Thursday, June 18, 2020

கொத்தடிமை மீட்பு - வழக்கு பதியக் கோருதல்

02.06.2020
அனுப்புதல்
வினோத் (24) த/பெ சிங்காரம்
அங்காளம்மன் கோவில் தெரு,
கருங்கல்பட்டு,
கோனூர் அஞ்சல்,
விழுப்புரம் மாவட்டம்.
பேச : 6381899392

பெறுதல்
1.மாவட்ட ஆட்சியர் அவர்கள்.
விழுப்புரம் மாவட்டம்,
விழுப்புரம்.

2.காவல் கண்காணிப்பாளர்,
விழுப்புரம் மாவட்டம்,
விழுப்புரம்.

ஐயா,

பார்வை :
1. எனது உறவினர் அண்ணாமலை த/பெ கலியன், 30.05.2020 அன்று அனுப்பிய Online Complaint.
2. திருப்பூர் மாவட்டம், அலங்கியம் காவல் நிலையம் கு.எண் : 476/2020 u/s 324 r/w 3(1)(r), 3(1)(s) SC/ST Act.


பொருள் : மேற்படி பார்வையில் உள்ள புகார் மற்றும் முதல் தகவல் அறிக்கை - கொத்தடிமை தடுப்புச் சட்ட பிரிவு சேர்த்தல் – எனது மச்சான் முத்து பாதிக்கப்பட்டது – மேல் நடவடிக்கை கோருதல் – தொடர்பு..

        வணக்கம். நான் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் ஆகும். மேற்கண்ட முகவரியில் உள்ள என்னையும், என்னுடைய உறவினர்களையும் மொத்தம் 5 ஜதை என 10 பேரையும், விழுப்புரம் மாவட்டம், தெளிமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் கவுண்டர் என்பவர் மூலம் அதே கிராமத்தில் உள்ள அவரது உறவினர் ஏழுமலை மேஸ்திரி என்பவர், செங்கல் சூளையில் வேலை செய்ய முன்பணம் கொடுத்து, திருப்பூர் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றார். நானும் எனது மனைவியும் சேர்ந்த என் ஜதைக்கு ரூ 70 ஆயிரம் முன் பணம் கொடுத்தார்கள்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள சென்னக்கல்பாளையத்தில் உள்ள டி.பி.சி செங்கல்சூளையில் தங்கி வேலை செய்தோம். நான், என் மனைவி லட்சுமி22), எங்கள் குழந்தைகள் மீனா(3), எனது அண்ணன் ஏழுமலை(28), அவரது மனைவி செளம்யா(25), குழந்தைகள் சந்தியா(9), சாரதா(6), பிரியதர்ஷினி(3), ஆறுமுகம்(1 ½ ), எனது மச்சான் ராஜ்(24), மனைவி சத்யா(22), குழந்தைகள் அபிநயா(6), ஆகாஷ்(4), புவனேஸ்வரி(3), எனது மச்சான் முத்து(22), மனைவி மாரியம்மாள்(20), எனது பெரியப்பா வடிவேல்(70), மனைவி இந்திராணி(60) ஆகியோர் குடும்பத்துடன் மேற்படி செங்கல்சூளையில் தங்கி வேலை செய்தோம். எங்களுடன் மேற்படி தெளிமேடு கிராத்திலிருந்து 4 ஜோடியும் வேலை செய்தனர்.
2). நாங்கள் இரவு 11 மணிக்கு கல் அறுக்கும் வேலையை ஆரம்பித்து மறுநாள் காலை 9 மணிக்கு முடிப்போம். மேற்படி வன்னியர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வேலையை முடிப்பார்கள்.
3). நாங்கள் செங்கல் அறுக்கும் நிலத்திற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் வெங்காயம் பயிர் செய்து அறுவடை செய்து முடித்துவிட்டார்கள். அந்த நிலைத்தில் தவறிப்போய் கிடக்கும் வெங்காயத்தை , அப்பகுதியில் உள்ள சுமார் 8 சேம்பரில் வேலை செய்யும் எங்களைப் போன்று பெரும்பாலனவர்கள் போய் பொறுக்கி எடுத்து வந்து சமையலுக்கு பயன்படுத்துவோம். சிலர் அதிக வெங்காயம் கிடைத்தால் கடைகளில் விற்று பணம் வாங்குவார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு தேவையான பொருளும் வாங்கிக்கொள்வார்கள்.
4). இந்நிலையில் 27.05.2020 புதன் கிழமை மாலை 4 மணி அளவில் நான் வெங்காயம் பொறுக்கி எடுத்துக்கொண்டு சேம்பருக்கு வந்தபோது, எங்களுடன் தங்கி வேலை செய்யும் மேற்படி தெளிமேட்டைச் சேர்ந்த பிரகாஷ், ‘’சொல்ல சொல்ல கேக்காம.. ஏண்டா… வெங்காயம் பொறுக்கிறீங்க” என்று திட்டி, மிரட்டிக்கொண்டே, அவர் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி, அந்த செருப்பால் என்னை அடித்தார். கீழே கிடந்த செங்கல்லை எடுத்து என்னைத் கடுமையாகத் தாக்கினார். இதில், எனக்கு கன்னம், தோல் மற்றும் தலைகளில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த, செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் பலரும் இதனைப் பார்த்தார்கள்.
5). நான் வீட்டில் முடியாமல் படுத்திருந்தபோது, மேற்படி என்னைத் தாக்கிய பிரகாஷ் வீட்டிற்கு வந்து, “இப்ப என்ன செய்யப்போகிறாய்” என்று கேட்டார். நான், “கேஸ் கொடுக்கப்போறேன்” என்றேன். அதற்கு பிரகாஷ், ‘’நான்தான் அடிச்சேன்.. நீ எங்க போய் கேஸ் கொடுக்கிறோ கொடு” என்று கூறிவிட்டுச் சென்றார். இதனை மேற்படி மேஸ்திரி முருகன் அவர்களிடம் எனது மனைவி லட்சுமியும், எனது அண்ணி செளமியாவும் செல்போன் மூலம் சொல்லியுள்ளனர். அதற்கு, மேஸ்திரி, ’’உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையை நீங்களே பாத்துக்குங்க… ஒழுங்கா என் வீட்டு கடனை அடைச்சிட்டு வீடு வந்து சேருங்க” என்று கூறிவிட்டு போனை வைத்துள்ளார். இதனை நான் பிறகு தெரிந்துகொண்டேன்.
6). கொஞ்ச சேரத்தில் சேம்பர் உரிமையாளர்களான தந்தையும், மகனும் வந்து என்னை வற்புறுத்தி, அவர்களுடைய டெம்போ 407 வண்டியில், என்னை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர், அதிகம் அடிபட்டுள்ளது, போலீசாரிடம் சொல்லிவிட்டு சேருங்கள் என்றார். அப்போது, பெரிய ஓனர், ’’போலீஸ் கேஸ் எல்லாம் வேண்டாங்க.. ஓ.பி சீட்டு மட்டும் கொடுங்க” என்று கூறி, ஓ.பியில் காட்டி, காயத்திற்கு மருந்து வைத்து மீண்டும் சேம்பருக்கு அழைத்து வந்தார்கள்.
7). நான் சேம்பருக்கு வந்ததும், எனது மச்சான் முத்துவை ஆபீஸ் ரூமில் வைத்து பூட்டி வைத்திருப்பதாக எனது தங்கை கூறினார். எனது ஓனர்களிடம், ஏன் அவனை அடைத்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன். ‘’அவன் ரொம்ப வாய விட்டான்.. அதனால்தான் அடைத்து வைத்துள்ளோம்” என்றார். மேற்படி பிரகாஷ் என்னை அடித்தபிறகு நான் முடியாமல் வீட்டில் இருந்தேன். அப்போது, மேற்படி என் மச்சான் முத்து, ஓனர்களிடம் போய், ‘’உங்கள் நம்பிதானே நாங்க.. இருக்கோம். என் மச்சான அப்படி போட்டு அடிச்சிருக்காங்க” என்று கேட்டுள்ளார். அப்போது சின்ன ஓனர், ‘’உன் மச்சான் மேலதான் தப்பு.. அதனால அவன் அடிச்சிட்டான்.. அதுக்கு நீ இங்க வந்து என்னடா பேசுற” என்று கூறியபடியே, முத்துவை கழுத்தில் அடித்து, கீழே தள்ளியுள்ளார். பிறகு ஆபீஸ் ரூம் இழுத்துச் சென்று அந்த அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர் என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
8). அதன்பிறகு, வியாழன், வெள்ளி இரண்டு நாளும் மேற்படி பிராகாஷிடம் செங்கல் சூளை ஓனர்கள் மற்றும் மேஸ்திரி முருகன் ஆகியோர் கூப்பிட்டு விசாரிப்பார்கள் என்றும், எங்கள் செல்லில் பேலன்ஸ் இல்லை என்பதாலும் இரு நாட்களும் காத்திருந்தோம். அவர்கள் எதுவும் விசாரிக்கவில்லை. அதன்பிறகு வெள்ளிக்கிழமை காலை எனது அண்ணன் ஏழுமலை போனுக்கு ரீசார்ஜ் செய்துகொண்டு, நான் அடிப்பட்டிருந்தபோது எடுத்திருந்த வீடியோவை, விழுப்புரம் மாவட்டம், சாணிமேடு கிராமத்தில் உள்ள எனது மாமா அண்ணாமலைக்கு அனுப்பிவிட்டு, போனில் கூப்பிட்டு நடந்தைதைச் சொல்லியுள்ளார். அப்போது பகல் 12 மணி இருக்கும்.
அதன்பிறகு மறுநாள் சனிகிழமை மாலை சுமார் 6.00 மணி அளவில், மேற்படி அண்ணாமலை எனது அண்ணன் ஏழுமலைக்கு தொலைபேசி செய்து, ’’நமது சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சார் மூலம் புகார் எல்லாம் அனுபியாச்சு,, நாளை யாராவது அதிகாரிகள் வருவாங்க” என்று கூறியுள்ளார்.

9) மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பகல் 12.00 மணியளவில் மேற்படி மேஸ்திரி ஏழுமலை எங்கள் சேம்பருக்கு வந்தார். எங்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து எங்களிடம் சமாதானம் பேசினார். உங்களுக்கு எவ்வளவு வேணாலும் பணம் தர்றோம். இங்க நடந்ததையோ, ஓனர் அடிச்சதையோ அதிகாரிகள் யாரிடமும் சொல்லாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறினார். மாலை 4.00 மணியளவில் மணியக்காரர் சேம்பருக்கு வந்து எங்களிடம் விசாரித்தார். அவரிடம் நடந்ததைச் சொன்னோம். அப்போதும் மேஸ்திரி ஏழுமலை அங்கேயே இருந்தார்.
10). பிறகு, நேற்று காலை 9.00 மணிக்கு நான், ஏழுமலை, முத்து, வடிவேல், ராஜ் ஆகிய ஐந்து பேரையும் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு என்னிடம் நடந்ததை விசாரித்தனர்.
11).நாங்கள் சேம்பரில் இருக்கும்போது எங்களிடம் விசாரித்த அதிகாரிகளிடம் என் மச்சான் முத்து, தன்னை சேம்பர் ஓனர் அடித்ததைச் சொல்லவில்லை. பிறகு காரணம் கேட்டதற்கு, எங்கள் சேம்பருக்கு பக்கத்து சேம்பரில் உள்ள மேற்படி மேஸ்திரி ஏழுமலை என்பவர், முத்துவிடம் ஓனர் அடித்ததைச் அதிகாரிகள் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் சேம்பரில் உள்ள உன் பொண்டாட்டியை விடமாட்டோம் என்றும் கூறி மிரட்டியுள்ளார். அதனால் பயந்துபோன முத்து அதிகாரிகளிடம் சொல்லவில்லை.

12). பிறகு மாலை 6 மணிக்கு மேல் என்னை, ஒரு போலீசார் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சையளித்து சீட்டு வாங்கிக்கொடுத்தார்.
இரவு 9 மணியளவில் தாரபுரம் சார் ஆட்சியர் அவர்கள் வந்து எங்களைப் பார்த்து, விசாரித்து, ஒரு வேன்மூலம் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். எங்கள் வேனில், மேற்படி முத்துவை மிரட்டிய மேஸ்திரி ஏழுமலையும் எங்களுடன் வந்தார்.
நள்ளிரவு விழுப்புரம் வந்தோம். எங்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விழுப்புரம் பி.வி.ரமேஷ் அவர்கள் எங்களை அவரது வீட்டில் தங்க வைத்தார். அவர் மூலம் இப்புகார் மனுவைத் தயாரித்து அனுப்புகின்றோம்.

எனவே, ஐயா அவர்கள் எனது இம்மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி எனது மச்சான் முத்துவைத் தாக்கிய செங்கல் சேம்பரின் பெரிய ஓனர் மற்றும் வெளியில் சொல்லக்கூடாது எனது எனது மச்சான் முத்து உள்ளிட்ட எங்கள் அனைவரையும் மிரட்டி சமாதானம் பேசிய மேற்படி மேஸ்திரி ஏழுமலை ஆகியோர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகின்றேன். மேலும் இவ்வழக்கில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழான வழக்குப் பிரிவுகளையும் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டுகிறோம். எங்களுக்கு நீதியும், நிவாரணம் கிடைத்திடவும், உரிய பாதுகாப்பு வழங்கி உதவிடவும் வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
வினோத்
இணைப்பு :
1. பார்வை 1 மற்றும் 2.
2. மருத்துவச் சான்று.

No comments: