Friday, July 30, 2010

திண்டிவனம் புனித பிலோமினாள் பள்ளியில் : மாணவி இந்துமதி தற்கொலை




திண்டிவனம் புனித பிலோமினாள் பள்ளியிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் இடைநிறுத்தம்
7-ஆம் வகுப்பு மாணவி இந்துமதி தற்கொலை.
திண்டிவனம் சஞ்சீவிராயன்பெட்டையில், கணவனை இழந்த அமுதா தனது மகள் இந்துமதியுடன் வசித்து வந்தார். வாரச்சந்தைகளில் மளிகைப்பொருட்களை விற்கும் கூலி வேலை செய்து மகளை படித்து வைத்து வருகிறார். 1-ஆம் வகுப்பிலிருந்து திண்டிவனத்தில் உள்ள புனித பிலோமினாள் பள்ளியில் படித்துவந்தார் இந்துமதி. ளுடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இந்துமதி அரையாண்டுத்தேர்வின் போது இரண்டு தேர்வுகளை எழுதவில்லை. பின்பு பள்ளி நிர்வாகம் அந்த இரண்டு தேர்வுகளையும் இந்துமதிக்கு தனியாக நடத்தியுள்ளது. இந்துமதியும் சிறப்பாக நடத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 10-05-10 அன்று மாலை 5-00 மணிக்கு அஞ்சலக ஊழியர் பள்ளியிலிருந்து வந்த கடிதத்தை வீட்டில் இருந்த இந்துமதியிடம் கொடுத்துள்ளார். இக்கடித்ததில் ‘‘தங்கள் மகள் 5 பாடங்களிலும் தேர்ச்சி பெறாத காரணத்தினால், பள்ளியில் இடம் இல்லை. எனவே பள்ளியில் வந்து டி.சி&யை பெற்றுச் செல்லவும்’’ என்று எழுதப்படிருந்துள்ளது.
இதைப் பார்த்த இந்துமதி உடனடியாக மனம்வெறுத்து வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். குழந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த தாயின் வேதனைகளுக்கு பள்ளி நிர்வாகம் கொஞ்சமும் கருணை காட்டவில்லை.
புனித பிலோமினாள் பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி அமலி அவர்களின் கடிதம் 2009&ஆம் கொண்டுவரப்பட்ட இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16&க்கு எதிரானதாகும். இந்துமதியின் தாயார் அமுதா அதிகாரிகள் அனைவருக்கும் புகார் எழுதியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்தான் பள்ளியின் இந்தக் கொடூர நடவடிக்கையை கண்டித்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு சார்பில் இன்று
30-07-10 காலை திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் :
1. இறந்துபோன மாணவி இந்துமதியின் தாயார் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்.
2. இறந்துபோன மாணவி இந்துமதியின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.500000/& ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும்.
3. கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டதிற்குப் புறம்பாக மாணவிகளை இடைநிறுத்தம் செய்து, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து மாணவிகளையும், மீண்டும் அதே பள்ளியில் சேர்த்து, அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சியளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Wednesday, July 14, 2010

தலித் குடியிருப்புகளில் தொடரும் தீ விபத்து

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள நெடிமோழியனூர் கிராமத்தின் தலித் குடியிருப்புகளில் கடந்த 3 மாதங்களாக திடீர் திடீர் என ஏற்படும் தீ விபத்து சம்பவங்களால் பெண்களும், குழந்தைகளும், கடும் உளவியல் பாதிப்பிற்கு ஆளாகி பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 14-05-10 அன்று மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் 3 வயது குழந்தை கிரிகிசோர் இறந்துள்ளான். மேலும், 8 வீடுகளும், வீட்டில் இருந்த பொருட்களும் முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பல வீடுகள் எரிந்துள்ளன. இந்நிலையில் கடந்த 07-07-10 அன்று இரு ஆடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கற்பகம், ரேகா என்கிற இரு பெண்களின் உடைகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலதிகாரிகள், வருவாய்த்துறையினர் கிராமத்தைப் பார்வையிட்டனர். ஆய்வு செய்தனர். தீயனைப்பு வண்டி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமும் அக்கிராமத்தினைப் பார்வையிட்டோம்.
அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நடவடிக்கை எடுக்க சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.மேலும், தீயணைப்பு வண்டியும், பாதுகாப்பிற்கு சில காவலர்களும் இருந்துகொண்டிருக்கின்ற இந்த சில நாட்களாக எதுவும் தீப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
• கடந்த 3 மாதங்களாக பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் அச்சத்திலும், கடும் மன உளைச்சலிலும் வாழ்ந்துவருகிறார்கள். இதிலிருந்து மக்களைப் பாதுகாத்து, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமக்குள்ளதை அரசு உணரவேண்டும். உளவியல் ரீதியிலும், பெரும் அச்சத்திலும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களை ஆற்றுபடுத்தி, இயல்பு நிலைக்கு மீண்டும் வரவழைக்க சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை உடனடியாக கிராமத்திற்கு அனுப்பபடவேண்டும்.
• பள்ளிக்கும் செல்லாமல், கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் செல்லாமல் வெளியூரிலும், வயல்வெளிகளிலும் தங்கியுள்ள குழந்தைகளையும், மாணவர்களையும் இப்பாதிப்பிலிர்ருந்து மீட்டெடுக்க குழந்தைகளுக்கான சிறப்பு நிபுணர்கள், மருத்துவர்கள், உரிமையாளர்கள் உள்ளடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைத்து குழந்தைகள் அனைவரையும் நேரில் சந்தித்து, ஒவ்வொருவரையும் இப்பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து தொடர்ந்து கல்வி கற்கவும், அந்தக் கிராமத்திலேயே அவரவர் வீடுகளில் இயல்பாக வாழ்வதற்குமான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
• கடந்த 7-ஆம் தேதி தீப்பிடித்து காயம்பட்ட கற்பகம், ரேகா ஆகிய இரு பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக குணமடையும் வரையில் அரசு தனது பொருப்பில் சென்னையில் உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். மேலும், தலித் குடியிருப்பில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல்வரின் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.
• தீ பிடிக்கும் என்ற அச்சத்தினால் மக்கள் ஒருவர் கூட தமது வீடுகளில் எந்தவொரு பொருளையும் வைக்காமல் வீட்டிற்கு வெளியிலும், மரத்தடியிலும் வைத்துக்கொண்டுள்ளனர். குழந்தைகள் குறிப்பாக மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கக் கூட வீடுகளுக்குள் செல்விதில்லை. எனவே, இவ்வாறு அச்சப்படும் மக்கள் தங்குவதற்காக தற்காலிக தங்கு முகாம்கள் அமைக்கப்படவேண்டும்.
• உண்மைகளைக் கண்டறிய காவல், நிர்வாக, தீயணைப்புத் துறையினர் ஆகியோரைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழுவில் மண்ணியல் ஆய்வாளர்கள், அறிவியல் அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர் ஆகியோரையும் இணைக்கவேண்டும்.
• அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளமுடியாத பல்வேறு மூடநம்பிக்கை கருத்துகளை தொடர்ந்து பரப்பிக்கொண்டு, தாங்கள் இப்பிரச்சனையை சரிசெய்வதாக பல்வேறு மதங்களைச் சேர்ந்த சாமியார்கள் கிராமத்திற்கு வந்துசெல்வதாகவும், சடங்குகள் செய்வதாகவும் அறிந்தோம். இதுபோன்றவர்களின் செயல்பாடுகள் கிராமத்தில் நிலவுகின்ற ஒற்றுமை குலைந்து, சமூகச் சீர்குலைவுகள் உருவாகவே வழிவகுக்கும். எனவே, மாவட்ட காவல், நிர்வாக அதிகாரிகள் இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமாக கிராமத்திற்குள் நுழைய முயல்பவர்களை தடுத்து நிறுத்தி பொது ஒழுங்கை காப்பாற்றிட வேண்டும்.
• தனிநபரின் செயல்பாடுகளா? அல்லது இயற்கையில் ஏற்படும் நிகழ்வுகளா என்பதைக் கண்டறிய அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அடங்கிய சிறப்பு வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.
• இவ்வளவுக்குப்பிறகும் கூட, இப்பிரச்சனைகள் குறித்து சமூக வெளிப்பாடுகளோ அல்லது கவனிப்போ இல்லாமல் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு சமூக நல இயக்கங்கள், அமைப்புகள் உள்ளிட்ட எவரும் இப்பிரச்சனையில் போதிய அக்கறை காட்டாமல் உள்ளனர். பாதிக்கப்படுவது தலித்துகள் என்பதால் போதிய கவனம்பெறவில்லை என்று கிராமத்தின் தலித் இளைஞர்கள் கூறுவதையும் கவனித்தல் கொள்ளவேண்டியுள்ளது.
• கிராமத்தில் நிலவுகின்ற இச்சூழலை அரசு இடர் காலமாக கருதி அனைத்து நல உதவிகளையும் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Friday, July 2, 2010

இலங்கை ராணுவத்தின் போர் குற்றம்

வெளிநாடுகளிலும் இலங்கை இராணுவம் போர் குற்றம்: மறைக்கப்பட்டதா ?

ஹைட்டி நாட்டில் ஐ.நாவின் அமைதிப்படை சென்றபோது இலங்கையில் இருந்து சுமார் 114 இலங்கை இராணுவத்தினரும் சென்றிருந்தனர். 2007 நவம்பர் மாதத்தில் சுமார் 16 வயது நிரம்பிய சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக் காரணமாக, பல இலங்கை இராணுவத்தினரை ஐ.நா திரும்பவும் இலங்கைக்கு அனுப்பியது. வறுமையில் வாடும் சிறுமியருக்கு உணவைக் கொடுத்தும், அல்லது சிறு பணத்தைக் காட்டியும், அவர்களை கரும்புத் தோட்டங்களில் பலாத்காரமாகக் கெடுத்துள்ளது இலங்கை இராணுவம்.

இது குறித்து நேரடி சாட்சியாக ஜோகானா உள்ளார். பாதிக்கப்பட்ட இப் பெண் தெரிவிக்கையில், தனக்கு உணவு தருவதாகக் கூறி தன்னைக் கூட்டிச் சென்ற இலங்கை இராணுவத்தினர் தன்னை கற்பழித்ததாகத் தெரிவித்துள்ளார். இவரது சாட்சியை ஏன் தமிழ் அமைப்புகள் இன்னும் சரிவரப் பயன்படுத்தவில்லை. குற்றம் இழைத்த அனைத்து இராணுவத்தினருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும் என ஐ.நா கோரியிருந்தும், இது குறித்து இலங்கை அரசு தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை இராணுவத்தினரின் இக் குற்றசெயல்கள் தொடர்பான ஆவணங்களை ஹைட்டி நாட்டில் இருந்து பெற்று, போர் குற்றங்களை முன்னெடுக்கும் தமிழ் அமைப்புகள் இதனையும் ஒரு சாட்சியாக வைத்து ஐ.நா நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4070