Thursday, June 5, 2008

திண்டிவனத்தில் ஒரு உத்தபுரம்










‘‘நாம் சமூக அளவிலும், மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை&எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது.’’ -அறிஞர் அம்பேத்கர்.


மதுரை உத்தபுரம், சேலம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலும் தீண்டாமைச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருப்பது அறிந்து, உரோசனைப்பகுதியில் உள்ள அந்த தீண்டாமை சுவரை பார்வையிட்டோம்.




அப்பகுதியின் நகர மன்ற உறுப்பினரான வழக்கறிஞர் மு.பூபால் அவர்களிடம் இந்த சுற்று சுவர் குறித்து கேட்டபோது, ‘‘திண்டிவனம் நகராட்சியின் 3&வது வார்டு உரோசனை. இது தனி ரிசர்வ் வார்டு. இங்க இருக்கின்ற துரைசாமி ஆசிரியர் தன்னோட 2 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தார். அதை வாங்கியவர்கள் வழிகளை உருவாக்கி பிளாட் போட்டிருந்தார்கள். ரோசனையில் இருந்து அரசு மருத்துவனைக்கு, முருங்கம்பாக்கம் பள்ளிக்கும், முருங்கம்பாக்கத்திலிருந்து சோலார் பள்ளிக்கும் செல்பவர்கள் ஆண்டுகணக்கில் இந்த வழிகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பாண்டிச்சேரிய சேர்ந்த பாஸ்கர் என்பவர் இந்த இடத்தை வாங்கினாரு. அவர் உடனடியாக இந்த 2 ஏக்கர் நிலத்தை சுத்தி நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பினாரு பாஸ்கர். அப்துல்கலாம் நகர்னு பெயர் பலகை வைச்சி, நகர் திறப்பு விழாவும் நடத்தினார். அந்த இடம் இருக்கிறது எங்களோட 3&வது வார்டு. திறப்பு விழாவிற்கு வார்டு உறுப்பினர்ங்கிற முறையில என்னை கூப்பிடாமல், தலித் அல்லாத 4&வது வார்டு உறுப்பினர கூப்பிட்டுள்ளார்கள். எங்க ஆளுகிட்ட இருந்து வாங்கின இடம். ஆனா இப்ப அந்த இடத்த நாங்க பாக்கறதுக்கு கூட வழியில்லாமல் உள்ளது. அவ்வளவு பெரிய சுவர், 4 பக்கமும் கட்டியிருக்காங்க. உரோசனையில் உள்ள 4 தெருவின் பின்பக்க வழியை மறைத்து ஆளுயரச் சுவர் எழுப்பியுள்ளார்கள். அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு இருந்த வழிகள் மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கள் வார்டிலிருந்து துண்டிக்கப்பட்ட தனிதொகுதியாக உள்ளது. அந்த புதிய நகருக்கு, குடிநீர் மற்றும் மின் வசதி போன்றவைகளை எங்களுடைய 3 வார்டிலிருந்துதான் செல்லவேண்டும். ஆனால் அதற்கெல்லாம் வழியில்லாமல் நான்குபக்கமும் சுவர் உள்ளது. ஒருவேளை திண்டிவனத்தின் 34 வது வார்டாக இந்த நகரை மாற்ற உள்ளார்களோ என்னவோ புரியவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கூறியுள்ளேன். நகர் மன்றக் கூட்டத்திலும் இப்பிரச்சனைனையை எழுப்ப உள்ளோம்.’’ என்று கூறினார்.


தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞரான வடிவேல் நம்மிடம், ‘‘எங்க காலனி ஆளுகிட்ட இருந்து சென்ட் ரூ 15 ஆயிரம்னு வாங்கி, இப்ப நாலு பக்கமும் சுவர் கட்டி சென்ட் 60 ஆயிரம்னு விக்கிறாங்க. அதுக்கு இந்த இடம் காலனி இல்ல, தனி இடம்தான்னு காட்டறதுக்காக இந்த இடத்திலிருந்து காலனிய மறைச்சி சுவர் கட்டியிருக்காங்க. உரோசன காலனிக்கு இந்த இடத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லன்னு காட்ட சுவர் கட்டினது மட்டும் இல்லாம, திறப்பு விழாவிற்கு எங்க வார்டு உறுப்பினர கூப்பிடாம, பக்கத்துல இருக்கிற எஸ்.சி இல்லாத வேற உறுப்பினர கூப்பிடுறாங்க. எங்க காலனிய சேர்ந்த இடத்த, அதிக விலைக்கு விக்கினும்ங்கிறதுக்காக, காலனி இடம் இல்லன்னு காட்ட நாலுபக்கமும் சுவர் கட்டியிருக்காங்க. எந்த காலத்தில் வாழ்கிறோம்னு தெரியல. அந்த காலத்திலதான் எங்கள பாத்தாலே தீட்டு, நாங்க தெருவில நடந்தாலே தீட்டுனு எங்கள அடிமையா வச்சிருந்தாங்க. இப்ப எங்க காலனி இடத்திலேயே எங்கள தீண்டப்படாதவங்களா ஒதுக்கிவச்சிருக்காங்க.’’ என்று கூறினார்.

தலித் இடமிருந்து வாங்கிய நிலத்தை விற்கவேண்டும் என்பதற்காக, தலித் குடியிருப்பிற்கும் அந்த இடத்திற்கும் உள்ள தொடர்புகளை தடுத்து, நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து, கள ஆய்வு செய்து, தலையீட்டுப் பணிகளையும் செய்து வருகின்ற திண்டிவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் திட்ட மேலாளர் மோகன் அவர்களை சந்தித்து கேட்டபோது, அவர் நம்மிடம். ‘‘சமூக ஓட்டத்தில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமலிருப்பது தீண்டாமை ஒன்றுதான். உலகம் நவீன மயமாகி வருகின்ற நிலையில் தீண்டாமையும் நவீன வடிவம் எடுக்கிறது. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், வெளிப்படையாக தெரியாதவண்ணம் எங்கும் நிகழ்ந்து வருகிறது. அதன் அடையாளம்தான் இது போன்ற தீண்டமைச் சுவர்கள். இப்போது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், இது தீண்டாமமைச் சுவர் கிடையாது, புதிய நகர் உருவாக்கத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய நகரை உருவாக்குகின்றோம், அதன் ஒரு அங்கம்தான் இந்தச் சுவர் என்பார்கள். ஆனால் தலித் மக்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து, அவர்களைப் பிரித்து, தனிமைப்படுத்தி, தலித் குடியிருப்பில் இருந்து அந்த இடத்தை பிரித்துக்காட்ட சுற்றுச்சுவர் எழுப்பியிருப்பது என்பது தீண்டாமை இல்லாமல் வேறென்ன என்பது புரியவில்லை. தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் பறிபோனது. இப்போது, தலித் குடியிருப்புகளை ஒட்டியுள்ள இடங்கள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் திருடப்பட்டு வருவதுடன், அந்தப் பகுதிகளில் இருந்தெல்லாம் தலித்துகள் வெளியேற்றப்படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சுவரை இடித்து, வழி ஏற்படுத்தி, தீண்டாமை சுவர் கட்டிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி தமிழக அரசுக்கு புகார் அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. தற்போது தலித் மக்கள் மீது நிகழும் வன்கொடுமைகள், தீண்டாமை வடிவங்கள் எல்லாம நவீனமயமாகி வருகின்றது என முன்பெ சொல்லியுள்ளேன். இந்நிலையில், இந்திய அரசாங்கம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக குழு அமைத்துள்ளார்களாம். அக்குழுவினர் நடத்த உள்ள கருத்தறியும் கூட்டங்களில் நாம் பங்கேற்று, இந்த தீண்டாமை சுற்றுச் சுவர் போன்ற நவீன தீண்டாமை வடிவங்கள் குறித்தும் ஆய்வு செய்து, தடுப்பதற்கான புதிய சட்ட விதிகளை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளை குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதிய சட்ட விதிகளின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டிய முக்கிய பொறுப்பும், கடமையும் நம்மைப்போன்றோருக்கு உள்ளது.’’ என்று கூறினார்.






புதிய உருவாக்கம், வளர்ச்சி என்பதெல்லாம் முன்னேற்றத்தையும், நாகரிகத்தையும் அடிப்படையாகக்கொண்டிருக்கவேண்டும். சமூகத்தின் பெரும்பகுதியாக உள்ள ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத மாற்றம் நிகழ்ந்துவருகிறது. அதன் வெளிப்பாடுகள்தான் இதுபோன்ற தீண்டாமைச் சுவர்கள். நாகரிகமடையவேண்டிய சமூகம் மீண்டும் கற்காலத்தைவிட மோசமான சூழலுக்கு செல்வதையே காட்டுகிறது.

No comments: