Saturday, May 23, 2020

ஊழலில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி மனித வளத் துறை இயக்குனர் விக்கிரமன்

ஊழல் மற்றும் முறைகேட்டில்
ஈடுபட்டுள்ள என்.எல்.சி மனித வளத் துறை இயக்குனர் விக்கிரமன் மீது சி.பி.ஐ.விசாரணை நடத்தப்படவேண்டும்!
-------------------------------------------------------

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ்,
மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்,
நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு செயலாளர் இரா.முருகப்பன்
ஆகியோர் இன்று (23.05.2020)
விடுக்கும் கூட்டறிக்கை:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் முறைகேடான பணி நியமனங்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டுவரும் மனித வளத்துறை இயக்குநர் ஆர்.விக்கிரமன் மீது சி.பி.ஐ புலன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சுமார் 25,000 ஏக்கரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பரந்து விரிந்துள்ளது. இந்நிறுவனம் 1956ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்டது. தற்போது மூன்று சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதுடன், மின்சாரமும் இங்குத் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நிலக்கரி  வெட்டி எடுப்பது, மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக நெய்வேலி நகரம் உருவாக்கப்பட்டது. 3500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் சுமார் 15000 ஒப்பந்தப் பணியாளர்கள் என 30,000-த்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.

தற்போது என்.எல்.சி நிறுவனத்தின் மனித வளத்துறைத் இயக்குநராக உள்ள ஆர்.விக்கிரமன் இந்தப் பதவிக்கு வந்தபிறகு, பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பணியும், பதவி உயர்வும் என்றாகிவிட்டது. தகுதியற்ற நபர்களுக்குப் பணி வழங்குவதுடன், தகுதியுடைய பல மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்குப் பதவி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைப்பது, லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்குவது என்ற நிலை உருவாகியுள்ளது.
         
செயற்பொறியாளர் பதவியிலிருந்த ஆர்.விக்கிரமன், திடீரென முதுநிலைப் பணியாளர் மேலாளராக (Senior Personal Manger) நியமிக்கப்பட்டார். இதற்காக முறையான எந்தவொரு விதிகளும் பின்பற்றப்படவில்லை. சட்டத்திற்குப் புறம்பான வழியில் இந்தப் பதவியில் அவர் நியமிக்கப்பட்டார். இப்படி இவரை பணியமர்த்திய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.நரசிம்மன், பிற்காலத்தில் ஊழல் புகாரில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு.

தற்போது மனித வளத்துறையில் உள்ள ஆர்.விக்கிரமன் ஒவ்வொரு பணி நியமனத்திற்கும் ரூ 30 முதல் 50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டே பணி வழங்குகின்றார் எனப் புகார் எழுந்துள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தில் தலைமை மேலாளர், துணைப் பொதுமேலாளர் போன்ற உயர் பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்கும்போது, என்.எல்.சி நிறுவனம் அல்லது அதுபோன்ற அரசின் பிற பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அப்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் 30 அல்லது 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வரமாட்டார்கள். எனவே, சிறிய தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தவர்களிடம் கணிசமாக லஞ்சம் வாங்கிகொண்டு, மேற்படி பணிகளை நிரப்பி வருகிறார்.  குறிப்பாக என்.எல்.சி மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய பி.சத்தியமூர்த்தி, ஏ.ஜே.திருக்குமார், சுப்பிரமணி, எம்.அறிவு, எம்.முனிராஜ், சோமு போன்றோருக்கு பணி வழங்காமல், கடலூரில் சிறு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த திரு எம்.சிவராஜ் என்பவரை துணைப் பொது மேலாளர் பதவிக்கு மேற்படி விக்கிரமன் நியமனம் செய்துள்ளார்.

மேலும், பதவி உயர்வு அடிப்படையில் துணைப் பொதுமேலாளர் மற்றும் பொதுமேலாளர் பதவிக்கு வரவேண்டிய பலர் காத்திருக்கின்றனர். ஆனால், என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் அனல்மின் நிலையங்களில் பணி புரிந்த கே.மதி, மகாராணா ஆகிய இருவரையும் மேற்படி ஆர்.விக்கிரமன் நேரடியாக பொது மேலாளராக நியமனம் செய்துள்ளார்.
           
எல்லாவற்றுக்கும் மேலாக, என்.எல்.சி நிறுவனத்தில் ஊழல் செய்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.நரசிம்மனின் மகன் கணேஷ் நரசிம்மன் என்பவருக்கு உரிய தகுதி இல்லாதிருந்தும், துணைத் தலைமை மேலாளர் எனும் உயர் பதவிக்கு தேர்வு செய்துள்ளார்.

நெய்வேலி நகரில் உள்ள தனது குடியிருப்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதாகக் கூறி ரூ. 70 லட்சம் கையாடல் செய்துள்ளதாக புகார் உள்ளது.

ஆர்.விக்கிரமன் தனது சொந்தப் பயணமாக டோக்கியோ, ஜப்பான் நாடுகளுக்கு சென்று வந்து, அதற்கான தொலைபேசிக் கட்டணமாக ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை அலுவலகச் செலவில் காட்டியுள்ளார். இதற்கு என்.எல்.சி நிறுவனத்தின் நிதித்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிறுவன விதிகளை மீறி அந்தத் தொகையினைப் பெற்றுள்ளார். மேலும், ஆர்.விக்கிரமன் தனது கிராமத்தில் என்.எல்.சி-யின் சி.எஸ்.ஆர். நிதியில் ஒரு கோவில் கட்டியுள்ளார். இது சி.எஸ்.ஆர். விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இந்நிலையில்தான் மேற்படி மனித வளத்துறை இயக்குநர் ஆர்.விக்கிரமன் செய்து வரும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, என்.எல்.சி நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் சி.துரைக்கண்ணு கடந்த 06.05.2020 அன்று, மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் உதவிப்பொறியாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, என்.எல்.சி நிறுவனத்தில் 1986-ல் பணியை மேற்கொண்ட சி.துரைக்கண்ணு, தனது பணிக் காலங்களில் ஏற்றுக்கொண்ட பணிகளில் முத்திரைப் பதித்தவர்.

2001-2004ஆம் ஆண்டு என்.எல்.சி கல்விச் செயலாளராக பணியாற்றியபோது என்.எல்.சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தியவர்.

2014-ல் நெய்வேலி அருகில் 1664 ஏக்கரில் அடையாளமின்றி தூர்ந்துகிடந்த வாலாஜா ஏரியை என்.எல்.சி நிறுவனத்தின் சி.எ.ஸ்.ஆர் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடியில் சீரமைத்து, நிறுவனத்திற்கு அகில இந்திய அளவில் புகழைச் சேர்த்தவர்.

2016-ல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்கங்களின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்றார். பல்வேறு நலத்திட்டங்ளைச் செயல்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று வருபவர்.

இதுமட்டுமன்றி என்.எல்.சி நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக மறைந்த ஐ.பி.எஃப் செல்வராஜ் மற்றும் பொறியாளர் பரமசிவம் உள்ளிட்ட பலருடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வெற்றியும் கண்டவர். 1999-ல் நிறுவனத் தலைவர் பூபதி, 2005-ல் நிர்வாக இயக்குநர் நரசிம்மன், 2009-ல் நிறுவனத் தலைவர் அன்சாரி ஆகியோர் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்தவர்.

எனவே, என்.எல்.சி நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குர் ஆர்.விக்கிரமன் செய்த பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ புலன்விசாரணை நடத்த என்.எல்.சி தலைவரும், மத்திய அரசும் உரிய நடவடிக்களை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

இவண்,

பேராசிரியர் பிரபா கல்விமணி 9442622970
பேராசிரியர் அ.மார்க்ஸ் 9444120582
கோ.சுகுமாரன்  9894054640



இரா.முருகப்பன் 9894207407

No comments: