Sunday, May 31, 2020

தாகம் - கவிஞர் அறிவுச்செல்வன் புத்தகம்

கவிதைகள் படிப்பது கடந்த பல ஆண்டுகளாக நின்றே விட்டது. ஏனோ, கவிதைப் புத்தகங்கள் பக்கம் மனம் போகவே இல்லை.

80 களின் இறுதி, 90 களில் பல வடிவங்களில் கவிதை நூல்கள் வெளியாகின. வடிவமைப்பும் வித்தியாசமாக இருக்கும்.
ஏ4 தாளை நீளவாக்கில் மடித்து (பேருந்தில் நடத்துனர் பயன்படுத்தும் பயணச் சீட்டு புத்தகம் போன்று) ஒரு கவிதைப் புத்தகம் இப்போது பார்த்தேன். படிக்கத்தோன்றியது.
அகம் என்ற தலைப்பில் அறிவுச் செல்வன் என்பவர் எழுதியிருந்த கவிதைப் புத்தகம்.
எந்த ஆண்டு என கண்டுபிடிக்க முடியவில்லை. படித்து முடித்த பிறகு கடைசி பக்கத்தில் கி.ரா அவர்களின் அணிந்துரையில்தான் 1993 ல் வெளியான புத்தகம் எனத் தெரிந்தது.
அப்போதைய கவிதைகளில் Trending ஆக இருந்த சமூகச் சாடல், வெறுப்பு, தோல்வி, சோகம், தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு, பெண் விடுதலை போன்றவைகளை மையமாக கொண்ட கவிதைகள் நிறைந்த புத்தகம்.
சில கவிதைகள் தற்போதும் ரசிக்கும்படியாக இருந்தது.. அவைகள்தான் இவை.
நம் கடைகள்
தேவைகளுக்காக இல்லை
நாம்தான் கடைகளின் தேவை
என்றானது இன்று.
உன் தேவைகளை
விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன.
எல்லோருக்கும் தெரிகிறது,
எப்படி விற்பது என்றும்
எப்படி வாங்குவது என்றும்.
எவனுக்கும் தெரியவில்லை,
எப்படி வாழ்வில் என்றும்
எதைநோக்கி வளர்வது என்றும்.
இந்தச் சந்தையில்
எந்த மனிதனுக்கும்
உள்ளீடு இல்லை.
ஆன்மாவில் கொஞ்சமும்
அடர்த்தி இல்லை
வாங்க முடியாதது
எதுவுமே இல்லை..
ஒருவேளை, இருந்தால்..?
__என்ன,
கொஞ்சம் அதிக விலை இருக்கும் அவ்வளவுதான்....
தகுந்த விலை கிடைத்தால்
தன்னையே விற்பவன்,
தள்ளி நிற்காவிட்டால்
உன்னையும் விற்பான்.
உன் சகோதரன் வாங்குவான்.
நுகர்வு கலாச்சாரத்திற்கு
கடிவாளம் ஏதாவது செய்யாவிட்டால்.. மனிதர்களின் சாம்ராஜ்யம் சரிந்து சாமான்களின் சாம்ராஜ்யம் வளர்ந்து
யாருமே எதுவுமே
செய்யமுடியாது..
+++++++
(#இந்தக்_கவிதை_தற்போதை_ஊரடங்கு காலத்திற்கு பொருத்தமான தோன்றும்)
இது
நமது மக்களின்
ஓய்வு நேரங்களுக்கு
உயிர் ஒட்டவில்லை.
இரக்கமற்ற
முதலாளி போலாகிவிட்டது.
உழைக்கும் நேரங்களைச்
சுரண்டுகிறது.
உண்ணும் நேரங்களை
தின்னுகிறது.
உலவும் நேரங்களை
ஓடிக்கிறது.
படிக்கும் நேரங்களைப்
பறிக்கிறது
சிந்திக்கும் நேரங்களைச்
சிதைகிறது.
++++++
(#குழந்தைகளை_கட்டுப்பாடுகளுடன் பொத்தி பொத்தி வளர்க்கும் பெற்றோர்களுக்கு இந்தக் கவிதையைக் கூறுகின்றார். )
அவர்களை
இறக்கிவிடுங்கள்;
தங்களது
தளத்தையும் களத்தையும்
அவர்கள்
கால்களால் அடையட்டும்.
உங்கள் மலைகளைவிட
எங்கள் பள்ளத்தாக்குகள்
உயரமானவை.
உங்கள் மூதாதையரைவிட
எங்கள் விடலைகள்
அறிவாளிகள்.
உங்களைவிட
எங்கள் மூளைகள்
முற்றல்.
++++++
#1993ல்_எழுதப்பட்டுள்ள_இந்தக் கவிதையில், ஆதிக்கத்தினை விலங்குகளோடு ஒப்பிட்டு, இறுதியில் பெண்கள் மீதான ஆதிக்தையும் சாடுகிறார்)
எங்கும் விலங்குகள்
வியட்நாம்களில்
கழுகுகள்
வெண்மணிகளில்
பாம்புகள்
தெலுங்கானாக்களில்
நரிகள்
ஈழங்களில்
ஒட்டகங்கள்.
அலங்காநல்லூரில்
மாடுகள்
அலுவலகங்களில்
நாய்கள்
காக்கித்தோல்
புலிகள்.
பேருந்துகளில்
எருமைகள்
திரையரங்குகளில்
பன்றிகள்.
வீடுகளில்
கணவர்கள்.
வீதிகளில்
ஆடவர்கள்.
இப்படி
எங்கும் விலங்குகள்..
..
ஆண்களே..
உங்கள்
நகங்கள் அழிவதெப்போ?
நச்சுப்பல் விழுவதெப்போ?
கொம்புகள் உடைவதெப்போ?
அன்பினை அறிவதெப்போ?
++++++
(#ஒரு_கவிதையில்_இடையில் இருந்த இந்த வரிகள்.. தற்போதைய சனாதன ஆட்சியின் அடக்குமுறைகளை நினைவுபடுத்துகிறது.
எல்லாச் சந்தேகங்களே,
கைகட்டுங்கள்..
எல்லாக் கேள்விகளே,
வாய்ப் பொத்துங்கள்!.
+++++
கவிதைகள் கவிஞர் அறிவுச்செல்வன்.

No comments: