இஸ்லாமியர்களுக்கு எதிரான
கட்டுக்கதைகளின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் : அமரன்
----------------------------------------------------------------------------------------------------------------------
பலநேரங்களில் எது பேசப்படவேண்டுமோ அது பேசப்படாமல் போகும். எது செய்தியாக்கப்பட வேண்டுமோ, அது ஒற்றை வரி செய்தியில் கூட வராமல் போய்விடும்.
இயக்குநர் உள்ளிட்டவர்கள் கூட நினைத்துப் பார்த்திராத வகையில் மெய்யழகன் படம் இப்போது ஒவ்வொரு காட்சியும், வசனமும் அதாவது Frame by Frame Decoding செய்யப்பட்டு வருகிறது.
மெய்யழகன் அந்த அளவிற்கு முக்கியமான படமாவோ, Political Agenda எதுவும் இருப்பதாகவோ தெரியவில்லை. சாதிய இருப்பினை தக்க வைப்பதாக இருக்காலாம், மிகைப்படுத்தப்பட்ட அதீத உணர்ச்சி உணர்வு மிகுந்தாகவும் இருக்கலாம். இதனால் ஏற்படும் எதிர் மறை அல்லது ஆபத்துகளைவிட அமரன் பலமடங்கு விஷத்தை விதைத்துள்ளது.
தேசபக்தி, எல்லைப் பாதுகாப்பு, இராணுவம், உயிரிழப்பு என்ற போர்வையில் இந்துமயமாக்கல் என்ற வலை விரிக்கப்பட்டுள்ளது. இந்த வலையில் ஏறக்குறைய பொதுச் சமூகம் விழுந்து கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை.
அமரனும் அதன் உள்நோக்கமும்தான் இப்போது Decoding செய்யவேண்டும்.
விஜய்காந்த் அவர்களோடு முடிந்துபோன காஷ்மீர் மற்றும் தீவிரவாதிகள் இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனாக கமலஹாசனின் முழு புத்தியிலிருந்து வெளியாகியுள்ளது.
குருதிப்புனல், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் ஆகியவைகளின் தொடர்ச்சி என்று கூட சொல்லலாம். அதில் சாதிக்க முடியாததை இதில் சாதித்துக்கொண்டார். இனி இவரின் அரசியல் மற்றும் கலைப் பயணம் வலுவாக அமையும்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதால் பழிவாங்க வரும் தீவிரவாதி அல்தாப் பாபா முகுந்தனால் கொல்லப்பட்டதும், அதற்குப் பழிவாங்க வாசிம் அலி வருகிறார். இவரைக் கொல்லும்போது முகுந்தனும் இறந்து போகிறார். இதுதான் படம்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மணிரத்னம், கமல்ஹாசன்கள் காஷ்மீர் என்றால் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பதை விடமாட்டார்கள்.
பிறந்த குழந்தைக்கு, கிருஷ்ணர் சிலையைப் பார்த்து முகுந்த் என பெயர் வைக்கப்படுகிறார்கள். (தசாவதாரம் நினைவு வரவில்லை என்றால் ஆச்சரியம்).
இப்போது Decoding செய்யப்பட வேண்டியது மெய்யழகன் அல்ல. அமரன்தான்.
மெய்யழகன் பேசும் உறவுகளாலும் உணர்வுமயமான கற்பனைகளாலும் பெரும் ஆபத்துகள் இல்லை. எந்த சமூகத்தையும் தீவிரவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் சித்தரிக்கவில்லை. உறவுகளால் கட்டியெழுப்பப்படும் உணர்வுகளால் சாதி இருப்பு தக்க வைக்கப்படலாம். ஆனால் அமரன் கட்டமைக்கும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்காது என நினைக்கிறேன்.
இந்து மயமாக்கலின் அரசியல் தெரியாத இன்றைய 2கே கிட்ஸ், இந்து வர்கீஸ் எனும் மனைவியின் கண்ணீருக்கு காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள் என நம்புகின்றனர்.
இந்திய அரசும், RAW வும் சேர்ந்து போலியாக அமைப்புகளை உருவாக்கி ஆயுதங்கள் வழங்கியது, தாக்குதல்களைத் தொடுத்தது, பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தது போன்றவைகள் பேசப்படுவதில்லை.
இது குறித்து எழுதிய The Caravan பத்திரிகையை பாஜக அரசு முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் செய்திகள் வருகின்றன.
வீட்டிலுள்ள பெண்கள், 2கே கிட்ஸ், குழந்தைகளிடம் நாம் அமரனின் ஆபத்து குறித்தும், இதன் பின்னுள்ள அரசியல் குறித்தும் பேசவேண்டும். இல்லையென்றால் அமரன் நிச்சயம் 2கே கிட்ஸ் மற்றும் பெண்கள் மனதில் அமரனாகவே இருப்பான்.
நாமெல்லாம் ஆபத்தானவர்களாக முன்னிறுத்தப்படுவோம்.