Tuesday, October 9, 2012

தலித் மக்களுக்குத் தேரோட்டத் தடை


அனுப்புனர்                                                                  
                பொதுமக்கள்,
                தலித் குடியிருப்பு,
சேச சமுத்திரம் கிராமம்,
                நெடுமானூர் அஞ்சல்,
                சங்கராபுரம் வட்டம்,  
                விழுப்புரம் மாவட்டம்.

பெறுநர்
                உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,  
                விழுப்புரம் மாவட்டம்,
விழுப்புரம்.

அய்யா
பொருள் : தலித் மக்களாகிய எங்கள் மீது கடைபிடிக்கப்படும் தீண்டாமையைத் தடுத்து நிறுத்தி - எங்களின் வழிபாட்டு உரிமைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை ரத்து செய்து - தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள தீண்டாமையைக் கடைபிடிக்காத முன்மாதிரிக் கிராமம் என அறிவித்து - பொதுப்பாதையில் தங்கள் முன்னிலையில் தோரோட்டம் நடத்தக் - கோருதல் -
                வணக்கம். மேற்கண்ட கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்ட இந்து பறையர் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்நாங்கள் அனைவரும் அன்றாடக் கூலி வேலை செய்தே வாழ்ந்து வருகின்றோம். மேலும், எங்கள் கிராமத்தில் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த  வன்னியர் சமூகத்தினர் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்இவர்களில் பெரும்பாலோனர் நிலமுள்ள விவசாயிகளாக உள்ளனர். எங்களில் பெரும்பாலோனோர் இவர்களின் வயல்களில் அன்றாட விவசாயக் கூலி வேலைகள் செய்வோம்
நாங்கள் எங்களின் வழிபாட்டிற்காக எங்கள் குடியிருப்பில் வைத்துள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆடி மாதம் 5 நாட்கள் திருவிழா நடத்துவோம்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு  வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் சுப்பிரமணியன் என்பவர் எங்களிடம் வந்து தனக்கு வாக்களித்தால் கோயிலுக்கு தேர் செய்வதற்கு ரூ. 1 லட்சம் உதவி செய்வதாகக் கூறினார்
அதனையேற்று நாங்கள் அனைவரும் அவருக்கு வாக்களித்தோம். அவரும் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். நாங்கள் எங்கள் பங்காக ரூ. 1 லட்சம் திரட்டி அவரிடம் அளித்தோம். அவர் ஏற்கனவே உறுதியளித்த ஒரு லட்சம் ரூபாயுடன் சேர்த்து ஊர்ப்பகுதியிலேயே புதிதாக தேர் ஒன்று செய்தார். 15 நாட்ககளில் தேர் தயாரானதும்மேற்படி ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியன் முன்நின்று எங்கள் காலனி மற்றும் ஊர்ப்பிரமுகர்களை வைத்து  சடங்குகள்  செய்து ஊர்த்தெருவிலிருந்து பொது வழியாக ஊரைச் சுற்றி தேரை இழுத்து எங்கள்  குடியிருப்பிலுள்ள மாரியம்மன் கோயிலிலுக்கு கொண்டுவந்து விட்டார்கள்
அதன்பிறகு இந்த ஆண்டு ஆடி மாதம் 5 நாட்கள் திருவிழா நடந்துவது என முடிவெடுத்தோம்.  31.07.2012 அன்று முதல் திருவிழாவை எல்லோரும் இணைந்து வழிபாடு செய்து கொண்டாடினோம்
மறுநாள் 01.08.2012 அன்று அதிகாலை சுமார் 7.30 மணியளவில் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்ரமணியன் /பெ அய்யகண்னு மற்றும் அவருடன் இணைந்து சின்னதுரை /பெ பூச்செண்டு, ராமசாமி /பெ காப்ரி கவுன்டர், ராஜேந்திரன் /பெ மொட்டையன், ராஜமாணிக்கம் /பெ அய்யம்பெருமாள்அறிவழகன் /பெ அண்ணாமலை, வேலு /பெ தாண்டவாரான்(வார்டு உறுப்பினர்), வேலு /பெ ராமு உள்ளிட 15 பேர் எங்கள் குடியிருப்பிற்கு வந்து ‘‘சாமி கும்பிடுறது, ஊர்வலம் போறது எல்லாம் உங்க பகுதியிலேயே செஞ்சிக்குங்க, ஊர்த்தெரு வழியாக சாமி தேர் ஊர்வலமாக எடுத்து வரகூடாது’’ என்று கூறினார்கள்.
எங்கள் தரப்பில்  ‘‘முதன் முதலா தேரை இழுக்கின்றோம். அதுவும் வருசத்துக்கு ஒரு தடவ’’ என்று சொன்னோம். அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டார்கள். மேலும், அன்று பகல் 10.30 மணியளவில் எங்கள் பகுதியைச் சேர்ந்த சில முக்கியமானவர்களை  ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அழைத்து ஊர்கூட்டம் போட்டு பொதுப்பாதையில் தேர் இழுக்கக் கூடாது என்று அறிவித்தார்கள்.
திருவிழாவிற்கு நடைபெற உள்ள பாட்டுக்கச்சேரிக்கு அனுமதி வாங்கவும், பாதுகாப்பு கேட்டும் 03.08.12 அன்று மதியம் 1 மணியளவில் சங்காரபுரம் காவல்நிலையம் சென்றோம். அங்கிருந்த ஆய்வாளர் கண்ணன் விசாரித்தபோது நாங்கள் தேர் இழுக்க தடைவிதித்துள்ளார்கள் என்பதைச் சொன்னோம்அதனையடுத்து சாதி இந்துக்களை அழைத்துப்பேசினார் ஆய்வாளர். ஆனால் அவரிடமும் தேர் இழுக்க அனுமதிக்க முடியாது என்றே கூறினார்கள். அதனால் ஆய்வாளர் வட்டாட்சியர் அவர்களிடம் தகவல் கூறினார்.
 அன்று மாலையே சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையிலும்  தேரை இழுக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். மறுநாள் 04.08.2012 அன்று கோட்டாட்சியர் விவேகானந்தன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் மேற்படி சாதி இந்துக்கள் தேரை இழுக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். கோட்டாட்சியர் அவர்களும் தோரோட்டத்தை நிறுத்திவிடுமாறு முடிவெடுத்து அமைதிக்கூட்டத்தை முடித்து வைத்தார்.
5&வது நாள் திருவிழாவான அன்று சாமி ஊர்வலம் போவது வழக்கம். அன்று 15 போலீசார் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினர். மறுநாள் 06.08.2012 அன்று காலை 6.30 மணியளவில் மாட்டு வண்டியில் இணைத்து தேரை தார் சாலை வழியாக சென்று கோவில் முன்பு நிறுத்தவேண்டியிருந்தது. அதனால் அன்று காலையில் தேரை இழுத்துச்செல்லும்போது, தார் சாலை அருகே செல்லும்போதேவன்னியரர் சமூத்தைச் சேர்ந்தவர்கள்  சுமார் 150&க்கும் மேற்பட்டவர்கள் கையில் இரும்பு பைப், தடி, வெட்டு அரிவாள் போன்றவகளை வைத்துக் கொண்டு, தேரை தார் சாலை வழியாக இழுத்துச் செல்லக்கூடாது என்று மறித்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த அதுபோன்ற ஆயுதங்களைப் பார்த்ததும், அவைகளால் எங்களைத் தாக்கினால் நாங்கள் ஒருவர் கூட உயிர் பிழைக் முடியாது என்ற நிலையில் அனைவரும் பயந்துபோய் தேரை அங்கேயே விட்டுவிட்டு எங்கள் குடியிருப்பிற்கு ஓடி வந்துவிட்டோம். அதன்பிறகு போலீசாரே தேரினை இழுத்து எங்கள் கோயில் அருகில் விட்டார்கள். அப்போது போலீசார் அனைவரிடமும் பேசி பொதுப்பாதையில் தேர் இழுத்துச் செல்ல 25 நாள் ஆகும் அதுவரை அமைதியாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகும் தேர் இழுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் 12.09.2012 அன்று தேர்திருவிழா நடத்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து 27.08.2012 அன்று மனு அளித்தோம். இதற்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் 08.09.2012 அன்று முதல் எங்கள் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நாங்கள்  25 பெண்கள் ஒன்று சேர்ந்து, தேர் இழுக்க அனுமதிகோரி அமைதி முறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்தோம்.  09.09.2012 பகல் 12.00 மணியளவில் அடையாளம் தெரிந்த போலீசார் ஒருவர் தேர் மீது அச்சடிக்கப்பட்ட தாளை ஒட்டினார். கொளஞ்சி என்பவர் அது குறித்துக் கேட்டதற்கு ‘‘144 தடை உத்தரவும், இதை மீறி தேர் ஓட்டக்கூடாது’’ என்றும் கூறினார்.
தொடர் உண்ணாவிரதமிருந்த பெண்களில் அஞ்சலை(27) /பெ ராமர், சுமதி(29) /பெ குமார், பூங்கொடி(27) /பெ ராஜா ஆகிய 3 பேரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து உண்ணாவிரதமிருந்த எங்கள் அனைவரையும்  போலீசார் அப்புறப்படுத்தி சங்கராபுரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதனிடையே 10.09.2012 அன்று கள்ளகுறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதிலும், சாதி இந்துக்கள் தேர் செல்ல அனுமதி மறுத்தார்கள்எங்கள் இந்த வழிப்பாட்டு உரிமைக்கு தொடக்கத்திலிருந்து ஆதரவு அளித்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் திரு.சிந்தனைச்செல்வன் அவர்களைக்கொண்டு எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைக்க எண்ணியிருந்தோம். இந்நிலையில்  மறுநாள் 11.09.12 அன்று நள்ளிரவு திடீரென்று போலீசார் எங்களில் உண்ணாவிரதமிருந்த 25 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் என மொத்தம் 42 பேரை கைது செய்தனர். இரவு 12.30 மணியளவில் எங்கள் 42 பேரையும் சங்கராபுரம் அருகே உள்ள வண்ணாஞ்சூர் என்ற இடத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் போலீசார்.  பாதுகாப்பிற்கு சில போலீசார் இருந்தனர். இரவு 2.00 மணியளவில் மேலும் சில போலீசார் வந்து நிறைய பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள். அதன்பிறகு காலை 7.30 மணியளவில் எங்களை மண்டபத்திலிருந்து இரண்டு போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சென்று, கடலூர் மத்தியச் சிறைச்சாலையில் அடைத்தனர். அதன்பிறகு தற்போது நிபந்தனை வெளியில் நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தலித் அல்லாத பிற சாதியினர், சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி கோட்டம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து எங்களுக்கு இழைத்து வரும் அநீதிசாதிய வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்   ஆகியவற்றில் பாதிப்புற்ற எங்களுக்கு நீதி கிடைக்க கீழ் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகின்றோம்.
எங்கள் கோரிக்கைகள் :                                                                       
1.            கடந்த ஆகஸ்ட்  மாதம் முதல் இந்த அக்டோபர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் நாங்கள் எங்கள் வழிபாட்டுத்தெய்வமான மாரியம்மன் தோரோட்டம் நடத்த ஆதிக்கச் சாதியினர் தடைவிதித்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எங்கள் மீது தொடர்ந்து தீண்டாமையை கடைபிடிக்கும் மேற்படி சாதி இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் வட்ட, கள்ளக்குறிச்சி கோட்ட நிர்வாக, வருவாய் மற்றும் காவலதிகாரிகளும் தேரோட்டம் நடத்துவதை தொடர்ந்து தடை செய்தே வந்தனர். இவ்வாறு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு தடையுத்தரவை ரத்து செய்துஎங்கள் தேரோட்டத்திற்கு அனுமதியளித்து, உரிய பாதுகாப்பளித்து தேரோட்டம் நடத்த உரிய நடவடிக்கைகள் எடுத்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள தீண்டாமைக் கடைபிடிக்காத கிராமமாக எங்கள் கிராமத்தை மாற்றுமாறு வேண்டுகின்றோம்.
2.            தேரோட்டம் நடத்த அனுமதி கோரி அமைதி முறையில் உண்ணாவிரதமிருந்த எங்கள் பெண்கள் 25 பேர் உள்ளிட்டு 42 பேர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கினை ரத்து செய்யவேண்டுகிறோம்.
3.            மேலும், எங்கள் தேரோட்டத்தை தடை செய்த இந்துக்கள் மீது 6.8.12 அன்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் போடப்பட்டுள்ள கா.நி.கு.எண் 649/12-கீழ் போடப்பட்டுள்ள வழக்கின் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
4.            எங்களின் வழிபாட்டு உரிமை தடைசெய்த சாதி இந்துக்கள் மீது 6.8.12 அன்று போடப்பட்ட வழக்கில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத போலீசார், வழிபாட்டு உரிமைகோரி அமைதி முறையில் உண்ணாவிரதமிருந்த எங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பெண்கள் என்றும் பாராமல் 11.09.12 அன்று நள்ளிரவில் கைது செய்து, சட்டவிரோதமாக திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய நிறைய தாள்களில் கையெழுத்து வாங்கி, இரவு முழுவது குடிநீர் வசதியோ, தேநீரோ வாங்கித் தராமல், தூங்கவிடாமல், உளவியல் ரீதியாக சித்திரவதை செய்து, மறுநாள் காலை 7.30 மணியளவில் எங்களை இரண்டு போலீஸ் வேனில் ஏற்றி கடலூர் மத்தியச் சிறையில் மதியம் 12 மணியளவில் அடைத்தனர். கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கும் வரை எங்களுக்கு தேநீர், உணவு போன்ற எவ்வித உதவியும் போலீசார் செய்யவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட எங்களை எந்தவொரு நீதித்துறை நடுவரிடமும் போலீசார் ஆஜர்படுத்தப்படவில்லை. இவ்வாறு சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்ற நிமிடம் வரை ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, குடிநீர், உணவு, தேநீர் போன்ற எந்த அத்தியாவசியமானவைகளையும் வழங்காத மேற்படி சட்டவிரோத சம்பத்தில் ஈடுபட்ட காவலதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றும், மேலும் தலித் மக்களாகிய எங்கள் மீது இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொண்ட காவலதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
5.            இவ்வாறு போலீசாரின் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 42 பேரில் விஜயசாந்தி(16) /பெ தனபால், பிலோமினாள்(16) /பெ ஆனந்த், ஜெயந்தி(15) /பெ செல்லமுத்து, கலைசெல்வி(14) /பெ கருத்தப்பிள்ளை, சிரஞ்சீவி(17) /பெ தர்மலிங்கம், திருப்பதி(17) /பெ கோவிந்தராஜ்  ஆகிய 6 பேர் வயதில் குறைந்தவர்களாகும்.  15 முதல் 17 வயதுவரையுள்ள இவர்களை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் முறையே 19 முதல் 22 வயதுடையவர்கள் எனப் பொய்யாகக் குறிப்பிட்டு, நீதித்துறை நடுவரிடமும், சிறையிலும் அதையே சொல்லும்படி மிரட்டி, அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறு வயது குறைந்த சிறுவர்களை அதிக வயதுடையவர்களாகக்குறிப்பிட்டு, பொய்யான ஆவணங்கள உருவாக்கி, மிரட்டி,அச்சுறுத்திய போலீசாரை உடனடியாக பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட இச்சிறுவர்களை உரிய நீதியும், நிவாரணமும் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமாய் கோருகிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, எங்கள் மீது கடைபிடிக்கப்படும் தீண்டாமையைத் தடுத்து நிறுத்தி, எங்களின் வழிபாட்டு உரிமைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை ரத்து செய்து, சமத்துவத்தை நிலை நிறுத்தி, தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள தீண்டாமையைக் கடைபிடிக்காத கிராமமாக முதன்முதலில் எங்கள் கிராமத்தை மாற்றி தமிழகத்தில் முன்மாதிரிக் கிராமம் எனப் பெயரெடுக்க பொதுப்பாதையில் தங்கள் முன்னிலையில் தோரோட்டம் நடத்துமாறு வேண்டுகிறோம்.
                                                                                                இவண்,

No comments: