Tuesday, August 26, 2008

ரூ.54.28 கோடியை தமிழக அரசு செலவிடவில்லை






மனித மலத்தை அள்ளும் துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் ரூ. 54.28 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடவில்லை என்று தேசிய துப்பரவு பணியாளர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.


ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் சவுத்திரி, செயலாளர் கல்பனா அமர் உள்ளிட்ட ஆணைய குழுவினர், தமிழகத்தில் துப்பரவு தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனையட்டி வெள்ளி 22&08&08 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.


துப்பரவுப்பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கான சட்டப்பூர்வமான ஊதியம் மறுக்கப்படுகிறது என்றும், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கபடும் துப்பரவு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்பூர்வ பொறுப்பாகும் என்றும் கூறினர்.


தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வு செய்தபோது, கூலி, பணி முறைகள் ஆகியவற்றில் பாகுபாடு நிலவியதும், மலம் அள்ளும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது தடையின்றி தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.


துப்பரவு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவதற்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. ஆனால், இன்னும் தமிழகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் துப்பரவு தொழிலாளர்கள் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வருத்ததிற்குரியது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.


தமிழகத்தில் 83 நகரங்களில் மட்டுமே மலம் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. மலம் அள்ளுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறையை படிபடியாக ஒழிக்க மத்திய அரசு ரூ 57.80 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் ரூ 24.52 கோடி மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. 33.28 கோடி ரூபாய செலவிடப்படாமல் உள்ளது.


கையால் மலம் அள்ளும் தொழிலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தில் தமிழகத்தில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 54.28 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


துப்பரவு தொழிலாளர்களுக்கான கடன்களை மத்திய - மாநில அரசுகளும், வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.

Friday, June 6, 2008

100% தேர்ச்சி நான்காவது வருடமாக -











விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், மயிலம் அருகே உள்ளது எறையூர் அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, 100% தேர்ச்சி விகிதம் பெற்று வருகிறது. அதற்கு காரணமான பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும், பள்ளிக்குச் நேரில் சென்று சந்தித்து பாராட்டியும், மாணவர்களை வாழ்த்தியும் கௌரவித்தது நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு.


திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற ஒரே அரசு பள்ளி, அதுவும் கிராமப்புற பள்ளியாக இருந்து, கடந்த 4 வருடமாக 100% தேர்ச்சியை எடுத்துவருவதையும், கிராமப்புற கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளியில் 02-06-08 அன்று பிற்பகல் 4-00 மணியளவில், பள்ளி தலைமை ஆசிரியர் அ.சையத்நிஜாமுதீன், மற்றுமுள்ள 10 ஆசிரியர்களையும் பாராட்டியும், வாழ்த்தியும் பேசிய விழா நடைபெற்றது.



நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தலைமையாசிரியர் அ.சையத்நிஜாமுதீன் மற்றுமுள்ள 9 ஆசிரியர்களும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். அதன்பின்பு ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் பேராசிரியர் பிரபா.கல்விமணி (எ) கல்யாணி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய


இயக்குநர் வே.அ.இரமேசுநாதன், திராவிடர் கழக மாவட்டத்தலைவர் க.மு.தாஸ், ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன், வழக்கறிஞர்கள் இராஜகணபதி, பன்னீர் செல்வம், நகரமன்ற உறுப்பினர் மு.பூபால், ஆசிரியர் பொன்முத்து.திருமால், த.மு.மு.க நகரப் பொருளாளர் டி.சி.எம்.உசேன், நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு செயலாளர் தி.அ.நசீர்அகமது, மாவட்ட மனித உரிமைக் கண்காணிப்பாளர் இரா.முருகப்பன் ஆகியோர் பேசினார்கள். மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் இருந்து 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 52 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் 26 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்க்ள், 20 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆகும். இதில் பாதிக்கும்மேற்பட்ட மாணவர்க்ள் உள்ளூரைச் சேர்ந்த தாழ்த்தபட்ட ஆதிதிராவிட மாணவர்கள் ஆகும். அதிலும், குறிப்பாக சேலம் பகுதியில் இருந்து வந்துள்ள கல் உடைக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளாகும். இவ்வாறு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அரிய சாதனையிலும், சாதனையாகும்.

மாணவர்களின் இந்தச் சாதனைகளையும், கிராமப்புறத்தில் இதை நிகழ்த்தக்காரணமாக இருந்த தலையமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வளவு பாராடினாலும் தகும். அரசின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு இப்பள்ளிக்கும், தலைமையாசிரியருக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக சாதனைபடைத்து வரும் இப்பள்ளியை அரசு முன்மாதிரியாக பள்ளியாக அறிவித்து, பிற அரசு பள்ளிகளும் இதுபோன்று தேர்ச்சியினை பெறுவதற்கான முன்முயற்சியினை எடுக்கவேண்டும்..