Friday, May 17, 2013

ஆங்கில வழிக்கல்வி வேண்டாம்: மக்கள் கல்வி கூட்டமைப்பு கோரிக்கை


தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் கல்வி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 இந்த அமைப்பின் கூட்டம் விழுப்புரம் சாந்தி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்தோணி குரூஸ் தலைமை வகித்தார். பேராசிரியர் பிரபா.கல்விமணி, கல்வியாளர்கள் முத்துக்குமரன், முருகப்பன், தமிழ்வேங்கை, ரவிகார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 இக் கூட்டத்தில், அரசு ஆங்கில வழிப்பள்ளியை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும், கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதால், அவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் முன் கூட்டியே பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் தமிழிலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்
 பட்டது.



Thursday, May 16, 2013

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு 100 இல்லை 110 வழி - தீர்வு - கிடைக்குமா?


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மேனிலைப் பள்ளியில் கடந்த 2012 மார்ச் மாதம் 12 -ம் வகுப்பு படித்த தலித் மாணவி. சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  அதே பள்ளியின் கணித  ஆசிரியர் சங்கர்  /பெ நாராயணன் இடம் கணிதப் பாடத்திற்கு தனிப்படிப்பு சென்றுள்ளார்.  இவர் திருமணமாகி  ஒரு ஆண் குழந்தை உள்ளது.  அவரது மனைவி உமா அரசுப் பள்ளியில் பட்ட்தாரி  ஆசிரியராக உள்ளார். ஆனால், கணக்குப் பாட்த்திற்கு தனிப்பயிற்சி சென்ற மாணவியை சாந்தியை, ஆசிரியர் சங்கர், காதலிப்பதாகவும்,  திருமணம் செய்துகொள்வதாகவும் பேசி, ஆசை வார்த்தைக்கூறி கட்டாயப்படுத்தி, அவரது வீட்டில் அவரது மனைவி இல்லாதநேரத்தில்  உடலுறவுக்கு உட்படுத்தி 5 முறை கருகலைப்பு செய்துள்ளார்.   தேர்வு முடிந்து, முடிவுகள் வந்தபிறகு 04.05.2012 அன்று  மாணவி சாந்தியை,  மேல்மருவத்தூர் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.  முறையற்ற வகையில் சட்டவிரோதமாக திருமணம் செய்துகொண்ட மாணவியை மறுநாள் 05.05.2012 அன்று சங்கர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பலருக்கும் தகவல் தெரிந்து அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சசி முன்னிலையில் பஞ்சாயத்து (பேச்சுவார்த்தை) நடக்கின்றது.  அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு ஒப்பந்தப் பத்திரம் உருவாக்குகின்றார் தலைமை ஆசிரியர். பள்ளியில் மாணவியை, மைனர் குழந்தையை சட்டவிரோதமாக, சமூக விரோதமாக திருமணம் செய்த, ஓராண்டு காலமாக வீட்டில் வைத்து தொடர்ந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், சாந்தியை ‘’நன்றாக வைத்து குடும்பம் நடத்தும்படி” 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு மாணவி சாந்தியை, ஆசிரியர் சங்கருடன் (ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை உள்ள) குடும்பம் நடத்த அனுப்புகின்றார்.  
வீட்டிற்குச் சென்ற சங்கருக்கும், அவரது குழந்தை மணைவி சாந்திக்கும்  ஆசிரியையாக உள்ள மனைவி உமா மற்றும் சங்கரின் அம்மா இருவரும் கடும் வரவேற்பு அளித்துள்ளனர். அதாவது, மாணவி சாந்தியை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்து, சாதி சொல்லி இழிவுப்படுத்தி வீட்டைவிட்டு தெருவில் தள்ளி கதவைச் சாத்தியுள்ளனர்.  அதன்பிறகு 10.05.2012 அன்று களிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிhpவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சங்கர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களில் அவர் பிணையில் வந்தார். அவரது மனைவி உமா கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் முன்பினை கிடையாது. ஆனால் ஏதோ ஒரு வழியில் பிணைபெற்று தொடர்ந்து இன்று வரை ஆசிரியராக பணியாற்றுகின்றார்.  
இந்நிலையில் மேற்படி ஆசிரியர் சங்கர்  பலமுறை தொலைபேசியிலும், நேரிலும் வேறு ஆசிரியர்கள் மூலமும், பல்வேறு வகையிலும் மாணவி சாந்தியின் பெற்றோரிடம்  சமதானம் பேச முயன்றார். வழக்கை  திரும்பப் பெறச்சொல்லி தொடர்ந்து  நேரிலும் வந்துன் கட்டாயப்படுத்துவது, தொல்லைகொடுப்பது, மறைமுகமாக அச்சுறுத்துவது போன்று அனைத்து செயல்பாடுகளையும் செய்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தபிறகு பெற்றோரிடம் முயற்சிப்பதை விட்டுவிடுகிறார் ஆசிரியர் சங்கர். நேரடியாக மீண்டும் மாணவி சாந்தியை சரிசெய்கின்றார். என்ன ஆசை வார்த்தைக் கூறினார். என்ன நாடகம் நடத்தினார் எனத் தெரியவில்லை. மீண்டும் ஆசிரியர் சங்கர்-மாணவி சாந்தி பழையபடி உறவு தொடர்ந்துள்ளது. தெரிந்த பெற்றோர் கல்லூரியில் சாந்தியை அழைத்துச் சென்று வீட்டோடு தங்கவைத்துள்ளனர்.
ஆனாலும், எப்படியோ கடந்த 02.05.2013 அன்று இரவு சங்கர் என் மாணவியை சாந்தியை அழைத்து சென்றுவிட்டார். மகளைக் காணவில்லை என தாயார் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேகத்துடன் சங்கருடன் பேசிய மகளிர் போலீசாரிடம் சாந்தி தன்னுடன் உள்ளதாக கூறியுள்ளார். அழைத்துவருமாறு கூறியதற்கு சாந்தி விருப்பத்துடன் வந்தோம் எனக்கூறி வர மறுத்துள்ளார். உனது மனைவியிடம் புகார் பெற்று வழக்கு பதிவோம் என்று போலீசார் கூறியபிறகு  மறுநாள் 04.03.2012 அன்று உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். பெண் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சாந்தியை பெற்றோருடனும், சங்கரை அவர் வீட்டிக்கும் அனுப்பி வைக்க முயன்றனர். அப்பொது பெண் போலீசாரிடம், பெண்ணின் தாயார் புகார் மற்றும் சி.எஸ்.ஆர் உள்ளது. சங்கரிடம் அழைத்துச் சென்றதை எழுதி வாங்குங்கள் என்று கூறினோம். விழித்துகொண்ட பெண் போலீசார் சங்கரிடம் எழுதிக் கேட்டனர். போலீசார் எப்படியெல்லாம் கேட்டும் இறுதிவரை சாந்தியை தான் அழைத்துச் சென்றதாக எழுதிக்கொடுக்கவில்லை. கேட்காமலேயே சாந்தி தன் விருப்பத்துடன் போனதாக எழுதிக்கொடுத்தார். ஆனாலும் சங்கர் முறைப்படி எதுவும் எழுதவில்லை. நாமும் டி.எஸ்.பியிடம் தொலைபேசியில் முறையிட்டோம். பெண் போலீசாரும் டி.எஸ்.பியிடம் ஆலோசனை பெற்றனர். அவர் அறிவுறுத்தலின் பேரில், சாந்தியின் தாயார் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அழைத்துசென்றனர்.
பல விசித்திரமான வழக்குகளைப் பார்த்த நீதிமன்ற என்று திரைப்படம் வசனம் ஒன்று நினைவுக்கு வந்த்து. நீதிமன்ற கலாட்டாவை நினைத்தால். போலீசார் எவ்வளவோ பரவாயில்லை சட்டத்தின்படி நடக்க முயற்சிக்கின்றார்கள் என்றாகிவிடுகின்றது. நீதித்துறை நடுவர் சாந்தியிடம் யாருடன் போக விருப்பம் என்கிறார். சங்கருடன் போகின்றேன் என்று சொன்னதும் தாராள மனதுடன் சங்கருடன் போகுமாறு கூறி அனுப்புகின்றார். அப்போது நாம் நீதித்துறை நடுவரிடம் சங்கர் ஏற்கனவே திருமணமாணவர், குழந்தை உள்ளது, தன்னிடம் படித்த இந்த மாணவியை மைனர் திருமணம் செய்த எஸ்.சி/எஸ்.டி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் உள்ளது, இவர் தற்போது பெயிலில் உள்ளார் என்று முறையிட்டோம். உடனே அவர் சுதாரித்துகொண்டு இருவரையும் வீட்டிற்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு யாரிடமோ ஆலோசனை கேட்டார். (அனேகமாக விழுப்புரம் மாவட்ட நீதிபதியாக இருக்கலாம்).  அதன்பிறகு சங்கரை விடுவித்து, பாதிக்கப்பட்ட சாந்தியை விழுப்புரத்தில் உள்ள கலைசெல்வி கருணாலாயா இல்லத்தில்  வைக்க உத்திரவிட்டுள்ளார்.
·               ஆசிரியர் சங்கர் தனது ஆசிரியர் பணியினை தக்கை வைத்துக் கொள்வதற்கும் வழக்கினை ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்வதற்குமான அனைத்து வழிகளிலும்  அனைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.  அதன் தொடர்ச்சியாகத்தான் சாந்தியின்  விருப்பதுடன் அனைத்தும் நடக்கின்றது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார். ஏற்கனவே அரசுப் பள்ளி பெண் ஆசிரியரை திருமணம் செய்துகொண்டு, குழந்தையுடன் உள்ள ஒரு ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, 5 முறை கருவை கலைத்து, மைனர் மாணவியான சாந்தியை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி, சட்டவிரோதமாக திருமணம் செய்தார். இவ்வழக்கில் கைது செய்யபட்ட சில நாட்களில் பிணையில் வந்து தொடர்ந்து மேற்கூறியபடி சாட்சிகளை களைப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளை செய்துவருகின்றார்.  இப்போது மீண்டும் சாந்தியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்கின்றார். கல்வித் துறைக்கும், ஆசிரியர் சமூத்திற்கும் அவமானத்தையும், இழிபெயரையும் தேடித்தருவதுடன், தன்னிடம் படிக்க வந்த சிறு வயது மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் மேற்படி ஆசிரியர் சங்கர் பிணை மனுவை ரத்து செய்து, அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து, னது மகளை காப்பாற்றுமாறு வேண்டுகின்றேன் என்று சாந்தியின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமும் நேரடியாக புகார் அளித்தும் இருவரும் மிக அலட்சியமாக ‘’உங்க பொண்ணு அப்ப மைனர். ஆனா இப்ப மேஜர். நாங்க என்ன செய்யமுடியும்” என்று கூறுகின்றனர். சங்கரை தங்களது மனசாட்சியின் படி எதுவும் செய்யமுடியாமல்தான் சட்டத்தின் வழியினை நாடி நடவடிக்கை கோருகின்றார் சாந்தியின் தாயார். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கைவிரிக்கின்றனர். ஒரு பேச்சுக்காக பார்ப்போம். இப்போது சாந்தி மட்டும் ஒரு ஆதிக்கச் சாதி சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், ஆசிரியர் சங்கரை ஒரு கூலிப்படை தேடியிருக்கும், அல்லது சாந்தியின் உறவினர்கள் முடித்திருப்பார்கள். இதுபோன்று சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் நீதிகிடைக்கவில்லை, கிடைக்காது, தேவையில்லை எனும்போதுதான் நடக்கின்றன.
·         மைனர் மாணவியை ஆசிரியர் சங்கர் குழந்தைத் திருமணம் செய்த, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு தற்பொழுது விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் மாணவி சாந்தி சம்மதத்துடன் அனைத்தும் நடப்பதாக நீதிமன்றத்தை நம்ப வைத்து, தண்டனையில் இருந்து தப்பிக்க முயல்கிறாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது. ஏனென்றால் மாணவி சாந்தியும் கண்மூடித்தனமாக சங்கர் சொல்வது பேசுவது செய்வது எல்லாம் நல்லது-நன்மைக்கே என்று நம்புகின்றார். இப்போது விழுப்புரம்  கலைசெல்வி கருணாலாயா இல்லத்தில் உள்ள சாந்தியை அவரது தாயாரால் சுலபமாக சந்திக்கமுடிவதில்லை. மீறிசென்றாலும், அங்குள்ள பொறுப்பாளர் சாந்தியின் தாயாரை திட்டுவதும், அவமானப்படுத்தும், கேவலப்படுத்துவமாக இருக்கின்றார். ஆனால் ஆசிரியர் சங்கர் எவ்வித தடையுமின்றி நினைத்த நேரத்தில் சந்க்கின்றார்.  “என் மகளின் வாழ்க்கை பாழானதுடன் இல்லாமல், இவர்  மீண்டும் ஆசிரியர் பணிக்கு வந்தால் பைரவியைப் போல் இன்னும் பல சிறு மாணவிகள்-குழந்தைகள் வாழ்க்கை சீரழியும் எனவே ஆசிரியர் சங்கர் உடனடியாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிணை ரத்து செய்யப்படவேண்டும்” என்று சாந்தியின் தாயார் கூறுகின்றார்.  
·         மேற்படி சங்கரின்  மனைவியும், ஆசிரியருமான உமா அவர்கள் மீதும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அவர் மீது துறை ரீதியான  நடவடிக்கை எதுவும் எடுகப்படவில்லை. மேலும் வழக்கினை இல்லாமல் ஆக்குவதற்கு அவர் கணவர் ஆசிரியருமான சங்கர் செய்கின்ற அனைத்து குற்றச் செயல்பாடுகளுக்கும் உமா உடந்தையாக இருந்து வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.  
·         தன்னிடம் பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, 5 முறை கருவைக் கலைத்து, ஏமாற்றி குழந்தைத் திருமணம் செய்துகொண்ட ஆசிரிர் சங்கரின் சட்டவிரோத செயலைக்க கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி, பள்ளி +2 மாணவியை பள்ளி ஆசிரியருடன் (அவர் ஏற்கனவே திருமணமானவர் எனத்தெரிந்தும்) குடும்பம் நடத்த அனுப்பி வைத்த அப்போதைய தலைமை ஆசிரிர் சசி அவர்களின் இந்த கட்டப்பஞ்சாயத்து குறித்து கல்வித்துறை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. படித்த சான்றிதழ்கள் மட்டுமே தலைமை ஆசிரியர் பணிக்குப் போதுமென்று கல்வி துறையும், அரசும் செயல்படுகின்றது.
·         சங்கரின் பிணை மனுவை ரத்து செய்யவும் முடியவில்லை. நீதிமன்றங்கள் முடியவில்லை. துறை ரீதியாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என முதன்மைக் கல்வி அலுவலர் கூறுகிறார். மேஜர் ஆன பெண் விருப்பத்தில் நாங்கல் என்ன செய்யமுடியும் என்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
·         பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசிரியரின் படிப்புச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெறும் காகித்தோடு கிடக்கின்றது. அவருக்கு எப்படி நினைவுபடுத்துவது. ஏதேனும் 100 வழிகள் இல்லையில்லை 110 வழிகள் உள்ளதா? 

Wednesday, March 6, 2013

ஆசிரியர் அடித்து இசுலாமிய மாணவர் மன நிலை பாதிப்பு





நாள் : 06.03.2013
அனுப்புதல்
                எம்.கே.முகமது இஸ்மாயில் (42/2013)
                த/பெ காசிம் சாகிப்,
                50/207, சுந்தரவிநாயகர் கோயில் தெரு,
                சர்க்கார்  தோப்பு,
                திண்டிவனம் - 604 001

பெறுநா
                காவல் உதவி ஆய்வாளர்,
                திண்டிவனம் காவல் நிலையம்,
                திண்டிவனம் - 604 001

ஐயா,
                வணக்கம் நான் மேற்படி முகவரியில் என் மனைவி ஷர்புன்பீ மற்றும் இரண்டு மகன்களான அப்பாஸ் அலி (17), சதாம் உசேன் (15), ஒரு மகள் பர்வீன் பேகம் (13) ஆகியவர்களோடு குடியிருந்து வருகிறேன்சைக்கிள் மூலம் தேநீர் விற்று பிழைத்து வருகிறேன்மேற்படி எனது பிள்ளைகள் மூவரும் திண்டிவனம் தேசிய மேல்நிலைப்பள்ளில் முறையே 12,10,8 ஆம் வகுப்புகளில் பயின்று வருகன்ற
                2. 12-வது வகுப்பில் படிக்கும் மேற்படி என் மகன் அப்பாஸ் அலி, அந்த வகுப்பில் தரவரிசையில் 2-வது இடத்திலும், கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சந்தேகங்கள் விளக்கும் ஆற்றலும் உள்ளவன்இதனால் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நன் மதிப்பைப் பெற்றுள்ளான்கடந்த 24.01.2013 அன்று மாலை மேற்படி பள்ளியில் வகுப்பில் மாதிரித் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது பக்கத்திலுள்ள மாணவர் எனது மகனிடம் சந்தேகம் கேட்டுள்ளார்.  இரண்டு மாணவர்களும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த மேற்படி பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான வெங்கட்ராமன் என்பவர் மாணவர்கள்-மாணவிகள் முன்னிலையில் எனது மகனின் நெத்தியிலும், பிடறியிலும் தனது கையால் பலமாக ஓங்கி அடித்துள்ளார்.  உடல் அளவிலும், மன அளவிலும் பாதிப்படைந்த எனது மகன் அன்று இரவு முழுவதும் என் வீட்டில் தூங்காமல்மர்ஹபா முஸ்தபாஎன்றும்அப்பாஸ் ரலில்லான்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான்மறுநாள் 25.01.2013 மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது என் மகன் பள்ளிவாசலுக்குச் சென்று வழக்கத்திற்கு மாறாக கையை உயர்த்தியும், முஷ்டியை மடக்கியும் ஆக்கிரோசமாகப் பார்த்தும் ஹவுஸ் தண்ணீரைக் குடித்தும் வித்தியாசமாக நடந்து கொண்டிருந்துள்ளான்இதனைப் பார்த்த பள்ளிவாசல் ஹஜரத் என்னிடம் வந்து என் மகனுக்கு உடனே வைத்தயம் பார்க்கச்சொன்னார்.
                3. 26.01.2013 அன்று திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள டாக்டர் கே.பாலசுப்பிரமணியன் அவர்களிடமும், அடுத்த நாள் 27.01.2013 அன்று விழுப்புரத்தில் உள்ள மனோதத்துவ நிபுணர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன்  அவர்களிடமும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன்தொடர்ந்து எனது மகனின் செயல்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூடிக் கொண்டே போனதுஎனவே 28.01.2013 அன்று எனது மகனை புதுச்சேரியில் உள்ள மனோதத்துவ நிபுணர் டாக்டர். கே.பாலன் பொன்மணி ஸ்டீபன் அவர்களிடம் கொண்டு போய் காண்பித்தேன்எனது மகன் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் மன் நோயாளியான விசயம் தெரிந்த அவனுடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மதிய இடைவேளை நேரத்தில் என் வீட்டிற்கு வந்து என் மகனைப் பார்த்துச் சென்றனர்.  அவர்கள் சொன்ன பின்புதான் மேற்படி ஆசிரியர் என் மகனை வகுப்பறையில் அடித்த விபரம் எனக்குத் தெரிய வந்ததுஎன் மகனைப் பார்க்க வந்த ஆசிரியை சாந்தா என்பவர் எங்களிடம் கூறுகையில் ஆசிரியர் வெங்கட்ராமன் என் மகனை அடிக்கும் போது அதைப் பார்த்த மாணவ, மாணவியர் சிரித்துவிட்டனர் என்றும் அதனால்தான் அவன் அசிங்கப்பட்டு ஆக்கிரோஷம் அடைந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டான் என்று கூறினார்என் ஏழ்மை நிலையை தெரியவந்த மாணவ, மாணவியர் என்னுடைய மகனின் மருத்துவச் செலவுக்காக நன்கொடையாக அளித்த ரூ.1650/- மேற்படி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கமலக்கண்ணன் கொண்டு வந்து கொடுத்தார்இச்செய்தியறிந்த பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து மாணவ-மாணவிகள் என் வீட்டிற்கு வருவதைத் தடுத்து விட்டனர்.
