Saturday, September 23, 2023

அனைவருக்கும் இலவசக் கல்வி அரவணைக்கும் தாய்த் தமிழ் பள்ளி

 

அனைவருக்கும் இலவசக் கல்வி

அரவணைக்கும்  தாய்த் தமிழ் பள்ளி

மக்களுக்காக மக்களைக் கொண்டு மக்களே நடத்தும் பள்ளி

 


அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!.

          எங்களது தாய்த்தமிழ்ப் பள்ளி கடந்த 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.          2000-ஆம் ஆண்டு 21 குழந்தைகள், ஒரு ஆசிரியர், ஒரு தாயம்மாளுடன் தொடங்கப்பட்ட பள்ளியில் தற்போது ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையில் 212 மாணவர்கள், மாண்டிசோரி மழலையர் பிரிவில் 46 குழந்தைகள் என மொத்தம் 258 பேர் பயில்கின்றனர்.

          11 ஆசிரியர்கள், 3 மதிய உணவுப் பணியாளர், இரு தாயம்மாள், ஒரு காவலர் மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் இருவர் என மொத்தம் 19 பேர் பணி புரிகின்றனர்.

 இலவயக் கல்வி

    அரசின் நிதி உதவி இல்லாத நிலையிலும் பொதுமக்கள் மற்றும் தங்களைப் போன்றோரின் ஆதரவுடன் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்  கட்டணமின்றி இலவயமாக, தமிழ் வழியில் கல்வி அளித்து வருகிறோம்.                         

          அகரம் அறக்கட்டளை, சென்னை உயர்நீதி மன்ற மேற்பார்வையில் பேராட்சியர் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியர், ஆய்த சிறகுகள் குழு-மதுரை மற்றும் சில அறங்காவலர்கள், கல்வியில் அக்கறையுள்ளோர் மாதந்தோறும் இலவயக் கல்விக்கான நன்கொடை அளித்து வருகின்றனர். இதன்மூலம் ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வி செயல்பாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது.

    ஆண்டு தோறும் சீருடை, குறிப்பேடுகள் நன்கொடையாகவும், அன்பளிப்பாகவும் பெற்று அளிக்கின்றோம்.  அரசின் இலவச பாடப்புத்தங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் பாடப்புத்தகங்கள் மட்டுமே அரசிடமிருந்து கிடைக்கின்றது.

சத்தான மதிய உணவு.

          ஊட்டச் சத்துக் குறைபாடு, உணவு பற்றாகுறை போன்றவையால், வகுப்பறையில் மாணவர் ஒருவர் மயங்கி விழுந்ததையடுத்து 2007-ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் மதிய உணவும் அளித்து வருகின்றோம்.

          ஆதரவாள அன்பர்கள் பலரும் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்களின் நினைவு நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மதிய உணவு வழங்கி ஆதரவளித்து வருகின்றார்கள்.

கல்வியும் குழந்தைகளும்

          பள்ளியில் பயிலும் மிகப்பெரும்பான்மையான குழந்தைகளின் பெற்றோர்கள் தினக்கூலிகள் ஆவர். உங்களைப் போன்றோரின் உதவிகளால், பள்ளியில் இலவசக் கல்வி அளிக்கப்படவில்லை என்றால், பள்ளி அமைந்துள்ள ரோசனைப் பகுதியில்          40 முதல் 50 % மாணவர்கள் இடைநிற்றல் ஆகியிருப்பர்.

          நமது பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் இன்று பட்ட மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளனர், 7 பேர் பொறியியல் முடித்துள்ளனர். 9 பேர் செவிலியர் படிப்பு முடித்துள்ளனர். 2 பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்.

          கொரோனா பேரிடர் காலத்தில் ’’நுண் வகுப்பறைத் திட்டம்” மூலம், தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு, தடையில்லாத கற்றல் கற்பித்தல் அளிக்கப்பட்டது.

          ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், அதன் வழியாக அவர்களின் குடும்ப மேம்பாட்டிற்கும் தாய்த்தமிழ்ப் பள்ளியின் இலவசக் கல்வி அடிப்படையாக உள்ளது. இந்த இலவயக் கல்வி தங்களைப் போன்றோரின் உதவிகளால் சாத்தியமானது.

          இந்த உதவிகள் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்விக் கண்களைத் திறக்கின்றது. கற்ற கல்வி, அவர்களை சமூக வெளியில் சமத்துவத்தை நோக்கி பறக்கத் தூண்டுகின்றது.

          குழந்தைகளின் சமூக சமத்துவக கனவு நிறைவேற தாய்த்தமிழ்ப் பள்ளி வழங்கும் இலவசக் கல்வியும் மதிய உணவும் தொய்வின்றித் தொடர தங்களின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

 

பள்ளி மற்றும் கல்வி வளர்ச்சிக்கான நிதியுதவி

          பள்ளி வளர்ச்சிக்கும், இலவயக் கல்வித் திட்டத்திற்கு உதவிடும் வகையில் விழுப்புரத்தில் 26.08.2023 அன்று, சிங்கப்பூர் எழுத்தாளர் பேராசிரியர் யூசுப் ரஜீத் அவர்களின், ‘’வேர்களைத் தழுவும் விழுதுகள்” எனும் தலைப்பிலான தன்வரலாற்று நூல் வெளியிடப்படுகிறது. இவர் விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் நகர மன்ற முன்னாள் தலைவர் இரா.ஜனகராஜ் அவர்கள் இவரின் மாணவராகும்.

          இந்நூலின் விற்பனைத் தொகை முழுவதும் தாய்த்தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கே அளிக்கின்றார்.  தாங்கள் வாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு புத்தகமும் பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.  தங்களால் இயன்ற புத்தங்களை அதிக எண்ணிக்கையில் பெற்றும், பள்ளி / கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  





         

No comments: