பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
334, பூந்தோட்டத்தெரு, திண்டிவனம் - 604
001.
கைப்பேசி 9442622970
நாள்
: 22.03.2014
விழுப்புரம்
மாவட்டத்தில் 16வது மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்
வரும் ஏப்ரல் 24ந் தேதி
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 16வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பழங்குடி இருளர்
பாதுகாப்புச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்
மாவட்டங்களிலிருந்து 35 கிராமங்களைச்
சோந்த 63 பேர் கலந்து
கொண்டனர். பொதுக்குழுவில் பழங்குடியின இருளர்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருளர்களின் வாழ்நிலை
விழுப்புரம் மாவட்டத்தில் இருளர்கள் உள்ளிட்ட
பழங்குடியினர், மொத்த மக்கள் தொகையில் 2.16% ஆகும். இதில் பெரும்பான்மையினர் இருளர்கள் ஆவர். இவர்கள்
பெரும்பாலும் சமவெளிகளில் சிதறி வாழ்கின்றனர். மிகப் பெரும்பான்மையினர்
நிலமற்றவர்கள். செங்கல் சூளை, கரும்பு வெட்டுதல்
மற்றும் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக வேலைசெய்து வருகின்றனர். மனைப்பட்டா இல்லாதவர்கள் 43%. குடும்ப அட்டை வழங்கப்படாதவர்கள் 26%. தமிழகத்தின் எழுத்தறிவு 80%க்கும் அதிகமாக
உள்ள நிலையில் இருளர்களின் எழுத்தறிவு 38% ஆகும். அண்மை காலங்களில்
விழுப்புரம் மாவட்டத்தில் விளிம்பு நிலையில் வாழும் இருளர்களின் மேம்பாட்டில்
அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை. வாக்குவங்கி மிகவும் குறைவாக உள்ள நிலையில்
இவர்களின் பிரச்சனைகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் முக்கியத்துவம்
அளிப்பதில்லை.
இனச்சான்று
கடந்த பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள்
மற்றும் சில நல்ல அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அனைத்து குடியிருப்புகளிலும் ஓரளவு
இனச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் போதிய ஆதாரங்கள் உள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாக விண்ணப்பித்துள்ள
பெரும்பான்மையினருக்கு இனச்சான்று வழங்கப்படவில்லை.
பிறசாதி
மாணவர்கள் பள்ளிகள் மூலம் எளிதாக இனச்சான்று பெறுகிறார்கள். ஆனால் இருளர் இன
மாணவர்களுக்கு, எங்களுக்குத்
தெரிந்து இரண்டு பள்ளிகளைத் தவிர (திண்டிவனம் வட்டத்தில் தாதாபுரம், கருவம்பாக்கம்)
வேறு எந்தப் பள்ளி மூலமும் இனச்சான்று பெற்றுத்தரப்படவில்லை.
போராட்டங்கள், முறையீடுகள்
விரைவில் இனச்சான்று வழங்கக்கோரி 09.06.2011இல் செஞ்சியிலும்
20.06.2011இல்
விழுப்புரத்திலும்,
23.06.2011இல் திண்டிவனத்திலும் 07.07.2011இல் திருக்கோவிலூரிலும் மொத்தம் 1500க்கும்
மேற்ப்பட்ட இருளர்கள் பங்கு கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். 02.01.2012இல்
விழுப்புரத்தில் 500க்கும்
மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் பங்கு
கொண்ட உண்ணாநிலை போராட்டம் நடத்தினோம். 2012 ஏப்ரல் & மே மாதங்களில் நடைபெற்ற திண்டிவனம் தீர்வாயத்தில் 11 கிராமங்களைச்
சேர்ந்த 116 பேர்
விண்ணப்பித்தனர். இதில் கிராண்டிபுரம், மேல்பாக்கம் ஆகிய இரு கிராமங்களைத் தவிர வேறு கிராமத்தினர்
எவருக்கும் இதுவரை இனச்சான்று வழங்கப்படவில்லை. 23.07.2012இல் மாவட்ட நிர்வாகத்திடம் விழுப்புரம், செஞ்சி, திருக்கோவிலூர், வானூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை
ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 59 கிராமங்களில்
வாழும் இருளர்களுக்கு இனச்சான்று வேண்டி விண்ணப்பித்துள்ளோம்.
மனைப்பட்டா
வானூர் வட்டம், புளிச்சம்பள்ளம் கிராமத்தில் 40க்கும்
மேற்ப்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன. கன்னியம்மன் கோயில் அருகில் உள்ள
குளக்கரையில் தற்காலிகமாக குடியிருக்கும் இருளர்களுக்காக 20 ஆண்டுகளுக்கு
முன்பு (1993&1994)
1.85 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடந்த
வழக்கில் இருளர்களுக்கு ஆதரவாக 2009இல் தீர்ப்பு வெளியானது. ஐந்தாண்டுகளாகியும், ஆதிதிராவிடர்
நலத்துறையினர் மேற்படி இடத்தை இருளர்களுக்கு பட்டா வழங்கி அளந்து கொடுக்கவில்லை.
திண்டிவனத்திலும், விழுப்புரத்திலும்
பலமுறை அலைந்து முறையிட்டதுதான் மிச்சம். இது போன்று திண்டிவனம்
சஞ்சீவீராயன்பேட்டை, பெரப்பேரி, புலியனூர்
இருளர்களுக்கும் இதுவரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை.
இருளர்கள் மீது தொடரும் வன்கொடுமைகள்
வன்கொடுமைக்கு ஆளாகும் இருளர்கள் கொடுக்கும்
புகார்கள் மீது காவல் அதிகாரிகள் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் & 1989இல் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. வழக்காக
பதிவு செய்வதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. முறையான புலன் விசாரணை
செய்யாமல் குற்றவாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, பல வழக்குகளை பொய் வழக்குகள் என காவல்
துறையினரே தள்ளுபடி செய்கின்றனர். இதற்கு பல அரசியல் கட்சி பிரமுகர்கள்
காவல்துறையோடு இணைந்து செயல்படுகின்றனர்.
மேலும் கண்டு பிடிக்க முடியாத திருட்டு
வழக்குகளை, இருளர்கள் மீது
சுமத்தி சித்தரவதை செய்து சிறையில் அடைக்கின்றனர். நமக்குத் தெரிந்து 1993இல் அத்தியூர்
விஜயாவின் தந்தை மாசி தொடங்கி 2012இல் சித்தேரி கிராமம் ரமேஷ் உள்ளிட்டு 32 பேர் மீது தலா
ஒன்று முதல் 6 வழக்குகள் வரை
போட்டு அவர்களின் வாழ்க்கையை காவல் துறையினர் சீரழித்துள்ளனர். எல்லாவற்றுக்கும்
மேலாக திருக்கோயிலூர் தி.கே.மண்டபத்தைச் சேர்ந்த 4 இருளர் இனப் பெண்களை திருக்கோவிலூர் போலீசார்
கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பழங்குடியின அமைப்புகள்
மட்டுமில்லாது மனித உரிமையில் அக்கறையுள்ள பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள்
போராட்டங்கள் நடத்தியும் இது வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 1/2 ஆண்டுகளாகியும்
நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியாக இருந்த
பேரா.பிரபா.கல்விமணி, பி.வி.ரமேஷ் மீது
பொய் வழக்கு போட்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
இனச்சான்றுக்காகவும் இருளர் மீது
தொடுக்கப்படும் வன்கொடுமைகள் குறித்தும் பொதுக்குழுவில் 09.04.2013ல் தீர்மானங்கள்
நிறைவேற்றி தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து
அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்
ப.இ.பா.ச. கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
·
விழுப்புரம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இனச்சான்று
வழங்காததையும், எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தை சரியாக அமல்படுத்தாதையும் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில்
மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
·
சமூக அமைதியை சீர்குலைக்கும் மதவாத, மற்றும் சாதியவாத
சக்திகளுக்கு எதிராக வாக்களிக்கும்படி கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சங்க உறுப்பினர்களைக்
கேட்டுக்கொள்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.
·
மனிதஉரிமைகளுக்கு ஆதரவாகவும், பழங்குடி இருளர் தொடர்பான அனைத்துப்
போராட்டங்களிலும் பங்கு கொள்ளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
அவர்கள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், பொதுச்செயலாளர் எழுத்தாளர் துரை.ரவிக்குமார் திருவள்ளூர்
மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து பழங்குடி இருளர்
பாதுகாப்புச் சங்கம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
·
வேட்பாளர்களிடமோ அல்லது அவர்களின் முகவர்களிடமோ, வாக்களிக்க பணமோ
அல்லது பிற பொருட்களோ வாங்கக்கூடாது என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
மீறுவோர் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இவண்,
ஆசிரியர் மு. ஜெயபாலன் சு.ஆறுமுகம் மு.நாகராஜன்
தலைவர் பொதுச்செயலாளர்
பொருளாளர்
கோ.ஆதிமூலம் உ.மலர் க.சிவகாமி ரெ.சின்ராசு
துணைத் தலைவர் துணைத் தலைவர் து.செயலாளர் து.செயலாளர்
பிரபா.கல்விமணி பி.வி.ரமேஷ்
ஒருங்கிணைப்பாளர்கள்