Saturday, April 25, 2020

நூல் அறிமுகம் - இட ஒதுக்கீடும் சமூக நீதியும் - எஸ்.கண்ணன்


இட ஒதுக்கீடும் சமூக நீதியும் - எஸ்.கண்ணன்

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 10 வது அகில இந்திய மாநாட்டுக் குழு சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் அப்போதைய செயலாலர் எஸ்.கண்ணன் இந்நூலை எழுதியுள்ளார்.

சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு உருவாகி வந்த தொடர்ச்சி மற்றும் அதனையொட்டிய பல்வேறு தகவல்கள் என இருவகையில் இந்த நூல் கவனம் பெறுகின்றது.

19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலை எழுதும்போது நூலாசிரியர் இறுதியில் குறிப்பிடுவது இன்று மிகப்பொருத்தமாக உள்ளதை நாம் அனைவரும் உணரமுடியும்.

”இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பேசும் அறிஞர்கள் சுருங்கி வரும் வேலை வாய்ப்பையும், பறிபோகும் பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுக்காக்கும் போராட்டங்களை நடத்தாமல், நூற்றாண்டு காலமாக போராட்டம் நடத்தி பெற்ற உரிமையான இடஒதுக்கீடு கொள்கையைப் பாதுகாக்க முடியாது” என்கிறார்.

சாதியை உருவாக்கி காப்பாற்றும் கடவுள். கடவுளைக் காப்பாற்றும் நால் வருணம். இதனால் உருவாகியுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகள். அதனால் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கவேண்டியது சமூக நீதி. அதற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உருவாக்கப்பட்டதுதான இடஒதுக்கீடு கொள்கை. இது அடிப்படையான உரிமையாகும். ஆனால், இதனை சலுகையாக பார்க்கும்போக்கு சமூகத்தில் நிலவுகின்றது.

சாதியை எதிர்த்த போராட்டங்களின் விளைவாகவும் தொடர்ச்சியாகவும்தான் சமூக பொருளதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உருவானது, அதில் மிக முக்கியமானது இட ஒதுக்கீடு எனக்கூறியுள்ளார்.

சென்னை மாகாணத்தில் 1885 ல் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்காக நிதி மானியம் உருவாக்கப்பட்டதுதான் முதல் இட ஒதுக்கீடு என்றும், தொடர்ந்து அனைவருக்கும் தெரிந்த 1921 ல் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தைக் குறிப்பிடுகிறார்.

1927 ல்தான் இடஒதுக்கீட்டுக்கான எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மாகாணத்திலுள்ள அனைத்து சாதிகளையும் ஐந்து பரந்த பிரிவுகளாகப் பிரித்து ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்துள்ளார்.
2 ஆம் வட்டமேசை மாநாட்டில் நடந்த விவாதங்கள் தமிழகத்தில் பரவலாக கவனிக்கப்பட்டன என்று ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த நிலையில், தலித்துக்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பே இல்லை என்பதால், இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை எழுந்தது. இதனை வலியுறுத்தி 25.10.1931 அன்று சென்னை எழும்பூரில் தலித்துக்கள் நடத்திய கூட்டத்தில் 7000 பேர் பங்கேற்றனர் என்றும், கூட்டம் முடிந்து திரும்பிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற வன்கொடுமை தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். இந்த இரட்டை வாக்குரிமை கோரிக்கை காந்தி நடத்திய உண்ணாவிரதம் மூலம் முறியடிக்கப்பட்ட பின்பு, நீண்ட காலம் கழித்து உருவானது இப்போதுள்ள தனித் தொகுதி முறையாகும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

மண்டல் குழு பரிந்துரைகள்தான் இடஒதுக்கீட்டில் முக்கியமான பங்கு வகித்துள்ளது என்பதைக் கூறி, சில முக்கிய பரிந்துரைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் மூன்று ஆண்டுகள் ஒரு பணியிடம் நிரப்பப்படவில்லை என்றால், அதனை பின்னர் பொதுப் போட்டிக்கான பணியிடமாக்கலாம் என்று பரிந்துரை மிக முக்கியமான ஒன்றாகும். இன்று சில முக்கிய மேலதிகாரிகளுக்கான பணியிடத்தை அரசு அதிகாரிகள் மிகவும் திட்டமிட்டு, வேண்டுமென்றே வெளிப்படையாக காட்டாமல் மூன்று ஆண்டுகள் காலியாக வைத்திருந்து அதனைப் பொதுப்பிரிவுக்கு மாற்றுகின்றனர்.

நேற்று ஒரு ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது இதனை அறியமுடிந்தது. குறிப்பாக மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டினை வெளிகாட்டுவதில்லை, நிரப்புவதும் இல்லை. யாரையேனும் பொறுப்பிலேயே மூன்று ஆண்டுகள் வைத்திருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றிவிடுகின்றனர். அதனால், தலித்துகள் பெருமளவில் மாவட்ட கல்வி அலுவலராக வர முடிவதில்லை என்றார்.

இன்னொன்று, ஏதேனும் ஒரு வகையில் அரசின் நிதி உதவியைப் பெறுகின்ற தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும். ஆனால் நடைமுறையில் இவை ஒரு சதவீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இடஒதுக்கீட்டின் கீழ் வரக்கூடிய அனைத்துப் பணியிடங்களையும் அதிகாரிகள் நிரப்பவேண்டும் என 1989 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து பல்வேறு தகவல்களைக் கூறிச் செல்கின்ற கண்ணன், கல்வி குறித்தும் ஒரு கருத்தினை வலுவாகப் பதிவு செய்துள்ளார்.
தொழில் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை சமூக அறிவியல் பாடங்களுக்கு கொடுப்பதில்லை. இதனால்
1.கல்வி ஒரு சரக்காக மாறியிருக்கிறது.
2.மாணவர்கள் நுகர்வோராக உருமாறியிருக்கிறார்கள் என்கிறார்.

இன்று இடஒதுக்கீடு என்பதையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில்தான் இடஒதுக்கீடு / சமூக நீதி என்ற கருத்து உருவாகி, கொள்கையாகி, அவை பயன்பாட்டிற்கு வந்த வரலாறு குறித்து அறிய இந்த நூல் ஒரு அறிமுகமாக உள்ளது.



No comments: