வழக்கறிஞர் மு.பூபால்
திண்டிவனம் உரோசனையைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.பூபால், சென்னை உயர்நீதி மன்றத்தில், அனைவருக்கும் தெரிந்த மனித உரிமையாளரும், மூத்த வழக்கறிஞருமான பொ. ரத்தினம் அவர்களுக்கு உதவியாக இரண்டரை ஆண்டு பணியாற்றியவர். சொந்த ஊரில், சட்டப் பணியாற்றுவதற்காக திண்டிவனம் திரும்பி, கடந்த 4 ஆண்டுகாலமாக சிறந்த முறையில் வழக்கறிஞராக செயலாற்றி வருகிறார். பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு புகார் எழுதுவது, வழக்கு பதிவு செய்ய காவலதிகாரிகளுடன் உரையாடுவது உள்ளிட்ட மனித உரிமைப் பணியினையும் செய்துவருகிறார். திண்டிவனம் நகர மன்றத்தின் உறுப்பினராக 3-வது வார்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளராகவும் உள்ளார். சட்டவிரோதக் காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட தலித் இளைஞர்களைப் பார்க்க ரோசனை காவல் நிலையம் சென்ற இவரைத்தான், கடந்த 18.10.09 தலைமைக் காவலர் சுப்பையா தாக்கினார்.
ரோசனை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம்.
ரோசனை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம்.
கடந்த 18.10.09, ஞாயிற்றுகிழமை, பகல் 1&30 மணியளவில், ரோசனையைச் சேர்ந்த ராசேந்திரன் என்பவர் தெள்ளார் போகும்போது, ஊரல் கிராமத்தில் இருசக்கர வாகனத்தை, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ இடிச்சிருக்கு. விபத்து தகவல் கிடைச்சு, ரோசனையில் இருந்து ராசேந்திரனின் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் வண்டியை சரி செய்து கொடுப்பதாக சொல்லியுள்ளார். அந்த நேரத்தில், சம்பவ இடத்திற்குச் சென்ற ரோசனை போலீசார், ரோசனை இளைஞர்களை மட்டும் கடுமையாக லத்தியால் அடித்து, ஜீப்பில் தூக்கிபோட்டு காவல் நிலையம் கொண்டு சென்று, சட்டவிரோதக் காவலில் அடைத்து, தொடர்ந்து அடித்துள்ளனர். சாதி சொல்லி தாக்கியுள்ளனர். வீட்டுப் பெண்களை இழிவு செய்து உதவிஆய்வாளர் நாகரத்தினம் கேவலமாக பேசியுள்ளார்.தகவல் அறிந்த வழக்கறிஞர் மு.பூபால், இளைஞர்களைப் பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், இளைஞர்களை போலீசார் அடித்துக்கொண்டிருந்துள்ளனர். ஆய்வாளரிடம் பூபால், ‘‘எதுக்குசார் பசங்கள இப்படி போட்டு அடிகிறீங்க’’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘‘ஊர்காரங்க புகார் கொடுத்தா நாங்க விசாரிக்கக்கூடாதா’’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து பூபால், ‘‘விசாரிக்கிறத யாரும் வேணாம்னு சொல்லமாட்டாங்க சார். புகாரே எதுவும் இல்லாம 10 பசங்கள இப்படி ரத்தம் காயம் வர்ற அளவுக்கு எதுக்கு சார் அடிக்கணும். அவனுங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, வழக்கு போட்டு ரிமான்ட் செய்யுங்க. எதுவும் இல்லாம் இப்படி வச்சி அடிச்சிங்கின்னா என்னா அர்த்தம். காலன்காறங்கன்றதாலதானே நீங்க இப்படி வச்சி அடிக்கிறீங்க.’’ என்று கூறியுள்ளார். அதற்கு ஆய்வாளர் எதுவும் பதில் சொல்லாத நிலையில் பூபால், ‘‘நான் எஸ்.பி&க்கு புகார் எழுதிட்டு அப்புறம் பேசிக்கிறேன். இல்லன்னா கட்சிக்காரங்கள் கூப்பிட்டு சாலை மறியல்தான் செய்யனும்‘‘ என்று கூறிவிட்டு, எழுந்து வெளியில் செல்லத் திரும்பியுள்ளார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஏட்டு சுப்பையா என்பவர் எழுந்து, ‘‘ஓத்தா நீ என்னா பெரிய மயிறா. சாலை மறியல் செஞ்சி, புகார் எழுதிடுவியா’’ என்று கூறியபடி வழக்கறிஞர் பூபாலை கண்ணத்தில் ஓங்கி அடித்துள்ளார். தகவல் அறிந்து, ரோசனைபகுதி மக்கள் சுமார் 300 பேர் காவல் நிலையம் அருகில் கூடியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதைக்கு ஆளான 10 இளைஞர்களையும் போலீசார் விடுவித்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துகொண்டு, மீண்டும் காவல் நிலையம் திரும்பியுள்ளனர். விசாரனைக்கு டி.எஸ்.பி அவர்களிடம், தான் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பூபால் தனிப்புகாரும், சித்திரவதைக்கு ஆளான இளைஞர்கள் தனிப்புகாரும் அளித்தனர். பூபால் புகாருக்கு மட்டும் மனு ஏற்புச்சான்று அளித்தார்கள். தாக்கிய தலைமைக் காவல் சுப்பையா மீது இதுவரை வழக்கும் பதியப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்பட்டாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
மு.பூபால் ஒரு மனித உரிமை வழக்கறிஞர்
மு.பூபால் ஒரு மனித உரிமை வழக்கறிஞர்
தலித்துகளுக்காக மட்டும் அல்லாமல், பல்வேறு கிராமங்களில் பாதிக்கப்படும் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், பழங்குடி இருளர்களுக்காகவும், தொடர்ந்து ஆதரவாக உதவி வருகின்றார். ஆசாரி சமூகத்தைச் சார்ந்த முருங்கம்பாக்கம் ஆட்டோ ஓட்டுனர் கணேசன் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதை மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்துச்சென்றார். பூதேரி கலா உயிரோடு எரித்து கொலை செய்யமுயற்சித்த சம்பவம், அதற்கு சாட்சியாகவும் ஆதரவாகவும் இருந்ததற்காக லட்சுமி தொடர்ந்து சமூகவிரோத சக்திகளாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஒங்கூர்&கரிக்கம்பட்டைச் சேர்ந்த 10 வயது காயத்திரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் குற்றவாளி கைது செய்ய காரணமாக இருந்தார். மாணவர் பருவத்திலேயே, 1997&ஆம் ஆண்டு திண்டிவனம் கீழ்அருங்குணம் கிராமத்தில் நிகழ்ந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை தொடர்ந்து, கைதுசெய்யப்பட்டிருந்த தலித்துகளை பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்ற இவரும் கைதுசெய்யப்பட்டு, 57 நாட்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை முகப்பேரில் கட்டிடத் தொழிலாளியின் மகளை காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மேலும், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களின் அத்துமீறல் சம்பவங்களை கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியாற்றியுள்ளார். அனைவருக்கும் தெரிந்த மனித உரிமையாளரும், மூத்த வழக்கறிஞருமான பொ. ரத்தினம் அவர்களுக்கு உதவியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றியுள்ளார். 1998&ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவராக இருக்கும்போதே, செய்யார் காவல் நிலையத்தில் மரணமான, பெருங்களத்தூர் மோகன் என்பவர் இறந்துபோன சம்பத்திற்கு சி.பி.ஐ விசாரனைகோரி வழக்கறிஞர் பொ.ரத்தினத்துடன் இணைந்து பணியாற்றினார். மேலும், புதுசேரி போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அத்தியூர் விஜயா வழக்கு, செஞ்சி சிறைக்காவலர்களால் பாலியல்வன் கொடுமைக்கு ஆளான ரீட்டாமேரி வழக்கு போன்றவறிலும் பணியாற்றினார்.
உச்சநீதி மன்றத்தில் மனு
1996-ஆம் ஆண்டு மதுரை மேலவளவு கிராமத்தின் தலித் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அண்மையில் உச்சநீதிமன்றம் 17 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையை உறுதி செய்தது. இவ்வழக்கில் 12 வழக்கறிஞர்களுடன் இணைந்து, திண்டிவனம் வழக்கறிஞர் நமது பூபாலும் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் பூபாலின் கல்விப்பணி
வழக்கறிஞர் பூபாலின் கல்விப்பணி
கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த ரோசனையின் கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்காக 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். ரோசனையில் நடைபெறும் தாய்த் தமிழ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளியின் வளர்ச்சியில் இவருடைய பங்கு மகத்தானது ஆகும். அரசின் உதவியில்லாத நிலையிலும், நகரமக்களின் ஆதரவோடு நடைபெறும் மதிய உணவுத் திட்டக் குழுவின் தலைவராகவும் இருந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். நகரத்தில் நடைபெற்று வரும் கல்விச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு மற்றும் மக்கள் கல்வி கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.