Wednesday, May 16, 2007

திண்டிவனத்தில் "மீண்டும் ஒரு கும்பகோணம்"திண்டிவனம் நகரில் உள்ள வேதவள்ளியம்மாள் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் முஸ்லீம் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அறக்கட்டளையின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் திண்டிவனத்தைச் சேர்ந்த கே.சி.ராஜாபாதர் என்பவர், மேற்படி முஸ்லீம் நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தைச் சட்டவிரோதமாக கல்வி அதிகாரிகள் துணையோடு, 1998-இல் கைபற்றினார். அதே கட்டிடத்தில் அரசின் முன் அனுமதியின்றி 1999-லிருந்து உயர்நிலைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.

பள்ளி நடக்கின்ற இந்தக் கட்டிடம் 1878-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 129 ஆண்டு பழமையான, சிதிலமடைந்த இக்கட்டிடம் எப்போதும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை அறக்கட்டளை சார்பில் 1990 முதல் தமிழக முதல்வர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் அனைவருக்கும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இக்கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது என 27.06.2003 நாளிட்டு விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நடந்ததையடுத்து, இப்பள்ளிக்கட்டிடத்தை ஆய்வு செய்த திண்டிவனம் அப்போதைய வட்டாட்சியர் ராசேந்திரன், பள்ளியை தொடர்ந்து இக்கட்டிடத்தில் நடத்தக்கூடாது என 21.07.04 அன்று தடை விதித்தார். மேலும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், இக்கட்டிடத்தில் இருந்து பள்ளியை வேறு பாதுகாப்பான கட்டிடதிற்கு மாற்ற வேண்டும் எனவும், அவ்வாறு மாற்றவில்லையெனில் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பள்ளி நிர்வாகியான் ராஜாபாதர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என 27.07.04 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றிய ராஜாபாதர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்குத் தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதிகாரிகளின் உத்தரவுகளைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதற்கு மட்டும் தடைவிதித்தது. பள்ளியை அதேகட்டிடத்தில் நடத்தக்கூடாது என்ற அதிகாரிகளின் உத்தரவுகளுக்குத் தடைவிதிக்க மறுத்தது.

ஆனாலும் ராஜாபாதர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கினைப் பயன்படுத்தி தொடர்ந்து அதே கட்டிடத்தில் பள்ளியை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அறக்கட்டளை சார்பிலும், திண்டிவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழுவின் சார்பிலும் தமிழக முதல்வர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சனவரி 22-ஆம் தேதி புதுகோட்டையில் வெங்கடேஸ்வரா நர்சரி பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில் 20 குழந்தைகளும், வகுப்பு ஆசிரியர்களும் காயமடைந்தனர்.

தற்போது சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையிலுள்ள முஸ்லீம் நடுநிலைப் பள்ளியில் 200 மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களின் உயிரைக் காப்பாற்றக் கோரி அறக்கட்டளை தலைவர் முதல்வரிடம் முறையிட்டார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி அலுவலர், ‘‘ சிதிலமடைந்த கட்டிடத்தை, நகராட்சி நிர்வாக விதிகளின்படி இடித்துவிட்டு பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட முஸ்லீம் நடுநிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றிட விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ’’ தொடக்கக் கல்வி இயக்குனர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், திண்டிவனம் நகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார். பள்ளியில் 1000 மாணவர்கள் படிப்பது போன்ற பொய்யான தகவல்களை நீதிமன்றத்திற்கு தந்து ராஜாபாதர் இந்த உத்திரவிற்கு தடை வாங்கியுள்ளார்.

அதிகாரிகள் அலட்சியத்தால் கும்பகோணத்தில் நேர்ந்த கொடுமைகள் திண்டிவனத்தில் தொடராமல் இருக்க வேண்டும்.

1 comment:

இரா.சுகுமாரன் said...

இந்த சமூகம் முன்னேறிய சமூகம் அல்ல எவன் எக்கேடு கெட்டால் என்ன என்றுதான் அதிகாரிகள் இருக்கிறார்கள் கும்பகோணம் பிரச்சனையில் மக்கள் போராட்டத்தின் காரணமாகவே சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன எனவே அதிகாரிகளிடம் எதையும் எதிர்பார்பது என்பது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளும் முயற்சி.