Thursday, September 21, 2023

பள்ளிகளில் சாதியப் பாகுபாடு

பள்ளிகளில் சாதியப் பாகுபாடு

 (17.09.2023 அன்று தாய்த்தமிழ்ப் பள்ளியில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அளிக்கப்பட்ட அறிக்கை)

’’எல்லோரும் சமம்தானே டீச்சர்”

(ஜூன், 2022 தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி)

 “நீ.. எனக்கு சமமா” - (ஆகஸ்ட் 2023, திநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி)

 

  • 01.09.23, தில்லி ஐ.டி.ஐ-யில் தலித் மாணவர் அணில்குமா தற்கொலை.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், இரு மாணவர்கள் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்பதைத் ஆசிரியரிடம் தெரிவித்த வகுப்புத் தலைவரான மாணவரின் குடிநீர் புட்டியில் பூச்சிக்கொல்லியைக் கலந்துள்ளனர்.
  • திருச்சியில் ஆடு திருடிய கும்பலால் காவல்துறை சிறப்பு ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (2021)
  • தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் 2,304 குழந்தைகள் 2019 ஆம் ஆண்டு 2,686 பேரும் 2020 ஆம் ஆண்டு 3,394 பேரும் குற்றச் செயல்ல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 2020 ஆம் ஆண்டு 104 சிறார்கள் கொலை மற்றும் 61 பேர் கொலை முயற்சியிலும்  ஈடுபட்டவர்கள்
  • தமிழக அளவில் 2016-ம் ஆண்டில் 1,603 கொலைகளில் 48 கொலைகுற்றங்கள் அதாவது 3 % மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து 2020-ல் பதிவாகியுள்ள 1,661 கொலை வழக்குகளில் 104-இல் அதாவது 6.3 % சம்பவங்களில் சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்து. 2016-ல் 3 சதவீதமாக இருந்தது படிப்படியாக 2017-ல் 3.4%, 2018-ல் 4.8%, 2019-ல் ஆண்டில் 5.3%, 2021-ல் ஆண்டில் 6.1% என அதிகரித்துள்ளது.
  • இந்தியச் சமூகம் ஒரு சாதியச் சமூகமாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து வடிவங்களிலும் குழந்தைகள் மிகவும் நுணுக்கமான வகையில் பாதிக்கப்பிற்கு ஆளாகியே வருகின்றனர். சில குழந்தைகள் அந்தப் பாதிப்புகளை உணர்ந்து பிரச்சனையாக அணுகி தீர்வு காண முயல்வார்கள். பெரும்பாலான குழந்தைகள் அவைகள் தனக்கான பாதிப்புகள், பிரச்சனைகள் என உணராமலே வளர்வார்கள். இதுபோன்ற இரண்டு வகையான குழந்தைகளின் பிரச்சனைகளை பெரியவர்களாகிய நாம் உணர்வது மிகவும் சவாலான ஒன்று.
  • தலித் குடியிருப்பிலிருந்து வருகின்ற குழந்தைகள் எனத் தெரிந்தாலே ’இங்கிருந்து வருகின்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு’ பொதுச் சமூகம் அக்குழந்தைகளை அணுகுகின்ற விதம் வேறுபாடானதாக இருக்கும்.
  • இன்று அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் 80% தலித் குழந்தைகள்தான். அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் மிகமோசமாக உள்ளது என்பதற்காக ஏசர் அறிக்கைகள் கூறுகிறது. இப்படி பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை தங்களுக்குத் தேவையான, விருப்பமான கல்வியை தலித் குழந்தைகள் பெற முடிவதில்லை.
  • தலித்துகள், குறவர்கள், இருளர் குழந்தைகள் என்பதற்காகவே போலீசார் போடும் பொய் வழக்குகளில் பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம் உள்ளனர்.
  • நல்ல உடை உடுத்திச் சென்றால், இரு சக்கர வாகனத்தில் சென்றால், நன்றாகப் படித்தால் கூட “உங்களுக்கெல்லாம் இதெல்லாம் வேணுமா” என தலித் அல்லாத இளைஞர்களால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
  • கடலூர் மாவட்டத்தில் தலித் மாணவர்கள் ஒரு உணவுக் கடையில் நூடுல்ஸ் சாப்பிட்டதற்காக ’’நீயெல்லாம் இங்க வந்து நூடுல்ஸ்.. சாப்பிட அளவுக்கு திமிர் ஏறிடுச்சா” என்று தாக்கியுள்ளனர்.
  • கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு சூழல்களில் உணவு, உடை, குடியிருப்பு, கல்வி போன்ற அனைத்து நிலையிலும் தலித், பழங்குடியினர் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
  • கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊட்டச் சத்து குறைபாடுகளால் அதிகம் தலித், பழங்குடியினர் குழந்தைகள் பாதிக்கப்பட்டதும், நீதிமன்றமே தலையிட்டு உலர்பொருட்களாக உணவுப்பொருட்களை வழங்கவேண்டும் என்று உத்திரவிட்டது.  இந்திய அளவிலான புள்ளிவிவரம் ஒன்று தலித் குழந்தைகளின் நிலையினை வெளிப்படுத்துவாக உள்ளது. இது மத்திய அரசின் புள்ளிவிவரம்தான். பிறக்கும் 1000 குழந்தைகளில் 1 வயதுக்குள் இறப்பது தலித்துகளில் 83, தலித் அல்லாதோரில் 61. இதுவே 5 வயதுக்குள் தலிதுகளில் 39, தலித் அல்லாதோரில் 22 குழந்தைகள் இறந்துபோகின்றன. தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக உள்ளது. இதுவே தலித் அல்லாதோரில் 49% உள்ளது.


பரிந்துரை

  • கல்விச் செயல்பாடுகளை சரியான நேரத்தில் செய்வதற்கும், அக்கறையோடு இருப்பதற்கும் மாணவர்களைப் பழக்கப்படுத்துவதும், இவற்றில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் தவறுகளைச் சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதது, அதற்கான பக்குவத்தை வளர்ப்பதுமாக கல்வித் திட்டம் இருக்கவேண்டும்.
  • வன்முறை தவறு என்பது அனைத்து நிலைகளிலும் குழந்தைகளுக்கு உணர்த்தப்படவேண்டும். இதற்கு அரசும் சமூகமும் முழுமையாகப் பொறுப்பேற்றுச் செயல்படவேண்டும்.
  • 2000 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இளம் சிறார் நீதிச் சட்டத்தில் (Juvenile Justice Act), 2006 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை சட்டத்துக்கு முரண்பட்டவர்களாகத்தான் பார்க்க வேண்டும். அதனால்தான் குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவர்களின் மனநலம், உடல்நலம், கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவர்களை மாற்றுவதற்கான செயல்பாடுகள் எதுவுமில்லை. ஒருமுறை குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாகப் பார்க்கும் போக்கு உள்ளது.
  • ``பெற்றோர் புறக்கணிப்பதால்தான் சிறார் தொடர்புடைய குற்றங்கள் அதிகமாகின்றன. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து இடைநின்ற பல மாணவர்கள் திருட்டு வழக்குகளில் பிடிபட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லங்களும் அவர்களை நல்வழிப்படுத்தும் மையங்களாக மாற வேண்டும்.

·        தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே தீண்டாமை மற்றும் பாகுபாடுகள் நிலவுவது தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. சாதி, மதம், பாலினம், பிறப்பு, நிறம், உடல், குடியிருப்பு, பொருளாராதாரம் உள்ளிட்ட எந்தவொரு காரணத்தினாலும் எவரிடமும் பாகுபாடுகள் காட்டக்கூடாது என பல்வேறு சட்டங்கள் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள்       15, 15(4), 21, 21(A), 39(F), 46 மற்றும் ஐ.நாவின் குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கை போன்றவையாகும்.

