Sunday, May 31, 2020

என்.எல்.சி-யில் ஊழல் - புகார் அனுப்பியவர், அறிக்கை அளித்தவர்கள் மீது அவதூறு செய்தி; நடவடிக்கை எடுக்கப்படவேண்டு!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக அவர் துணைத் தலைமை மேலாளர் பதவிக்கு வந்த போதே போதிய கல்வித் தகுதி இல்லாமலும், போலியான பணி அனுபவ சான்றிதழ்கள் அளித்தும் வந்துள்ளார். ஊழல், முறைகேடு செய்து சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி, பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆர்.நரசிம்மன் இவரைச் செயற்பொறியாளர் பதவியிலிருந்து முதுநிலைப் பணியாளர் மேலாளராக சட்ட, விதிகளை மீறி நியமனம் செய்துள்ளார்.
மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் பணி நியமனங்களில் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆட்களை நியமித்துள்ளார். அதுவும் உயர் பதவிகளானப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் பதவிகளுக்குப் பணி நியமனம் செய்யும் போது என்.எல்.சி. நிறுவனத்திலோ அல்லது இதே தகுதியுடைய பிற பொதுத்துறை நிறுவனங்களிலோ பணியாற்றிய தகுதியானவர்களை நியமனம் செய்வது வழக்கம். ஆனால், அவ்வாறு செய்தால் லஞ்சம் பெற முடியாது என்று சிறு நிறுவனகளில் இருந்து உயர்பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து லஞ்சம் பெற்றுள்ளார். மேலும், வெளியில் இருந்து நியமனம் செய்தால் தன் மீது ஊழல் புகார் அளிக்க மாட்டார்கள் என்பதாலும் இதுபோன்று செய்துள்ளார்.
ஊழல் புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கில் சிக்கிப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆர்.நரசிம்மனின் மகன் கணேஷ் நரசிம்மனை என்.எல்.சி. சட்ட, விதிமுறைகளை மீறி துணைத் தலைமை மேலாளர் பதவிக்கு நியமனம் செய்து, அவரும் பணியில் சேர்ந்துள்ளார்.
நெய்வேலி நகரியத்தில் தான் குடியிருக்கும் அதிகாரபூர்வ வீட்டைப் பராமரமரிக்க தானே கோப்பில் கையெழுத்திட்டு ரூ. 70 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துள்ளார். விதிகளை மீறி ஓராண்டில் இரண்டு முறை தன் வீட்டிற்குத் திரைத்துணி வாங்கியதில் மொத்தம் ரூ. 3 லட்சம் முறைகேடு செய்துள்ளார்.
சொந்தப் பயணமாக டோக்கியோ சென்ற போது தன் கைப்பேசி கட்டணமாக ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு பில் அளித்து என்.எல்.சி. நிதித்துறை ஆட்சேபனையை மீறி அப்பணத்தைப் பெற்றுள்ளார். தனக்குக்கீழ் பணிபுரியும் சிலரைப் பினாமியாக வைத்து என்.எல்.சி. நிறுவன கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை எடுத்து அதில் நிறைய சம்பாத்தித்து வருகிறார்.
மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் செய்ய ஊழல், முறைகேடுகள் குறித்து என்.எல்.சி. தலைமைப் பொதுமேலளர் திரு. சி.துரைக்கண்ணு அவர்கள் கடந்த 06.05.2020 மற்றும் 13.05.2020 ஆகிய நாளிட்டு பிரதமர், மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ. உள்ளிட்டு பலருக்கும் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அதில் மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து சென்ற 23.05.2020 அன்று தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு செயலாளர் இரா.முருகப்பன் ஆகிய நாங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டோம். அதில் மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் மீதான ஊழல், முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களைப் பட்டியலிட்டு, அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தோம்.
இதனைத் தொடர்ந்து, விருத்தாசலத்தில் இருந்து வெளியாகும் தடயம் என்ற இணைய நாளிதழில் “என்.எல்.சி. மனிதவள துறையின் மாசற்ற மாணிக்கம் இயக்குநர் விக்ரமன்” என்ற தலைப்பில் அதன் ஆசிரியர் தடயம் பாபு ஒர் செய்தி எழுதி வெளியிட்டுள்ளார். அதில் மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமனின் ஊழல், முறைகேடுகள் குறித்து புகார் அளித்துள்ள அதிகாரி சி.துரைக்கண்ணு குறித்து இழிவாகவும், அவதூறாகவும் கீழ்காணும்படி எழுதியுள்ளார்.
“நெய்வேலி பகுதியில் அனைவராலும் ஓரங்கட்டப்பட்ட, விலங்குகளோடுகூட ஒப்பிட முடியாதவரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு நேர்மையான அதிகாரி மீது பழிச்சொல் வார்த்தையை பூசுவது சமூக ஆர்வலர்களான உங்களுக்கு அழகா?” என்று எழுதியதோடு, மனித உரிமைத்தளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றி வரும் எங்களையும் கேவலப்படுத்தும் வகையில் எழுதியுள்ளார். இந்த மேற்சொன்ன தடயம் பாபுவிற்குப் பின்னால், என்.எல்.சி. நிறுவனத்தில் முழுநேர ஊழியராகவும், தினமலர் நாளேட்டில் செய்தியாளருமான வரதராஜிலு என்பவர் இருக்கிறார் என்பது விசாரித்ததில் தெரிகிறது. இவர்களின் நோக்கமே பணம் பெற்றுக் கொண்டு (Paid News) வெளியிடுவதும், ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது அவதூறாக செய்தி வெளியிட்டு, பிறகு மிரட்டி “பிளாக்மெயில்” செய்து பணம் பறிப்பதும் ஆகும்.
இந்நிலையில், மேற்சொன்ன தடயம் பாபு, வரதராஜிலு மீது சென்ற 26.05.2020 அன்று, நெய்வேலி, வடக்குத்து காவல்நிலையத்தில் சி.துரைக்கண்ணு புகார் அளித்துள்ளார். அதில், தன்னை இழிவுப்படுத்திச் செய்தி வெளியிட்ட மேற்சொன்னவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
என்.எல்.சி நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் சி.துரைக்கண்ணு தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் உதவிப்பொறியாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, என்.எல்.சி நிறுவனத்தில் 1986-ல் பணியை மேற்கொண்டவர். தனது பணிக்காலங்களில் ஏற்றுக்கொண்ட பணிகளில் முத்திரைப் பதித்தவர்.
2001-2004ஆம் ஆண்டு என்.எல்.சி கல்விச் செயலாளராக பணியாற்றியபோது என்.எல்.சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தியவர். 2014-ல் நெய்வேலி அருகில் 1664 ஏக்கரில் அடையாளமின்றி தூர்ந்துகிடந்த வாலாஜா ஏரியை என்.எல்.சி நிறுவனத்தின் சி.எ.ஸ்.ஆர் திட்டத்தின்கீழ் ரூ. 14 கோடியில் சீரமைத்து, நிறுவனத்திற்கு அகில இந்திய அளவில் புகழைச் சேர்த்தவர்.
2016-ல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்கங்களின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்று, பல்வேறு நலத்திட்டங்ளைச் செயல்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றவர்.
இதுமட்டுமன்றி என்.எல்.சி. நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக மறைந்த ஐ.பி.எஃப் செல்வராஜ், பொறியாளர் பரமசிவம் உள்ளிட்ட பல நேர்மையானவர்களுடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வெற்றியும் கண்டவர். 1999-ல் நிறுவனத் தலைவர் பூபதி, 2005-ல் நிர்வாக இயக்குநர் நரசிம்மன், 2009-ல் நிறுவனத் தலைவர் அன்சாரி ஆகியோர் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்தவர்.
இப்படியான செயல்களின் மூலம் நற்பெயருடன் விளங்குபவரும், இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனம் திறம்பட செயல்படவும், ஊழல், முறைகேடுகள் மலிந்து அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நல்ல நோக்கத்தோடு பணியாற்றி வரும் அதிகாரியுமான சி.துரைக்கண்ணு மீதும், அவருக்குத் துணையாக இருக்கும் எங்களையும் இழிவுபடுத்திய மேற்சொன்ன செய்தியாளர்கள் தடயம் பாபு, வரதராஜிலு ஆகியோரின் உள்நோக்கம் கொண்ட செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தினமலர் நாளேடு உள்ளிட்டு தமிழகம், புதுச்சேரியிலுள்ள அனைத்து ஊடகங்களும் நாங்கள் எடுக்கும் பல்வேறு மனித உரிமைச் சார்ந்த பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்க எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்து வருகின்றன என்பதையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே, நேர்மையான அதிகாரி சி.துரைக்கண்ணு மற்றும் எங்களையும் உள்நோக்கத்தோடு இழிவுப்படுத்தி அவதூறாக எழுதிய மேற்சொன்ன தடயம் பாபு, வரதராஜிலு ஆகியோர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், கடலூர் மாவட்ட காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பேராசிரியர் அ.மார்க்ஸ்
தேசியத் தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO).
பேராசிரியர் பிரபா.கல்விமணி,
தலைவர், மக்கள் கல்வி இயக்கம்.
கோ.சுகுமாரன் , செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
இரா.முருகப்பன், செயலாளர்,
நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு.


(31.05.2020 முக நூல் பதிவு)

No comments: