Saturday, September 23, 2023

           கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு  

மாணவர்களுக்குள் மோதல்கள் :

கலந்துரையாடல்.


17.09.2023 அன்று திண்டிவனம் தாய்தமிழ்ப் பள்ளியில்  

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும்

மனித உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்

கூட்ட அறிக்கை.

 

கடந்த மாதம் (ஆகஸ்ட், 2023) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் 4 பேர், தன்னுடன் பயின்ற தலித் மாணவரையும், அவரது தங்கையையும் வெட்டியுள்ளனர்.  தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளை இச்சம்பவம் பொதுவெளியில் அடையாளப்படுத்தியதுடன், பேசு பொருளாகவும் மாறியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களும், நிகழ்வுகளும் செய்திகளாக வரத் தொடங்கியது.

கல்வி நிலையங்களில் நிலவும் சாதியப்பாகுபாடுகளை களைவதற்குரிய பரிந்துரைகளை பெறுவதற்காக தமிழக அரசு நீதியரசர் கே.சந்துரு தலைமையில் குழு அமைத்துள்ளது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப்பாகுபாடுகள் குறித்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாள்ரகள் மற்றும் மனித உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் கடந்த 17.09.2023 அன்று திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது. 25 பேர் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் 17 பேர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.









 கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடுகள்.

