Sunday, October 19, 2008

கடத்தல் கற்பழிப்பு


திண்டிவனம் அருகே உள்ள வானூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் தனது தாயாரின் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் கட்டிடவேலைக்கும் சில நேரங்களில் செல்வார். அவ்வாறு செல்லும்போது செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இவர்களின் இந்த உறவை லட்சுமணனின் அண்ணன் ராமன் விரும்பவில்லை. கடந்த ஞாயிறு 12.10.2008 இரவு ஏழு மணியளவில் செஞ்சி பேருந்துநிலைய கூட்டுசாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சாந்தியை, ராமன், இன்னொருவரை துணைக்கு சேர்ந்துக்கொண்டு கடத்திச் சென்று, அடர்ந்த பாறையருகே வைத்து மிரட்டி முழுநிர்வாணப்படுத்தியுள்ளார். சாந்தியின் செல்பேசி, வெள்ளிகொலுசு, அரைபவுன் கம்மல், ஒன்றரை பவுன் சங்கிலி ஆகியவற்றை ராமன் பறித்துக்கொண்டுள்ளார். பின்பு ''இதுதான் என் தம்பி கட்டிய தாலி கயிறா?" எனக்கூறி சாந்தியின் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை அறுத்துள்ளார். ‘‘என் தம்பி கூட படுத்த இல்ல, இப்ப என்கூடவும் படு’’ என்று கூறி அடித்து, உதைத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். பின்பு ராமனுடன் இருந்தவனும் நீளமான வீச்சரிவாளை காட்டி, படுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அருகே உள்ள சவுக்குத்தோப்பிற்கு இழுத்துச்சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். ராமன் ‘‘மாப்ள எங்கடா இருக்க வாடா’’ என்று கூப்பிட்ட பின்பு அந்த நபர் சாந்தியை விட்டு சென்றுள்ளார். அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சாந்தி அந்த இடத்திலிருந்து எழுந்து தப்பித்து ஓடியுள்ளார். கொஞ்ச தூரம் போனபிறகுதான் சாந்திக்கு இவ்வளவுநேரம் தன் உடம்பில் துணியே இல்லாமல் நிர்வாணமாக ஓடி வந்தது தெரிந்துள்ளது. அதன்பிறகும் உடம்பில் துணியில்லாமலேயே சிறிது தூரம் சென்று ஒரு வீட்டின் அருகே சென்றுள்ளார். அந்த வீட்டில் ஆண் ஒருவரும் படுத்திருக்கவே, அருகில் உள்ள வீட்டின் வெளியே கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஒரு பாவாடையை எடுத்து உடுத்திக்கொண்டு அந்த வீட்டின் வெளியே படுத்திருந்த பெண்ணை எழுப்பியுள்ளார். அவர்கள் உதவியுடன் அன்றிரவு அங்கு தங்கியிருந்துள்ளார். விடிந்த பிறகு 13.10.08 அன்று அங்கிருந்து சாந்தி அவரது ஊருக்கு சென்றுள்ளார். அன்று இரவுதான் தனது தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார் சாந்தி. வெளியில் சொல்ல இரண்டு நாட்கள் தயங்கிய பின்பு, பிறர்மூலம் கேள்விபட்டு 16-10-08 அன்று திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கத்தை சாந்தியும், அவரது தாயாரும் அனுகினார்கள். அதன்பின்பு புகார் தயாரிக்கப்படு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் தந்தார். கடத்தல் சம்பவம் நிகழ்ந்த செஞ்சி காவல் நிலையத்தில் நேற்று சாந்தியின் புகாரின் பேரில் மேற்படி ராமன் அவரது கூட்டாளி ஆகியோர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.