எனவே சாதி, மதம் மற்றும் பாலின ரீதியிலான பாகுபாடுகள் இல்லாத கல்வி நிலையங்கள் உருவாக்கப்படவேண்டும். இதுபோன்றவொரு சமத்துவக் கல்வியை கற்பித்திடும் வகையில் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அதற்குரிய வகையில் பாடத்திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

·        தமிழகத்திலுள்ள அனைத்துவகை கல்வி நிலையங்களுக்கும், (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் அனைத்து வகை கல்லூரிகள்) உரிய அடிப்படை வசதிகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும். கட்டடங்களாக வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. ஆனால் அவை காலமுறையில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக மாணவர்கள் அமர எழுத மேசைகள், தண்ணீர் வசதி, விளக்கு, மின்விசிறி, கழிவறை, நூலகம், படிப்பறை, ஆடிட்டோரியம் மற்றும் திறன் வகைப்பறைகள் (டிஜிட்டல்) உள்ளிட்ட அனைத்தும் தரநிலையில் சிறந்ததாக அமைக்கப்படவேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள், குறிப்பாக தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதிகளுக்கும் முழுமையாக கட்டடம், அனைத்து வகையிலான அடிப்படை வசதிகள் கொண்ட முழு கட்டமைப்புடன் அமைக்கப்படவேண்டும். தரமான உணவு வழங்கப்படவேண்டும். தற்போதைய பொருளாதார நிலையினைக் கருத்தில்கொண்டு உணவு மற்றும் மாணவர்களுக்கான உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிடவேண்டும்.

இவைகளை பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான சிறப்பு துணை திட்டங்களின் கீழ் செய்யலாம். இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியினை மீண்டும் மத்திய அரசிற்கு திருப்பி அனுப்பாமல், பட்டியலின & பட்டியல் பழங்குடி மக்கள் வசிக்கின்ற பகுதியில் குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, கல்வி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவைகளை செய்யலாம்.

·        பாடத்திட்டங்களில் புராண, இதிகாசங்கள், கடவுள் தொடர்பானவைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவைகள் பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக உள்ளது. சமகால வரலாறுகளும், தலைவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற வேண்டும். குறிப்பாக திராவிட, அம்பேத்கர் இயக்கத் தலைவர்களின் வரலாறுகள் பாடப் புத்தகங்களில் இடம்பெறவேண்டும். அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாடங்கள் இணைக்கப்படவேண்டும்.

·        பள்ளிகளில் விளையாட்டிற்கு கூடுதல் கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படவேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறன் மேம்பட அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். குறிப்பாக அனைத்துவகையான உள்ள கட்டமைப்பு வசதிகளுடன் வட்டத் தலைநகரங்களின் விளையாட்டுத் திடல் மற்றும் உள்ளரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவேண்டும். வட்டந்தோறும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

இதன் மூலமாக இணைந்து பங்கேற்பது, கூட்டுச் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவைகள் உருவாகவும், வளரவும் வாய்ப்புள்ளது. இவை பாகுபாடுகளை ஒழிக்கும் .

·        பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வது, அதற்கான தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்வது போன்றவைகளில் எல்லாம் தலித் மாணவர்கள். குறிப்பாக அருந்ததியர் மாணவ / மாணவிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் மட்டும் 8 நடந்துள்ளது. இவை போன்றவைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

·        குழந்தைகள் உரிமை ஆலோசகரும், சென்னை சிறுவர் நீதி வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான கிரிஜா குமார்பாபு 8-ம் வகுப்பிலிருந்து தேர்வுகள் கட்டாயமாக்கப்படுவதால், 8-ம்வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு பலர் வெளியேறுகின்றனர். அதனால், பள்ளிகளுக்கு செல்லா குழந்தைகள் மீது தனி கவனம் தேவை. அவர்களுக்கு கல்வி அறிவு தேவை. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தவறான செயல்பாடுகளில் இறங்கிவிடுகின்றனர். அல்லது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் சிக்கிவிடுகின்றனர். இதைதவிர இந்த குழந்தைகள் போதைப்பொருளின் தாக்கத்திலும் விழுந்துவிடுகின்றனர். போதைப் பழக்கத்தின் தாக்கம் இல்லாமல் பெரும்பாலான குழந்தைகள் குற்றங்களிலோ அல்லது கொலைக் குற்றங்களிலோ ஈடுபடமாட்டார்கள். சிறார்களுக்கு போதைப் பொருட்கள் கிடைப்பதைத் தடை செய்ய வேண்டும்" என்றார்.

 

-         வே.அ.இரமேசுநாதன்,

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,

திண்டிவனம்.

17.09.2023

 

 

 

 

No comments: