Sunday, August 10, 2014

அறிவு என்பது மொழியில் இல்லை!

தினமணி 06 August 2014 
கனடா நாட்டில் பழங்குடி மாணவ - மாணவிகளிடம் அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகளைத் தெரிந்து கொள்ள ஒரு விண்ணப்பம் கொடுத்தார்கள். இருபத்தைந்து கேள்விகள் கொண்ட விண்ணப்பத்தில் ஒரு கேள்வி.
உங்கள் வீட்டில் எத்தனைப் புத்தகங்கள் இருக்கின்றன? (புத்தகங்கள் என்றால் பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், பாடப் புத்தகங்கள் இல்லை)
1 - 10? 11 - 20? 21 - 50? 100 - 500?
இந்தக் கேள்வி கனடாவிற்கோ, பழங்குடி மக்களுக்கோ மட்டும் இல்லை. உலகத்தில் படிக்கும் எல்லா மாணவ - மாணவிகளுக்கும் பொதுவானது. அதுவும் குறிப்பாகத் தமிழர்களுக்கானது.
சரஸ்வதி கல்வி கடவுளாக இருக்கிறார். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையன்று, வழிபடப்படுகிறார். படிப்பு என்றால் கல்வி. நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண் பெற்று வேலைக்குச் சென்று அதிகமாகச் சம்பாதிக்க வேண்டுமென்று கடவுளிடம் கேட்டுக் கொள்கிறார்கள்.
கல்வி - படிப்பு சமூகத்திற்கு அவசியம். எந்த நாட்டு மக்கள் நூறு சதவீதம் படித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் சிறந்த குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். கல்வி மன மாசுகளைப் போக்குகிறது. எனவேதான் ஒüவையார், "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்றார்.
அது பள்ளிக்கூட மாணவர்களுக்கு மட்டும் சொன்னார் என்பதில்லை. நாட்டில் வாழும் பெண்கள், ஆண்கள் எல்லோரையும் பார்த்துதான் சொன்னார். கற்பதற்கு நிறைய இருக்கிறது. காலம் முழுவதும் கற்றாலும், அது முடிக்க முடியாது. அதுதான் கல்வி.
கல்வி என்பது மொழி வழியே கற்கப்படுகிறது. மொழியை எழுதும் எழுத்து என்பது கோடுகளால் ஆனது. மொழியும் அதனை எழுதும் எழுத்தும் மனித அறிவால் கண்டறியப்பட்டது. எனவே அறிவு என்பது மொழியில் இல்லை. ஆனால், மொழி வழியாக அறிவு - மனித ஞானம் சொல்லப்படுகிறது.
எனவேதான், உலகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மனிதர்கள் தங்களின் அறிவு, தேவை, வசதி, சுற்றுப்புறச் சூழல், ஆன்மிக உணர்வு, நம்பிக்கை, நம்பிக்கையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் சொற்களை உருவாக்கிக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
அறிவதுதான் அறிவு. அது மனிதர்களுக்கு இல்லாதது இல்லை. அறியப்படாமல் இருந்தது என்பதைப் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். அதாவது இருப்பதைக் கொண்டு அறிந்து கொள்வது. அதனைக் கொண்டு காரியங்கள் செய்கிறார்கள். மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்கிறார்கள். எழுதிப் புரிய வைக்கிறார்கள்.
அதனால்தான் விவேகானந்தர், "ஏற்கனவே உள்ள அறிவால் அறிந்து கொண்டு செயற்படுவது' என்றார். அறியப்படவில்லை என்பதால் இல்லையென்றாகி விடாது. அறியப்படாத வரையில் அது இல்லை. அவ்வளவுதான்.
தன் அறிவைக் கொண்டு தன்னையும், சக மனிதர்களையும், சுற்றுப்புற சூழலையும் மனிதன் அறிந்து கொள்கிறான். மனிதனைப் போலவே மற்ற ஜீவராசிகளும் அறிந்து கொள்கின்றன. என்றாலும் அவை மனிதனுக்கு இணையாக முடியாது.
ஏனெனில், மனிதன் தான் அறிந்திருக்கிறோம் என்பதைப் பற்றிச் சொல்லவும் எழுதவும் அறிந்திருப்பது போல - தான் அறியாதது எவை என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறான். அதுதான் மனிதனை மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தான் அறிந்ததையும், அறியாததையும் தானே கண்டுபிடித்த மொழியிலும், எழுத்திலும் எழுதி வைத்திருக்கிறான். அவைதான் மனித அறிவு என்பதன் உச்சம்.
எழுதப்பட்டது என்பதால் எப்பொழுதும் படித்தறிய முடிகிறது. அதுவே படிப்பு என்பதற்கு ஆதாரம். ஆனால் படிப்பு - கல்வி என்பது ஒரு மொழிக்குள் இருப்பதில்லை.
உலகத்திலேயே அதிகமான மக்கள் வாழும் நாடு சீனா. பல ஆயிரம் ஆண்டுகளாக கலை, இலக்கியம், தத்துவம், தொழில், வணிகம், சட்டம், நீதி ஆகியவற்றில் முன்னே இருக்கும் நாடு. அங்கு பலவிதமான மொழிகள் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தன.
ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் அதிகார பரவுதலுக்கும், அறிவு வளர்ச்சிக்கு பல மொழிகள் இருப்பது தடையாக இருக்கிறது என்று கருதினார்கள். எனவே, சீன மொழிகளில் ஒன்றான மாண்ட்ரீனை பொது மொழியாக்கினார்கள். சிக்கலான எழுத்து முறையை சீர்படுத்தினார்கள்.
கல்விக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மாண்ட்ரீனுக்கு முதலிடம் கொடுத்தார்கள். அதனால், உலகத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழியென அது பெயர் வாங்கிவிட்டது. ஆனால், சீன மொழி ஓர் உள்நாட்டு மொழிதான். அதற்கு சர்வதேச அதிகாரம் இல்லை.
ஸ்பானீஷ் மொழியை உலகத்தில் 40.50 கோடி மக்கள் பேசுகிறார்கள். உலக மக்கள் அதிகமாகப் பேசும் மொழிகளில் இரண்டாவது இடம் அதற்குக் கிடைத்திருக்கிறது. அது ஒரு கலாசார மொழி என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது.
முதல் ஐரோப்பிய நாவலான டான்குவின்செட் 1605-ஆம் ஆண்டில் மீகையில் டி செர்வாண்டீஸ் எழுதியதென சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அது தென்னமெரிக்கா நாடுகளில் எல்லைத் தாண்டி செல்லவில்லை.
ஆங்கிலம் சர்வதேச மொழியாகி விட்டது. இங்கிலாந்து என்ற சிறிய நாட்டின் மொழி, நூற்றுஐம்பது ஆண்டுகளில் மகத்தான சக்தி பெற்ற மொழியாகி விட்டது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், சிங்கப்பூர் உள்பட ஐம்பது நாடுகளின் ஆட்சி மொழியாக அது இருக்கிறது. தொழில், வணிகம், அரசியல், மருத்துவம், விஞ்ஞானம், சட்டம், நீதி, சமூகவியல், தொல்லியல், மொழி, இலக்கியம் - என்று பல துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் மொழியாக மாறி வந்திருக்கிறது.
அதோடு ஆங்கிலம் பிற மொழி சொற்கள் நிறைந்த மொழி. பிரெஞ்சு மொழிபோல் தூய்மை பாராட்டுவதில்லை. உலகத்தில் இருக்கும் பல்வேறு மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்திருக்கின்றன. அப்படி ஆங்கிலம் கடன் வாங்கி இருக்கும் சொற்கள் எண்பத்து மூன்று சதவீதம் என்று கணக்கெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன.
நூறு தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் கடன் பெற்றிருக்கிறது என்று கிரிகிரி ஜேம்ஸ் என்ற பேராசிரியர் எழுதியிருக்கிறார். கட்டுமரம், சுருட்டு, பந்தல், காவடி என்று அவர் அவற்றை அடையாளம் கண்டு உள்ளார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் ஒரே கூட்டமாக இருந்து ஒரு மொழியைப் பேசிக் கொண்டு பின்னர் புலம் பெயர்ந்து, தனித்தனி கூட்டமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் முதலில் பேசிய தாய் மொழியில் இருந்த சில சொற்கள் எல்லா மொழிகளிலும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆனால், எந்த முதல் மொழி என்பதும், எப்பொழுது அது மற்றொரு மொழிச் சொல்லை கடன் வாங்கியது என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் ஒரு மொழியில் இருந்தும், ஒரே எழுத்து வடிவத்தில் இருந்தும்தான் ஏழாயிரம் மொழிகள் கண்டறியப்பட்டனவென்றும், இருபது வகையான எழுத்து வகைகள் உருவாக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள்.
மொழி என்பது பேசுவதற்கானது, அவ்வளவுதான். அதிகமான மக்கள் பேசுவதுதான் பெரிய மொழியென்றோ, குறைவான மக்கள் பேசுவது சிறிய மொழியென்றோ கிடையாது. மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கானது. சொல்லவும், கேட்கவும் பயன்படக் கூடியது. ஆனால், அதிகாரம் செலுத்தக்கூடியது. எனவே அதிகாரத்தைப் பற்றிக் கொண்டவர்கள், தங்களின் அதிகாரத்தின் அடையாளமாக மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
மொழி என்பது ஒரு ஆயுதம். மனிதர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆயுதங்களிலேயே மிகவும் கூர்மையான ஆயுதம். அது சுடும். "நாவினால் சுட்டவடு ஆறாது' என்று திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருக்கிறார். மொழி சில நேரத்தில் மனத்தை நெகிழ வைக்கும். உருகாத மனத்தையும் உருக்கும். கண்களில் கண்ணீர் வரவழைக்கும். அதுதான் மொழியின் சக்தி.
மனிதர்கள் தங்களின் மேலான அறிவை, ஆற்றலை அறிவித்துக் கொள்ள, மற்றவர்களை பயமுறுத்த கண்டு பிடித்த மொழியை, எழுத்துக்களைக் கொண்டுதான் பேசியும், எழுதியும் இணைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
புத்தகங்கள் மனித அறிவால் மனிதர்களுக்காகவே எழுதப்பட்டவை. மொழி சார்ந்து இருப்பவை. எழுத்தும் ஒன்று கிடையாது. ஆனால் எல்லோருக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. கல்வி - படிப்பு என்பது அதற்கு அவசியமாகிறது. கல்வியின் நோக்கம் - கற்பது என்பது அறிவதுதான், அதாவது படிப்பது. அது ஒரு மனிதனை அவனுக்கே தெரியவைக்கிறது.
புத்தகம் என்பது காகிதம், மை கிடையாது. அது உயிர்ப்புடன் இருக்கிறது. படிக்கும்போது ஒவ்வொரு எழுத்தும் உயிர் பெறுகிறது. அதனோடு உரையாடுவது உயிர்த்தன்மையை மெய்ப்பிக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜான் கூடன்பர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தது, அறிவு பரப்புவதில் பெரும் பாய்ச்சலாக இருந்தது. எனவே புத்தகங்கள் வாங்குவதும் படிப்பதும், வீடுகள், கல்லூரிகளில், பொது இடங்களில் நூலகங்கள் அமைப்பதும் அறிவுக் கோயில்களாகக் கருதப்பட்டு வந்தன.
மனிதர்கள் செய்கின்ற அறிவு பூர்வமான ஒவ்வொரு காரியமும், தன்னுடைய அன்பை சமூகம் முழுவதற்கும் அர்ப்பணிப்பதாகவே இருந்து வருகிறது. அறிவு, ஞானம் என்பது மறைத்து வைப்பதோ - ஒளித்து வைப்பதோ கிடையாது.
எனவேதான் புத்தகங்கள் வாங்கிப் படித்தார்கள். தாங்கள் படித்தால் மட்டும் போதாது என்று புத்தகங்களைச் சொத்துபோல பாவித்து அடுத்தத் தலைமுறைக்கு விட்டு சென்றார்கள்.
அறுபதாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசி வந்த அண்ணாதுரை, மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
வீடு கட்டுகிறீர்கள். நல்லதுதான். சமையல் அறை, பூஜை அறை, படுக்கையறை வைக்கிறீர்கள். பாராட்டுகள். ஆனால் புத்தக அறை வைத்துக் கட்டுகிறீர்களா? என்று கேட்டார். நவீன கட்டட கலைத்திறனில் படிப்பு அறை என்பது இல்லாமல் போய்விட்டது.
படிப்பு என்பது தனிமை நாடுவது. அதற்கோர் இடம் வேண்டும். ஆனால் வீடு என்பதில் தனிமைக்கென இடம் இல்லாமல் போய் விட்டது. இருந்த இடத்தை சப்தம் போடும் தொலைக் காட்சி எடுத்துக் கொண்டு விட்டது. இருந்தாலும் புத்தகங்களைப் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். சேமித்து வைக்கிறார்கள்.
எனவே, படிப்பது, புத்தகங்களை வாங்கி வைப்பது என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எல்லா காலத்தை விடவும், கம்பியூட்டர், ஐ-பேடு வந்ததும் இன்னும் கூடியிருக்கிறது. மனிதர்களையும் புத்தகங்களையும் எதனாலும் பிரித்துவிட முடியாது!

Saturday, May 24, 2014

பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்னுரை

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் அதன் பயன்பாடும் -அ.மார்கஸ்

[தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முருகப்பன், ஜெசி ஆகியோர் ஆய்வு செய்து எழுதியுள்ள நூலுக்கு அ.மார்கஸ் எழுதிய முன்னுரை]
தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் தீண்டாமை அடிப்படையில் வன்கொடுமைகள் நடப்பவை என அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 542.. அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு எனில் உண்மை நிலை இன்னும் பலமடங்காக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.பதிவான வழக்குகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். நடக்கும் வன்கொடுமைகளைக் குறித்துப் புகாரளிக்கவோ அல்லது ஏதேனும் எதிர்ப்புக்காட்டி அதைச் செய்தியாக்கவோ இயலாத நிலையுள்ள கிராமங்கள் இன்னும் ஏரா:ளமாக உள்ளன என்பதை இதுபோன்ற பிரச்சினைகளில் அக்கறை உள்ளோர் அறிவர். இரு வாரங்களுக்கு முன் கூட பண்ருட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கள் கிராமத்தில் நடைமுறையில் உள்ள தீண்டாமை ஒதுக்கல்களை அவர் விரிவாகச் சொன்னார். ஏதாவது செய்ய வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தக் கொடுமைகளைப் பட்டியலிட்டு ஏதாவது போராட்டம் நடத்துங்களேன் என்றேன். அதெல்லாம் இங்கு செய்து பார்த்தும் பலனில்லை, மேற்கொண்டு எதுவும் செய்வதற்குச் சாத்தியமில்லாமல்தான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் அவர்.
வன்கொடுமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தலித் இயக்கங்களும் தீண்டாமைப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கிற பிற இயக்கங்களும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி, இத்தகைய வன்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய சூழல் உருவான பின்னும் நிலைமை இப்படித்தான் உள்ளது. ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யால் கவனப்படுத்தப்படாதவரை உத்தபுரத்தில் இப்படி ஒரு தீண்டாமைச் சுவர் இருந்தது யாருக்குத் தெரியும். இன்னும்கூட இந்த கிராமங்களில் எல்லாம் அந்தப் பிரச்சினைகள் முற்றாகத் தீர்ந்தபாடில்லை.
தமிழகத்தில் இச்சட்டங்களின் (1955 மற்றும் 1988ம் ஆண்டுச் சட்டங்கள்) அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வீதம் குறைவாக உள்ளதாக மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளது (New Indian Express, July 3, 2012) குறிப்பிடத் தக்கது. முறையாகக் குற்றங்களைப் பதிவு செய்யாமை, சரியான நேரத்தில் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமை, நியமிக்கப்படும் சிறப்பு வழக்குரைஞர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து பரிசீலனை செய்யாமை முதலானவற்றை இதன் காரணங்களாகச் சுட்டிக்காட்டி, இவை நீக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இச்சட்டத்துன் கீழ் வேண்டுமென்றே உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைத் தண்டிக்க வழி இருந்தும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு காவல் துறை அதிகாரியும் கூட இதற்காகத் தமிழகத்தில் தண்டிக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்காகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  நடத்துகிற தேர்வுகளில் இச்சட்டம் குறித்த அறிவைக் கோரும் தேர்வு ஒன்று உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
2008 – 2010 ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் தேசிய அளவில் 31 சதமாக இருக்க, தமிழகத்தில் அது வெறும் 17.4 சதமாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகமும் உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது (The Hinde, Dec, 15, 2013).
நிலைமை இப்படியிருக்க இங்கு வன்கொடுமைத் தடுபுச் சட்டத்திற்கு எதிராக ஆதிக்க சாதிக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்பட்டுவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியுடன் ஒரு முறையும், பா.ஜ.கவுடன் ஒருமுறையும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்ததை நாம் அறிவோம். இருமுறையும் இந்த இரு கட்சிகளும் சில மாதங்களில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமையில் இயங்கிய ஆட்சிகளைக் கவிழ்த்தன. வன்கொடுமைத் தடைச் சட்டத்தை முதல்வர் மாயாவதி கறாராகப் பயன்படுத்தியமைக்கு எதிராகவே இந்த இரு ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடைபெற்றன என்பது நினைவு கூரத்தக்கது. சாதி, மத, இன அடிப்படைகளில் இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய நாடுகளில் இதுபோன்ற சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவையும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் அக் கொடுமைகளால் பாதிக்கப்படுவோரை ஆற்ற்றல்படுத்த வேண்டிய அவசியங்களும் எழுகின்றன. ஏதோ இந்தியாவில் மட்டுமே இப்படி ஒரு சட்டம் செயல்படுவது போல இங்குள்ள ஆதிக்க சாதிகள் சொல்வது அப்பட்டமான பொய்.
ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஹாங்காங், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் இத்தகைய “புறக்கணிப்புகளுக்கு எதிரான சட்டங்கள்” (Anti – Discrimination Acts) செயல்படுகின்றன. ‘ஒதுக்கல்களுக்கு எதிரான சட்டம், 1991’ (ஆஸ்திரேலியா), Law Agains Racism, 2010 ((பொலிவியா), Race Relations Amendment Act, 2000 ((பிரிட்டன்) முதலியன சில எடுத்துக்காட்டுகள். நிலைமை இப்படி இருக்க தமிழக ஆதிக்க சாதி அமைப்புகள் இச்சட்டம் குறித்த தவறானதும், பொய்யானதுமான பல செய்திகளைப் பரப்பி எப்படியாவது இதை முடிவுக்குக் கொண்டு வருவதில் மும்முரமாய் உள்ளனர்.
நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவுப்படி தீண்டாமை “ஒழிக்கப்பட்டு” விட்டது. தீண்டாமை ஒரு குற்றம். எனினும் நமது வழமையான குற்றவியல் சட்டங்களில், நடைமுறையில் உள்ள பல தீண்டாமைச் செயல்கள் குற்றப்பட்டியலின் கீழ் வரா. அப்படியே வந்தாலும் அதற்குரிய கடுமையுடன் அவை முன்வைக்கப் படாமல் மிகச் சாதாரணக் குற்றங்களாகவும், குறைந்த தண்டனைக்குரியவையாகவுமே  அவை அணுகப்பட்டிருக்கும். 1948ம் ஆண்டின் உல்களாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டபின் உருவான நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஓரளவு நன்றாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான குற்றவியல் மற்றும் சிவில் உரிமைச் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வடிவிலேயே தொடர்கின்றன. அரசியல் சட்டத்திற்குத் தக அவை ஒத்திசையச் (tune) செய்யப்படவில்லை.
எனவே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவு உண்மையிலேயே அமுலாக்கப்பட வேண்டுமானால் அதற்குத் தக குற்றவியல் சட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் இரு மாற்றங்கள் இதற்குத் தேவையாகின்றன. அவை.:
  1. குற்றவியல் சட்டங்களில் காணப்படாத புதிய குற்றங்களை வரையறுப்பது. (சமூக விலக்கு செய்தல், சொத்துக்களை அனுபவிக்க இயலாது தடுத்தால், எதிர் வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
  2. இந்தக் குற்றங்களுக்கு தண்டனைகளையும், சில குற்றங்களுக்கான குறைந்தபட்சத் தண்டனைகளாகக் குற்றவியல் சட்டங்கள் விதித்துள்ளதையும் அதிகரிப்பது. (குற்றம் செய்தவர் அரசு ஊழியராயின் அதுபோன்ற குற்றங்களுக்குச் சாதாரணமாக வழங்கபடும் குறைந்த பட்சத் தண்டனையைக் கூட்டுவது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீனை மறுப்பது, அவரது சொத்துக்களை முடக்குவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தகையோரின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வது முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்த அடிப்படையில்தான் 1955ல் ‘சிவில் உரிமைச் சட்டமும்’, பின் அதன் போதாமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து, 1989ல் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்’, 1995ல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலேயுள்ள இவ்விரு கூறுகளையும் தவிர மேலும் மூன்று முக்கிய வரவேற்கத் தக்க கூறுகளைக் கொண்டதாக அமைந்தது. அவை:
  1. குற்றம் செய்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என இரு சாரரும் எந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான அவசிய நிபந்தனைகள் ஆக்கப்பட்டன. ஒரு சனநாயக அரசியல் அமைப்பில் இது சாத்தியமில்லை. குற்றவியற் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க இயலும். குற்றம் இழைத்தவர் தலித் அல்லாதவராக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர் தலித்தாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை உருவாக்க இயலாது. ஆனால் இன்று இச்சட்டத்தில் அப்படியான ஒரு நிபந்தனை உருவாக்கப் பட்டது ஒரு மிக முக்கியமான மாற்றம். சாதிக்கொரு தண்டனை என்கிற மனு நீதி கோலோச்சிய நாட்டில் அந்நிலை முதன்முதலாக இப்படித் தலை கீழாக்கப்பட்டது என்பது ஒரு புரட்சி எனலாம்.
  2. பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அமைத்தல் ஆகியவை இச்சட்டத்தில் விரிவாக உள்ளடக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது வாரிசுகள், சாட்சிகள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், பயணப்படி முதலியவற்றை அளித்தல், பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல உடனடியாக இழப்பீடுகளை வழங்குதல் முதலியன இதில் அடங்கும்.
  3. இவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்த உரிய கருவிகளை உருவாக்குவதற்கும் இச்சட்டம் வழி வகுக்கிறது.. இந்த வழக்குகளை விரைவாக நடத்தித் தண்டனைகளை வழங்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், வழக்கை நடத்தச் சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்தல்,. வன்கொடுமை நடக்கக் கூடிய பகுதிகளை அடையளம் கண்டு கண்காணிக்கவும், ஆய்வு நடத்தவும், விழிப்புணர்வை உருவாக்கவும் உரிய ‘செல்’களை அமைத்தல் முதலியன இதில் அடங்கும்.
