண்டும்.

இவண்,

வே.அ.இரமேஷ்நாதன்,

           இயக்குநர்,

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் – SASY.

   பேச : 9560028068

No comments: