தமிழகத்தில் சில தோட்டங்களை நமக்குத் தெரியும். இவை விவசாயத் தோட்டங்கள் கிடையாது. அரசியல் அதிகாரத்தோட்டங்கள்! ஆனால், அவற்றின் தேவையும், செயலும் யாருக்கானவை என்பது குறித்தெல்லாம் இதுவரை நாம்கவலைப்பட்டது இல்லை. ராமாவரத் தோட்டம், போயஸ் தோட்டம், கோபாலபுரம் போன்றவையுடன், சில ஆண்டுகளாகதமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டம். "சமூக நீதிக் காவலர்', "இரண்டாவது பெரியார்', "பாட்டாளிகளின் தோழன்', "அரசியல் சாணக்கியன்', "ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்'என்றெல்லாம் புகழ்ந்து தள்ளப்படும் மருத்துவர் ராமதாசின் இருப்பிடம்தான் தைலாபுரம் தோட்டம்.
திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிசெல்லும்போது பார்த்திருக்கலாம் –இடது பக்கம் உள்ளமைதானத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளைக்கொண்டுள்ள தைலாபுரம் தோட்டத்தை. அதற்கு வலதுபக்கமாக உள்ளதுதான் தைலாபுரம் கிராமம். 1017 தலித்வாக்காளர்களையும், 3000 வன்னியர்கள் வாக்காளர்களையும்கொண்டுள்ள கிராமம்.
இக்கிராமத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம்அமைப்பாளர் கண்ணதாசன் அவர்களை நாம் நேரில்சந்தித்தபோது அவர் நம்மிடம் கூறியது : “எங்க தைலாபுரம்பஞ்சாயத்து ரிசர்வ் பஞ்சாயத்து. 2006 உள்ளாட்சித் தேர்தல்லஊர்க்காரங்க ஆதரவோட நின்னவங்க ஜெயிச்சிடுறாங்க. நாங்கதோத்துடுறோம். அதுல இருந்து ஊர்க்காரங்க எங்களைஎல்லாம் எதிரியாவே பார்க்க ஆரம்பிச்சாங்க. அதை எல்லாம்கிளியனூர் போலிசுல புகார கொடுத்தா, வழக்கும் போடறதுஇல்ல; ரசீதும் கொடுக்கறது இல்ல. இதுவரைக்கும் 10–க்கும் மேல புகார் கொடுத்திருக்கோம். ஒண்ணுலகூட வழக்குப்போடல. கிளியனூர் காவல் நிலையத்தில் பா.ம.க.வில் உள்ள என்.எம். கருணாநிதியோட சொந்தக்காரர் ஏழுமலைபோலிசா வேலை செய்றார். அந்தக் காவல் நிலையத்துல வன்னியர்களோட அமைச்சர் மாதிரி அவர் வேலை செய்றார்.வன்னியர் பேர்ல கொடுக்கிற எந்தப் புகார்லயும் நடவடிக்கை எதுவும் எடுக்காம பார்த்துக்கிறதுதான் அவரோட முமுநேரவேலையா இருக்கு.
இந்த நிலைமையிலதான் ஈழப் பிரச்சனையை ஒட்டி எங்க கட்சித் தலைவர் உண்ணாவிரதம் இருக்காரு. அப்ப, இந்தபோலிஸ் லிமிட்ல உள்ள நல்லாவூர் கிராமத்துல பஸ் எரிஞ்ச வழக்குல, எந்த வகையிலும் தொடர்பில்லாத என்னைவேணும்னே சேர்த்தாங்க. புது ஸ்பிளன்டர் வண்டியோட என்னைக் கைது செஞ்சாங்க. வண்டிய போலிசு இதுவரைக்கும்திருப்பித் தரல.
மெயின் ரோட்டில் இருந்து எங்க ஊருக்குள்ள வந்ததும் ஊருக்கும், காலனிக்கும் ரோடு தனியா பிரியும். அதுல எங்ககாலனிக்கு ரோடு பிரியற எடத்துல, காலங்காலமாக நாங்க திருவிழா காலத்துல நாடகம் போடுவோம். அப்படித்தான்இந்த வருசமும் திருவிழா ஆரம்பிச்சதும் நாடகம் போட, மேடையெல்லாம் அமைச்சோம். “இவ்வளவு நாள் உங்களுக்குஇடம் கொடுத்ததே தப்பு. ரொம்ப திமிர் ஏறி ஆடிக்கிட்டு இருக்கீங்க. இனிமே இங்க உங்களுக்கு எதுக்கும் இடம்கிடையாது. எதுவும் நடத்தக் கூடாது. இவ்வளவு நாள் உங்கள விட்டுவச்சதே தப்பு'' என்று கூறி நாடக மேடையைஉடைத்து பிய்த்து எறிந்தார்கள் வன்னியர்கள். நாங்க உடனே புகார் கொடுத்தோம். போலிஸ் எல்லாம் வந்தாங்க. வழக்கம்போல வழக்கு எதுவும் போடல. வானூர் தாலுக்கா ஆபிசுல அமைதிக் கூட்டம் நடத்துனாங்க.
இந்த நிலைமையிலதான் எங்க தலைவரோட பிறந்த நாளுக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதி, போலிசிடம் அனுமதி வாங்கிதலைவரோட பேனர் வைச்சோம். கட்டிய அடுத்த நிமிடமே கூட்டமாக வந்த வன்னியர்கள், “உங்களதான் இனிமே இங்கேஎதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லியிருக்கோம், அப்புறம் என்னடா பேனர் கட்றீங்க'' என்று கூறி கட்டிய பேனரைபிடுங்கி கிழித்து எறிந்தார்கள். உடனே போலிசுக்கு தகவல் கொடுத்தோம். வந்து பாத்தாங்க. எந்த நடவடிக்கையும்எடுக்கல. அதுக்கப்புறம், எங்க கட்சியோட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து கிளியனூர் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தோம். எங்க கட்சியைச் சேர்ந்த, கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் இரணியனும் கூடவந்தாரு. வழக்கம்போல எந்த நடவடிக்கையும் எடுக்கல. ரசீது மட்டும் கொடுத்தாங்க.
இப்படி நாங்க எல்லாம் போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கும்போது, காலனியில் புகுந்த 150–க்கும் மேற்பட்ட வன்னியர்கள்,தலித்துகளின் வீடுகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தினார்கள். வீடுகளில் இருந்த டி.வி., டி.வி.டி., மிக்சி, கிரைண்டர்,பாத்திரங்களையும் உடைத்தார்கள். பித்தளைப் பாத்திரங்களை எல்லாம் திருடிச் சென்றார்கள். வீடுகளில் கட்டியிருந்தஆடு, மாடுகளை எல்லாம் கொடுவாளால் வெட்டிக் கொன்றார்கள். கூரை வீடுகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.கண்ணில்பட்ட தலித்துகளை எல்லாம் தாக்கினார்கள். இரு பெண்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்கக் கோரி கிளியனூரில் சாலை மாறியல் செய்தோம். “தகவல் அறிந்து எஸ்.பி. வந்துகொண்டிருக்கிறார். அவர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார். சாலை மறியலைக் கைவிடுங்கள்'' என்று போலிசார் கேட்டுக்கொண்டதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டோம். விழுப்புரத்திலிருந்து வந்த எஸ்.பி. அமுல்ராஜ், நேராககாலனிக்குள் சென்று வன்னியர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்ட வீடுகளையும், காயம் பட்டவர்களையும்பார்வையிட்டார். வழக்குப் பதிவு செய்யச் சொல்லி, 28 வன்னியர்களைக் கைது செய்து வண்டியில் ஏற்றினர்எஸ்.பி.யுடன் வந்திருந்த போலிசார்.
உடனே ஒன்று கூடிய வன்னியர்கள் எஸ்.பி.யின் வாகனத்தை சூழ்ந்து நின்று, கைது செய்யப்பட்ட வன்னியர்களைவிடுவிக்க கட்டாயப்படுத்தினார்கள். இரண்டு மணி நேரம் வன்னியர்களின் முற்றுகையில் இருந்த எஸ்.பி.யால்வெளியேறி கிளம்ப முடியாத நிலையில், போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கைதுசெய்யப்பட்டவர்களை போலிசார் அழைத்துச் சென்றனர். அதனால், வன்னியர்கள் போலிசாரின் வாகனங்களையும்,நின்றிருந்த பஸ், உட்பட பிற வாகனங்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தினார்கள். இதை செஞ்சது எல்லாம்வன்னியர்கள். ஆனால், கிளியனூர் போலிசார் கேசுல எங்களையும் சேத்தாங்க.
இது மட்டும் இல்லாம, சாலை மறியல் செஞ்சதுக்கும் எங்கமேல புது வழக்குப் போட்டு 8 பேரை கைது செய்தார்கள்.பாதிக்கப்பட்ட நாங்கதான் சிறைக்கும் போக வேண்டியதா இருக்கு. இதைக் கண்டிச்சு விடுதலைச் சிறுத்தைகள் சார்பாகபெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதுக்கப்புறமும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அமைதிக் கூட்டத்துலவீடுகள், பாத்திரங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பா எதுவும் பேசல. பள்ளிக்கு படிக்கப் போற எங்க பசங்கள, “பறப்பசங்க எதுக்குடா நீங்க பேண்டு சட்ட போட்டு வர்ரீங்க, சாக்கு கட்டிகிட்டு வந்து தனியா உட்காருங்கடா என்றுபள்ளியில் உள்ள வன்னியர் மாணவர்கள் மிரட்டுகின்றனர்.
அமைதிக் கூட்டம் நடந்த அடுத்த நாள், ஊரில் வன்னியர் சங்கம் உறுப்பினர் சேர்ப்பு விழாவும், பொதுக்கூட்டமும்நடத்தினார்கள். இந்தக் கூட்டத்துல தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க–ன்னு எல்லா கட்சியில இருந்தும் சுமார்500 வன்னியர்கள் பா.ம.க. கட்சியிலயும், வன்னியர் சங்கத்துலயும் சேர்ந்தாங்க. இந்தக் கூட்டத்துல பேசிய காடுவெட்டிகுரு, “மாட்டை தெய்வமாக நாம் கும்பிடுறோம். அந்த மாட்டை அடித்து, வெட்டித் திங்கற கீழ் சாதிக்காரங்க நம்மளைஎதிர்க்கிறதா? தமிழ் நாட்ல உள்ள 2 கோடி பேரும் நாம் ஒண்ணா இல்லாததால், காலனிக்காரன் நமக்கு சமமா பேசறான்.எவ்வளவு தைரியம் இருந்தா போலிசு ஊருக்குள்ள புகுந்து, நம்மள புடிச்சிகிட்டுப் போவான். எங்க ஊரா இருந்தா உள்ளநுழைஞ்ச போலிசு வெளியில வந்திருக்க முடியாது. இப்படி ஒரு காலனியும் இருக்காது. காலி பண்ணியிருப்பேன்''ன்னுபேசறாரு.''