Wednesday, November 30, 2011

நான்கு பேரை கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்

நாள் 26.11.2011
அனுப்புதல்
லட்சுமி (20) க/பெ காசி
பெருமாள் கோவில் மண்டபப் படி
தி.மண்டபம், திருக்காவிலூர்

பெறுநர்

காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்

ஐயா,

பொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
><><>
வணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.
(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.
(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.
(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.
(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.
(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.
(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள
ஒம்/-லட்சுமி

Thursday, November 10, 2011

நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் சார்பில் 09.11.11 அன்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் ப.கல்யாணி, தி.அ.நசீர் அகமது, வழக்கறிஞர்கள் மு.பூபால், அ.கணேஷ், ஆ.வெங்கடேசன் மற்றும் இரா.முருகப்பன், கோ.வடிவேல், ஜி.சிவக்குமார், மு.சண்முகம், அ.சங்கர், த.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




தீர்மானங்கள் :

1. கூடங்குளம் அணு உலை ஏன் மூடப்படவேண்டும்? விவாத அரங்கம்.


கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அணு உலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர்கள் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர் ப.சிவக்குமார், மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரையும் அழைத்து, எதிர்வரும் 13.11.11 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திண்டிவனத்தில் விவாத அரங்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.



2. தேர்வு முறைகேடுகளை கண்டறிய நீதி விசாரணை தேவை.

அண்மையில் திண்டிவனத்தில் தாகூர் பள்ளியில் புதுவை கல்வி அமைச்சர் எழுதிய தேர்வின் மூலம், தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளினால், நன்றாக படிக்கின்ற மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. எனவே அரசு உடனடியாக, பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, தேர்வு எழுதியதில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அதற்கு உடந்தையாய் இருந்தவர்கள், ஆதரவளித்த கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான உரிய பரிந்துரைகளையும் குழுவிடம் இருந்து பெற்று, உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.

தற்போது தேர்வு முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளுக்கான தேர்வு மையத்தை எதிர் வரும் தேர்வுகளில் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



3. புதிய பேருந்து நிலையம் உடனடித் தேவை

தென் தமிழகத்தின் நுழைவு வாயில் எனக்கூறப்படுகின்ற திண்டிவனத்திற்கு பேருந்து நிலையம் இல்லாதது பெருங்குறையாகவும், போக்குவரத்திற்கு நெருக்கடியாகவும் உள்ளது. மேம்பாலம் அருகிலுள்ள திருவள்ளுவர் விரைவுப் பேருந்து நிலையம், வீராணம் இல்லம், பெரியார் போக்குவரத்து பணிமனை, பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவேண்டும். அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் திண்டிவனம் நகரம் சந்திக்கின்ற பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலை மாறும். மேலும், மழை, வெயில் மற்றும் இரவுகளில் பேருந்துகளுக்காக மக்கள் படுகின்ற அவதியும், அலைச்சலும் நீங்கும்.