Thursday, November 10, 2011

நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் சார்பில் 09.11.11 அன்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் ப.கல்யாணி, தி.அ.நசீர் அகமது, வழக்கறிஞர்கள் மு.பூபால், அ.கணேஷ், ஆ.வெங்கடேசன் மற்றும் இரா.முருகப்பன், கோ.வடிவேல், ஜி.சிவக்குமார், மு.சண்முகம், அ.சங்கர், த.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




தீர்மானங்கள் :

1. கூடங்குளம் அணு உலை ஏன் மூடப்படவேண்டும்? விவாத அரங்கம்.


கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அணு உலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர்கள் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர் ப.சிவக்குமார், மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரையும் அழைத்து, எதிர்வரும் 13.11.11 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திண்டிவனத்தில் விவாத அரங்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.



2. தேர்வு முறைகேடுகளை கண்டறிய நீதி விசாரணை தேவை.

அண்மையில் திண்டிவனத்தில் தாகூர் பள்ளியில் புதுவை கல்வி அமைச்சர் எழுதிய தேர்வின் மூலம், தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளினால், நன்றாக படிக்கின்ற மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. எனவே அரசு உடனடியாக, பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, தேர்வு எழுதியதில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அதற்கு உடந்தையாய் இருந்தவர்கள், ஆதரவளித்த கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான உரிய பரிந்துரைகளையும் குழுவிடம் இருந்து பெற்று, உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.

தற்போது தேர்வு முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளுக்கான தேர்வு மையத்தை எதிர் வரும் தேர்வுகளில் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



3. புதிய பேருந்து நிலையம் உடனடித் தேவை

தென் தமிழகத்தின் நுழைவு வாயில் எனக்கூறப்படுகின்ற திண்டிவனத்திற்கு பேருந்து நிலையம் இல்லாதது பெருங்குறையாகவும், போக்குவரத்திற்கு நெருக்கடியாகவும் உள்ளது. மேம்பாலம் அருகிலுள்ள திருவள்ளுவர் விரைவுப் பேருந்து நிலையம், வீராணம் இல்லம், பெரியார் போக்குவரத்து பணிமனை, பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவேண்டும். அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் திண்டிவனம் நகரம் சந்திக்கின்ற பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலை மாறும். மேலும், மழை, வெயில் மற்றும் இரவுகளில் பேருந்துகளுக்காக மக்கள் படுகின்ற அவதியும், அலைச்சலும் நீங்கும்.

No comments: