12.08.2020 அன்று இணைய வழியில் (Zoom Meeting) நடைபெற்ற
உள்ளாட்சி அரசாங்கமும்
சமூக நீதியும்
தலித்
& பழங்குடியினர் ஊராட்சி மன்றத்
தலைவர்கள் மாநாடு
13.08.2020
தீர்மானங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
தலித் & பழங்குடியினர் ஊராட்சி மன்றத்
தலைவர்களுக்கான, ‘’உள்ளாட்சி அரசாங்கமும்
சமூக நீதியும்” என்ற தலைப்பில் இணைய வழி மாநாடு 12.08.2020 காலை 11.30 முதல்
2.50 வரை நடைபெற்றது.
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்
(SASY), தலித் மனித உரிமைக்கான தேசியப் பிரச்சாரம் (NCDHR), தேசிய ஆதிவாசிகள் தோழமைக்
கழகம் (NASC), மனித வள மேம்பாட்டு நிறுவனம் (HRDF), சமூகக் கண்காணிப்பகம் (Social
Watch) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டினை நடத்தின.
இளைஞர்களுக்கான
சமூக விழிப்புணர்வு மையம் (SASY) அமைப்பின் இயக்குநரும், புதுடெல்லியிலுள்ள நீதிக்கான
தேசிய தலித் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான வே.அ.இரமேஷ்நாதன் அவர்கள் மாநாட்டிற்கு
தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான
முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது
அவர் பேசுகையில், ‘’ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகளாக சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும்
ஏற்கானவே வளர்ச்சியடைந்து செழுமை அடைந்திருக்கின்றது. அதனுடைய நீட்சியாக இப்போது உள்ளாட்சி
அரசாங்கமும் வளர்ந்திருக்கிறது என்பதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்க கடமைப் பட்டுள்ளோம்.
ஆனால் உள்ளாட்சி என்ற இந்தக் கட்டமைப்பில் தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்றத்
தலைவர்களின் நிலை என்னவாக உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. உள்ளாட்சி அரசாங்கம்
மிகவும் ஒரு இறுக்கமான கட்டமைப்பாக நிலவுகிறது உள்ளாட்சி அரசாங்கத்தில் சாதியக் கூறுகள்
வெளிப்படையாகவே இயங்குகின்றன. இதுகுறித்து பொதுவெளியில் விரிவாக உரையாட வேண்டியிருக்கிறது.
விவாதிக்க வேண்டியிருக்கிறது. அரசுகள் உரிய சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, உள்ளாட்சி
அரசாங்க ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
SASY
அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.முருகப்பன்
அனைவரையும் வரவேற்றார். ஆசிய தலித் உரிமைகள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் என்.பால்திவாகர்
சிறப்புரை ஆற்றினார். 73-வது சட்டத் திருத்தம் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து திரு என்.தயாளன் (இயக்குநர்,
HRDF); தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 அதிகாரமும் செயல்பாடும் & கிராம சபை முக்கியத்துவம் குறித்து தமிழக அரசின்
முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் திரு கிறிஸ்துதாஸ் காந்தி: தலித் / பழங்குடியினர் ஊராட்சித்
தலைவர்கள் மீதான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளும் சட்ட
வழிமுறைகளும் குறித்து முனைவர் கே.கிருஷ்ணன், (ஆதிவாசிகள் தோழமைக் கழகம்); தலித் / பழங்குடியின ஊராட்சி மன்ற பெண் தலைவர்களை
அதிகாரப்படுத்துவது குறித்து வழக்கறிஞர் மோனிகா
வின்சென்ட், (ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், கொள்கை
ஆலோசகர்); பட்டியலினத்தவர் பட்டியல் பழங்குடியினர் துணைத் திட்டமும் நிதி ஒதுக்கீடும் குறித்து தலித் மனித உரிமைக்கான
தேசியப் பிரச்சாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் திரு பீனா பல்லிகல்; சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் குறித்து
சமூகக் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் அருட்பணி குமார்; நிலம் மற்றும் பொது வளங்களைப் பாதுகாப்பது குறித்து,
தலித் நில உரிமைக்கான தேசியக் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் வின்சென்ட் மனோகரன் ஆகியோர்
பேசினர்.