  • தலித் குடியிருப்பிலிருந்து வருகின்ற குழந்தைகள் ’’இங்கிருந்து வருகின்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்” என்று முன் அனுமானத்தோடு, எதிர்மறையோடு, பாகுபாடுகளுடன் அணுகப்படுகின்றனர்.  
  • தலித் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் வராது என வெளிப்படையாகக் கூறி, +1 இல் மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவிவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால், அறிவியல் கணிதம் பயிலும் தலித் மாணவர்கள் எண்ணிக்கை மிகக் மிகக் குறைவாக இருப்பதால் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் தலித் மாணவர்கள் பங்கேற்பு, பங்களிப்பு இல்லாமல் போகின்றது.
  • அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் மிகமோசமாக உள்ளதாகவும், 6 வகுப்பு மாணவர்கள் 3- வகுப்பிற்குரிய அடைவுத் திறன்களையே பெற்றுள்ளனர் என்றும் ஏசர் அறிக்கைகள் கூறுகிறது. தற்போதைய சூழநிலையில் அரசுப் பள்ளிகளில் 80% தலித் குழந்தைகள்தான் பயில்கின்றனர். அரசு தொடக்கப் பள்ளிகளில் நிகழும் கல்வி குறைபாடுகளால், பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை தங்களுக்குத் தேவையான, விருப்பமான கல்வியை தலித் குழந்தைகள் பெற முடிவதில்லை.
  • திருட்டு வழக்குகளில் ஆள் கிடைக்காத நிலையிலும், வழக்கினை சீக்கிரம் முடித்துக்கொள்ளவும் போலீசார் தலித்துகள், குறவர்கள், இருளர் போன்றோர்களை கைது செய்து, சித்திரவதை செய்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சிறையில் அடைக்கின்றனர். பொய் வழக்கினை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலோ, ஆள் கிடைக்கவில்லை என்றாலோ குழந்தைகளையும் பொய் வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று மிரட்டி அச்சுறுத்தும் நிலையும் உள்ளது.  
  • நல்ல உடை உடுத்திச் சென்றால், இரு சக்கர வாகனத்தில் சென்றால், நன்றாகப் படித்தால்  “உங்களுக்கெல்லாம் இதெல்லாம் வேணுமா” என தலித் அல்லாத இளைஞர்களால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
  • தலித் மாணவர்கள் ஒரு உணவுக் கடையில் நூடுல்ஸ் சாப்பிட்டதற்காக ’’நீயெல்லாம் இங்க வந்து நூடுல்ஸ்.. சாப்பிட அளவுக்கு திமிர் ஏறிடுச்சா” என்று தாக்கப்படுகின்றனர்.
  • வகுப்பறை தேவைகளுக்கான வருகைப் பதிவேடு, சாக்பீஸ், அலுவலகம் மற்றும் பிற வகுப்பறைகளுக்கு சென்று வருவது போன்ற பணிகளில் ஆசிரியர்கள் தன் சாதியைச் சேர்ந்த மாணவர்களையே ஈடுபடுத்துகின்றனர்.
  • இந்த ஆசிரியருக்கு இந்த மாணவர்கள் என்ற மனநிலையில் மாணவர்களுக்குள் குழு குழுவாக உருவாகியுள்ளனர்.
  • விளையாட்டிலும் மாணவர்கள் அனைவரும் இணைந்து விளையாடமல் குழு குழுவாக (பெரும் சாதி அடிப்படையிலும் அல்லது தலித், தலித் அல்லாதவர்கள் என்ற ரீதியிலும் பிரிந்து) விளையாடுகின்றனர்.
  • பள்ளிகளில் அளவில் நடைபெறும் கல்வி, கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்பதிலும் பெரும்பாலும் முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல், சாதி ரீதியிலான குழு அடிப்படையிலையே பங்கேற்பு நிகழ்கின்றது.
  • பள்ளிகளில் காலை வழிபாட்டில் இந்து மத சடங்குகளை அடிப்படையாகக் கொண்டும், இந்துக் கடவுள்களைக் கொண்டு செய்யப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக வகுப்பறைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறு கடவுகள் சிலை, கடவுள் படங்களை வைத்து சிறிய அளவில் பூஜை செய்வது, கற்பூரம் ஏற்றுவது உட்பட செய்யப்படுகிறது. இதுபோன்ற சடங்குகளை ஆசிரியர்களே மாணவர்களைக் கொண்டு செய்கின்றனர். அதுவும் தலித் அல்லாத மாணவர்களைக் கொண்டு கடவுள் சிலை / படத்திற்கான வழிபாட்டு சடங்குகளை செய்து, தலித் மாணவர்களை புறக்கணித்து ஒதுக்கி வைக்கின்றனர்.
  • மாட்டுக் கறி சாப்பிடுகின்றன்றவர்கள் என தலித் மாணவர்களை அடையாளப்படுத்துவதும் நிகழ்கின்றது.
  • பள்ளி வளர்ச்சிக்காக கிராமத்தில் உள்ள அக்கறையான குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளையில், அக்குடும்பத்தினர் பள்ளியில் உள்ள ஆசிரியரை இணைக்க முயலும்போது, ‘’அவர் எஸ்.சி ஆசிரியர், அவரை சேர்க்ககூடாது” என ஊரில் உள்ள பிறர் அக்குடும்பத்தினருக்கு நெருக்கடி அளிக்கின்றனர்.
  • ’’ஊர்ப் பசங்க’’ ‘’காலனிப் பசங்க’’ என்று அழைக்கப்படுகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.
  • ”அந்தப் பசங்க சரியாகவே படிக்கமாட்டாங்க” என தலித் மாணவர்களுக்கு எதிரான மனப்பான்மை பெரும்பாலான ஆசிரியர்களிடம் உள்ளது.
  • ஆசிரியர்களின் சாப்பாட்டுப் பாத்திரங்கள், தட்டுகளை கழுவு தலித் மாணவர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • பள்ளியில் 1 அல்லது 2 ஆம் வகுப்பு குழந்தை வகுப்பறையில் சிறுநீர் / மலம் கழித்துவிட்டால், அக்குழந்தையின் அண்ணன், அக்காள் யாரேனும் அப்பள்ளியில் பயின்றால் அவர்களை அழைத்து சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். இல்லையென்றால், பழங்குடியினர் மாணவர்களை அழைக்கின்றனர். அவர்களும் இல்லையென்றால் தலித் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்கின்றனர்.
  • அம்பேத்கர் படத்தை டிசர்ட் மற்றும் செல்பேசி முகப்புப் படமாக வைத்திருக்கும் தலித் மாணவர்களை வேண்டுமென்றே கிண்டல் செய்து சாதி இழிவு செய்யப்படுகின்றனர்.
  • சமூக அரசியல் செயல்பாடுகளில் நிலவும் வெற்றிடம்.
  • ஜனநாயக சக்திகளின் பலவீனம்.
  • அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் நிலவும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான கண்ணோட்டம்.
  • மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு போதாமை
  • கல்வியில் நிலவும் ஜனநாயகமற்றத் தன்மை
  • அரசு பள்ளி, கல்லூரி மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளி & கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களிடையே மேலோங்கியிருக்கும் சாதிய மனப்பான்மையும், அதனையொட்டிய செயல்பாடுகளும், மாணவர்களுக்கிடையிலான சாதிய மோதலுக்கான  காரணங்களில் ஒன்றாக உள்ளது. 
  • விழுப்புரம் மாவட்டத்தில் சில பகுதிகளில், பா.ம.கட்சியினர், வன்னியர் சமூக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, பள்ளிகளில் தங்கள் சமூக (வன்னியர்) ஆசிரியர்களிடம் நெருக்கமாக பழகவேண்டும், தங்கள் சமூக மாணவர்கள் ஒன்றாக ஒரே குழுவாக இயங்கவேண்டும் என்று திண்ணைப் பிரச்சாரம் போன்று செய்து வருகின்றனர்.
  • மேல் நிலைப் பள்ளிகளில் நடுநிலை, உயர் நிலை, மேல் நிலை வகுப்பு ஆசிரியர்கள் என்ற ரீதியிலான குழு மனப்பான்மையோடு முன்பு ஆசிரியர்கள் விளங்கினர். ஆனால், இப்போது இந்த வகுப்பு ரீதியிலான மனநிலை மாறி, சாதி அடிப்படையிலான, சாதி ரீதியிலான குழு மனப்பான்மையோடு செயல்படுகின்றனர்.
  • ஒருமுறை ஏதேனும் தவறிழைத்துவிட்டால் அவர்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாகப் பார்க்கும் மனபான்மை.
  • பெற்றோர் புறக்கணிப்பதால்தான் சிறார்கள் சில சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்ற கருத்தினை சிலர் முனை வைக்கின்றனர். குழந்தைகளுடன் தொடர்புடைய பெற்றோர் உள்ளிட்ட பலர் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து இடைநின்ற பல மாணவர்கள் திருட்டு வழக்குகளில் பிடிபட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லங்களும் அவர்களை நல்வழிப்படுத்தும் மையங்களாக மாற வேண்டும்.
  • பாடத்திட்டங்களில் உள்ள புராண, இதிகாசங்கள், கடவுள் தொடர்பானவைளை ஒவ்வொருவரும் தங்கள் சாதியோடும், சடங்குகளோடும் இணைத்துக்கொள்கின்றனர். இவைகள் பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக, வளர்ப்பதாக உள்ளது.
  • பெரும்பாலான ஆசிரியர்கள் சாதிச் சங்கங்களில் நெருக்கான தொடர்புகளில் உள்ளனர். சாதி சங்கங்களில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக சாதிப் பெருமை குறித்த பதிவுகளை தொடர்ந்து பரப்பிக்கொண்டு சாதியை வளர்த்தெடுக்கின்றனர். சாதியை சார்ந்தார்களுக்காக கல்வி, அரசு வேலை, வங்கிக் கடன், தொழில், வணிகம், திருமணம் தொடர்பு போன்றவைகளில் தொடர்ந்து செயல்படுவதன் காரணமாக முழுமையான சாதியவாதியாக மாறி,  பள்ளியிலும் சாதியக் கண்ணோட்டத்துடன் செயல்படுகின்றனர். ஆசிரியர்களிடத்தில் நிலவும் இந்த சாதிய மன்பான்மையும் பள்ளி, கல்லூரிகளில் பாகுபாடுகள் நிலவ அதிக காரணமாக  உள்ளது.
