பாலியல் குற்றங்கள் - பாலியல் கல்வி தேவை
தற்போது பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோரும், பெண் குழந்தைகளை பள்ளி கல்லூரிக்கு படிக்க அனுப்பும் பெற்றோர்களும், வேலைக்குச் செல்லும் இளம்பெண்களின் பெற்றோர்களும் தங்கள் மகள் வீடு திரும்பும்வரை ஒரு பதட்டத்துடன் இருப்பதான பேச்சு பரவலாக உள்ளது. பெற்றோர்களின் இந்தப் பதட்டத்திற்கான காரணம் சமீப காலங்களாக பெண்கள் அதுவும் பெண் குழந்தைகள், மாணவிகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது இப்போது மட்டும் நிகழ்வது அல்ல. காலங்காலமாய் நிகழ்ந்துவருகின்றது. அதுவும் புராண காலந்தொடங்கி நடைபெறுகின்றது. இதைத்தான் மத்தியபிரதேச சாமியார் ஆசாராம் சொல்கிறார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அந்த சாமியார் தண்டிக்கப்பட்டார். கடவுள் கிருஷ்ணர் என்மீது இறங்கி இந்த லீலைகளைச் செய்தார் எனக்கூறி, பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தினார். பெண்கள் தலைமையேற்று வழிநடத்திய தாய் வழிச்சமூகத்தை, இன்று அடிமை சமூகமாக மாற்றிவிட்டோம். இதில் மதமும், சாதியும் பெரும் பங்கு வகிக்கின்றது..
நாகரீகம் வளர்ந்து, அறிவியல் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் பெண்கள் மீதான அதுவும் பெண் குழந்தைகள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான நிகழ்வுகளாக நடந்தேறி வருகின்றது.
இதனைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எப்படி பாதுக்காத்துக்கொள்வது என எச்சரித்துக்கொண்டே உள்ளோம். மேலும், எல்லா ஒழுக்க விதிகளையும் பெண்களுக்கானது மட்டுமே எனக்கூறி நிகழ்ந்த கொடூரங்களுக்கு பெண்ணும் ஒரு காரணம் எனச்சொல்லி சமன் செய்கின்ற அல்லது சமாதானம் அடைகின்றமாக சமூகமாக
வளர்த்தெடுக்கப்பட்டுள்ளோம்.
இல்லையென்றால் பொது இடத்தில்
வைத்து கல்லால் அடித்தோ, தூக்கிலிட்டோ கொலை செய்வேண்டும் என்றும், ஆணுறுப்பை
அறுக்கவேண்டும் எனக்கூறி கடுமையான தண்டனை அளித்தால் குற்றங்கள் நடக்காது எனப்
பொதுப்புத்தியிலிருந்து பேசுகின்றோம்.
சட்டத்திலுள்ள அனைத்து தண்டனைகளும் மரண தண்டனை உட்பட அனைத்தும் ஏன்
போலிமோதல் சாவு என்கிற என்கவுண்டர் கொலையும் கூட வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்
குற்றங்கள் குறையாமல் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் குற்றங்களை குறைப்பது
அல்லது தடுப்பது என்பது வெறும் சட்டத்தின் மூலமாக மட்டும் நிகழாது, சமூகரீதியாக
அணுகவேண்டியுள்ளது என்பதை உணரவேண்டிய தருணமாக இதனை நாம் பார்க்கவேண்டும்.
பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ந்த சம்பவத்திலிருந்து
மீள்வதற்குள், பொள்ளாச்சியிலியே மீண்டும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் கொலை.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே 9-ஆம் வகுப்பு சிறுமி காதலன் எனக் கூறப்பட்டவனால்
கடத்திச் செல்லப்பட்டு, மூன்று பேரால் கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இவைகளில் மட்டுமல்லாமல், நாட்டில் பெண்களுக்கெதிராக நிகழும் பெரும்பாலான பாலியல்
வன்கொடுமைகள், சீண்டல்கள், தொல்லைகள் அனைத்தும் தெரிந்தவர்களாலும்,
அறிமுகமானவர்களாலும், உறவினர்களாலுமே நிகழ்த்தப்படுகின்றது. இவையனைத்திலும்
பெண்ணுடன் காதலன், நண்பன் என்ற பழகிய ஆணே பாலியல் வன்கொடுமைகளைச் செய்துள்ளான்.
