Tuesday, June 23, 2020

அருட் சகோதரி லூசினா

அருட் சகோதரி லூசினா
=====================

விழுப்புரம் மாவட்டத்தில் பேரா. கல்விமணி அவர்கள் அங்குள்ள இருளர் பழங்குடி மக்கள் மத்தியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணித்துப் பணியாற்றுவதை அறிவோம்.
அந்த முயற்சியில் அவருக்குத் துணை நிற்பவர்களுள் அருட் சகோதரி லூசினா மற்றும் அருட் பணியாளர் ரஃபேல் அடிகளார் முதலானோரின் பங்கு முக்கியமானது.
தற்போது சகோதரி லூசினா அவர்கள் தனது களப் பணி அனுபவங்களை "பழங்குடியினர் பாதையில்" எனும் தலைப்பில் ஒரு நூலாக எழுதியுள்ளார். அதற்கு ஒரு முன்னுரை எழுதும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சற்றுமுன் அதை முடித்தேன். நல்ல அனுபவம்.
அவரிடம் நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டேன்:
"சிஸ்டர் நீங்கள் ஒரு முப்பதாண்டுகளாக தேவகோட்டை, பச்சை மலை, விழுப்புரம் முதலான பகுதிகளில் பழங்குடி மக்கள் மத்தியில் நிறையப் பணி செய்துள்ளீர்கள். இப்பகுதிகளில் எதிலேனும் யாராவது கிறிஸ்துவத்திற்கு மாறியுள்ளார்களா?”
சற்றும் தயங்காமல் அவர் உடன் சொன்னார்: “இல்லை. ஒருவர் கூட இல்லை. எங்கள் நோக்கம் மத மாற்றம் கிடையாது. சேவை நோக்கம் ஒன்றுதான்.”
“மன்னியுங்கள் சிஸ்டர். எனக்கு அது தெரியும். ஒரு வேளை உங்கள் பணி, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பார்த்து அந்த அடிப்படையில் யாரும் மதம் மாறி இருக்கலாமே என்றுதான் கேட்டேன்..”
“இல்லை அப்படியும் கிடையாது”
ஆனால் தொண்டு எனும் பெயரில் மக்களைப் பிளவுபடுத்தி வன்முறைக் கருவிகளாக அவர்களைக் களமிறக்கும் கொடியவர்கள் இப்படி அருட் தொண்டு செய்பவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாய் மதம் மாற்றுபவர்களாக மட்டுமே சித்திரிக்கும் கொடுமையை எண்ணிக் கொண்டே இந்த முன்னுரையை எழுதி முடிக்கிறேன்.

No comments: