இன்றைய
கருத்துப் பேழையில் வாக்குச் சாவடி அலுவலர்கள் குறித்த கட்டுரை மிக மிக முக்கியமானது.
அனைத்தையும் பேசவில்லை என்றாலும் குறிப்பான சிலவற்றை கூறியுள்ளது, அரசும், தேர்தல்
ஆணையமும் வாக்குச் சாவடி அலுவலர்கள் குறித்து அடுத்த தேர்தலில் கவனம் எடுக்கத்தூண்டும்.
குறிப்பாக வாக்குச் சாவடிக்கு அழைத்து செல்வது, திரும்ப அழைத்து வருவது என்பது மிக
மிக முக்கியமானதாகும்.
·
தேர்தல் அன்று (18.04.19) திருவண்ணாமலை
கிரிவலம் என்பதால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு
சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன. இதனால், தேர்தல் முடிந்த பிறகு அலுவலர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல பேருந்து இல்லாமல் திண்டாடினார்கள்.
அன்று இரவு இரண்டு மணி நேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வராத நிலையில் 100 க்கும்
மேற்பட்ட பெண் அலுவலர்கள் அரசுப் பேருந்து கட்டுப்பாறை அறையிலிருந்தவர்களிடம் பேசியதில்
பேருந்து கிடையாது என்று கூறியுள்ளார். ’’எப்படியாவது பேருந்து ஏற்பாடு செய்யுங்கள்
இல்லையென்றால் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்வோம்” என்று கூறியுள்ளனர். அதன்பிறகே
பேருந்து ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது.
·
அதே எங்கள் பகுதி பள்ளியில்
உள்ள இருவாக்குசாவடிகளுக்கும் 9 பேர் அலுவலர்களாக 17 ஆம் தேதி பிற்பகல் வந்துவிட்டனர்.
அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர், தேநீர் போன்ற எதுவும் செய்யவில்லை.
நமது பள்ளிக்கு வந்துள்ளார்களே என பள்ளி சார்பில் 4 வேளையும் உணவு, தேவையான போது தேநீர்
மற்றும் குடிநீர் வழங்கினோம். கழிவறை, குளியலறை வசதிகள் ஏற்கனவே உள்ளது.
·
கிடைத்த உணவினைக் கூட எடுத்தக்கொள்ளமுடியாமல்
நேரமின்றி தவிக்கின்றனர். எனவே, வாக்களிக்கும் நேரத்தை அதிகரித்து, இடையில் உணவு இடைவேளை
அளிக்கலாம். அல்லது மேலும் கூடுதலாக இரு அலுலவர்களை நியமித்து வேலைகளைப் பகிர்ந்துகொண்டு,
உணவு, தேநீர், கழிவறை போன்றைவகளுக்கு மாற்றிவிட்டுச் செல்ல உதவியாக இருக்கும்.
·
இன்னொன்று மிக முக்கியமாக கவனிக்க
வேண்டியது. அதே பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் பணியாற்றினால் வாக்குப் பதிவில் செல்வாக்கு
செலுத்துவார்கள் என்பதால் 200 கி.மீ தூரம்
தள்ளிகூட வாக்கு சாவடிக்கு அனுப்பப்படுகின்றனர். இது தேவையா என யோசிக்கவேண்டியுள்ளது.
வாக்காளர்களுடனு, அரசியல் கட்சியுடனும், அரசியல் வாதியுடனும் நெருங்கிய தொடர்பு (பணி
நிமித்தமாக) கொண்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி பெரும்பாலான அதிகாரிகள் அதே பகுதியில்தான்
உள்ளனர். ஆனால், ஆசிரியர்கள் மட்டும் ஏன் இவ்வாறு அலைகழிக்கப்படவேண்டும். வாக்குச்சாவடி
முகவர்களை மீறி வாக்களிப்பில் என்ன செல்வாக்கினை செலுத்திட முடியும்?. அறிமுகமே இல்லாத
பிற பகுதியில்தான் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்களில் அச்சுறுத்தலுக்கு
ஆளாகின்றனர். மிரட்டப்பட்டு வாக்குகள் போடப்படுகின்றன. இதனை தவிர்த்து வாக்குச் சாவடி
அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே வாக்குச் சாவடி அலுவலர்களாகவும் பணியாற்றலாம்.
·
பணியாற்ற வேண்டிய ஒன்றியத்திற்கு
வரவழைத்து, வாக்குச் சாவடி ஒதுக்காமல் 200 க்கும் மேற்பட்டோரை, ஏதேனும் வாக்குச் சாவடிக்கு
தேவைபடும் என்பதற்காக ரிசர்வ் என ஓரிடத்தில் தங்கவைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கும்
எவ்வித அடிப்படை வசதிகளும் அளிக்கப்படுவதில்லை என்பதுடன், கண்டுகொள்ளவும் படுவதில்லை.
தேர்தல் 6 மணிக்கு முடிந்தாலும் 8 மணிவரை இவர்களுக்கான மதிப்பூதியத்தை கொடுக்காமல்
அடைத்து வைத்துள்ளனர். இப்படி காத்திருக்க வைப்பதற்குப் பதிலாக பதிலியாக
(Substitute) வாக்குச் சாவடிக்கே ஒருவரோ அல்லது இருவரையோ அனுப்பலாம்.
·
எல்லாவற்றையும் விட பூத் சிலிப்
என்கிற வாக்காளர் வரிசை எண் ரசீது இல்லாமல் வாக்காளர்கள் பெரும்பாலோனர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனக்கும் கூட வாக்களித்தபிறகு, பகல் 1 மணியளவில் யாரோ ஒருவர் வீட்டில் வந்து அளிக்கின்றார்.
இப்போதைய தகவல் தொழில் நுட்பத்தில் தங்களுடைய வாக்குச் சாவடி, பாகம் எண், வரிசை எண்
போன்ற பூத் சிலிப் விவரங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்புவது அல்லது பெறுவது என மாற்றினால்.
பெரும் பொருட்செலவையும், மனித அலைச்சலையும், அலைக்கழிப்பையும் தவிர்க்கலாம்.
-
பேச : 9894207407.
03.05.2018 பதிவு
No comments:
Post a Comment