                4. பின்பு மேற்படி பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் தியாகராஜன், ஆசிரியர்கள் மூலம் என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து என் மகனின் மருத்துவச் செலவையும், படிப்புச் செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், இந்த ஆண்டே உனது மகனை எப்படியாவது பாஸ் பண்ணச் செய்வேன் என்றும் உறுதி அளித்ததோடு அடுத்த நாள் என் மகனை பள்ளிக்கு அழைத்துவரச் சொன்னார்.  தொடர்ந்து எனது மகனின் நிலைமை மோசமாகக் கொண்டிருந்ததால் டாக்டர் ஸ்டீபன் அவர்களின் ஆலோசனைப்படி 11.02.2013 அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன்பரிசோதனை செய்த டாக்டர் 4 நாள் சிகிக்சைக்காக மருத்து கொடுத்து அனுப்பினார்.
                5. 12.02.2013 அன்று காலை என் வீட்டிற்கு வந்த ஆசிரிர் கமலக்கண்ணன்உன் மகனை பள்ளிக்கு அழைத்து வா.. உன் மகனை அடித்த ஆசிரியரை உன் மகனிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறோம்அப்படி செய்தால்  உன் மகன் ஓரளவு சாந்தமடைவான்என்று கூறினார்அப்போது எங்கள் வீட்டிற்கு எதிரே குடியிருப்பவரும், குடும்ப நண்பரும் பெரியவருமான .தாமோதரன்நல்லது... அவனை அழைத்துக் கொண்டு போஎன்று கூறினார்இதனையடுத்து நானும் என் மனைவியும் என் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றோம்அங்கு என் மகனை தலைமை ஆசியர் அறையில் உட்கார வைத்தனர்.  பல ஆசிரியர்கள் என் மகனை வந்து பார்த்து ஆசுவதப்படுத்தினர்.  உயரமாக சிவப்பாக இருக்கும் ஒரு ஆசிரியர் என் மகனை வந்து பார்த்த போது அவன் சீற்றமடைந்தான்உடனே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
                6. பின்பு எனது மகனை தனியே ஒரு அறையில் உட்கார வைத்து அவனை செய்முறைத் தேர்வு எழுதவைக்க முயற்சித்தனர்ஆனால் என் மகனோ, மனநிலை பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு சேஷ்டைகளை  தொடர்ந்து செய்து வந்தான்கேள்வியையும், பதிலையும் கமலக்கண்ணன் ஆசிரியர் சொல்லச் சொல்ல என் மகன் முடிந்த அளவிற்றகு கொஞ்சம் எழுதுவதும் அப்புறம் அடம் பிடிப்பதுமாக இருந்தான்என் மகனை பின்பு அழைத்துக் கொண்டு நானும் என் மனைவியும் வீட்டிற்கு வந்துவிட்டோம்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் என் வீட்டிற்கு வந்து, எனது மகனை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும்படியும், அப்படி வந்தால் எப்படியும் பாஸ் செய்து விடுவார்கள் என்றும் கூறி வந்தனர்.
                7. கடந்த 26.02.2013 அன்று மேற்படி பள்ளி நிர்வாகி, அவர் கடையில் வேலை செய்யும் எனக்குத் தெரிந்த ஒரு இஸ்லாமியர் மூலம் அவர் கடைக்கு வரும்படி அழைத்தார்நான் மேற்படி பெரியவர் தாமோதரனுடன் சென்று, பள்ளி நிர்வாகியை அவருடைய கடையில் சந்தித்தேன்என்னுடன் வந்த பெரியவர் மேற்படி தியாகராஜனிடம் ‘அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு பையனிடம் பேசச் சொல்லியிருந்தால் அவன் கோபம் குறைந்து குணமாகியிருப்பான்” என்று கூறினார். அப்போது அவர் கூறுகையில்அந்த ஆசிரியர் நல்லவர்..... அவரது சகோதரர்கள் பெரிய உத்தியோகத்தில் உள்ளனர்..... ஏதோ நடந்து விட்டதுநமக்கு பையனுடைய எதிர்காலம் முக்கியம்அவனுக்கு ஒரு வருடம் வீணாகக் கூடாது, புதன், வியாழன் இரண்டு நாளும் பள்ளிக்கு பையனை அழைத்து வாருங்கள்வெள்ளிக்கிழமை அவனை தனி அறையில் உட்காரவைத்து ஆசிரியரையும் உடன் வைத்து பரீட்ச்சை எழுதவைப்போம்அதிகாரிகளிடம் நான் பேசிக் கொள்கிறேன், அவன் பாஸ் பண்ணுவான்என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்ரொம்பவும் கஷ்டப்பட்ட குடும்பம் என்றும், சிகிச்சைகாக ஆட்டோவில் கூட்டிச் செல்ல நிறைய செலவு ஆகிறது என்றும் கூறினார்கள்நீங்கள் எவ்வளவு மேண்டுமென்று கூறினால் கொடுத்து விடுகிறேன்என்றார்என்னுடன் வந்த மேற்படி பெரியவர் தாமோதரன் கூறுகையில்அடித்த ஆசிரியர் அவர் சம்பளத்தில் பாதியை பையன் குணமடையும் வரையில் கொடுக்கச் சொல்லுங்கள்ஒரு மாதத்தில் குணமடைந்தால் கூட அடுத்த மாதமே நிறுத்திக் கொள்ளுங்கள்என்று கூறினார்.  ‘‘அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் நாளை பையனை பள்ளிக்கு அழைத்து வாருங்கள்என்று கூறி மேற்படி பள்ளி நிர்வாகி எங்களை அனுப்பினார்.
                8. என் மகனுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவார் ஆலோசனைப்படி நான் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்லவில்லைஅடுத்து, என் வீட்டின் எதிர் வீட்டு மாடியில் இருப்பவரும் மேற்படி பள்ளி ஆசிரியையுமான ஷீலாவும் அவருடைய கணவரும் என்னிடமும் என் மனைவியிடமும் அறிவுரை சொல்வது போன்று கூறுகையில்பள்ளி நிர்வாகியிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கேட்கிறபடி எழுதிக்கொடுஎன்று கூறினார்கள்அதற்கு நானும் என் மனைவியும் உடன்படவில்லை.
                என் மகனை அடித்த ஆசிரியர் என் மகனிடம் மன்னிப்பு கேட்டால், என் மகன் சாந்தமடைந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துவிட்டேன்மேலும் பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் தியாகராஜன் பணபலம் மிக்கவர் என்றும், அவரை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது என பலர் என்னிடம் கூறிவந்தாலும் நான் புகார்  அளிக்கத் தாமதமானது.
                என் மகனை மேற்படி ஆசிரியர் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் அடித்ததால், இந்த ஆண்டு தற்சமயம் நடைப்பெறும் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போனதோடு அவனுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டதுஎன் மகனை அடித்த மேற்படி ஆசிரியர் வெங்கட்ராமன் மீதும் அவரைப் பாதுகாக்க முயற்சி செய்துவரும் பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் தியாகராஜன் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
                                                          இவண்


இணைப்பு:
1. 26.01.2013 நாளிட்ட டாக்டர்  கே. பாலசுப்பிரமணியன்  அவர்களின் மருத்துவச் சீட்டு நகல்.
2.27.01.2013 நாளிட்ட டாக்டர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மருத்துவச் சீட்டு நகல்.
3.28.01.2013 நாளிட்ட மருத்துவர் கே.பாலன் பொன்மணி ஸ்டீபன் அவர்களின் மருத்துவச் சீட்டு நகல்.
4.ஜிப்மப் மருத்துவமனை மருத்துவக் கோப்பு.

நகல்:
1.உள்துறைச் செயலாளார், சென்னை-9
2.காவல்துறை தலைமை இயக்குனர், சென்னை - 4
3.காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் - 605 602
4.மாவட்ட ஆட்சித்தலைவர், விழுப்புரம் - 605 602
5.முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம் - 605 602
6.காவல் துறைக் கண்காணிப்பாளர்,  திண்டிவனம்
7.மாவட்டக் கல்வி அலுவலர்,  திண்டிவனம்-1