ஆபத்தை அதிகரிக்கும் இணைய வழிக் கல்வி
தமிழகத்தில் தற்போது 21 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உள்ளது. தமிழ்வழியில் கல்வி அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்தப் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. தாய்த் தமிழ் பள்ளிகள் சந்திக்கும் முதல் சிக்கல், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம்தான். வேறுபல சவால்கள் இருந்தாலும் அவைகளைச் சமாளிக்க முடியும்.
இணைய வழிக்கல்வியை யார் விரும்புகிறார்கள், தேவை என்கிறார்கள் என்று பார்தால், யார் எல்லாம் பணம் கட்டி குழந்தைகளை படிக்க வைக்கின்றார்களோ அவர்கள்தான் இணைய வழிக் கல்வி தேவை என்கிறார்கள். குறிப்பாக தனியார் பள்ளிகள்தான் இணைய வழிக் கல்வியை தீவிரமாக செய்கின்றார்கள். அதிலும் ஆங்கில வழிப் பள்ளிகள்தான் செய்கின்றனர். 60% மாணவர்கள் தமிழ் வழியில், அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களுக்கு இது தேவைப்படவில்லை.
ஏற்கனவே இங்கு பணம் உள்ளோருக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதோருக்கு ஒரு கல்வி என்பதுதான் நடைமுறையில் உள்ளது. இந்த இணையவழிக் கல்வி இந்தப் பிரிவினையை தீவிரமாக்கும். பாகுபாடுகள் அதிகரிக்கவே செய்யும். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்த இணைய வழிக் கல்வி என்பதும் form of Discrimination தான். இதனை மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாகவும் நாம் பார்க்கவேண்டியுள்ளது.
நேற்று நண்பர்கள் பலரிடம் பேசினேன். நிறையத் தகவல்கள் உள்ளது இதனைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் காலை 8.30 மணிக்கு இணைய வழிக் கல்வியை தொடங்குகின்றனர். 8.30 முதல் 9.30 வரை காலை கூட்டம் (பிரேயர்) நடத்துகின்றனர். அதன்பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு பாட ஆசிரியர் வந்து வகுப்பெடுகின்றார். மாலை 4 மணிக்குதான் முடிகின்றது. பள்ளி இயங்குகின்ற முழு நாள், முழு நேரத்தையும் இணையம் வழியாக வழங்குகின்றனர். மேலும் சில பள்ளிகள் காலை 2 மணி நேரம் பாடம், நடத்துகின்றனர் மதியம் 2 மணி நேரம் தேர்வு நடத்துகின்றனர்.
இதுபோன்ற இணைய வழி கல்வியை off line, on line என பள்ளிகள் அவர்களுக்கேற்றாற்போல் செய்கின்றனர்.
இதனால் குழந்தைகளுக்கு உருவாகும் பாதிப்புகளையும் நாம் பார்க்க வேண்டும். தலை வலி, கை கால் வலி, கண் வலியில் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இரவெல்லாம் கை, கால் வலிகின்றது என அழுததால் இணைய வழி வகுப்பினை நிறுத்திவிட்டேன் என்றும் ஒரு பெற்றோர் கூறினார். மேலும், செல்பேசியையே உற்றுப் பார்த்துகொண்டிருப்பதால் கண் மற்றும் மூளை தொடர்பான நரம்பியல் சிக்கல்கள் உருவாகின்றன. முகத்தில் கட்டிகள் தோன்றுகின்றன.
எங்கள் பள்ளியில் EMIS போடும்போது, பெற்றோர்கள் சிலருக்கு தொலைபேசி எண் இல்லாத காரணத்தால், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் எண்களைப் போட்டுள்ளோம். எங்களுடைய பகுதிகளில் இணைய வழிக் கல்வி என்பதை நினைத்துகூடப் பார்க்கமுடியாது.
என்னைப் பொறுத்த அளவில், இது குழந்தைகளுக்கு தற்செயலாகக் கிடைத்துள்ள விடுமுறை. ஜாலியாக கொண்டாடட்டும். மகிழ்ச்சியாக இருக்கட்டும். இப்போது நாம் அவர்களுக்கு பாடம் எதுவும் நடத்த தேவையில்லை என்றே நினைக்கின்றேன். ஏற்கனவே, தோழர் விஜய் அசோகன் சொல்லியதுபோன்று, குழந்தைகள் எப்போதும் எதையேனும் கற்றுக்கொண்டுதான் உள்ளனர்.
இந்த நேரத்தில் புதிதாக நாம் எதையும் கற்றுக்கொடுக்கவேண்டும் என பார்க்காமல், விடுமுறையினை அவர்கள் ஜாலியாக கொண்டாட்டும் என்பதுதான் எனது கருத்து.
#புதிதல்ல..!!
இதில் இன்னொரு முக்கியமான ஒன்றையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. தொடக்கக் கல்வி என்பதே தமிழ் எழுத படிக்கக் கற்றுக்கொள்வதுதான். மேலும் இரு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகம் வர தாமதமானது, முதல் பருவம் முடியும்போதுதான் வந்தது. அதே போன்று சமச்சீர் கல்வி மாறியபோது ஒரு பருவம் முழுவதும் புத்தகமே இல்லை. அதனால் கல்வி ஆண்டின் முதல் மூன்று மாதங்கள், அதாவது முதல் பருவம் புத்தகம், பாடம் இல்லாமல் சமாளித்த அனுபவம் நமக்கு உள்ளது. இது ஒரு நோய்த் தொற்றுக் காலம். பள்ளியை 12 ஆம் வகுப்பிற்கு முதலில் தொடங்கி படிப்படியாக 6 கட்டமாக அரசு பள்ளிகளைத் தொடங்க உள்ளதாக தெரிகின்றது.
நம்மைப் பொறுத்த அளவில் நம்முடையது தொடக்கக் கல்விதான். நாம் ஒன்று அவசரப்படத் தேவையில்லை எனத் தோன்றுகிறது. முதல் பருவம் ஆகஸ்டில் முடியும். அதற்குள் அரசும் என்ன முடிவெடுக்கின்றது என்பதைப் பார்க்கலாம் அதன்பிறகு செப்டம்பர் மாதம் நாம் இதுகுறித்துப் பேசலாம் என நான் நினைக்கின்றேன். இதனை என்னுடைய கருத்தாக முன்வைக்கின்றேன். இதில் இன்னொன்றையும் நாம் பார்க்கவேண்டும், இதுபோன்றச் சூழல்களைக் கருத்தில் கொண்டுதான் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கை எனக்கூறுகின்றது. குழந்தைக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், வயதின் அடிப்படையில் வகுப்பில் சேர்த்து கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகள் கற்றுகொள்வார்கள். இப்படித்தான், பர்கூர் மலைப் பகுதியில் குழந்தைத் தொழிலாளராக இருந்த ஒரு மாணவர்
7-வகுப்பில் சேர்ந்து, ஆய்வுகள் செய்து 2017 ல் மத்திய அரசின் இளம் மாணவர் விஞ்ஞானி என்கிற விருதினைப் பெற்றான். அதனால் 14 வயது வரையுள்ள குழந்தைகள் விடுமுறையை அனுபவித்துக் கொண்டாட்டும் என விடுவதுதான் சிறப்பு என நினைக்கின்றேன்.
இதனையொட்டிதான் கர்நாடகாவில் 7 வகுப்பு வரை இணையவழிக் கல்வி முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
அடுத்தது, இந்த விடுமுறையில் மாணவர்களுக்கு கல்வி அளிப்பதைவிட ஆசிரியர்களுக்கு கருத்துப் பயிற்சி அளிக்கலாம் என நினைக்கின்றேன். இணையம் வழியாக வேறு யாரேனும் உள்ளே புகுந்து அவர்களது கருத்துகளை திணிக்கும் ஆபத்து உள்ளது என தோழர் கீர்த்தி முதலிலேயே குறிப்பிட்டார்கள். அதுபோன்ற கருத்துகள் ஆசிரியர்களிடம் எளிதில் வந்தடையும். அதனால்தான், கோ கோ கொரோனா பாடுவது, விளக்கேற்றுவது, தட்டிக்கொண்டு ஊர்வலம் போவது எல்லாம் நடக்கின்றது. இன்னும் கொரோனா நோய் தொற்று பரவல், மருந்து கண்டுபிடிக்கின்ற முயற்சி, கொரோனா தொடர்பான அறிவியல் கருத்துக்கள், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்புகள், பாதிபுகள் குறித்தெல்லாம் ஆசிரியர்களுக்கு நிச்சயம் தெரியவேண்டும். எத்தனை ஆசிரியர்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. எனவே, இந்த விடுமுறை நாட்களில் நமது தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் குறித்து யோசிக்கலாம்.
அடுத்ததாக ஒரு செய்தி. நேற்று ஒரு நண்பரிடம் இணையவழிக் கல்வி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது திண்ணைப் பள்ளி குறித்த பேச்சு வந்தது. அப்போதுதான் நினைத்தேன், நம்முடைய தெருவில், கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலரையோ அல்லது தெருவில் உள்ள ஒரு ஆசிரியரையோ கொண்டு சொல்லிக்கொடுக்க முடியுமா என்பது குறித்தும் யோசிக்கலாம். இதுவும் கூட 9 ஆம் வகுப்பிற்கு மேலுள்ள மாணவர்களுக்குதான். 14 வயது வரை எதுவும் தேவையிலை என்பது என் கருத்து.
இதுபோன்ற இணையவழி கல்வி தொடர்பாக அரசு இதுவரை எந்தவொரு வழிகாட்டுதல் உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கல்வியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள், குறிப்பாக நரம்பியல் மருத்துவர்கள் அடங்கிய குழுவிடம் ஆலோசனை பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கலாம்.
இறுதியாக 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து சில வார்த்தை. என்னுடைய மகன் அம்பேத்கர் 10 ஆம் வகுப்பு. நோய்த் தொற்று அதிகரிக்கும் நிலையில் மாணவர்களை தேர்வு எழுதச்செய்வது சரியில்லை என்பதை உணர்ந்து, தேர்வை ரத்து செய்யக்கோரி பெற்றோர் என்ற முறையில் வழக்கு தொடுத்தேன். நோய் தொற்று காரணமாகவும்; ஒவ்வொரு ஆண்டும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அதிகரித்து வருகின்றது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி தேர்வு நடந்திருந்தால் 97% என அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். 97% என்பது ஏறக்குறைய 100% தான். எனவே, தேர்வை ரத்து செய்யவேண்டும்; ஊரடங்கு காரணமாக 81 நாள்கள் வீட்டிலிருக்கும் மாணவனை 82 வது நேரடியாக தேர்வெழுத வைப்பது குழந்தைகள் மீதான வன்கொடுமையாகும். கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, தேர்வினை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வழக்கு தொடுத்தேன். வழக்கமாக இரவு 12 மணிக்கு மேல் தூங்கும் என் மகன் தேர்வு ரத்து என அறிவித்த அன்று இரவு 9.30 மணிக்கெல்லாம் நிம்மதியாகத் தூங்கிவிட்டான். தலையிலிருந்து ஏதோ ஒன்றை இறக்கி வைத்தது போல் ஃபிரியாக உள்ளது என்றான். 10-ஆம் வகுப்பு மாணவன் நிலையே இப்படி எனில் குழந்தைகள் குறித்து நாம் சொல்லவேத் தேவையில்லை. நன்றி.
(கல்வி சிக்கல்கள் குறித்தும், இணைய வழிக் கல்வி குறித்தும், அமெரிக்காவில் உள்ள Eduright அறக்கட்டளையும், தாய்த்தமிழ்க் கல்விப் பணியும் இணைந்து 13.06.2020 அன்று நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, நான் பேசியதன் சுருக்கம்)
14.06.2020 முகநூல் பதிவு
No comments:
Post a Comment