தெரிந்த, பழகிய பெண்ணுக்கு, குழந்தைக்கு, சிறுமிக்கு, மாணவிக்கு
பாலியல் ரீதியான வன்கொடுமைகளை இழைக்கின்றோம் என்ற மன உறுத்தல் இல்லாமல் இந்தக்
குற்றச் சம்பவங்களில் ஆண்கள் ஈடுபடுகின்றனர். எனவே முதலில் ஆண்களுக்குதான் பாலியல்
விழிப்புணர்வும், பாலியல் கல்வியும் அவசியமாக உள்ளது.
நமது இந்தியச் சமூகம் ஆணையும், பெண்ணையும் சமமாக, இயல்பாக
நடத்தவில்லை. பெண் குறித்தும், பாலியல் உறவு குறித்தும் பேச முடியாத, ஏன் பள்ளி
கல்லூரி பாடங்களில் உள்ள உடலுறுப்புகளைக் கூட வெளிப்படையாக பாடமாக நடத்தமுடியாத, சொல்லமுடியாத நிலையில்,
ரகசியமான ஒன்றாக, பேசக்கூடாத ஒன்றாக வைத்துள்ளோம்.
இப்போதேனும் அனைவரும் இந்தப் பாலியல் விழிப்புணர்வு கல்வி குறித்து
பேசவேண்டும். பாடங்களில் பாலியல் கல்வி குறித்த பாடங்கள் சேர்க்கப்படவேண்டும்.
இப்பாடங்களை தயக்கமின்றி இவையெல்லாம் உடல் அறிவியல் என்ற கருத்தில் வெளிப்படையாக
பாடமாக நடத்தப்படவேண்டும்.
குறிப்பாக, தற்போதைய சூழலில் மிகவும் புத்திக்கூர்மையுடன்
குழந்தைகள் வளர்கின்றன. நிறைய கேள்விகள் தோன்றும், மனதில் எழும். பெற்றோர்களிடம்,
ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் கேட்டும், பேசியும் பலவற்றிற்கும் விடைகளையும்,
தெளிவினையும் பெறுவார்கள். சிலவற்றிற்கு அவர்களும் கண்டுபிடிப்பார்கள்.
ஆனால், பாலியல் தொடர்பாக அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களையும்,
கேள்விகளையும் யாரிடமும் கேட்கமாட்டார்கள், பேசமாட்டார்கள். மீறி தயக்கத்துடன்
குழந்தைகள் கேட்டாலும், ‘’அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம், இப்ப ஒன்னும்
தெரிஞ்சிக்க வேணாம், பெரியவளா ஆனபிறகு, பெரியவனா பிறகு நீயே தெரிஞ்சுக்குவ”
எனக்கூறி வாயைமூடி அமைதியாக்கிவிடுகின்றோம்.
இந்தத் தடை சுவற்றினை உடைக்கவேண்டிய நேரம் இதுதான்.
ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பருவ வயதில் எழும் பாலியல் தொடர்பான
சந்தேகங்களை தயக்கமின்றி பெற்றோர்களிடம், சகோதரர்களிடம், சகோதரிகளிடம்,
ஆசிரியர்களிடம் பேசுகின்ற சூழலை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்கு பாலியல்
கல்வியை உடனடியாக பாடத்திட்டங்களில் இணைத்து, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்
பெரியவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வை உருவாக்கவேண்டியுள்ளது. இந்த
விழிப்புணர்வுதான் ஒரு ஆணை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்.
08.04.2019 தமிழினி youtube channel ல் பேசியது.
No comments:
Post a Comment