Thursday, August 23, 2012

ஆதிக்க சாதியின் ஆணவம்


அனுப்புனர்                                        31.07.2012
அமுதா(35) க/பெ கமலகண்ணன,
மாரியம்மன் கோயில் தெரு,
பருக்கன்பட்டு கிராமம்,
ஆணைவாரி பஞ்சாயத்து,
திருவெண்ணைநல்லுர் ஒன்றியம்,
உளுந்துர்பேட்டை வட்டம்,விழுப்புரம் மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்.

அய்யா
பொருள் :  ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தி தரக்கோருதல் 

வணக்கம். 
நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். நாங்கள் கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். என் கணவர் லாரி ஒட்டுநராக வேலை செய்து வருகிறார். எனக்கு கார்த்தீகா(09),  தனலட்சுமி(07), யோகபிரசன்னா(05) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். 
என் கணவருக்கு  மணிவண்ணன்(28), கோபாலகண்ணன்(23) என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். என் கணவர் மட்டும் சொந்த ஊரிலே இருந்து வருகிறார். இரண்டு சகோதரர்களும் சென்னையில் குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார்கள். இங்கு கிராமத்தில் நாங்கள் மட்டுமே வசித்து வருகின்றோம். 
கடந்த 20.07.2012 அன்று ஊரில் கெங்கையம்மன் கோயில் திருவிழா நடந்தது. அன்று இரவு 12 மணியிலிருந்து மறுநாள் 12 வரை சாமி ஊர்வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு வீட்டின் முன்பும் சாமி ஊர்வலம் படையலுக்காக கொஞ்ச நேரம் நிற்கும். படையல் முடிந்த பிறகுதான் அடுத்த வீட்டிற்குச் செல்லும். இப்படித்தான் எங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நடக்கின்றது. இந்த வருடம் கடந்த 20.07.12 அன்று எங்கள் வீட்டின் முன்பு வராமல் பக்கத்து வீட்டில் சாமி ஊர்வலம் போய் நின்றது. என் கணவர் ஊர்முக்கியஸ்தர்களான 1.லட்சுமணன் 2.தோப்பையான் 3.சக்திவேல் 4.ராஜேந்திரன் 5. வெள்ளையன் 6.வெங்கடேசன் 7.கோவிந்தசாமி 8.கணபதி 9.மாயவன் 10.சுப்பிரமணியன் ஆகிய நபர்களிடம் இது குறித்து கேட்டார். ஆனால் மேற்படி ஊர்ப்பிரமுகர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் என் கணவரை அவர்கள் அனைவரும் சேர்ந்து அடித்துத் தாக்கினார்கள். 
இதனால் அசிங்கமும், அவமானமும் அடைந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் லாரி ஒட்டுவதற்காக சென்றுவிட்டார். திருவிழாவிற்காக வந்திருந்த என் கணவரின் தம்பிகளும்  சென்னைக்குச் சென்றுவிட்டார்கள். கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் எங்களுடைய கறவை மாட்டை கன்றுக் குட்டியுடன் எனக்கு தெரியாமல் ஒட்டி சென்று மாரியம்மன் கோயில் வாசலில் கட்டி வைத்திருந்தனர். நான் பால் கறப்பதற்காக கயிற்றை அவிழ்க்க சென்றபோது என்னை அவிழ்க்க கூடாது என்று லட்சுமணன் என்பவர் தடுத்துவிட்டார். மறுநாள் 21.07.2012 அன்று மதியம் 12 மணியளவில் எங்கள் வீட்;டிற்கு வரும் குடித்தண்ணீரையும்  துண்டித்துவிட்டார்கள். அதன்பிறகு மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு சமைக்க அடுப்பைப் பற்ற வைத்தேன் அதிலும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினார்கள். அடுத்த 3 நாட்களும் ஊரின் ஏரியில் உள்ளத்  தண்ணீரைக் கொண்டு வந்துதான் நாங்கள் குடிப்பதற்கும்,  சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தோம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசக் கூடாது என்றும் ஊர்க் கட்டுபாடுகள் விதித்தார்கள். 
அதன்பிறகு 23.07.2012 அன்று மாலை 2 மணிக்கு மேற்படி ஊர்ப்பிரமுகர்கள்  என் மாமானார் மாயவன் மற்றும் என் கணவர் இருவர் மீதும் திருவெண்ணெய் நல்லுர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அதில் ஊரில் என் மாமனாரும், கணவரும் எல்லோரையும் அசிங்கமாகப் பேசுவதாகக் கூறியுள்ளனர்.  ஆதனடிப்படையில் மாமானாரை போலீசார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றார்கள். அங்கிருந்த போலீசாரிடம் எனது மாமனார் நடந்ததைக் கூறியுள்ளார். மேலும் சாமி நிற்காமல் சென்றதைக் கேட்டதற்காக நாங்கள் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ளதையும், எங்களுக்கு தண்ணீர், மின்சாரம், மாடு மேய்ப்பது ஆகியவை தடை செய்;யப்பட்டுள்ளது என்பதையும், ஊரில்   யாருடனும் பேசக் கூடாது என ஊர்க்கட்டுப்;பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்;ளார்.  இதனைக்கேட்டப் போலீசார் உடனடியாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 
மாலை 4.00 மணியளவில் கிராமத்திற்கு வந்த  வட்டாட்சியரை மேற்படி ஊர்ப்பிரமுகர்கள் ஊருக்குள் விடாமல் தடுத்தார்கள். வட்டாட்சியரின் ஜீப்பையும் வழிமறித்தார்கள். பேச்சு வார்த்தை நடத்திய வட்டாட்சியரிடம் மேற்படி ஊர்பிரமுகர்கள் என் கணவர் அனைவர்  காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் நாங்கள் ஊர்க்கட்டுப்பாட்டை நீக்குவோம்  என்று கூறியுள்ளார்கள். ஆனாலும் அவாகளின் எதிர்பை மீறி வட்டாடசியர் எங்களுக்கு குடி நீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.
பிற கட்டுப்பாடுகள் அனைத்தும் அப்படியே உள்ளது. அய்யா அவர்கள் இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தி தரும்படி வேண்டுகிறோம். 
இவண்,