இப்படியான வழிமுறைகளெல்லாம் இருந்தபின்னும் ஏன் உரிய பலன்களை இந்தச் சட்டத்தின் மூலம் தலித் மற்றும் பழங்குடியினர் பெரிய பயன் ஏதும் பெற இயலவில்லை? தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஏன் குறையவில்லை?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ஆய்வு நூல். இச்சட்டத்தின் பயன்பாடு தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. கடலூர், விழுப்புரம், ஈரோடு கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007ம் ஆண்டு முதல் 2012வரை நடை பெற்ற தலித் மக்களின் மீதான் வன்கொடுமைகளை இது விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகள், நேரடியான கள ஆய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ் வன்கொடுமைகள் எவ்வாறு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் கையாளப்பட்டன என்பதை விரிவான ஆதாரங்களுடன் தொகுத்து ஆய்வு செய்கின்றனர் இதன் ஆசிரியர்களான முருகப்பனும் ஜெசியும். வன்கொடுமை மேற்கொள்ளப்படுவது தொடங்கி புகார் பதிவு செய்யப்படுவது, வழக்கு விசாரிக்கப்படுவது, சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுவது, நீதிமன்றம் இவ்வழக்குகளைக் கையாள்வது என ஒவ்வொரு நிலையையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு மட்டத்திலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகிறது, வன்கொடுமைகளை மேற்கொண்டவர்கள் எவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர் என்பவற்றைத் துல்லியமாக நிறுவுகின்றனர்.
மதுரையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மையம் 2007ம் ஆண்டு இதே போல ஒரு ஆய்வு நுலை வெளியிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வு முடிவுகளை எம்.ஏ.பிரிட்டோ தொகுத்திருந்தார். 1996 லிருந்து 2001 வரை நடைபெற்ற கொடுமைகள் அந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த நூலின் முடிவுகளைத் தற்போது நண்பர்கள் முருக்கப்பனும் ஜெசியும் கண்டடைந்துள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இச்சட்டம் பயன்படுத்தப்படுவதில் எத்தகைய முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என்பது விளங்குகிறது. காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றிற்கு, மொத்தத்தில் அரசிற்கு இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான அரசியல் விருப்புறுதி இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்திய அளவில் நீதிம்ன்றங்கள் எவ்வாறு இச்சட்டத்திற்குத் தவறான விளக்கங்களை அளித்து குர்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ராஜேஷ் சுக்லா ஆய்வு செய்துள்ளார் (Economic and Political Weekly, Oct 21, 2006). அதைச்சுருக்கித் தமிழாக்கி 2008ல் ‘சஞ்சாரம்’ எனும் இதழில் வெளியிட்டேன். எனது ‘நெருக்கடி நிலை உலகம்’ நூலிலும் (எதிர் வெளியீடு, 2008) அது உள்ளது.
இவ்வாறு குற்றம் செய்கிற ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள இச் சட்ட வாசகங்கள் சிலவற்றையும், ஒட்டுமொத்தமாகச் சில பிரிவுகளஈயும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என இது தொடர்பாக அக்கறையுள்ளோர் மத்தியில் தற்போது தேசிய அளவில் கருத்தொருமிப்பு உருவாகியுள்ளது. இது குறித்தும் சென்ற ஆண்டு ‘மக்கள் களம்’ என்னும் தலித் மாத இதழில் விரிவாக எழுதியுள்ளேன். எனது இணையத் தளத்திலும் அது உள்ளது.
முருகப்பனும் ஜெசியும் தொகுத்துள்ள இந்நூலின் முதற் பகுதி மிக விரிவாக  தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகளின் வரலாற்றையும், அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சரளமான நிரடலற்ற மொழியில் சொல்லியுள்ளது மொத்தத்தில் தமிழக தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இது அமைந்துள்ளது.. இவ்வகையில் நூலாசிரியர்களையும் இவ் ஆய்வை மேற்கொண்ட ‘இளைஞர்களுக்கான சமூக விழிபுணர்வு மையம், தமிழ்நாடு’ (SASY) மற்றும் ‘நீதிக்கான தேசிய தலித் இயக்கம், புது டெல்லி’ (NDMJ) ஆகிய அமைப்புகளையும்கும் இவ் வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கறையுள்ள நாம் எல்லோரும் பாராட்டக்க் கடமைப்பட்டுள்ளோம்.
இறுதியாக ஒன்று. அங்கொன்றும், இங்கொன்றுமாக இச்சட்டத்தின் அடிப்படையில் தொடுக்கப்படும் ஓரிரு பொய் வழக்குகளைப் பெரிதுபடுத்தி இச்சட்டத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையே கொச்சைப்படுத்துடுகின்றன ஆதிக்க சாதி அமைப்புக்கள். இதன் மூலம் இச்சட்டம் உண்மையில் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வன்கொடுமை செய்யும் சாதியினர் காப்பாற்றப்படுவதற்கே வழி வகுக்கப்படுகிறது என்கிற உண்மை மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறைக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், தமது ஆதரவாளர்கள் மூலமாகவும் செயல்படுத்துகிற சமூக வலைத்தளங்கள் இதில் முன்னிற்கின்றன. இந்நிலை கவலைக்குரியது. இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வாறு பொய் வழக்குத் தொடுப்போரை வெளிப்படையாகக் கண்டித்து அவ்வழக்குகளைத் திரும்பப்பெற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கரையுள்ளோர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறின்றி நாம் மௌனம் சாதிப்போமேயானால் அது ஆதிக்க சாதியினரின் பொய்ப் பிரச்சாரத்திற்கே வலு சேர்க்கும்.
அ.மார்க்ஸ்,
14-03- 2014,
குடந்தை                                                                                                                                                                                                         நன்றி :  http://amarx.org/?p=974

Saturday, March 29, 2014

தேர்தல் புறக்கணிப்பு : பழங்குடி இருளர்கள்

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
334, பூந்தோட்டத்தெரு, திண்டிவனம் - 604 001.
கைப்பேசி 9442622970
                                                                                                                                                                                                                                நாள்  : 22.03.2014
விழுப்புரம் மாவட்டத்தில் 16வது மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்

வரும் ஏப்ரல் 24ந் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் 16வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து 35 கிராமங்களைச் சோந்த 63 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் பழங்குடியின இருளர்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இருளர்களின் வாழ்நிலை
விழுப்புரம் மாவட்டத்தில் இருளர்கள் உள்ளிட்ட பழங்குடியினர், மொத்த மக்கள் தொகையில் 2.16% ஆகும். இதில் பெரும்பான்மையினர் இருளர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் சமவெளிகளில் சிதறி வாழ்கின்றனர். மிகப் பெரும்பான்மையினர் நிலமற்றவர்கள். செங்கல் சூளை, கரும்பு வெட்டுதல் மற்றும் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக வேலைசெய்து வருகின்றனர்.              மனைப்பட்டா இல்லாதவர்கள் 43%. குடும்ப அட்டை வழங்கப்படாதவர்கள் 26%. தமிழகத்தின் எழுத்தறிவு 80%க்கும் அதிகமாக உள்ள நிலையில் இருளர்களின் எழுத்தறிவு 38% ஆகும். அண்மை காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் விளிம்பு நிலையில் வாழும் இருளர்களின் மேம்பாட்டில் அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை. வாக்குவங்கி மிகவும் குறைவாக உள்ள நிலையில் இவர்களின் பிரச்சனைகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

இனச்சான்று
கடந்த பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள் மற்றும் சில நல்ல அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அனைத்து குடியிருப்புகளிலும் ஓரளவு இனச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் போதிய ஆதாரங்கள் உள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாக விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையினருக்கு இனச்சான்று வழங்கப்படவில்லை.
                        பிறசாதி மாணவர்கள் பள்ளிகள் மூலம் எளிதாக இனச்சான்று பெறுகிறார்கள். ஆனால் இருளர் இன மாணவர்களுக்கு, எங்களுக்குத் தெரிந்து இரண்டு பள்ளிகளைத் தவிர (திண்டிவனம் வட்டத்தில் தாதாபுரம், கருவம்பாக்கம்) வேறு எந்தப் பள்ளி மூலமும் இனச்சான்று பெற்றுத்தரப்படவில்லை.
போராட்டங்கள், முறையீடுகள்
விரைவில் இனச்சான்று வழங்கக்கோரி 09.06.2011இல் செஞ்சியிலும் 20.06.2011இல் விழுப்புரத்திலும், 23.06.2011இல் திண்டிவனத்திலும் 07.07.2011இல் திருக்கோவிலூரிலும் மொத்தம் 1500க்கும் மேற்ப்பட்ட இருளர்கள் பங்கு கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். 02.01.2012இல் விழுப்புரத்தில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் பங்கு கொண்ட உண்ணாநிலை போராட்டம் நடத்தினோம். 2012 ஏப்ரல் & மே மாதங்களில் நடைபெற்ற திண்டிவனம் தீர்வாயத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த 116 பேர் விண்ணப்பித்தனர். இதில் கிராண்டிபுரம், மேல்பாக்கம் ஆகிய இரு கிராமங்களைத் தவிர வேறு கிராமத்தினர் எவருக்கும் இதுவரை இனச்சான்று வழங்கப்படவில்லை. 23.07.2012இல் மாவட்ட நிர்வாகத்திடம் விழுப்புரம், செஞ்சி, திருக்கோவிலூர், வானூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 59 கிராமங்களில் வாழும் இருளர்களுக்கு இனச்சான்று வேண்டி விண்ணப்பித்துள்ளோம்.



மனைப்பட்டா
                        வானூர் வட்டம், புளிச்சம்பள்ளம் கிராமத்தில் 40க்கும் மேற்ப்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன. கன்னியம்மன் கோயில் அருகில் உள்ள குளக்கரையில் தற்காலிகமாக குடியிருக்கும் இருளர்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு (1993&1994) 1.85 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இருளர்களுக்கு ஆதரவாக 2009இல் தீர்ப்பு வெளியானது. ஐந்தாண்டுகளாகியும், ஆதிதிராவிடர் நலத்துறையினர் மேற்படி இடத்தை இருளர்களுக்கு பட்டா வழங்கி அளந்து கொடுக்கவில்லை. திண்டிவனத்திலும், விழுப்புரத்திலும் பலமுறை அலைந்து முறையிட்டதுதான் மிச்சம். இது போன்று திண்டிவனம் சஞ்சீவீராயன்பேட்டை, பெரப்பேரி, புலியனூர் இருளர்களுக்கும் இதுவரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை.

இருளர்கள் மீது தொடரும் வன்கொடுமைகள்
                        வன்கொடுமைக்கு ஆளாகும் இருளர்கள் கொடுக்கும் புகார்கள் மீது காவல் அதிகாரிகள் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் & 1989இல் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. வழக்காக பதிவு செய்வதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. முறையான புலன் விசாரணை செய்யாமல் குற்றவாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, பல வழக்குகளை பொய் வழக்குகள் என காவல் துறையினரே தள்ளுபடி செய்கின்றனர். இதற்கு பல அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல்துறையோடு இணைந்து செயல்படுகின்றனர்.
                        மேலும் கண்டு பிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, இருளர்கள் மீது சுமத்தி சித்தரவதை செய்து சிறையில் அடைக்கின்றனர். நமக்குத் தெரிந்து 1993இல் அத்தியூர் விஜயாவின் தந்தை மாசி தொடங்கி 2012இல் சித்தேரி கிராமம் ரமேஷ் உள்ளிட்டு 32 பேர் மீது தலா ஒன்று முதல் 6 வழக்குகள் வரை போட்டு அவர்களின் வாழ்க்கையை காவல் துறையினர் சீரழித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக திருக்கோயிலூர் தி.கே.மண்டபத்தைச் சேர்ந்த 4 இருளர் இனப் பெண்களை திருக்கோவிலூர் போலீசார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பழங்குடியின அமைப்புகள் மட்டுமில்லாது மனித உரிமையில் அக்கறையுள்ள பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியும் இது வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 1/2 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியாக இருந்த பேரா.பிரபா.கல்விமணி, பி.வி.ரமேஷ் மீது பொய் வழக்கு போட்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
                        இனச்சான்றுக்காகவும் இருளர் மீது தொடுக்கப்படும் வன்கொடுமைகள் குறித்தும் பொதுக்குழுவில் 09.04.2013ல் தீர்மானங்கள் நிறைவேற்றி தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து  அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ப.இ.பா.ச. கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
·          விழுப்புரம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இனச்சான்று வழங்காததையும், எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சரியாக அமல்படுத்தாதையும் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
·          சமூக அமைதியை சீர்குலைக்கும் மதவாத, மற்றும் சாதியவாத சக்திகளுக்கு எதிராக வாக்களிக்கும்படி கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சங்க உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.
·          மனிதஉரிமைகளுக்கு ஆதரவாகவும், பழங்குடி இருளர் தொடர்பான அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு கொள்ளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், பொதுச்செயலாளர் எழுத்தாளர் துரை.ரவிக்குமார் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
·          வேட்பாளர்களிடமோ அல்லது அவர்களின் முகவர்களிடமோ, வாக்களிக்க பணமோ அல்லது பிற பொருட்களோ வாங்கக்கூடாது என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகிறோம். மீறுவோர் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
                                                                                                                                                   இவண்,
ஆசிரியர் மு. ஜெயபாலன்                              சு.ஆறுமுகம்                           மு.நாகராஜன்
        தலைவர்                                                      பொதுச்செயலாளர்                                                          பொருளாளர்

 கோ.ஆதிமூலம்               உ.மலர்                க.சிவகாமி                        ரெ.சின்ராசு
 துணைத் தலைவர்                  துணைத் தலைவர்                      து.செயலாளர்                                         து.செயலாளர்

                                                                              பிரபா.கல்விமணி          பி.வி.ரமேஷ்

                                                                                                 ஒருங்கிணைப்பாளர்கள்