அதனைத்
தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்களோடு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்திலிருந்து
திருமதி மரகதம், திரு சடையன்பேரன்
@ சுரேஷ், திரு பால அறவாழி, திரு மோகன்காந்தி, திருமதி வேதநாயகி, திரு செந்தமிழ்முருகன்;
நாகை மாவட்டத்திலிருந்து திரு புலிவேந்தன், திரு அருள்ராசு; ஈரோடு மாவட்டத்திலிருந்து
திருமதி ஆசீர்வாதம், திருமதி ஜானகி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து திருமதி சரஸ்வதி,
சேலம் மாவட்டத்திலிருந்து திருமதி அம்சவள்ளி ஆகியோர், தங்களால் சுதந்திரமாக செயல்படமுடியாவில்லை;
தங்களின் செயல்பாடுகளை துணைத்தலைவர், சில உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர்
முடக்குகின்றனர். தடுக்கின்றனர்; தங்கள் மீது சாதியப் பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றது,
வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றது; பழங்குடியினருக்கு பட்டா கொடுக்க முயன்றால் அரசு
புறம்போக்கு நிலங்களை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்; காசோலை, தீர்மானக்
குறிப்பேடுகள் எங்களிடம் இல்லை; பொறுப்பேற்றதிலிருந்து திட்டங்களுக்கான நிதி வழங்கப்படவில்லை;
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கினார்கள்; ஒப்புதலாகி வந்துள்ள சில
திட்டங்களை, எங்களால் செய்யமுடியவில்லை. முந்தைய பதவியின்போது போட்ட திட்டம் என ஆளுங்கட்சியினர்,
அதிகாரிகளோடு சேர்ந்துகொண்டு செய்துகொள்கின்றனர்; பெயர்தான் பஞ்சாயத்து தலைவர். அதிகாரிகள்
மதிப்பதே இல்லை என்று கூறினர்.
இறுதியில்
எதிர்காலத் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் பெரும்பாலான ஊராட்சி மன்றத்
தலைவர்கள் மற்றும் பங்கேற்றோர் உள்பட அனைவரும் மாநில மற்றும் தேசிய அளவில் தலித் ஊராட்சி
மன்றத் தலைவர்களுக்கான கூட்டமைப்பு தொடங்கவேண்டும் என்றும், அவசியம் அமைப்பு தேவை என்றும்
வலியுறுத்தினர்.
’’ஒரு சமூகத்தின் வாழ்க்கையில் அதிலும் குறிப்பாக, அதன் நிலை இடையிராத கடும் எதிர்ப்புக்குள்ளாகி, அதனை நிலைநாட்ட வேண்டிய அவசியத்திற்குள்ளாகி இருக்கும்போது, அரசியல் அதிகாரம் என்பது அச்சமூகத்திற்கு விலைமதிப்பிட முடியாத ஒன்றாகும். இந்த அரசியல் அதிகாரத்தின் மூலம்தான் அச்சமூகம் தனது நிலையை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும்; பாதுகாத்துக்கொள்ளமுடியும்’’.
புரட்சியாளர் அம்பேத்கர்.
(ஆங்கில
நூல் தொகுதி 8, பக்கம் 342)
இணைய வழி மாநாட்டில்
நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.
