Thursday, September 21, 2023

மலக்குழி மரணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

 07.01.2023

 

·       மலக்குழி மரணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் – கழிவகற்றும் பணி முற்றிலும் இயந்திரமயமாக்கப்படவேண்டும்.

·       மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை, மறுவாழ்விற்கான சட்டம் மற்றும் விதிகள் 2013 சரியாக அமுல்படுத்தப்படவேண்டும்.

 பத்திரிகைச் செய்தி

 அண்மையில் தமிழக முதல்வர் அவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த நிலையில், நாடு முழுவதும் தூய்மைப் பணி என்ற பெயரில் குப்பைகள் அள்ளுவது; மலம் அள்ளுவது; சாக்கடை அள்ளுவது; கழிவு நீர் கால்வாயில் அடைப்பு நீக்குவது, கழிவு நீர் தொட்டி கழிவு அகற்றுவது; உள்ளே இறங்கி கழிவுகளை அள்ளுவது; அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் பலர் மரணமடைவது அதிகரித்து வருகின்றது.

இப்பணிகளில் பெரும்பாலும் தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிலும் 95% தலித் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 2016–2020 ஆண்டில் கழிவு நீர் / மலக்கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட 55 பேர் இறந்துள்ளனர். அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் 8 மாதத்தில் 15-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இதுபோன்ற மரணங்களைத் தடுக்கவும், நாகரீக சமூகத்தில் மனித மலத்தை மனிதர்கள் கையால் அள்ளுவதை தடைசெய்யதும் “மனிதக் கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2013” கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தை நடைமுறைபடுத்தவேண்டிய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும், பொறுப்புடைய காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் இச்சட்டத்தினை நடைமுறைபடுத்தாமல் அலட்சியப்படுத்தி, புறக்கணிப்பதின் காரணமாக மலக்குழு மரணங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில்தான், இச்சட்டம் தமிழகத்தில் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வினை மேற்கொண்டோம். இந்த ஆய்வு அறிக்கையினையும், இச்சட்டக் கையேட்டினையும் 07-01-2023 இன்று வெளியிட்டோம்.  

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் வே.அ.இரமேஷ்நாதன் அவர்கள் இந்த ஆய்வின் நோக்கம் மற்றும் அறிக்கையின் விவரம் குறித்து உரையாற்றினார். சஃபாய்கரம்சோரி அந்தோலன் அமைப்பின் தேசிய இணை அமைப்பாளர் தீப்தி சுகுமார் தலைமையில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் திரு புனிதபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு எஸ்.எஸ்.பாலாஜி, விட்னஸ் திரைப்பட இயக்குநர் திரு தீபக், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் ஆகியோர் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டு கருத்துரையாற்றினார்கள். இந்த ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் எஸ்.கல்யாணி அவர்கள், ஆய்வு குறித்து விளக்கமளித்தார். இரா.முருகப்பன் வரவேற்புரையாற்றினார்.

பிற்பகலில் இந்த ஆய்வு அறிக்கையின் முடிவுகளையும், இச்சட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் கருத்தரங்கம் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் எனும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பில், சஃபாய் கரம்சாரி அந்தோலன் – புதுடெல்லி, ஆரோக்கியகம்-ஆண்டிபட்டி, அருந்ததியர் சமூக நீதி கூட்டமைப்பு-தமிழ்நாடு, சி.சி.ஆர்.டி சென்னை, ஹோப் புதுச்சேரி, மனித வள மேம்பாட்டு மையம்-செங்கல்பட்டு, லா டிரஸ்ட்-நாகைப்பட்டிணம், மக்கள் கண்காணிப்பகம்-மதுரை, சமூக சமத்துவ மையம்-புதுச்சேரி, ரீடு-சத்தியமங்கலம்,  சமூக கண்காணிப்பகம்-சென்னை, தமிழ்நாடு ஆதிஅருந்தியர் மகா சபை-சென்னை, தோழமை-சென்னை, விழுதுகள்-அவிநாசி, சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் விசிக-சென்னை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

கடந்த ஓராண்டில் (ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை) தமிழகத்தில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இறந்த நிகழ்வுகள், பள்ளிகளில் அருந்ததியர் குழந்தைகளை கழிவறை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீதான வன்கொடுமைகள் உள்ளிட்ட 21 சம்பவங்களை நேரடியாக கள ஆய்வு செய்த எமது இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், இச்சம்பவங்களில் இச்சட்டம் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தது.

 சாதிய அடிப்படையில், குலத்தொழில் போன்று தலித் மக்கள் ஈடுபடுத்தப்படும் இத்தொழிலை ஒழித்து, முற்றிலும் இயந்திரமயமாக்கவேண்டும், காலங்காலமாக இதில் ஈடுபடுத்தப்பட்ட வரும் அருந்தியர் சமூக மக்களை இதிலிருந்து முற்றிலும் விடுவிக்கவேண்டும் என்பதும் ஆய்வின் பரிந்துரையாக வெளிப்பட்டது.

      இந்நிகழ்வில் வெளியான கருத்துகளின் அடிப்படையில் கீழ்கண்ட தீர்மானங்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டது.

 

ஆய்வின் முடிவுகள்.

·       இந்த நவீன உலகில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சமூக அமைப்பில்  சாதி ஆழமாக வேரூன்றியிருப்பதால், தூய்மை மற்றும் கழிவுகள் அகற்றுதல் போன்றவைகள் தலித் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

·       இச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் பொறுப்பாளிகான உள்ளாட்சி அரசுகள், காவல் மற்றும் வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தாமல் மிகவும்  அலட்சியப்படுத்தி, புறக்கணித்துள்ளனர் என்பதை ஆய்வில் கண்டறியமுடிந்தது

·       தூய்மைப் பணிகளில்  95% பேர் “தலித்துகள்”, அவர்களில் 99% பேர் தலித் பெண்கள். அவர்களில் பெரும்பாலோனர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, நல உதவிகள் போன்ற எதுவுமின்றி, எந்த நேரத்திலும்  வேலை பறிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுடன் தினசரி ஊதியம் மற்றும் ஒப்பந்த முறைகளின் கீழ் சுரண்டப்படுகின்றனர்.

·       அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், மாநாடு மற்றும் சந்தை, திருவிழா, பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், கண்காட்சிகள், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடுமிடங்களில் திறந்த வெளியில் மலம் கழித்தல் மட்டுமே நடக்கிறது, இதுபோன்ற திறந்த வெளி கழிப்பிடங்களில் உள்ள மனிதக் கழிவுகளை, தூய்மைப் பணியாளர்கள் வெறுங்கைகளால் அகற்றுகின்றார்கள்.

·       கழிவுநீர் தொட்டி மரணங்கள் சமீப நாட்களில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெருமளவில் நிகழ்ந்துள்ளன. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 58 வகையான பாதுகாப்பு கருவி மற்றும் உபகரணங்கள் எதுவும் இங்கு பின்பற்றப்படவில்லை. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

·       Safai Karamchari Andolan எனும் தேசிய அமைப்பு செய்த ஆய்வு அறிக்கையின்படி, 2016 முதல் 2020 வரை தமிழ்நாட்டில் 55 பேர் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர் மற்றும் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகம்.

·       காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம், செய்யாமல் தவிர்ப்பது, உரிய பிரிவுகள் சேர்க்கப்படாதது,  முறையான விசாரணை நடத்தாமலிருப்பது, கைது செய்வதிலும் தாமதம் அல்லது தவிர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை முறையாகச் செய்வதிலும் காவல்துறையின் அலட்சியம் காரணமாக இச்சட்டம் அமுல்படுத்தப்படாமல் தேங்கி நிற்கின்றது.

·       குறிப்பாக எமது இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் நேரடியாக கள ஆய்வு செய்த 21 சம்பவங்களில் 6 சம்பவங்களில் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 வழக்குகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டமும், ஒரு வழக்கில் ஜே.ஜே.சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளஹ்டு. 9 வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 9 வழக்குகளில் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி 21 சம்பவங்களில் 4 சம்பவங்கள் அரசுப் பள்ளிகளில் அருந்ததியர் மாணவர்களை கழிவறை உள்ளிட்டவைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பானவையாகும்.

·       இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் 21 இல் 7 வழக்குகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சமாதானம் ஆகியுள்ளது.

 

பரிந்துரைகள்.

1.    மனித மலத்தை மனிதர் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை முழுமையாக நடமுறைபடுத்தி, இத்தொழிலை முற்றிலும் ஒழிக்கவேண்டும். முற்றிலும் இயந்திரமயமாக்கி தலித் அருந்ததியர் குடும்பங்கள் இத்தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

2.   மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016 ஆகிய இரண்டும் சரியாக அமுல்படுத்தப்படவேண்டும். 2013 ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 9 மாதங்களில் அதாவது 06.09.2014 க்குள் இத்தொழில் முற்றிலும் தடைசெய்து ஒழிப்பது அதிகாரிகள் பொறுப்பு என பிரிவு 17 இல் கூறப்பட்டுள்ளது.

3.   கழிவு அகற்றும் பணியில் ஈடுபடும்போது மொத்தம் 58 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், இதனை உள்ளாட்சி அல்லது முகவர் செய்துகொடுக்கவேண்டும் என்றும் இச்சட்டத்தின் விதி 4 மற்றும் 5 இல் கூறப்பட்டுள்ளது. மேலும் விதி 6 மற்றும் 7 இல் பாதுகாப்பு விதிகள் கூறப்பட்டுள்ளன. இவை எங்குமே பின்பற்றப்படுவதில்லை. இனியேனும் அரசு முழுமையாக இதில் கவனம் செலுத்தவேண்டும். 

4.   தமிழ்நாட்டில் தூய்மைப் பணி புரிவோரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென, 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது.  உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்றாற்போல் இந்நலவரியம் செயல்பாடுகள் அமையவில்லை. எனவே, நலவாரியம் முழு வேகத்துடன் செயல்படுவதற்கேற்ற வகையில் திருத்தியமைக்கப்படவேண்டும். காலமுறை உருவாக்கி, தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறை செய்லுத்தி, மேம்பாட்டினை உருவாக்கவேண்டும். மேலும், இதன் நலன் திட்டம் உள்ளிட்ட செயலாக்கத்தினை தாட்கோ எனும் துறையிடமிருந்து பிரித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்.

5.   தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையிலான தூய்மை மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகளை முற்றிலும் இயந்திரமயமாக்கி மனித மாண்பு காக்கப்படவேண்டும்.  

6.   ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுவது முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தற்போது ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்.  

7.   மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தற்போதைய காலத்திற்கேற்று வடிவமைக்கபடவேண்டும், அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடு தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் அதிகரிக்கவேண்டும்.  

8.   தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் தூய்மைப் பணியில் ஈடுபடுவதன் காரணமாக பல்வேறு வகையிலான ஒவ்வாமைக்கு ஆளாகி, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு வகையிலான உடல் நலக் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். முறையான பாதுகாப்பு, மருத்துவ வசதி, மருத்து சோதனை, மருத்துவ வசதி, மருத்துவக் காப்பீடு, நோய் தடுப்பு சிகிச்சை, ஊசி போன்றவைகளை அரசு சிறப்புத் திட்டங்கள் மூலம் செயல்படுத்திட வேண்டும்.  

9.   பிற சமூகத்திறகு இணையாக/சமமாக தலித் பழங்குடியின மக்கள் வளரவேண்டும் என்பதற்காவும், அதற்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் சிறப்பு உட்கூறு திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி தலித் பழங்குடியினருக்கு சென்றடைவதில்லை என பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, SCP/TSP திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். நிதி முழுவமையாக அவர்களின் நலனுக்கு வழங்கப்படவேண்டும்.

10.  சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாத பொறுப்பதிகாரிகள் மீது, அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

       .

தொடர்புக்கு :

9894207407, முருகப்பன், ஒருங்கிணைப்பாளர்.

x

No comments: