Saturday, January 29, 2011

இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைதான 10 பேர் ஜாமீனில் விடுதலை


இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைதான 10 பேர் ஜாமீனில் விடுதலை




கடலூர்,  ஜன. 28: இந்திய இறையண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக, கடலூரில் கைதான 10 பேர், வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை போரில் இறந்த தமிழர்களின் நினைவாகக் கடலூரில் கடந்த சனிக்கிழமை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ் மாணவர், இளைஞர் பேரவை என்ற அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதையொட்டி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பேசியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக தமிழ் மாணவர், இளைஞர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாலகுரு, திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி, நகைமுகன், திருமாறன், கார்த்திகேயன், பாலாஜி உள்ளிட்ட 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களைக் கைது செய்ததைக் கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் உடல் நிலை மோசமான, பேராசிரியர் பிரபா கல்விமணி உள்ளிட்ட 3 பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சகந்தி, 10 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளிவந்த அவர்களை, மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் புதுவை சுகுமாறன், கடலூர் ஆல்பேட்டை பாபு, திண்டிவனம் முருகப்பன், வழக்கறிஞர் பூபாலன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
First Published : 29 Jan 2011 09:50:21 AM IST dinamani

Thursday, January 27, 2011

இந்திய இறையாண்மையும், சட்ட விரோதக் கைதும்

 உயர்நீதி மன்றத்தின் அனுமதியோடு, கடலூர் மணிக்கூண்டு திடலில் 22.01.11 அன்று நடந்த மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் பிரபா.கல்விமணி, கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர் மு.பாலகுரு உள்ளிட்ட 10 பேரை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, கூட்டம் முடியும்முன்னரே போலீசார் கைது கடலூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையில் கொண்டுசெல்லப்பட்டது முதலே, தங்கள் சட்டவிரோதக்காவலைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கினர்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் உடல் சோர்ந்த நிலையில் 26.01.11 அன்று மாலை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 25.01.11 மாலை கடலூரில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டவிரோதக் கைதைக் கண்டித்து 31-ஆம் தேதி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தொடர்ந்து மாநில அளவில் பலதலைவர்களையும் ஒருங்கிணைத்து பிப்ரவரி 6-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.