1. தலித் & பழங்குடியினர் ஊராட்சி மன்றத் தலைவர்களை ஒருங்கிணைக்க
மாநில மற்றும் தேசிய அளவில், ‘’தலித் & பழங்குடியினர் ஊராட்சி மன்றத் தலைவர்கள்
கூட்டமைப்பு” தொடங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2. ஆகஸ்ட் 15, 2020 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில்,
ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்கக்கோரி மாநில அரசைக் கேட்டுக்கொள்வது என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
3. உள்ளாட்சிகளுக்கு 29 துறைகளுக்கான முழுமையான அதிகாரத்தினை வழங்கிடும் வகையில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 9 ல் பிரிவு
243 A, G, H ஆகியவைகளில் திருத்தம் மேற்கொண்டு, 7-வது அட்டவணையில் உள்ளாட்சிகளுக்காக
4-வது பட்டியல் உருவாக்கப்படவேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. (மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல்
போன்று, உள்ளாட்சிகளுக்கு என 4-வது பட்டியல் உருவாக்கப்படவேண்டும்)
4. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205 மூலம், ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்கின்ற வகையில் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரம், சாதிய ஆதிக்கம் போன்றவை
மூலம் பொய்யான புகார்களைப் பெற்று ஊராட்சி மன்றத் தலவைர்கள் சட்ட விரோதாமாக நீக்கப்படுகின்றனர்.
இது மக்கள் சனநாயகத்திற்கு எதிராக இருப்பதனால் இப்பிரிவை முற்றிலுமாக நீக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சியில் உள்ள அனைத்துநிலை துணைத்தலைவர் பதவிகளுக்கும் தலித் & பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில்
ஊராட்சிகள் சட்டம் 1994 ல் சட்டத் திருத்தம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. கிராம சபையில் தலித் & பழங்குடியினர் வாக்காளர்களாக பங்கேற்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தபோதும், அவர்களை ஒதுக்குகின்ற போக்கே கடைபிடிக்கப்படுகின்றது. இத்தகைய பாகுபாட்டை தவிர்ப்பதற்கு தலித் & பழங்குடியினர் தலைவர்களாக பங்கேற்பதை கட்டாயம் உறுதிசெய்திட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என பாதுகாப்பு கோரும் தலித் & பழங்குடியின ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படவேண்டும். அல்லது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஆயுதம் வைத்துக்கொள்வதற்கான உரிமம் வழங்கிடவேண்டும் என
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8. தலித் & பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடைபெறக்கூடிய கொலை மற்றும் வன்கொடுமை வழக்குகளை காலங்கடத்தாமல், விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிடவேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9. தனி ஊராட்சிகளில் தலித் & பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை ஆளுகை செய்யவிடாமல் தடுக்கும் ஆதிக்க சாதியினரைச் சேர்ந்த துணைத்தலைவர்கள் நியமிப்பதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
10. சிறப்பு உட்கூறு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படுகின்ற நிதிகளை முறையாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஊராட்சிகளின் மூலம் நடைமுறைபடுத்திடும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றவேண்டும் என்றும், இதனை
வலியுறுத்தி ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டடத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
11. உள்ளூர் பொருளாதாரம் மற்றும் வாழ்விடம், வாழ்வாதாரம், விவசாய நிலம், பொதுவளங்கள் ஆகியவைகளை சீர்குலைக்கின்ற வகையில் நடைபெறும் வர்த்தகத்தையும் வளர்ச்சிப்பணி மற்றும் திட்டங்களை அரசு உனடியாக கைவிடவேண்டும்
என தீர்மானிக்கப்பட்டது.
12. ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை அடையாளம் கண்டு,
வீடு / நிலம் இல்லாத தலித் & பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், குடியிருப்பும்
வழங்க மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13. சமூக மற்றும் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டுள்ள,
பிறரைச் சார்ந்து வாழும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், தங்கள் அலுவல்களை செவ்வனே செய்ய
மாதாந்திர ஊதியம் அவசியமாகின்றது. எனவே, ஊராட்சி
மன்றத் தலைவர்கள் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட, மாதந்தோறும் ரூ 25,000/-
ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டு நிறைவு
செய்தவர்களுக்கு சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
வழங்கப்படுவது போன்று ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.