  • தலித் அல்லாத ஆசிரியர்கள் செய்யும் தவறு மற்றும் பணியில் நிகழும் குறைபாடுகளில் இருந்து அவர்களை அவர்களது சாதியே காப்பாற்றுகிறது. ஆனால் தலித் ஆசிரியர்கள் எப்போதும் ஒரு குற்ற உணர்வும், தாழ்வுணர்ச்சியுடனும் தயங்கி தயங்கியே பணியாற்றும் நிலை உள்ளது. மாணவர்களும் இதே நிலைதான் பள்ளிகளில் நிலவுகிறது.
  • ஆசிரியர் சங்கங்கள் நாங்குநேரி போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பேசாமல் அமைதியாக கடந்து செல்வதாலும் பாகுபாடுகள் தொடர்ந்து நிலவ காரணமாக உள்ளது.
  • ஆசிரியர்கள் சங்கங்களே பெரும்பாலும் தலித் அல்லாத அனைத்து ஆசிரியர்கள் இணைந்துள்ள சங்கம், தலித் ஆசிரியர்கள் மட்டுமே உள்ள சங்கம் என்ற நிலையும் உள்ளது.
  • இட ஒதுக்கீடு குறித்த தவறான கருத்துகள் உருவாக்கப்படுகிறது.  அதுவும் தலித் மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை போன்றவை உள்ளதாக திட்டமிட்டு  தவறான கருத்துகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்படுகிறது.
  • தற்போதைய சூழலில் ஒவ்வொரு சாதியும் தங்களுக்கான தனிக் கடவுள், கோவில் வழிபாடு போன்றவைகளை செய்துவருகின்றார்கள். இக்கோவில் திருவிழா போன்ற நிகழ்வுகளிலும், திருமணம் உள்ளிட்ட பிற குடும்ப நிகழ்வுகளிலும் சாதி சங்கம் மற்றும் சாதிய அடையாளங்களை முன்னிறுத்தும் பதாகைகள் வைக்கப்படுவது பரவலாக அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற பதாகைகள் பள்ளி செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட சிறு குழந்தைகளுடன் படங்கள் அச்சிடப்படுவதன் மூலம் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே சாதி மனநிலையுடன் வளர்க்கப்படுகின்றனர். இதனையும் உரிய வழிமுறைகளை உருவாக்கி, தடுத்து நிறுத்திட வேண்டும்.
  • கல்லூரிகளில் பிற சாதியைச் சேர்ந்த பேராசிரியர்கள், தலித் பேராசிரியர்கள் மற்றும் கெளரவ விரிவுரையாளர்களிடம் பேசவே தயங்குகின்றார்கள்.
  • சாதிய வேறுபாடு என்றழைக்காமல், சாதியப் பாகுபாடு என்றே அழைக்கப்படவேண்டும்.
  • ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளோடு தொடர்புடைய அனைவருக்கும் குழந்தை நேயப் பார்வை குறித்த அறிதல் இருக்கவேண்டும்.
  • Madras Rule of Education 1921 படி பள்ளிகளில் ஆண்டுதோறும் சமூகத் தணிக்கை போன்று பள்ளித் தணிக்கை நடைபெற்றுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர் பள்ளியின் கல்வித் தரத்தை ஆய்வு செய்தல் போன்றவைகள் ஒரு கட்டம் வரை தமிழகத்தில் நடைபெற்றது. இவை மீண்டும் தொடர வேண்டும்.
  • தற்போது 7 –ஆம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறை உள்ளது. அடுத்த வகுப்புகளில் பொதுத் தேர்வு என்பது பெரும் சுமையாகவும், மனச்சோர்வையும் மாணவர்களுக்கு அளிக்கின்றது. அதனால், 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கு இம்மதிப்பெண்களை கணக்கில்கொள்ளவேண்டும்.
  • ஆசிரியர் பணி நியமனத்தின்போது அவர்களின் சமத்துவ, ஜனநாயக பண்புகள் மற்றும் மனப்பான்மை ஆகியவை குறித்தும் அறிந்திடவேண்டும்.  சாதி மனநிலையுடன் செயல்பட மாட்டேன் மற்றும் சமத்துவம், ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற வகையில் பணியாற்றமாட்டேன் என்பது போன்ற உறுதிமொழி படிவத்தில் பணி நியமனத்தின்போது கையொப்பம் பெறலாம்.
  • High Censitivity Area பகுதிகளை அடையாளம் காணவேண்டும். அப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களை உரிய விழிப்புணர்வு பயிற்சிகளை அளிக்கவேண்டும். பள்ளியோடு மட்டும் இல்லாமல், கல்லூரிகளுக்கும் இதனை விரிவு படுத்திடவேண்டும்.
  • சமத்துவ சிந்தனைகளை மாணவர்களுக்கு உருவாக்குகின்ற வகையில் ஆசிரியர்கள் தங்களின் பகுத்தறியும் சிந்தனை மற்றும் கண்ணோட்டங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
  • அனைத்து மாணவர்களையும் இணைத்து கூடுதல் கூட்டுச் செயல்பாடுகள், பொறுப்புகளை வழங்கவேண்டும்.
  • மாணவர்கள் உரையாடுவதற்கான வாய்ப்பு/வெளி இருக்கவேண்டும். எதனையும் தயக்கமின்றி கூறவும், பேசவும், ஏற்ற சூழல் கல்வி நிறுவனங்களில் வேண்டும்.  எவரிடமும் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் வெளிப்படையாக கருத்துகளை கூறவும், அது தொடர்பாக உரையாடும் வாய்ப்பும் சூழலும் இருக்கவேண்டும்.
  • கல்விச் செயல்பாடுகளை சரியான நேரத்தில் செய்வது மற்றும் அக்கறையோடு இருப்பதற்கு மாணவர்களைப் பழக்கப்படுத்தவேண்டும்.  இவற்றில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் தவறுகளைச் சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதது, அதற்கான பக்குவத்தை வளர்ப்பதுமாக கல்வித் திட்டமும் கல்விச் சூழலும் இருக்கவேண்டும்.
  • சமவத்துவம் மற்றும் சமூக நீதி கருத்துக்கங்கள் அடங்கிய பாடத்திட்டங்கள், கற்பிக்கும் சூழல், பள்ளி வகுப்பறை இருக்கவேண்டும்.
  • வன்முறை, தாக்குதல், எதிர்மறை எண்ணம், பாகுபாடு, ஒதுக்குதல், ஒருவருக்கு எதிராகச் செயல்படுவது போன்றவைகள் தவறு என்பது அனைத்து நிலைகளிலும் குழந்தைகளுக்கு உணர்த்தப்படவேண்டும். இதற்கு அரசும் சமூகமும் முழுமையாகப் பொறுப்பேற்றுச் செயல்படவேண்டும்.
  • 2000 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இளம் சிறார் நீதிச் சட்டத்தில் (Juvenile Justice Act), 2006 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை சட்டத்துக்கு முரண்பட்டவர்களாகத்தான் பார்க்க வேண்டும். அதனடிப்படையில்தான் குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவர்களின் மனநலம், உடல்நலம், கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவர்களை மாற்றுவதற்கான செயல்பாடுகள் எதுவுமில்லை.
  • கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப்பாகுபாடுகளை களைவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் கே.சந்துரு ஆணையம், அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசி கருத்துக்களை அறியவேண்டும்.
  • இதுபோன்ற சாதிய பாகுபாடு மற்றும் மோதல்களை களைய குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொது சமூகத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. எல்லோரும் இணைந்தே செயல்படமுடியும்.
  • குழந்தைகள் தன்னை அடையாளப்படுத்தி முன்னிலைப் படுத்திக்கொள்ளவும், தனக்கான அடையாளத்திற்காகவும் முன் மாதிரியை (Role Model – Hero) மனத்திற்குள் தேடுவார்கள். அப்போது மாணவர்களுக்கு சரியானவர்களை Role Model –ஆக முன்னிறுத்த வேண்டும்.
  • மாணவர்கள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை அதன் கருத்துகளையும், பொருளையும் புரிந்துகொள்ளாமல் வெறும் மனப்பாடம் மட்டும் செய்துகொள்வதால், அப்புரிதல்களை நடமுறையோடு இணைத்துப் பார்த்து சிந்திக்கவோ, செயல்படவோ முடியாமல் போகிறது.
  • இவைகளை புரிந்துகொள்ளும் வகையில் life Skill, Empathy ஆகியவை குறித்தப் புரிதல்களை உருவாக்கிடவேண்டும்.
  • சாதி மறுப்பு மற்றும் சமத்துவம் குறித்த புரிதல்களை உருவாக்கவும், உணரவும் சமத்துவத்திற்கான விழாக்கள், நிகழ்வுகள் நடத்திடலாம்.
  • பாடத்திட்டங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நிலையில் உள்ளதை மாற்றவேண்டும். மாணவர்களுக்கு சமூகத்தை பற்றிய புரிதல்களை உருவாக்கும் வகையில் அமைக்கப்படவேண்டும்.
  • ”அந்தப் பசங்க சரியாகவே படிக்கமாட்டாங்க” என தலித் மாணவர்களுக்கு எதிரான மனப்பான்மை ஆசிரியர்களிடமும், பொதுப் புத்தியிலும் உள்ளது. தலித் மாணவர்கள் மீதான இந்த மனநிலை மாறவேண்டும்.
  • சமூக நீதி பேசுகின்ற ஆசிரியர்கள் அதிகம் வேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதியச் சிக்கல்களைக் களைய பொதுச் சமூகம் தலையிட வேண்டும். பேசவேண்டும் என வெளிப்படையான அழைப்பினை நாம் கொடுக்கவேண்டும்.  ஜனநாயக அமைப்புகளுடன் பள்ளிகளில் இணைந்து செயல்படவேண்டும்.
  • அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கயிறு கட்டுவதை நிறுத்தவேண்டும். இதனத் தடுப்பதற்கான உரிய அறிவிப்பினை அரசு வெளியிட வேண்டும். சரியாக பின்பற்றப்படுவதை உறுதியும் செய்யவேண்டும்.
  • சாதி மற்றும் சாதி சங்கங்களின் அடையாளங்களையோ, வண்ணங்களையோ வெளிப்படுத்துகின்ற எந்தவித அடையாளச் சின்னம் மற்றும் வண்ணங்களை கல்வி நிறுவனங்களுக்குள் வாகனங்களில், உடையில், உடலில் ஒட்டவோ, எழுதவக் கூடாது என்பதை நடைமுறைபடுத்தவேண்டும்.  
  • இட ஒதுக்கீடு குறித்த தவறான கருத்துகள்,  அதுவும் தலித் மாணவர்களுக்கு எதிராக திட்டமிட்டு பரப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையான இடஒதுக்கீடு குறித்த தவறான புரிதலை நீக்கி, அதன் நியாயத்தை மாணவர்கள் புரிந்து, உணர்ந்து ஆதரவளிக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்துகள், நிகழ்வுகள், பயிற்சிகள், கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், பாடத்திட்டத்திலும் இணைக்கப்படவேண்டும்.
  • இடஒதுக்கீடு, சமூக நீதி கருத்துகள் சிந்தனைகள் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படவேண்டும். கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு உருவாக்கலாம்.
  • பொது சமூகத்தில் நிலவும் சாதியக் கூறுகளுடன்தான் பள்ளிக்குள் வருகின்றார்கள். எனவே, சமூகத்திலும் சாதி மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளை, சிந்தனைகளை உருவாக்கவேண்டும். அந்தப் புரிதலுடன் மாணவர்கள் பள்ளிக்குள் வரும் சூழலை உருவாக்கவேண்டும்.
  • சமீப காலமாக பெரும்பாலான ஆசிரியர்களே, மாணவர்கள் சாதி ரீதியாக ஒருங்கிணைய காரணமாக உள்ளனர். எனவே, சாதிக்கு எதிராகவும், சமூக நீதிக்கு ஆதரவான கருத்துகள், சிந்தனை, கண்ணோட்டம், புரிதல், பார்வை ஆசிரியருக்கு மிக மிக அவசியமான அடிப்படையான ஒன்றாக உள்ளது. எனவே, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் (B.Ed..) பாடத்திட்டங்களில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சிக்கான படிப்புக் காலத்தினை அதிகரித்து,  சமூகத்தைப் பற்றிய முழு புரிதல்களுடன் குழு விவாதங்களை நடத்தி, சமூக அக்கறையுள்ள ஆசிரியர்களாக உருவாக்கவேண்டும்.
  • பணி நியமனங்களில் ஆசிரியர்களின் மனப்பான்மை குறித்து அறிந்திடவேண்டும்.
  • முன்பெல்லாம் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ சண்டை போட்டுக்கொண்டாலும், மோதிக் கொண்டாலும் தொடர்புடைய இருவருக்குள் மட்டுமே நிகழும். பிறர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்வர். ஆனால்,, தற்போது குழு குழுவாக, கும்பல் கும்பலாக சண்டையிடுகின்றனர். தாக்கிக்கொள்கின்றனர். தாக்குகின்றனர். மேலோங்கி வரும் இந்தக் கும்பல் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தவேண்டும்.
  • பெரியவர்களைவிட சிறுவயதில், மனதளவிலும் Les Corrupt  ஆக இருப்பார்கள். எனவே, சிறுவயதிலேயே சாதியத்திற்கு எதிராகவும், சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகத்திற்கு ஆதரவான மனநிலையினை வளர்த்தெடுக்க முடியும்.
  • சாதியை வெளிப்படையாகச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் வெட்கப்பட்ட சூழல் நிலவிய தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் சாதியை பெருமையாகக் கூறிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
  • கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகள் என நாம் அரசுப் பள்ளிகள் குறித்தே பேசிக்கொண்டிருக்கின்றோம். தனியார் பள்ளிகளில் சாதியப்பாகுபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் அங்கு வளரவிட மாட்டார்கள். வெளியில் தெரிய விடமாட்டார்கள். காரணம் தனியார் பள்ளிகளில் கல்வி என்பது வியாபாரமாக, வணிகமாக, பணமாக உள்ளது. சாதியம் வெளியில் தெரிந்தால் வணிகம் பாதிக்கும், வருமானம் இருக்காது.
  • பள்ளி உள்ளிட்ட அனைத்துவகை கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்கக்கூடாது.
x

இதன் விளைவாக

·       பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வது, அதற்கான தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்வது போன்றவைகளில் எல்லாம் தலித் மாணவர்கள். குறிப்பாக அருந்ததியர் மாணவ / மாணவிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் மட்டும் 8 நடந்துள்ளது. இவை போன்றவைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

·       வறுமை, அறியாமை, ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக விடுதியில் உள்ள தலித் மாணவர்களிடம் கல்வி முன்னேற்றம் நிகழ்வதில்லை.

 

பாகுபாடுகளுக்கான காரணங்கள்.

 

பரிந்துரைகள்.

·       சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். (கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னிரிமை அளிக்கலாம்)

·       ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். பகுதி நேர ஆசிரியர்கள், கெளர விரிவுரையாளர்கள் பணி நிரந்தரமாக்கப்படவேண்டும்.

·       பகுத்தறிவுக் கருத்துகளை பரவலாக்கி ஊக்குவிக்கவேண்டும்.

·       தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே தீண்டாமை மற்றும் பாகுபாடுகள் நிலவுவது தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. சாதி, மதம், பாலினம், பிறப்பு, நிறம், உடல், குடியிருப்பு, பொருளாராதாரம் உள்ளிட்ட எந்தவொரு காரணத்தினாலும் எவரிடமும் பாகுபாடுகள் காட்டக்கூடாது என பல்வேறு சட்டங்கள் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள்       15, 15(4), 21, 21(A), 39(F), 46 மற்றும் ஐ.நாவின் குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கை போன்றவையாகும்.

எனவே சாதி, மதம் மற்றும் பாலின ரீதியிலான பாகுபாடுகள் இல்லாத கல்வி நிலையங்கள் உருவாக்கப்படவேண்டும். இதுபோன்றவொரு சமத்துவக் கல்வியை கற்பித்திடும் வகையில் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அதற்குரிய வகையில் பாடத்திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

·       பாடத்திட்டங்களில் புராண, இதிகாசங்கள், கடவுள் தொடர்பானவைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவைகள் பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக, வளர்ப்பதாக உள்ளது. சமகால வரலாறுகளும், தலைவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற வேண்டும். குறிப்பாக திராவிட, அம்பேத்கர் இயக்கத் தலைவர்களின் வரலாறுகள் பாடப் புத்தகங்களில் இடம்பெறவேண்டும். அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாடங்கள் இணைக்கப்படவேண்டும்.

·       பள்ளிகளில் விளையாட்டிற்கு கூடுதல் கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படவேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறன் மேம்பட அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களின் திறன்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். குறிப்பாக அனைத்துவகையான உள் கட்டமைப்பு வசதிகளுடன் வட்டத் தலைநகரங்களின் விளையாட்டுத் திடல் மற்றும் உள்ளரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவேண்டும். வட்டந்தோறும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

இதன் மூலமாக இணைந்து பங்கேற்பது, கூட்டுச் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவைகள் உருவாகவும், வளரவும் வாய்ப்புள்ளது. இவை பாகுபாடுகளை ஒழிக்கும் .

·       பள்ளிகளில் வகுப்பறை, மைதானம், கழிவறை போன்றவைகளை தூய்மை செய்யும் பணிகளில் தலித் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.

·       அங்கன்வாடி மையங்களில் தலித் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பது நிறுத்தப்படவேண்டும்.

·       மேற்கு மண்டலங்களில் குறிப்பாக அருந்ததியர் குடும்பங்களில் நிலவும் வறுமை, அறியாமை போன்ற காரணங்களால் அருந்ததியர் குடும்ப குழந்தைகளில் இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் நிகழ்கின்றன.

o   பாடத்திட்டங்களிலும், பள்ளிகளிலும் இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை இருக்கவேண்டும்.

o   இப்பகுதிகளில் இதுகுறித்து பள்ளிகளில் அதிகம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தனித் திட்டம் வகுக்கப்படவேண்டும்.

·       ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலும் (வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால்) கட்டிடம், ஆய்வகம், கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இருப்பதில்லை.

·       கல்வி கற்பிக்கும் தற்போதையில் கரும்பலகைத் திட்டத்திற்கு மாற்று கண்டுபிடிக்கவேண்டும். குறிப்பாக எளிதில் புரியும் வகையில், சிந்தனையை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையிலான கலைவடிவங்களில் கற்பித்தல் பணி நடைபெற வேண்டும்.

o   ஆசிரியர்களின் துன்புறுத்தல் கூடாது.

o   வீட்டுப்பாடங்கள் குறைக்கப்படவேண்டும்.

·       போதிய பேருந்து வசதிகள் இல்லாமலும் நிறைய தலித் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் நிகழ்கிறது. பேருந்து வசதிகள் உருவாக்கப்படவேண்டும்.

o   பள்ளிகளில் விளையாட்டுப் பொருட்களும் இல்லை. பாடவேளையும் இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களும் இல்லை.

o   இருக்கும் விளையாட்டு ஆசிரியர்களும் போதிய அனுபவம் இன்றி அறிவியல் போன்ற பாடங்களை எடுப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

o   விளையாட்டுப் பொருகள், விளையாட்டு ஆசிரியர்களுடன் விளையாட்டுப் பாடவேளைகள் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

·       ஆசிரியர்களுக்கான வேலைகளை (பேக் தூக்குவது, சாப்பாடு எடுத்து வருவது, தட்டு மற்றும் உணவு பாத்திரங்களை கழுவுவது போன்றவைகள்)  தலித் குழந்தைகள் மீது திணிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.

·       உதவித் தொகை பெறும் தலித் குழந்தைகள் பிற குழந்தைகளுக்கு முன்னாள் அவமானம் / இழிவு படுத்தப்பபடுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

·       கல்லூரி உள்ளிட்ட பட்டப் படிப்புகள் முடித்தபிறகு, தலித் இளைஞர்களுக்கு பெரும்பாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரிகள் நிகழும் சாதிய பாகுபாடுகள் காரணமாக திறன்கள் அறிவது / வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால், படிக்கும் காலத்திலேயே தலித் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்கள் அளிக்கப்படவேண்டும், வேலைவாய்ப்புகள் குறித்து தகவல்களை அளிக்க்கவேண்டும்.

·       தலித் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதியப் பாகுபாடு மற்றும் வன்கொடுமைகளில் இருந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும்.

·       பள்ளி, கல்லூரி செல்லும் தலித் மாணவர்களுக்கு வழியில் உள்ள பிற ஊர்களிலிருந்து நிகழும் ஆபத்துகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

·       உயர்கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் எடுக்கும் பாடம் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து அறிமுகம் வேண்டும்.

·       கற்றல் திறனை உருவாக்காத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை, குறைந்தபட்சம் விசாரணையாவது மேற்கொள்ளவேண்டும்.

·       பல்வேறு தடைகளை மீறி கல்வி பயிலும் தலித் பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக நலத்திட்ட உதவிகள் உருவாக்கபடவேண்டும்.

·       மேற்கு மண்டலத்தில் அருந்ததியர்கள் அதிகமாக உள்ளதால், கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையின்போது, அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

·       அரசு அளிக்கும் கல்வி உதவிப் பொருட்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி போன்றவை தரமானதாக இருப்பதில்லை. குறிப்பாக சீருடை, செருப்புகள் கொஞ்சம் மாணவர்களுக்கான அளவில் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் செல்வு செய்து அவை மாணவர்கள் பயன்படுத்த முடியாத  நிலை தவிர்க்கப்படவேண்டும்.

·       மனித கழிவு அகற்றுதல், பாதாளச் சாக்கடை தூய்மை செய்தல் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் பெருமளவில், பெற்றோர்களைத் தொடர்ந்து அதே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை அரசு முற்றிலும் கண்காணித்து, குலத்தொழில் போன்று நிகழ்வும் இதுபோன்றவைகளை தடுத்து நிறுத்தவேண்டும்.

 தொடர்புக்கு :

பிரபா கல்விமணி 9442622970.

முருகப்பன் 9894207407

------------------------------------

No comments: