Thursday, August 5, 2010
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்
நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.
1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.
“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின் மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானதுஞ் மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.
எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.
அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.
“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.
அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.
நன்றி : வினவு
Wednesday, August 4, 2010
கவிப்பேரரசு(!) வைரமுத்துவின் தம்பி பாண்டியன் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவை விசாரனைக்கு ஏற்ற நீதிமன்றம் வழக்கு பதிய உத்திரவிட்டுள்ளது.
ராஜேந்திரன் தனது மனுவில், ‘‘நத்தமேடு கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் உள்ளது. என் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதபிள்ளை என்பவர் அந்த இடத்தை வாங்கிவிட்டதக போலி பத்திரத்தை காட்டினார். இது தொடர்பாக பண்ருட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் அந்த இடம் எனக்குச் சொந்தமானது என்றும், காசிநாதன்பிள்ளை கட்டிய வீட்டை அப்புறப்படுத்தவேண்டும் என 24-04-2010 ல் தீர்ப்பு அளித்தது.
காசிநாத பிள்ளை வீட்டை அப்புறப்படுத்த மறுத்ததோடு அங்கிருந்த மரங்களை வெட்டினார். இது தொடர்பாக நெல்லிக்குப்பம் ஆய்வாளர் பாண்டியனிடம் புகார் மனு அளித்தேன். ஆனால், அவர் என் புகார் மனு மீது எந்தவித விசாரனையும் நடத்தாமல் நான் கொடுத்த புகார் மனுக்களை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரனைக்கு ஏற்று, வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், தனது தீர்ப்பில், ராஜேந்திரனின் புகாரை ஏற்க மறுத்து, வாபஸ் பெற வற்புறுத்திய ஆய்வாளர் பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட 17 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்திரவிட்டுள்ளார்.
ஆய்வாளர் பாண்டியன், கவிப்பேரரசு(?) வைரமுத்துவின் உடன்பிறந்த தம்பி என்பதுதான் இங்கு மிக முக்கியமான செய்தியாகும்.
Subscribe to:
Posts (Atom)