Saturday, April 25, 2020

நூல் அறிமுகம் - நீதிமாரே! நம்பினோமே!! – நீதியரசர் கே.சந்துரு


நீதிமாரே! நம்பினோமே!! – நீதியரசர் கே.சந்துரு

சமூக அக்கறை உள்ளோரும், தினசரி செய்திகளை அறிந்துகொள்வதில் ஈடுபாடு உள்ளோரும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்களை தெரியாமல் இருக்கமுடியாது. வழக்கறிஞராக இருந்தபோது சமூக மற்றும் அரசியில் ரீதியான பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்றுக்கொடுத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

எப்போதும் பாதிக்கப்பட்டோருக்கான வழக்குகளை எடுத்து நடத்தியதால், நீதிபதியாகும்போது இவரால் பெரிதாக தீர்ப்புகளை வழங்கமுடியாது, வழக்கறிஞராக தொடராலம் என்ற கருத்தும் பரவியது. ஆனால் அதையெல்லாம் தாண்டி நீதிபதியாக இருந்த தன்னுடைய பணிக்காலத்தில் பல முக்கிய வழக்குகளில், முன்னுதாரமான தீர்ப்புகளை வழங்கினார்.

சமூக சார்ந்த பிரச்சனைகளுக்கு அளித்த தீர்ப்புகளை, தனது பணி ஓய்விற்குப் பிறகு ”அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த நூல் தமிழகம் முழுவதும் பரவலாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிகம் விற்பனையானது.

நீதிபதி கே.சந்துரு அவர்கள் பணி ஓய்விற்கு பிறகு நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்த நூல். அதனை அவருடைய வார்த்தையிலேயே சொல்லவேண்டும் என்றால், “2013ல் ஓய்வு பெற்ற பின்னரே, கிடைத்த அனுபவங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படையாக பதிவு செய்ய முடிந்தது. இந்து நாளிதழில் தொடர் கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது. சட்ட உலகின் சமகாலத்திய நிகழ்வுகளையும், நீதிமன்றங்களின் நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்து வெளியிடப்பெற்ற அக்கட்டுரைகளுக்குப் பொதுமக்கள் மத்தியிலிருந்து மிகுந்த வரவேற்பு கிட்டியது. முப்பது வருட வழக்கறிஞர் பணியிலும், ஏழு வருட நீதிபதி பொறுப்பில் கிடைத்த அனுபவங்களையும் பதிவு செய்ததே இந்தக்கட்டுரைகள். புத்தகங்களின் தலைப்புகளே எனது எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சியையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் காட்டிவிடும்” என்று முன்னுரையில் கூறியுள்ளார்.

27 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூலில் இறுதியாக உள்ள கட்டுரை “சிறப்பு மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு கூடாதா?” என்ற கேள்வியோடு தொடங்குகிறது. இக்கட்டுரையில் ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

            உயர்சாதியான் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால்
            உச்சநீதிமன்றத்தில் ஒரு நாற்காலி துடைத்து வைக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்டவன் குடிசையில் ஒரு குழந்தை பிறந்தால் – அந்தத்
தாயின் கனவின் புதிதாய் ஒரு கழிப்பறை திறக்கப்படுகிறது.

மொத்த நூலுக்குமான முன்னோட்டமாக இந்தக் கவிதை அமைந்துள்ளது. இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு தகவல்களையும், நடப்பு நிகழ்வுகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகும் முறையையும் கொண்டுள்ளது.

சமூக குறித்த புரிதலுக்கும், சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவோருக்கும் இந்த நூல் பெரும் உதவியாக இருக்கும்.

No comments: